![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 182
![]() இதழ் 182 [ மார்ச் 2025 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 世の中は つねにもがもな 渚こぐ あまの小舟の 綱手かなしも கனா எழுத்துருக்களில் よのなかは つねにもがもな なぎさこぐ あまのをぶねの つなでかなしも ஆசிரியர் குறிப்பு: பெயர்: தளபதி சனேதொமொ காலம்: கி.பி. 1192-1219. பேரரசர்கள் அரசபதவியைத் துறந்தாலும் குறிப்பிடத்தக்க அதிகாரங்களைத் தம்மிடமே வைத்துக்கொண்டார்கள் எனப் பார்த்தோமல்லவா? கி.பி. 1198ல் பதவியைத் துறந்த கோதொபாவும் அப்படி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொண்டார். ஆனால் சுமார் 20 ஆண்டுகள் கழித்துதான் படைவீரர்களால் தமது கட்டளைகள் மதிக்கப்படவில்லை என உணர்ந்தார். ஆனால் அப்போது நிலைமை கைமீறிப் போயிருந்தது. தலைநகர் கியோத்தோவில் பேரரசர் இருந்தாலும் தலைநகருக்கு சுமார் 430 கி.மீ கிழக்கே கமாகுரா என்ற இடத்தில் (இப்போதைய தலைநகர் தோக்கியோவிலிருந்து சுமார் 60 கி.மீ, தெற்கில்) இன்னோர் அதிகார மையம் உருவாகியிருந்தது. பேரரசர் கோஷிராகவா கி.பி. 1158லேயே அரசபதவியிலிருந்து விலகிவிட்டாலும் அடுத்தடுத்து அரசர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தன்னிடத்தே வைத்திருந்தார். அவருக்கு அடுத்துப் பதினைந்தே வயதான தன் முதல் மகன் நிஜோவை அரசராக நியமித்தார். நிஜோ 22ம் வயதில் இறந்ததையடுத்து இரண்டே வயதான பேரன் ரொக்குஜோவை அரசராக நியமித்தார். அவரும் 11 வயதிலேயே இறந்துவிட, தனது இரண்டாவது மகன் தக்காகுராவை அரசராக்கினார் கோஷிராகவா. பேரரசின் அதிகார மையத்துக்கு நெருக்கமாக இருந்த இரண்டு வம்சங்களான தாய்ரா வம்சத்துக்கும் மினாமொதொ வம்சத்துக்கும் இடையே சுமார் அரை நூற்றாண்டு காலமாக நிலவிவந்த பனிப்போர் கி.பி. 1180ல் உக்கிரமடைந்து கெம்ப்பெய் போராக உருவெடுத்தது. தக்காகுரா 19 வயதிலேயே அப்போரில் கொல்லப்பட்டுவிட, அவரது 2 வயதே நிரம்பிய முதல் மகன் அந்தொக்குவை அரசராக்கினார் கோஷிராகவா. அந்தொக்குவும் 6 வயதிலேயே அதே போரில் கொல்லப்பட்டுவிட, தக்காகுராவின் 3 வயதே நிரம்பிய நான்காவது மகன் கோதொபாவை அரசராக்கினார். ஷிமொனொசெக்கி நீரிணைப்புப் பகுதியில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் கடற்போரில் வல்லவனான தகுச்சி என்ற இணையற்ற வீரனின் உதவியால் யொரிதொமொ தலைமையிலான மினாமொதொ வம்சம் கெம்ப்பெய் போரை வென்றது. கோதொபாவின் இளவயது காரணமாகவும் கோஷிராகவாவின் முதுமை காரணமாகவும் வரிவிதிக்கும் பொறுப்பையும் படைவீரர்களை நியமிக்கும் பொறுப்பையும் யொரிதொமொவிடம் ஒப்படைத்தார்கள். இந்த யொரிதொமொதான் கி.பி. 1192ல் கோஷிராகவா இறந்தபிறகு 12 வயதான கோதொபாவின் அதிகாரங்கள் அனைத்தையும் அவரறியாமலேயே கவர்ந்துகொண்டு அரசபதவியை வெறும் அலங்காரப் பதவியாக்கினார். அப்போதுதான் ஜப்பானிய வரலாற்றில் சாமுராய்களின் காலம் தொடங்கியது. சாமுராய்களின் தலைவர்கள் ஷோகன் என அழைக்கப்பட்டு மிகவும் பலம் பொருந்திய நிழல் அரசர்களாக ஆட்சி செலுத்தினர். ஜப்பானிய வரலாற்றின் முதல் ஷோகன் யொரிதொமொ கமாகுரா என்ற இடத்தில் தங்கி ஆட்சி செய்ததால் கியோத்தோ பெயரளவிலான தலைநகராகவும் உண்மையான அதிகாரம் கமாகுராவிலும் நிலைபெற்று யொரிதொமொவின் வம்சத்தினர் கமாகுரா ஷோகன்கள் என அழைக்கப்பட்டனர். ![]() படைவீரர்களை நியமிக்கும் அதிகாரம் யொரிதொமொவிடம் இருந்ததால் கி.பி. 1221ன் தொடக்கத்தில் கோதொபா அதிகாரத்தை மீட்க நினைத்தபோது அப்போதிருந்த படைவீரர்கள் அனைவரும் யொரிதொமொவுக்கு ஆதரவாக இருந்ததால் கோதொபா செய்வதறியாது திகைத்தார். வேறு வழியில்லாமல் அதிகாரங்கள் ஏதுமின்றிப் பெயரளவில் அரசராகத் தொடர்ந்தார். ஆனால் மினாமொதொ வம்சத்திடம் தோற்ற தாய்ரா வம்சத்தினரைக் கொண்டு மறைமுகமாகப் படைகளைத் திரட்டிவந்தார். கி.பி. 1221ன் பிற்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் இருந்த படைப்பிரிவுகளின் தலைவர்கள் அனைவரையும் தலைநகர் கியோத்தோவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அப்போது வராத அனைவரும் ஷோகன்களுக்கு ஆதரவானவர்கள் என்று கருதப்பட்டு வராதவர்கள் அனைவரையும் கொல்ல முடிவெடுத்து முக்கியமான ஒரு படைப்பிரிவின் தலைவர் முதலாவதாகக் கொலைசெய்யப்பட்டார். கமாகுரா அமைந்திருந்த கிழக்குப் பகுதியில் இதற்கு எதிராகப் படைவீரர்கள் கொதித்தெழத் தொடங்கினர். அது ஜோக்யூ புரட்சியாக வெடித்தது. மினாமொதொ வம்சத்துடன் மண உறவு கொண்டிருந்த ஹோஜோ வம்சத்தைச் சேர்ந்த யொஷிதொக்கி இதற்குத் தலைமை தாங்கினார். இப்புரட்சி வெடிப்பதற்கு முந்தைய நாள்தான் இரண்டாவது தலைவராக யொஷிதொக்கியைக் கொல்ல முடிவெடுக்கப்பட்டிருந்தது. பெருமளவிலான படைவீரர்களின் ஆதரவு இருந்ததால் யொஷிதொக்கி சில மாதங்களிலேயே எளிதாகத் தலைநகர் கியோத்தோவைக் கைப்பற்றினார். சரியாக 41 ஆண்டுகளுக்கு முன்னர் கெம்ப்பெய் போர் தொடங்கிய அதே உஜி ஆற்றங்கரையிலேயே கோதொபா குடும்பத்துடன் சிறை பிடிக்கப்பட்டார். பொம்மை அரசராக இருக்கச் சம்மதித்த ஒரேயொரு பேரன் கோஹொரிகவா தவிர மற்ற மகன்களுடனும் பேரன்களுடனும் ஒக்கி தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். பின்னர் அவர்கள் யாரும் அங்கிருந்து திரும்பவேயில்லை. கமாகுராவில் சகல அதிகாரங்களுடன் ஆட்சி செய்த மினாமொதொ வம்சமும் ஏற்ற இறக்கங்களையும் உள்நாட்டுப் பூசல்களையும் சந்திக்காமல் இல்லை. பதவியைக் கைப்பற்றிய 7 ஆண்டுகளிலேயே கி.பி. 1199ல் விபத்தில் யொரிதொமொ மரணமடைந்தார். பின்னர் அவரது மாமனாரான தொக்கிமாசா தனது மகளும் யொரிதொமொவின் மனைவியுமான மசாக்கோவை அடுத்த ஷோகனின் பாதுகாவலராக நியமித்துப் பரவலான அதிகாரங்களை வழங்கினார். யொரிதொமொவின் முதல் மகன் 17 வயது நிரம்பிய யொரியே 2வது ஷோகனாக நியமிக்கப்பட்டார். சில ஆண்டுகளில் ஹோஜோ வம்சத்தினர் அளவுக்கு மீறிய அதிகாரத்தை அனுபவிக்கிறார்கள் என்று கருதிய யொரியே தன் தாயிடமிருந்த அதிகாரங்களைத் தனதாக்கிக்கொள்ள முயன்றபோது தொக்கிமாசாவால் கொல்லப்பட்டார். பின்னர் யொரிதொமொவின் இரண்டாவது மகனும் இப்பாடலின் ஆசிரியருமான சனெதொமொ மூன்றாவது ஷோகனாகப் பதவியேற்றார். அப்போது சனேதொமொவுக்கு வயது 12. அதிகாரத்தின் சுவையைக் கண்ட இவரது தாய் மசாக்கோ சில சமயங்களில் தன் தந்தை தொக்கிமாசாவுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கினார். அதற்கு சனேதொமொவைப் பகடைக்காயாகப் பயன்படுத்தத் தொடங்கினார். எனவே, தொக்கிமாசா சனேதொமொவையும் கொல்ல முனைந்தார். ஆனால் தொக்கிமாசா 1205ல் இறந்து விட்டார். இவரது மகனும் மசாக்கோவின் தம்பியும்தான் பின்னாளில் கோதொபாவை நாடுகடத்திய யொஷிதொக்கி. தன் அண்ணன் யொரியேவுக்கு ஏற்பட்ட முடிவு தனக்கும் ஏற்படாமல் இருக்க, அரசு தொடர்பான செயல்பாடுகளில் நாட்டத்தைக் குறைத்துக்கொண்டு இலக்கியத்தின் பக்கம் திரும்பினார். இத்தொடரைத் தொகுத்த புலவர் சதாய்யேவிடம் கவிதை புனையக் கற்கத் தொடங்கினார். தனது 17வது வயதிலிருந்து 22வது வயதுக்குள்ளாகச் சுமார் 700 தான்காக்களை இயற்றினார். இப்பாடல்கள் கின்க்காய் எனும் பெயரில் தனிப்பாடல் திரட்டாக வெளியிடப்பட்டது. கி.பி. 1219ம் ஆண்டின் தொடக்கத்தில் கமாகுராவிலுள்ள ஹச்சிமாங்கு கோயிலுக்குச் சென்றபோது அக்கோயிலில் மதகுருவாக இருந்த தன் அண்ணன் யொரியேவின் மகன் யொஷினாரியால் கொல்லப்பட்டார். இவரைக் கொன்றபோது யொஷினாரி தன் தந்தையின் மரணத்துக்குப் பழிவாங்கிவிட்டேன் என்று கூச்சலிட்டு இவரது தலையைத் தூக்கிக்கொண்டு மறைவிடத்துக்கு ஓடித் தனது ஆதரவாளரான யொஷிமுராவுக்குத் தகவல் அனுப்பினார். சனேதொமொவைக் கொன்றுவிட்டதால் தன்னை 4வது ஷோகனாக நியமிக்க உதவுமாறு தூது அனுப்பிய யொஷினாரியைச் சற்று நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு யொஷிதொக்கிக்குத் தகவல் அனுப்பிக் காட்டிக் கொடுத்தார். உடனே வீரர்கள் யொஷினாரியைச் சிறைப்பிடித்து அப்போதே வெட்டிக்கொன்றனர். ஆனால் சனேதொமொவின் தலை மட்டும் கிடைக்கவே இல்லை. எப்படியோ சனேதொமொவுக்குத் தனது முடிவு தெரிந்திருந்தாற்போல் அன்று ஹச்சிமாங்கு கோயிலுக்குச் செல்லும் முன்னர் தான் ஆசையாக வளர்த்த ப்ளம் மரத்துக்கு ஒரு பிரிவுபசாரக் கவிதை எழுதியிருக்கிறார். தன் வேலைக்காரன் ஒருவனுக்குத் தன் தலைமுடி ஒன்றைத் தன் ஞாபகமாக வைத்துக்கொள்ளுமாறு தந்திருக்கிறார். தலையைக் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் இவர் தனது வேலைக்காரனுக்குக் கொடுத்த தலைமுடியை மட்டும் வைத்து கமாகுராவில் ஜுஃபுக்குஜி என்னும் இடத்தில் இவரது கல்லறை எழுப்பப்பட்டது. பிற்காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற ஹைக்கு கவிஞர் மசாவோக்கா ஷிகி இத்தொடரின் 3வது பாடலை (பீலியன்ன நீள் இரவு) பாடலை இயற்றிய புலவர் ஹிதோமரோவுக்கு அடுத்த சிறந்த கவிஞர் சனேதொமொ எனப் பாராட்டியுள்ளார். பாடுபொருள்: வாழ்வின் நிலையாமை பாடலின் பொருள்: மீனவர்கள் கடலில் மீன்பிடித்துத் தங்கள் உழைப்புக்கேற்ற மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியாகக் கரைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த மகிழ்ச்சியிலேயே காலம் தங்கிவிடக்கூடாதா? மாற்றம் ஒன்றே மாறாதது என்ற நிலையைத் தாண்டி மகிழ்ச்சியான நேரங்கள் அப்படியே நிலைத்து விட்டால் நன்றாக இருக்குமல்லவா என்ற எண்ணத்தின் அடிப்படையில் உருவான ஓர் எளிய பாடல். இது இயற்கைக்கு முரணானது என்றாலும் 12 வயதில் பதவியேற்றுப் பல காரணங்களால் அதை நிம்மதியாக வகிக்க இயலாமல் போன ஒருவருக்கு இப்படித் தோன்றுவது இயல்புதானே? வெண்பா: ஓடுவது காலமாம் என்றே அறிஞரின் ஏடுகொள் நீதியது கூறிடுமே - நாடும் நிகழும் எதுவும் நிலையென நின்றிட ஓடாது நிற்குமோ வாழ்வு? (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |