![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [183 Issues] [1814 Articles] |
Issue No. 183
![]() இதழ் 183 [ ஏப்ரல் 2025 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர் அறிமுகம் சீ.ரேவதி, முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை,தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, (பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது) திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா. S.Revathi, Full time research Scholar, Department of Tamil, St.Joseph’s College (Autonomous), Affiliated to Bharathidasan University, Tiruchirappalli-02. Tamil Nadu, India. முனைவர் டே.வில்சன், இணைப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது) திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா. Dr.D. Wilson, Associate Professor, Department of Tamil, St.Joseph’s College (Autonomous), Affiliated to Bharathidasan University, Tiruchirappalli-02. Tamil Nadu, India. Abstract Food is not only energy for the body: it is the intellectual system of society; It also emerges as an adaptive mechanism of society. Adaptation is the habit of living in harmony with the environment they have got. Mankind sustains itself by making the necessary adaptations for its survival and by making a series of steady and slow changes. It also includes diet which is a part of life. Evolutionary theory asserts that only the most adaptive organisms can survive in the struggle for life. Various social systems have evolved around the world to suit each habitat. Nomadic social system is one of these. “Panar” social system is also found as a part of it. The nomads have been integrated into the socio-cultural formation of the Tamil society since Sangakalam. Sangha literary works have subtly recorded this. And the subtle history of Tamil food can be traced back to the Sangha period (590 BC-100 AD). The life of the Tamils was spread out in five ways: Kurinji, Mullai, Neithal, Marutham, Balai. Along with these, there is also an extensive Panar social tradition. The purpose of the article is to explain ethnographically what is the diet of Panars and what is their social system. Keywords: Adaptation, Tribalism, Redistribution, Ethnography, , Foraging, ஆய்வுச் சுருக்கம் உணவு என்பது உடலுக்கு ஆற்றல் தருவது ஆகும். ஓர் சமூகத்தின் அறிவுமுறையாகவும் சமூகத்தின் தகவமைப்பு முறையாகவும் வெளிப்படுகிறது. தமக்குக் கிடைத்துள்ள சுற்றுச்சூழலை அனுசரித்து வாழும் தன்மையே தகவமைப்பு முறையாகும். மனிதகுலம் தன் வாழ்வுக்குத் தேவையான தகவமைப்புகளை உருவாக்கிக் கொண்டு தொடர்ச்சியான சீரான மெதுவான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொள்கின்றது. வாழ்வியலின் ஒரு பகுதியான உணவு முறையும் இதிலடங்கும். பண்பாடென்பது மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்டு மெதுவான மன மாற்றத்திற்கு ஆளாகிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் தகவமையும் உயிரினங்களே பிழைக்க முடியும் என்கிறது படிமலர்ச்சிவாதம். பண்பாட்டின் ஓர் அங்கமாக விளங்கும் உணவும், உணவு முறையும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு வாழிடச் சூழலுக்கும் ஏற்ப உலகளவில் பல்வேறு சமூக அமைப்புகள் உருவாக்கம் பெற்றுள்ளன. இவற்றில் நாடோடிச் சமூக முறையும் ஒன்றாகும். அதனொரு பிரிவாகப் பாணர் சமூக முறையும் காணப்படுகின்றது. சங்ககாலம் தொட்டே தமிழ்ச் சமூகத்தின் சமூகப் பண்பாட்டு உருவாக்கத்தில் நாடோடியினர் ஒருங்கிணைவு பெற்று வந்துள்ளனர். சங்க இலக்கியப் பனுவல்கள் இதனை நுட்பமாகவே பதிவு செய்துள்ளன. மேலும் தமிழர் உணவின் நுட்பமான வரலாற்றைச் சங்ககாலம் (கி.மு.590-கி.பி.100) முதல் அறிய முடிகிறது. தமிழர்களின் வாழ்வியல் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என ஐந்திணைகளில் விரிந்து வந்தது.இவற்றோடு ஒரு விரிவான பாணர் சமூக மரபும் காணப்பட்டுள்ளது. சங்ககாலத்தில் கலைஞர்களாக விளங்கிய பாணர்களின் உணவியல் வழி அவர்களின் சமூகமுறை எத்தன்மையது என்பதை இனவரைவியல் நோக்கில் விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும். குறிப்புச்சொற்கள் தகவமைப்புமுறை, நாடோடியம், பங்கீட்டுமுறை, இனவரைவியல், உணவு தேடி அலைதல் முன்னுரை இந்திய இலக்கிய மரபில் வடமொழி இலக்கியமும் தமிழ்ச் செவ்வியல் இலக்கியமும் பழம்பெருமை கொண்டவையாகும். இவற்றில் வடமொழி இலக்கியத்திற்கு இல்லாததொரு தனித்துவம் சங்க இலக்கியத்திற்கு உண்டு. சங்க இலக்கியம் தொன்மையும் தொடர்ச்சி யும் கொண்டது; சமயச் சார்பற்ற தன்மையையும் கொண்டது. சங்க இலக்கியத்தின் சமயச் சார்பின்மைக்குப் பல அடிப்படைகள் இருந்தாலும் அதற்கு முக்கியமான ஆளுமைகள் பாணர்கள் என்று கூறலாம். ஏனெனில் சங்ககாலப் பாணர்கள் பலவகையான சமூகத்தவர்களாக இருந்தார்கள்; பல இடங்களுக்கும் சென்று தொழிற்பட்டார்கள்; ஒரு விரிவான சமூக முறையைக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய அறிவுமுறை பன்முகப்பட்டது. 'யாதும் ஊரே' என்று சுற்றிய அவர்களின் உலக அனுபவம் தனித்துவமானது; உலகளாவிய பார்வை கொண்டது; சங்க காலத்தில் ஒவ்வொரு திணையிலும் நிலையான குடிகள் வாழ்ந்து வந்தனர். இவர்களே திணைக்குடியினர் எனப்பட்டனர். இந்தத் திணைக்குடிகளையும், சங்ககால தமிழகத்தில் வேந்தர்,வேளிர் குறுநில மன்னர்கள் ஆகியோருக்கு அடுத்த நிலையில் இருந்த சீறூர் மன்னர்களையும், முதுகுடி மன்னர்களையும், குறுநில மன்னர்களையும், சிற்றூர்களில் வாழ்ந்த நிலக்கிழார்களையும் ஆதரவுச் சமூகத்தாராக ஏற்றுக்கொண்டு அவர்களை அண்டி வாழ்ந்தவர்கள் பாணர் குடியினர். அவர்களுடைய உணவு முறை (உணவியல்) நாடோடியத்தை (tribalism) பிரதிபலிப்பதை சங்க இலக்கியம் வழி இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது. பாணர்களின் வாழ்க்கைநிலை பாணர்கள் இயல், இசை, நாடகமெனப் பலதுறை வல்லுநர்களாக இருந்தாலும் அவர்களின் புலமைக்கேற்ற பொருள் வளமில்லாமல் இருந்துள்ளனர். வறுமையில் வாடியுள்ளார்கள். பெரும்பாலான பாணர்கள் வறுமை நீங்காச் சூழலிலேயே வாழ்ந்து வந்துள்ளனர் என்பது சங்க இலக்கியங்கள் வழி அறியப்படுகின்றது. “வறுமையர் பாணர் பூஇல் வறுந்தலை போல”1 “பாணர் காண்கஇவன் கடும்பினது இடும்பை”2 எனும் பாடலடிகள் பாணர்களின் வறுமை நிலையை உணர்த்துகின்றன. “உடும்பு உரித்தன்ன என்புஎழு மருங்கின் கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது”3 என்ற பாடற்பகுதி பாணரின் கடும் பசியினைக் களையக்கூடிய வள்ளலைக் காணாது வறுமையின் கொடுமையினால் எலும்பும் தோலுமாக இருந்ததை உடும்பு என்னும் விலங்கின் தோலினை உரித்தபின் காட்சி தருவதைப் போலக் காணப்பெற்றதைப் புலப்படுத்துகிறது. உடை கிழிந்தும், நைந்தும், பழமையுற்று, இழைகள் எல்லாம் தெரியும்படி கிழிந்துபோன ஆடையை அணிந்திருந்தனர். நெய்த இழைகளைக் காட்டிலும் கிழிந்த இடங்களைத் தைத்த பிற நூல் இழைகளே மிகுந்து இருந்தன என்பதை “தொன்றுபடு துளையொடு பருவிழை போகி நைந்துகரை பறைந்தஎன் உடையும் நோக்கி”4 என்று புறநானூறு வழி அறிய முடிகிறது. “விரும்பிய முகத்த னாகி என்அரைத் துரும்புபடு சிதாஅரநீக்கித் தன அரைப் புகைவிரிந் தன்ன பொங்குதுகில உடீஇ” 5 என்ற பாடலடிகள் பாணனுடைய கிழிந்த ஆடையை நீக்கித் தன் இடுப்பிலுள்ள புகையைப் போன்ற ஆடையை வஞ்சன் என்னும் மன்னன் வழங்கினான் என்று குறிப்பிடுகின்றன. சங்க இலக்கியப் பாடல்கள் பாணர்களின் வறுமையைப் பலவாறு படம்பிடித்துக் காட்டுகின்றன. பசியின் காரணமாகப் பஞ்சடைந்த கண்களுமாய் உடல் மெலிந்து எலும்பும் தோலுமாய்ச் சுற்றத்தாருடன் கடும்பசியில் உழன்றதைக் கூறுகிறது. பாணர்களின் வாழ்வு வறுமை,வளம் என இரு துருவங் களையும் கொண்டிருந்தது. அவர்களின் வாழ்க்கை ஏற்றமும் இறக்கமும் உடையது. பாணர்கள் உப்பு இல்லாத கீரையைச் சமைத்துண்ணும் வறிய வாழ்வையும் கொண்டிருந்தனர் என்பதை “ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல், வளைக் கை, கிணை மகள் வள் உகிர்க் குறைத்த குப்பை வேளை உப்பு இலி வெந்ததை, 6 என சிறுபாணாற்றுப்படை காட்டுகின்றது. மேலும் பாணர்கள் அரசனோடு இருந்து இராசபோக வாழ்வையும் அனுபவித்துள்ளனர் என்பதை பரிசில் பெற்ற பாணன் வறுமையில் வாடும் மற்றொரு பாணனுக்கு வள்ளலிடம் செல்வதற்கான வழிக்காட்டும் பொருளில்ட அமைந்த சங்க இலக்கிய ஆற்றுப்படை நூல்கள் வழி அறியலாம். உணவு தேடி அலைதல் ( foraging) சங்க கால அரசர்கள் தம் வாழ்வியல் விழுமியங்களில் பாணர்க்குப் பரிசில் கொடுப்பதற்காக அவர்களை வரவழைப்பதும் தம் கடமையெனப் (பாண்கடன்) போற்றியுள்ளனர். 'ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய' 7 ‘பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்'8 எனும் அடிகள் இதனைப் புலப்படுத்துகின்றன. 'பாணர்க்கு அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்' 9 என மன்னர்கள் பெயர் பெற்றனர். 'பாணர்கள் மனநிறைவு கொள்ளும்படிப் பல்வேறு வகையான பொருட்களைப் பெற்றனர்; பாணர்கள் கிழிந்த ஆடைகளுடன் சென்றனர். மன்னர்கள் அவற்றைக் களைந்து புத்தாடை அணிவித்தார்கள்; மன்னர்கள் முதலில் பாணர்களின் பசியைப் போக்கினர்: கொடுத்து மகிழ்வித்தனர் என்று புறநானூற்றுப் பாடல்கள் கூறுகின்றன. இதனாலேயே ‘கடும்பின் கடும்பசி கலையுநர்'10 என்றே மன்னர்கள் பெயர் பெற்றுள்ளனர்.புலமைமிக்கப் பாணர்க்கு மன்னர்கள் தங்கத்தாலான பொற்றாமரைப் பூச்சூட்டிப் பெருமைப்படுத்துவார்கள். 'சூடாய் பொலந் தாமரைப் பூம்பாணரொடு'11 'ஆடுவண்டு இமிராத் தாமரை'12 எனும் பாடலடிகள் இதற்குச் சான்றாகும். மன்னர்கள் தாம் போரில் வென்ற யானைகளையும் குதிரைகளையும் பரிசிலாகத் தந்தார்கள். 'களிறுபெறு வல்சிப் பாணன்'13 எனும் அடியும், 'பாணர், பரிசில் பெற்ற விரி உளை நல்மான்' 14 எனும் அடியும் இவற்றைக் கூறுகின்றன. “பாணர்க்கு ஓக்கிய நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்'15 சீறூர் மன்னர்கள் தம் ஊர்கள் சிலவற்றைப் பரிசிலாக வழங்கினார்கள் என்று புறநானூறு கூறுகிறது.பாணர்களுக்கு மட்டுமல்லாமல் அவருடன் பெருங் கூட்டமாக வரும் பாணர் சுற்றத்தாருக்கும் 'இன்னும் வரும்கொல் பாணரது கடும்பே'16 என உணவும் பொருளும் கொடுத்து மன்னர்கள் பாண்கடன் ஆற்றியுள்ளனர். பரிசிலரின் பாதுகாவலர்கள்' என்றே மன்னர்கள் பெயர் பெற்றனர். ‘பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்”17 என்கிற குறுந்தொகைப் பாடல் நமக்கு தெளிவுப்படுத்துகிறது. பாணர்களின் உணவியல் பாணர்கள் எளியவர்கள்; வறுமையாளர்கள். ஆயினும் அவர்களுக்கு வழங்கும் உணவில் எவ்விதமான குறையையும் வள்ளல் பெருமக்கள் வைப்பதில்லை. தாங்கள் உண்ணுகின்ற உணவை அல்லது அதற்கு நிகரான உணவைப் பாணர்களுக்கு வழங்குவார்கள். சீறூர் மன்னர்கள் குறுகிய காலையுடைய உடும்பின் தசையைச் சமைத்துத் தயிருடன் கூடிய கூழையும் புதிதாக வந்த வேறு உணவுப் பழம், கள், தீயில் வாட்டிய தசைத் துண்டுகள், அரிசியில் நெய் சேர்த்துச் சமைக்கப்பட்ட உணவு முதலியவற்றையும் பாணரின் பசி நீங்கத் தருவார்கள் என்பதை “படுமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின் விழுக்கு நிணம் பெய்த தயிர்க்கண் விதவை யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு வருவிருந்து அயரும்” 18 என்ற புறநானூற்று வரிகள் காட்டுகின்றன. பாணருக்கு விருந்தளிக்கும் ஆரவாரத்துக்கு மத்தியில் நெற்றியில் அணியத்தகும் பொன்னாலாகிய பட்டம் முதலானவற்றைப் பரிசிலாக வழங்கினர். “அரவு வெகுண்டன்ன தேறலோடு சூடுதருபு நிரயத்தன்ன என் வறன்களைந் தன்றே”19 இவ்வாறு பாணர்களுக்கு கள்ளும் ஆட்டிறைச்சியும் தந்து பாணர்களின் வறுமையைப் போக்கினர் என்ற புறநானூற்று வரிகள் மூலம் அவர்களின் விருந்து போற்றும் திறத்தினை அறிய முடிகிறது. திருமாவளவன் தந்த இறைச்சி உணவைத் தின்ற பொருநர்களின் பற்கள் கொல்லையில் உழுத கலப்பையின் கொழு வந்தவர்களுக்கு போலத் தேய்ந்தது என்கிறது பொருநராற்றுப்படை (14-118) நள்ளி எனும் வேட்டைத் தலைவன் தன் குன்றுக்கு வேட்டையாடிய மான் இறைச்சியைத் தானே தீயில் சுட்டுத் தந்தான் (புறம்.150). ஓரி எனும் மன்னன் வேட்டையாடிய மான் கறியோடு மதுவையும் வழங்கிப் பசி தீர்த்தான் (புறம்.152). வேடர் குலப் பெண் ஒருத்தி சிறுவர்கள் மடுவில் பிடித்து வந்த உடும்பின் இறைச்சியோடு தயிர் கலந்து தயாரித்த கூழினைப் பாணர்களுக்குக் கொடுத்தாள் (புறம். 326). இவ்வாறு பாணர்கள் எல்லாத் திணைகளிலும் மன்னர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் விருந்துண்டார்கள். பாணர்கள் பெரிய அளவில் பரிசுகளைப் பெற்ற பொழுதும் உணவுக்குப் பல நேரங்களில் திண்டாடி இருக்கின்றனர். பசியினால் பெரிதும் வருத்தமடைந்தனர்.பாணன் உணவு உண்ணாத காரணத்தால் உடல் வாட்டமடைந்து கண்கள் நீரால் நிறைந்து உடல் வியர்த்துச் சுற்றத்தினருடன் பசியால் வருந்துகிறான். பாணரும் பாணரின் சுற்றமும் பசியுடன் இருந்தனர். பாணர் மகிழ்ச்சியடைய அவருடைய பசியினை மாற்றுவர். கடன்காரர்களுக்குக் கொடுத்துப் பின் எஞ்சியதைப் பசித்து வந்த பாணர் உண்டு வெளியேறுவர் என்பதை, “உண்ணாமையின் ஊன்வாடித் தெண்ணீரின் கண்மல்கிக் கசிவுற்றஎன பல்கிளையொடு பசி அலைக்கும் “20 என்ற வரிகள் மூலம் அறிய முடிகிறது. “சேர நாட்டில் வீரர், இரவலர் முதல்வர்க்கு வழங்கப்பட்ட உணவில் இறைச்சி, கள், வெண்ணெல் சோறு தவறாமல் இடம்பெற்றன” 21என்பதை ராஜ்கௌதமன் கவனப்படுத்துகிறார்." உண்கலம் பாணர்கள் தாங்கள் செல்லும் இடந்தோறும் மண்டையை (உண் கலத்தை) உடன் கொண்டு சென்றுள்ளனர்.பாரி வள்ளல் பாணனின் உண்கலம் நிறையக் கள்ளினை வழங்கி மகிழ்விப்பான் என்பதை “பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்”22 எனும் அடி புலப்படுத்துகின்றது. பாணர்களின் உணவு பங்கீட்டு முறை (Redistribution) பாணர்கள் தாம் பெற்ற பொன்னையும் பொருளையும் சேமித்தாரில்லை. அன்றாட தேவைக்கு மிஞ்சியதை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தார்கள். உபரி, சேமிப்பு இரண்டுமற்ற ஒரு பழங்குடிப் பண்பைக் கொண்டவர்களாக இவர்களுடைய வாழ்வு இருந்தது. எவ்வளவு பொருள் கிடைத்தாலும் தம் நுகர்வுக்குக் கூடுதலானவற்றை எல்லார்க்கும் வழங்கி மகிழ்ந்தார்கள். “பசித்த ஓக்கல் பழங்கன் வீட”23 “இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற”24 எனும் அடிகள் மூலம் இதனை அறியலாம். பாணர்கள் தாம் மட்டுமில்லாது தம் கூட்டத்தையே வாழ்விக்க வேண்டியவர்களாக இருந்தனர். பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைக் கூட்டங்கள் நாடிச் செல்வது போலப் பாணர்களும் கூட்டம் கூட்டமாகச் சென்றார்கள். பழமரத்தையும் பறவைகளையும் உவமை காட்டி விளக்குவதன் மூலம் பாணர் கூட்டத்தின் தன்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது. “கனிபொழி கானம் கிளையொடு உணீஇய துனைபறை நிவக்கும் புள்ளினம் மான”25 பாணர்களில் பலர் தாம் துய்ப்பதற்கு மட்டுமன்றிப் பிறர்க்குக் கொடுப்பதற்காகவும் பரிசில் பெற்றனர் என்பதை இப்பாடலடி உணர்த்துகிறது. “நிறன் உற்ற அராஅப் போலும் வறன் ஓரீஇ வழங்கு வாய்ப்ப விடுமதி அத்தை, கடுமான் தோன்றல்”26 நல்ல நிறத்துடன் இருக்கும் பாம்பு தன் தோலை உரித்துப் புதுப் பொலிவு பெறுவதுபோலப் பரிசில் கொடுத்து எம் வறுமையை நீக்கி வழியனுப்புவாயாக என்று பாணன் கூறும் இக்கூற்று இவர்களுடைய வாழ்வு வறுமையைக் காட்டுகிறது. பாணர்களின் வாழ்வு கவலையில்லாத பறவைகளின் வாழ்க்கை போன்றதாகும். சுற்றித் திரிந்தால் வாழ்ந்துவிடலாம் என்ற கொள்கையுடையவர்களாய் இருந்தார்கள்; 'யாதும் ஊரே' என்று திரிந்துள்ளனர். உணவு பரிவர்த்தனை முறை பாணர்கள் கலைஞர்களாக வாழ்ந்தாலும் அவர்கள் கையிலிருந்தவற்றை மற்றவர்க்குக் கொடுத்துப் பண்டமாற்றம். செய்து கொண்டார்கள். வாளை மீனை விற்று அதன் விலைக்குப் பழம் நெல்லையும் முத்துக்களையும் நல்ல ஆபரணங்களையும் மருதத் திணைப் பாண்மகள் பெற்றுக்கொண்டாள் எனப் பண்டமாற்று முறையை அகநானூறு நமக்குக் காட்டுகிறது. “காலைத் தந்த கணைக்கோட்டு வானைக்கு அவ்வாங்கு உந்தி அஞ்சொல் பாணமகள் நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகில் பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளான கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்”27 பாண்மகள் இனிய கெடிற்று மீனைக் கொணர்ந்து மருத நில இல்லத்தரசியிடம் வட்டி நிரம்புமாறு கொடுக்க, அவள் அரிகாலில் விதைத்துப் பெற்ற பெரும் பயற்றைக் கொடுத்தனுப்புகிறாள் என ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது." “முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த அகன்பெரு வட்டி நிறைய, மனையோள் அரிகாற் பெரும்பயறு நிறைக்கும் ஊர”28 தொகுப்புரை பாண் குழுவினரை ஐவகை நில மக்களும் வரவேற்றுப் பசி நீக்கி அவர்களை ஆதரித்துள்ளனர். இதனைப் பெரும்பாணாற்றுப்படையும், சிறுபாணாற்றுப்படையும், மலைபடுகடாமும் புலப்படுத்துகின்றன. சீறூர் மன்னர்கள், முதுகுடி மன்னர்கள், குறுநில மன்னர்கள், நிலக்கிழார்கள், ஊர்ப் பொதுமக்கள் என அனைவரும் அவர்களை ஆதரித்துள்ளனர். பாணர்கள் செல்லும் வழியெங்கும் ஊர்ப் பொது மன்றங்களில் தங்கள் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி மக்களை மகிழ்ச்சியுறச் செய்துள்ளனர். பாணரின் வாழ்க்கை முறையில் சுற்றத்தார் பெரும்பங்கு வகிக்கின்றனர். பாணரைக் குறிப்பிடும் பொழுதெல்லாம் கடும்பு. ஒக்கல், சுற்றம் எனக் குறிக்கப் பெறுகின்றனர். பாணர்கள் தனித்து இயங்காமல் தம் சுற்றமொடு நாடோடிக் குழுவினராய்ப் பரிசில் தரும் வள்ளல்களை நாடிச் சென்றுள்ளனர்.பழங்கள் தரும் மரங்களை நாடும் பறவைகள் போலப் பாணர்களும் குழுவாக வள்ளல்களை நாடினார்கள் என்பதைப் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது. பாணர் தம் வாழ்வில் பெற்ற வளத்தைச் சுற்றமொடு பகிர்ந்து வாழ்ந்ததை அறிய முடிகின்றது. செல்வத்தைச் சேர்த்து வைக்கும் வழக்கம் உடையவராக இவர்கள் இருக்கவில்லை. நிலைத்த சமூகமாய் அல்லாமல் நாடோடிகளாய் நிலை குடிச் சமூகத்தினரை நாடி, அண்டி வாழும் நாடோடிகளாய் வாழ்ந்தனர். இது நாடோடியத்தின்(Tribalism) தனிப்பெரும் பண்பாகும். சுருக்கக் குறியீடு: புறம். – புறநானூறு, அகம். – அகநானூறு, நற். – நற்றிணை, மலைபடு.- மலைபடுகடாம், ஐங்.- ஐங்குறுநூறு, சிறுபாண்.- சிறுபாணாற்றுப்படை, பதி.- பதிப்பு , உரை – உரையாசிரியர். பா. – பாடல். அடிக்குறிப்புகள் 1. கல்யாணசுந்தரையர்.சா, குறுந்தொகை, பா. எண். 19:1-2 2. புலியுர் கேசிகன், புறநானூறு மூலமும் உரையும், பா.எண்.173-2 3. மேலது பா.எண்.68: 1-2. 4. மேலது பா. எண்.376: 10-11. 5. மேலது பா. எண்.398: 18-20. 6. முருகன். இரா, சிறுபாணாற்றுப்படை, பாடலடி எண். 135-137 7. புலியுர் கேசிகன், புறநானூறு மூலமும் உரையும் பா. எண்.201:14. 8. மேலது பா. எண்.203:1. 9. மேலது பா.எண்.8:2. 10. மேலது பா.எண். 68:2. 11. மேலது பா.எண். 361:12. 12. மேலது பா.எண். 69:20. 13. இராஜகோபாலய்யர், அகநானூறு, பா.