![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 182
![]() இதழ் 182 [ மார்ச் 2025 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் わが袖は 潮干に見えぬ 沖の石の 人こそ知らね 乾くまもなし கனா எழுத்துருக்களில் わがそでは しほひにみえぬ おきのいしの ひとこそしらね かわくまもなし ஆசிரியர் குறிப்பு: பெயர்: சேடிப்பெண் சனுக்கி காலம்: கி.பி. 1141-1217. கி.பி. 1158 முதல் 1165 வரை ஜப்பானை ஆண்ட பேரரசர் நிஜோவின் பட்டத்தரசியின் அந்தப்புரத்திலும் கி.பி. 1183 முதல் 1198 வரை ஆண்ட பேரரசர் கோதொபாவின் பட்டத்தரசி நின்ஷியின் அந்தப்புரத்திலும் சேடிப்பெண்ணாக இருந்தவர். பாடல் புனைவதில் வல்லவர். ஹெய்கேவின் கதைகள் மற்றும் ஹெய்ஜியின் கதைகள் ஆகிய புதினங்களில் முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒருவராக விளங்கியவர். நம் இலக்கியங்களில் காலெறி கடிகையார், செம்புலப் பெயநீரார், அணிலாடு முன்றிலார் போன்று தாம் எடுத்தாண்ட உவமையால் பெயர் பெற்றவர் இவர். இப்பாடலில் நீருள் இருக்கும் பாறையை உவமையாகக் கையாண்டு புகழ்பெற்றதால் ஓகினோஇஷி சனுக்கி எனப் பெயர் பெற்றார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 73 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 பிற்காலக் கவிஞர்கள் பட்டியலிலும் காலத்தால் அழியாத 36 பெண்பாற் கவிஞர்கள் பட்டியலிலும் இவர் இடம்பெற்றிருக்கிறார். பாடுபொருள்: காதலின் தீராத்துயரம் பாடலின் பொருள்: கரையிலிருந்து தூரத்தில் நீருக்குள் இருக்கும் பாறை உலர நேரமின்றி எப்போதும் ஈரமாகவே இருப்பதுபோல் என் உடையின் கைப்பகுதி எப்போதும் ஈரமாகவே இருப்பதை யாரும் அறியார். தனிமையின் வலியைக் கூறும் மற்றுமோர் எளிய பாடல். உடையின் கைப்பகுதி நனைவது துயரத்துக்கு உவமையாகக் கூறப்படுவதைப் பல பாடல்களில் பார்த்திருக்கிறோம். 90வது பாடலில் () ஓஷிமா மீனவர்களின் உடையை உவமையாகக் கூறுவது ஒருவகை என்றால் கடலுக்குள் எப்போதும் ஈரமாகவே இருக்கும் பாறையை உவமையாகக் கூறுவது தொடர்ச்சியாக நிற்காமல் கண்ணீர் பெருகிக்கொண்டிருக்கிறது என்று பொருள்தரும்படி இயற்றுவது அடுத்தவகை. இத்தொடரின் 56வது பாடலின் (ஒருமுறை வந்து பாராயோ?) ஆசிரியர் இசூமி ஷிக்கிபு வேறொரு பாடல் திரட்டில் இயற்றிய பாடல் ஒன்றை ஒட்டியே இப்பாடல் அமைந்திருக்கிறது. அதில் இசூமி நீரினுள் இருக்கும் கல் என்பதற்குப் பதிலாகக் கரையிலிருந்து தொலைவில் இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத பாறை என இவர் கூறியிருக்கிறார். வெண்பா: காயமிது பொய்யெனக் கண்டும் உளமதன் காயமது ஆறிடாது காதலாலே - காயவும் ஆகாது நீருள் தெரிந்திடாப் பாறையென என்றும் தொடரும் நனைவு காயம் - உடல், புண், காய்தல் (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |