http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[182 Issues]
[1805 Articles]
Home About US Temples Facebook
Issue No. 182

இதழ் 182
[ மார்ச் 2025 ]


இந்த இதழில்..
In this Issue..

நகரி மாடக்கோயில்
அல்லூர் நக்கன் கோயில்
Indian Museum, Kolkata – A Summary
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் - 4
இம்மைச் செய்தது மறுமைக்கு எனும் அறவிலை வணிகர்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 94 (ஊருக்கும் தனிமை துயரமே)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 93 (காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 92 (உலராப் பாறையன்ன தீராத்துயரம்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 91 (உடைகளும் சுமையடி தனிமையிலே!)
இதழ் எண். 182 > கலையும் ஆய்வும்
நகரி மாடக்கோயில்
மு.நளினி, அர.அகிலா

நாங்கூருக்கு அருகிலுள்ள நகரி திருவாலியுடன் இணைந்த நிலையில் பாடல் பெற்ற ஊராகக் கருதப்படுகிறது.1 கோயிலின் கிழக்கு நோக்கிய ஏழுதளக் கோபுரத்தின் கீழ்த்தளம் துணைத் தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள், கூரையுறுப்புகள் கொண்டுள்ளது. வாயில் இடம்பெற்றுள்ள சாலைப்பத்தி பத்மஜகதி, உருள்குமுதம் இவற்றை உறுப்பு வேறுபாடுகளாகக் கொள்ள, வாயிலின் இருபுறத்தும் அகலக் குறுக்கமான வெறுமையான கோட்டங்கள். கோபுரத் தளங்களில் குறைவான சுதையுருவங்கள் உள்ளன.

முதல் கோபுரத்திற்கும் இரண்டாம் கோபுரத்திற்கும் இடைப்பட்டு அமைந்துள்ள நடைப்பத்தியில் பலித்தளம், கொடித் தளம், கருடன் திருமுன் உள்ளன. இரண்டாம் கோபுரம் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்ட கீழ்த்தளம் பெற்றுள்ளது. மேலுள்ள நான்கு தளங்கள் செங்கல் கட்டுமானமாக உள்ளன. அதற்கும் மூன்று தளங்கள் பெற்றுள்ள மூன்றாம் கோபுரத்திற்கும் இடைப்பட்ட சுற்றில் தென்புறம் ஆண்டாள் திருமுன்னும் வடபுறம் அமிர்தவல்லித் தாயார் திருமுன்னும் உள்ளன.


திருமுன்கள்

இருதள வேசர விமானம், முகமண்டபம், பெருமண்டபம் பெற்றுள்ள அமிர்தவல்லித் தாயார் திருமுன்னின் விமானக் கீழ்த்தளம் துணைத்தளம், உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், மகரதோரணத் தலைப்பிட்ட கோட்டங்கள், வெட்டுப் போதிகைகள், கூரையுறுப்புகள் கொண்டுள்ளது. மேலுள்ள ஆரஉறுப்புகளும் இரண்டாம் தளமும் கிரீவ சிரகமும் செங்கல் கட்டுமானங்களாக உள்ளன. அதே கட்டமைப்பில் உள்ள முகமண்டபம் பக்கத்திற்கொரு கோட்டம் பெற்றுள்ளது. கோட்டங்கள் அனைத்துமே வெறுமையாக உள்ளன. செங்கல் கட்டுமானமாக உள்ள பெருமண்டபம் முன்றிலும் சாளரங்களும் பெற்றுள்ளது. கருவறையில் இறைவி அர்த்தபத்மாசனத்தில் முன்கைகளைக் காக்கும், அருட்குறிப்புகளில் கொண்டு, பின்கைகளில் மலரேந்தியுள்ளார்.

இருதள வேசரமாக உள்ள ஆண்டாள் திருமுன் அமிர்த வல்லித் தாயார் திருமுன் ஒத்த கட்டமைப்பிலேயே விமானம், முகமண்டபம் பெற்றுள்ளது. முன்னால் சிறுமண்டபம் உள்ளது. கருவறையில் ஆண்டாள் வலக்கையில் மலரேந்தி, இடக்கையை நெகிழ்த்தியுள்ளார்.

மூன்றாம் கோபுரம்

பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், பூதவரி பெற்ற வலபி, கூடுவளைவு களுடனான கபோதம் கொண்ட கீழ்த்தளத்தின் நிலைக்கால்களில் கொடிப்பெண்கள் அமைய, கொடிவளையங்களில் சிற்றுருவச் சிற்பங்கள். கோட்டங்களில் நிதிக்கணங்களும் காவலர்களும் இடம்பெற்றுள்ளனர். உடலை ஒருக்கணித்துள்ள காவலர்கள் இருவருமே வலக்கையால் அச்சுறுத்தியவாறு இடக்கையை உருள்பெருந்தடிமேல் இருத்தியுள்ளார். வாயிலை அடுத்து விரியும் சுற்றின் தெற்கில் ஆழ்வார்கள் மண்டபம் உள்ளது. அங்குத் தேவியருடன் பரமபதநாதர் காட்சிதருகிறார். சுற்றின் நடுவில் வெற்றுத்தளத்தின் மீதமர்ந்த கல்யாண அரங்கநாதர் திருக்கோயில் வரவேற்கிறது.2

வெற்றுத்தளம்

3. 30 மீ. உயரமுள்ள வெற்றுத்தளம் பத்மபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டு கல்யாண அரங்கநாதர் திருமுன்னைத் தாங்குகிறது. இந்த வெற்றுத்தளத்தின் மேற்குப்புறத்தே உள்ள கோட்டத்தில் யோகநரசிம்மர் இடம்பெற்றுள்ளார். வடபுறத்தே உள்ள ஏவரி வெஞ்சிலையான் விமானம் தாங்கும் வெற்றுத்தளம் வெறும் கல்லடுக்காக உள்ளது. தென்புறத்தே உள்ள திருமங்கையாழ்வார் திருமுன்னைத் தாங்கும் வெற்றுத்தளம் தாமரை ஜகதி, கண்டம், பட்டிகை, தாமரைவரி, உறுப்பு வேறுபாடற்ற, கொடிக்கருக்கு அலங்கரிப்புக் கொண்ட நான்முக அரைத்தூண்கள் தழுவும் சுவர், தாமரைவரி, பெருவாஜனம் பெற்று உயரமான துணைத்தளமாகக் காட்சிதருகிறது. குமுதம், கூரையுறுப்புகள் இல்லாமை இதைத் தாங்குதளமாகக் கொள்ளத் தடையாகின்றது.

இம்மூன்று திருமுன்களுக்கும் முன் அமைந்துள்ள பெருமண்டபத்தைத் தாங்கும் வெற்றுத்தளம் பாதபந்தத் தங்குதளம், உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள் சூழ்ந்த சுவர், கூரையுறுப்புகள் பெற்று அமைந்துள்ளது. இவ்வெற்றுத் தளத்தின் வடபுறம் ஏவரிவெஞ்சிலையான் திருமுன் அருகே இருக்குமாறு கொடிமரமும் பலித்தளமும் காட்டப்பட்டுள்ளன. பெருமண்டபத்தின் வடசுவர் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத் தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், கூரையுறுப்புகள் பெற்று விளங்குகிறது. சுவரின் நடுப்பகுதியில் சாலை சிகரத்துடன் நெடிய வாயில் உள்ளது. கம்பிக் கதவுகள் பெற்றுள்ள வாயிலின் இருபுறத்தும் வெறுமையான கோட்டப் பஞ்சரங்கள் உள்ளன.

ஏவரி வெஞ்சிலையான்

ஒருதள வேசரமாக உள்ள இவ்விமானம் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப்போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுள்ளது. கருவறையில் விஷ்ணுவின் திருமேனி காணப்படுகிறது.

திருமங்கையாழ்வார் விமானம்

உபானம், தாமரைவரி, அன்னவரி பெற்ற ஜகதி, சிலம்புவரிக் குமுதம், கம்புகள் தழுவிய பாதங்கள் பெற்ற கண்டம், பட்டிகை, வேதிகைத்தொகுதி, சதுர பாதமும் நாகபந்தமும் பெற்ற எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டு இருதள வேசரமாக உள்ள திருமங்கையாழ்வார் விமானக் கீழ்த்தளத்தின் தென் சுவர்க் கோட்டத்தில் இரணிய நரசிம்மர் இடம்பெற்றுள்ளார். இரணியனை மடியில் கிடத்தி சுகாசனத்திலுள்ள நரசிம்மரின் முன்கைகள் இரண்டும் அவன் வயிற்றைக் கிழித்தவாறு உள்ளன. அடுத்துள்ள இருகைகளும் இரணியனின் கால்களையும் தலையையும் பிடித்தவாறு உள்ளன. மூன்றாம் இணைக் கைகள் உருவிய குடலை உயரத் தூக்கிப் பிடித்துள்ளன. பின்னிரு கைகளில் சங்கும் சக்கரமும். கிரீடமகுடம், தோள், கை வளைகள், பட்டாடை அணிந்துள்ள நரசிம்மரின் பிடரிமுடி அழகுபடக் காட்டப்பட்டுள்ளது.

இருபுறத்தும் குடப்பஞ்சரங்கள் பெற்றுள்ள கிழக்குக் கோட்டம் வெறுமையாக உள்ளது. கபோதக் கூடுகளில் சிற்றுருவச் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆரஉறுப்புகளும் சற்று உயரமான இரண்டாம் தளமும் கிரீவம், சிகரம் இவையும் செங்கல் கட்டுமானங்களாக உள்ளன. ஆரச்சாலைகளிலும் கிரீவகோட்டங்களிலும் விஷ்ணு தொடர்பான சுதையுருவங்கள் காணப்படுகின்றன.

விமானத்தை ஒத்துள்ள முகமண்டபத்தின் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. விமானத்திற்கும் முகமண்டபத்திற்கும் இடைப்பட்ட ஒடுக்கங்களில் குடப்பஞ்சரங்கள்.

பெருமண்டபம்

மூன்றாம் கோபுரத்தின் மேற்கிலுள்ள ஒன்பது படிகள் பெருமண்டபத்திற்கு அழைத்துச் செல்கின்றன. முச்சதுர, இரு கட்டுத் தூண்கள் பூமொட்டுப்போதிகைகளுடன் கூரை தாங்கும் இம்மண்டபத்தின் தெற்கில் திருமங்கையாழ்வார் திருமுன்னும் மேற்கில் கல்யாண அரங்கநாதர் திருமுன்னும் வடமேற்கில் ஏவரிவெஞ்சிலையான் கருவறையும் உள்ளன. திருமங்கையாழ்வார் கருவறை, முகமண்டபம் இவற்றிற்கு முன் நீளமான மேடை. மேடையின் மேற்கில் உள்ள அறையில் ஆழ்வார்கள் மூலவர்களாகவும் செப்புத்திருமேனிகளாகவும் உள்ளனர். பின் கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, கிரீடமகுடம், மகரகுண்டலங்கள் பெற்று, வல முன் கையை காக்கும் குறிப்பிலும் இட முன் கையைக் கடகத்திலும் அமைத்து சுகாசனத்தில் உள்ள சேனை முதலியாரின் செப்புத்திருமேனி எழிலார்ந்து காணப்படுகிறது.

மேடையின் தெற்கிலுள்ள திருமங்கையாழ்வார் திருமுன் முகமண்டப வாயிலின் இருபுறத்தும் காவலர்கள். வலப்புறம் இருப்பவர் வலக்கையால் அச்சுறுத்தி, இடக்கையை உருள்பெருந்தடிமேல் இருத்தியுள்ளார். இடப்புறமுள்ளவர் வலக்கையை உருள்பெருந்தடிமேல் இருத்தி, இடக்கையால் அச்சுறுத்துகிறார். இரண்டு கைகளுடன் மட்டுமே காட்சிதரும் இவ்விருவரும் ஆடை, அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர். முகமண்டபம் வெறுமையாக உள்ளது. கருவறையில் திருமங்கையாழ்வார் வணங்கிய கைகளுடன் நிற்க, குமுத வல்லியார் இடக்கையில் மலரேந்தி, வலக்கையை நெகிழவிட்டு இடப்புறம் உள்ளார்.

கல்யாண அரங்கநாதர் திருமுன்

பெருமண்டபத்தின் மேற்கில் விளங்கும் இத்திருமுன் இருதளத் திராவிட விமானம், முகமண்டபம், மண்டபச் சுற்று பெற்றமைந்துள்ளது. மண்டபச் சுற்றின் வாயிற்காவலர்கள் மங்கையாழ்வார் திருமுன் காவலர்களைப் போலவே முன்கை களை அமைத்து, பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளனர். கிரீடமகுடம், பட்டாடை அணிந்துள்ள இவர்தம் உருள்பெருந்தடிகளைப் பாம்பு சுற்றியுள்ளது. சுற்றின் வாயிலுக்கு மேல் உள்ள பாம்புப் படுக்கையில் அரங்கநாதர் படுத்துள்ளார். வாயிலை அடுத்து அமைந்துள்ள முகமண்டபத்தையும் விமானத்தையும் சூழ அமைந்துள்ள சுற்று மாளிகையின் கூரையை நான்முக அரைத்தூண்களை ஒட்டுத் தூண்களாகப் பெற்ற முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுப் போதிகைகளின் உதவியுடன் தாங்குகின்றன.

விமானம்

4. 93 மீ. சதுரமாக அமைந்துள்ள கல்யாண அரங்கநாதரின் விமானம் உபானம், பிரதிவரி பெற்ற கபோதபந்தத் தாங்குதளம், வேதிகை, நாகபந்தம் பெற்ற சதுரபாதங்களின் மீதெழும் எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், பூமொட்டுப்போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுள்ளது. விமானத்தின் கீழ்த் தளப் பத்திகள் மூன்றுமே ஒன்று போல் புறந்தள்ளியுள்ளன. ஒடுக்கங்களில் குடப்பஞ்சரங்கள். சுவரிலுள்ள மகரதோரணத் தலைப்பிட்ட கோட்டங்கள் முப்புறத்தும் வெறுமையாக உள்ளன. கீழ்த்தளத்தின் ஆரச்சாலைகளும் சுதையுருவங்களின்றி உள்ளன. இரண்டாம் தளத்தை அடுத்து அமைந்துள்ள கிரீவகோட்டங்களில் தெற்கில் யோகநரசிம்மரும் மேற்கில் விஷ்ணுவும் வடக்கில் உத்குடியில் பரமபதநாதரும் கிழக்கில் சுகாசனத்தில் வாரகரும் இடம்பெற்றுள்ளனர். விமானத்தை ஒத்துள்ள முகமண்டபத்தில் புறந்தள்ளல் இல்லை. விமானத்திற்கும் முகமண்டபத்திற்கும் இடைப்பட்ட ஒடுக்கங்களில் குடப்பஞ்சரங்கள்.

இங்குள்ள தெலுங்கு, தமிழ்க் கல்வெட்டு பெருமாள் விமானத் திருப்பணி சென்னையைச் சேர்ந்த போலேபல்லி நம்பெருமாள் அறக்கட்டளை அறங்காவலர் இராமாநுஜக் கூடம் இராமாநுஜரால் 29. 1. 1940ல் செய்யப்பட்டதாகக் கூறுகிறது. மண்டபச் சுற்றின் புறச்சுவர் தூண்கள் அணைப்பற்ற வெறுஞ்சுவராக அமைந்துள்ளது.

கருவறை

முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுப் போதிகைகளுடன் கூரை தாங்கும் முகமண்டபம் வெறுமையாக உள்ளது. கருவறையில் சுவரொட்டிய மேடையில் கல்யாண அரங்கநாதர் என்று அழைக்கப்படும் பெருமாளும் அவரது இருபுறத்தும் உள்ள திருமகளும் நிலமகளும் சுகாசனத்தில் உள்ளனர். அரங்கநாதரின் வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை கடகத்தில் உள்ளது. பின்கைகளில் சங்கு, சக்கரம். கிரீடமகுடம், மகரகுண்டலங்கள், கழுத்தணிகள், கையணிகள் பெற்றுள்ள இறைவனின் இடையில் பட்டாடை. திருமகள் வலக்கையைத் தொடையில் இருத்தி, இடக்கையில் மலர் கொண்டுள்ளார். நிலமகள் இடக்கையைத் தொடையிலிருத்தி, வலக்கையில் மலர் கொண்டுள்ளார்.

கல்வெட்டுகள்

இக்கோயிலில் இருந்து நான்கு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.3 அவற்றுள் காலத்தால் முற்பட்ட விருப்பண்ண உடையாரின் கல்வெட்டு (பொ. கா. 1386) இவ்வூரைத் திருநகரான விக்னேசுவரநல்லூராக அடையாளப்படுத்துவதுடன் இராஜாதிராஜ வளநாட்டின் கீழ் இவ்வூர் இருந்தமையையும் தெரிவிக்கிறது. காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்டிருந்த நிலப்பகுதியில் வயலாலி மணவாளருக்கு அளிக்கப்பட்ட சர்வமானிய நிலக்கொடைகளைக் கல்வெட்டு வரிசைப்படுத்துகிறது.

கிருஷ்ணதேவராயரின் பொ. கா. 1517ம் ஆண்டுக் கல்வெட்டு மன்னரின் வெற்றிகளையும் திக்விஜயத்தையும் தெரிவிப்பதுடன் சோழ மண்டலத்து சைவ, வைணவக் கோயில்களுக்கு அவர் அளித்த வரிவிலக்குகளையும் வெளிச்சப்படுத்துகிறது. சிராப்பள்ளி, காட்டுப்பள்ளி, நகரி, நாங்கூர், அழுந்தூர், தேவூர், திருவிண்ணகர அகளங்கன், மாணிகுழி, புகலூர், முட்டம், வைகல், பாதிரிப்புலியூர், தினைநகர், இறைவாநறையூர், செறவன்மங்கலம், நாவலூர், திட்டைக்குடி, கானாட்டமர்புள்ளூர், தியாகவல்லி கிராம விண்ணகர், குறிச்சி, பந்தணைநல்லூர், தலைச்சங்காடு, புன்கூர், குறுக்கை, விசலூர், தலைஞாயிறு, திருமங்கலக்குடி, வெள்ளியக்குடி, திருந்துதேவன்குடி, சூரியனார் கோயில், கோடிக்கா, குற்றாலம், குறையலூர், விற்குடி, சிறுகுடி, ஆச்சாள்புரம், வாள்புத்தூர், நல்லூர், ஆண்டார்கோயில், கங்கைகொண்டான், திருமீயச்சூர், வழுவூர் முதலிய சைவ, வைணவக் கோயில்கள் உள்ள ஊர்களின் பட்டியல் இந்தக் கல்வெட்டால் பெறப்படும் புதையலாகும்.

மன்னர் பெயரற்ற கல்வெட்டு, உலகுய்ய வீற்றிருந்தருளிய நாயனாரான வயலாலி மணவாளர் கோயிலில் வேதம் ஓதிய அந்தணர் பெயர்களையும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றிய தகவல்களையும் தருகிறது. ஜயங்கொண்ட சோழ வளநாட்டுத் தலைச்சங்காட்டுப் பற்றைச் சேர்ந்த இராஜேந்திரசோழ நல்லூர் நன்செய், புன்செய் நிலத்துண்டுகள், பசுக்கள், பரிகலங்கள் ஆகியவை கோயில் இறைவனின் படையல், வழிபாடு இவற்றிற்காகக் கொடையளிக்கப்பட்டன.

குறிப்புகள்
1. நாலாயிர திவ்வியப் பிரபந்தம், குலசேகரர் 725, மங்கையாழ்வார் 1078, 1188-1217, 1329, 1519, 1733, 1735, 1850, 2014, 2027, 2063, 2673, 2674.
2. ஆய்வு நாள் 25. 9. 2009.
3. ARE 1918: 406-409.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.