எண்.106. 14. ஔவை சு.துரைசாமிபிள்ளை, நற்றிணை மூலமும் உரையும், பா.எண்.185. 15. புலியுர் கேசிகன், புறநானூறு மூலமும் உரையும், பா.எண்.302;-6-7. 16. மேலது பா.எண்.264:7. 17. கல்யாணசுந்தரையர்.சா, குறுந்தொகை, பா.எண்.59:1. 18. புலியுர் கேசிகன், புறநானூறு மூலமும் உரையும் பா.எண்.326 :9-12. 19. மேலது பா.எண்.376: 14-15. 20. மேலது பா.எண் . 136:6-9. 21. ராஜ் கௌதமன்,2006, பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், பக். 211. 22. புலியுர் கேசிகன், புறநானூறு மூலமும் உரையும், பா.எண்.115:2. 23. மேலது, பா.எண்.389. 24. மேலது, பா.எண்.390. 25. இளங்குமரன்.இரா, மலைபடுகடாம், பா.எண்.54-55. 26. புலியுர் கேசிகன், புறநானூறு மூலமும் உரையும், பா.எண்.382. 27. இராஜகோபாலய்யர், அகநானூறு, பா.எண்.126:8-12. 28. ஔவை சு.துரைசாமிபிள்ளை, ஐங்குறுநூறு மூலமும் உரையும், கழக வெளியீடு, பா.எண்.47:1-3. துணைநூற்பட்டியல் 1. இராஜகோபாலய்யர்,1920, அகநானூறு, கம்பர் புஸ்தகாலயம்,சென்னை. 2. இளங்குமரன்.இரா,2015, மலைபடுகடாம், புரட்சிக் கவிஞர்மன்றம், மதுரை. 3. ஔவை சு.துரைசாமிபிள்ளை, நற்றிணை மூலமும் உரையும், கழக வெளியீடு, திருநெல்வேலி. 4. ஔவை சு.துரைசாமிபிள்ளை, ஐங்குறுநூறு மூலமும் உரையும், கழக வெளியீடு, திருநெல்வேலி. 5. கல்யாணசுந்தரையர்.சா., 1947, குறுந்தொகை, கபீர் அச்சுக்கூடம்,(பதி.) சென்னை. 6. புலியுர் கேசிகன், 2010, புறநானூறு மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை. 7. முருகன். இரா,(உரை) 2022, சிறுபாணாற்றுப்படை, தமிழ் வளர்ச்சித் துறை (ம) தமிழ்நாட்டு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், .சென்னை. 8. ராஜ் கௌதமன்,2006, பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், தமிழினி, சென்னை. References 1. Aavai Su. Duraisamillai, Nattrinai Source and Text, Kazhagam Publication, Tirunelveli. 2. Aavai Su. Duraisamipillai, Iynkurunooru Sources and Texts, Kazhagam Publication, Tirunelveli. 3. Ilangumaran.Ira, 2015, Malaipadugadam, Pratachik Kavinjarmanram Madurai. 4. Kalyanasundaraiyer.S, 1947, Kurunthokai, kabir achukoodam, Chennai. 5. Murugan.R ,2022, Sirupanattrupadai, Tamil valarchi Thurai & Tamilnadu text book and educational services corporation 6. Puliyur Kesigan, 2010, Purananuru source and text, Saradha Publishing House, Chennai, 7. Rajagopalaiyar, 1920, Agananooru, Kambar Pustakalayam, Chennai. 8. Raj Gauthaman, 200, Songs, Anthologies, Tolkappiyam Tamil social Formation, Tamilini, Chennai. நிதிசார் கட்டுரையாளர் உறுதிமொழி/Author Contribution Statement: இல்லை/ NIL கட்டுரையாளர் நன்றியுரை/Author Acknowledgement: இல்லை/ NIL கட்டுரையாளர் உறுதிமொழி/Author Declaration: இக்கட்டுரையில் எவ்வித முரண்பாடும் இல்லை என்று உறுதிமொழி அளிக்கிறேன்./ I declare that there is no competing interest in the content and authorship of this scholarly work. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |