http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[183 Issues]
[1814 Articles]
Home About US Temples Facebook
Issue No. 183

இதழ் 183
[ ஏப்ரல் 2025 ]


இந்த இதழில்..
In this Issue..

தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் – ஒப்பீடு - 1
வடகுடிப் பஞ்சநதீசுவரர் கோயில் - 1
The National Museum, New Delhi - A Cultural Legacy of India
சங்ககாலப் பாணர்களின் இனக்குழு உணவியல்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 98 (மயக்கும் மாலைப்பொழுதே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 97 (எரிதழல் உள்ளம்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 96 (பனிவிழும் முதுவனம்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 95 (துன்பம் போக்குவதே தூயபணி)
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் – 5
இதழ் எண். 183 > கலையும் ஆய்வும்
தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் – ஒப்பீடு - 1
இரா.கலைக்கோவன், மு.நளினி

இந்நூலில் இடம்பெற்றுள்ள பத்தொன்பது குடைவரைகளையும் கருவறைக் குடைவரைகள், மண்டபக் குடைவரைகள் எனும் இரண்டு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தலாம். பாறைக்குளம், ஆண்டிச்சிப்பாறை, குறத்தியறை, சிவகிரி, விழிஞம் குடைவரைகள் பாறைவடிப்பாகக் கருவறை மட்டுமே பெற்றுள்ளன. பாறைக்குளம் குடைவரை, கருவறையின் முன் கட்டுமான மண்டபம் ஒன்றைப் பெற்றுள்ளது. சிவகிரியில் கட்டுமான மண்டபத்துடன் கிழக்கிலும் வடக்கிலும் வாயில்கள் பெற்ற சுற்றும் உள்ளது. எஞ்சிய மூன்றும் பிறந்தமேனிக்கு உள்ள குடைவரைகளாகும்.

கருவறைக் குடைவரைகள்

கருவறைக் குடைவரைகள் ஐந்தனுள் குறத்தியறையின் கருவறைத் தெய்வமாய் சமபங்க விஷ்ணு பொலிகிறார். சிவபெருமானுக்காக உருவான நான்கு கருவறைக் குடைவரைகளுள் விழிஞம் வெறுமையான கருவறை கொண்டுள்ளது. ஆண்டிச்சிப்பாறையில் முழுமையடையாத ஆவுடையாரை மட்டுமே காணமுடிகிறது. பாறைக்குளமும் சிவகிரியும் தாய்ப்பாறையில் உருவாகி முழுமையுற்றிருக்கும் இலிங்கத்திருமேனிகளைக் கொண்டுள்ளன.

இவ்வைந்து கருவறைக் குடைவரைகளுள் கருவறையின் முன்சுவரில் சிற்பங்கள் இருப்பது விழிஞத்தில் மட்டுமே. ஆண்டிச்சிப்பாறையில் வாயிலை அடுத்துள்ள வலக்கோட்டத்தில் இடம்பெறாது, அதையடுத்துள்ள வலப்புறப் பாறைப் பகுதியில் அகழப்பட்டுள்ள கோட்டத்தில் பிள்ளையாரும் கருவறைப் பாறையின் பின் விரியும் அதன் தொடர்ச்சியான வலப் பாறையில் கோட்டம் அகழ்ந்து சேட்டைத்தேவியும் உருவாக்கப்பட்டுள்ளனர். தென்மாவட்டக் குடைவரைகள் பத்தொன்பதில் சேட்டைத்தேவி தாய்ப்பாறையில் உருவாகியுள்ள ஒரே இடமாக ஆண்டிச்சிப்பாறையைக் குறிக்கலாம்.


விழிஞம் குடைவரை


விழிஞம் சிவபெருமான்


திருநந்திக்கரைக் குடைவரை

குறத்தியறையில் கருவறையின் வலப்பாறைச்சரிவில் உள்ள கோட்டத்தில் பிள்ளையார் காணப்படுகிறார். இடக் கோட்டத்தில் சிற்பம் உருவாகவில்லை. சிவகிரியிலும் பாறைக்குளத்திலும் கருவறை இலிங்கம் தவிர தாய்ப்பாறையில் உருவான சிற்பங்களாக வேறெவையும் இல்லை.

மண்டபக் குடைவரைகள்

தென்மாவட்டங்களின் பதினான்கு மண்டபக் குடைவரைகளில் கூத்தம்பூண்டியான் வலசுக் குடைவரை முகப்பு மட்டுமே பெற்றுள்ளது. நான்கு முழுத்தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் கொண்டு மிளிரும் ஒரே தென்தமிழ்நாட்டுக் குடைவரையாக வலசைக் குறிப்பிடலாம். முகப்புத் திறக்கப் பெற்றிருப்பின் ஐந்து இடைவழிகள் பெற்ற ஒரே தென்தமிழ்நாட்டுக் குடைவரையாகவும் வலசு அமைந்திருக்கும். திருமலைப்புரத்தில் மலையின் பின்புறத்தே ஒரு குடைவரை நிறைவடையாத பணியாய்க் கைவிடப்பட்டுள்ளது.


திருமலைக் குடைவரை முகப்பு


திருமலை முருகன்


கூத்தம்பூண்டியான் வலசு

வெற்றுக் கருவறைகள்

வலசு, திருமலைப்புரம் இரண்டாம் குடைவரை தவிர்த்த பன்னிரண்டு மண்டபக் குடைவரைகளுள் வெற்றுக் கருவறை கொண்டிருப்பவை ம.புதுப்பட்டியும் செவல்பட்டியுமாகும். செவல்பட்டிக் குடைவரைச் சுவர்களில் சிவபெருமான், விஷ்ணு, பிள்ளையார் சிற்பங்களுடன் காவலர் சிற்பங்களும் உள்ளன. இக்காவலர் சிற்பங்கள் குடைவரையை சிவபெருமானுக்குரியதாய் அடையாளப்படுத்துகின்றன. ஆனால், புதுப்பட்டியில் கோட்டங்களும் சுவர்களும் சுற்றும் கருவறை போலவே வெறுமையாக உள்ளன. அதனால், புதுப்பட்டிக் குடைவரையின் இறைநோக்கை அறியக்கூடவில்லை.

முதன்மைத் தெய்வங்கள்

விஷ்ணு

மேற்சொன்ன நான்கு தவிர்த்த நிலையில் எஞ்சியுள்ள பத்துக் குடைவரைகளில் விஷ்ணுவிற்காக உருவாகியிருப்பது திருத்தங்கல் மட்டுமே. கருவறைக் குடைவரையான குறத்தியறையில் நின்றகோலத்தில் காட்சிதரும் விஷ்ணு திருத்தங்கலில் பள்ளி கொண்ட பெருமாளாக உருவாக்கப்பட்டுள்ளார். இரண்டு குடைவரைகளிலுமே தனியராகச் செதுக்கப்பட்டிருந்தபோதும் திருத்தங்கலில் ஓவிய வடிவிலும் செய்தமைத்த நிலையிலும் துணைகளைக் காணமுடிகிறது.


திருத்தங்கல் முகப்பு

முருகன்

மண்டபக் குடைவரைகளில் கருவறையில் முருகன் இடம்பெற்றிருக்கும் ஒரே இடம் கழுகுமலை. வள்ளியும் தெய்வானையும் பக்கத்திற்கொருவராக நின்றகோலத்தில் காட்சிதர, மயில் மீது அமர்ந்து முருகன் அருள்தரும் ஒரே குடைவரை இதுதான். மூன்று சிற்பங்களுமே செய்தமைத்தவை. கருவறையில் தாய்ப்பாறையில் உருவான வேறு சிற்பங்கள் இருந்து அழிந்தமைக்கோ, அழிக்கப்பட்டமைக்கோ சுவடுகள் இல்லை. முருகப்பெருமான் முகமண்டபத்தில் கோட்டச் சிற்பமாகத் தாய்ப்பாறையில் உருவாகிப் பொலியும் குடைவரைகளாகத் திருமலை, மூவரைவென்றான் குடைவரைகளைக் குறிப்பிடலாம். அவற்றுள் மூவரைவென்றான் சிற்பம் காலத்தால் பிற்பட்டது.

சிவபெருமான்

கருவறையில் அருவமாகவோ உருவமாகவோ சிவபெருமானைப் பெற்றிருக்கும் எட்டு மண்டபக் குடைவரைகளில் உருவ வடிவில் சிவபெருமான் உமையுடன் காட்சியளிக்கும் ஒரே குடைவரை திருமலைதான். இது போல் இறைவனும் இறைவியும் கருவறையில் இணைந்து அமர்ந்துள்ள மற்றொரு குடைவரை பிரான்மலையில் இருந்தபோதும் திருமலையின் பெருஞ் சிறப்பு கருவறை இறைவனும் இறைவியும் கைசேர்த்திருக்கும் பாங்குதான்.

எஞ்சிய ஏழனுள் சொக்கம்பட்டி தவிர்த்த ஆறு கருவறைகளிலும் இலிங்கத்திருமேனி இடம்பெற்றுள்ளது. எனினும், அவற்றுள் தாய்ப்பாறையில் உருவானவை உள்ள குடைவரைகளாக வீரசிகாமணி, திருமலைப்புரம் இவ்விரண்டை மட்டுமே குறிப்பிடமுடியும். ஏனைய திருநந்திக்கரை, ஆனையூர், மூவரைவென்றான், மலையடிக்குறிச்சி எனும் நான்கு இடங்களிலும் செய்தமைத்த இலிங்கங்களே இடம்பெற்றுள்ளன.

சொக்கம்பட்டியில் எதிரெதிராக இரண்டு கருவறைகள் இருந்தபோதும் அவற்றுள் இறைத் திருமேனிகள் உருவாகவில்லை. எனினும், காவலர்களின் உருள்தடி, மேற்குக் கருவறை வடகாவலர் தலைக்குப் பின்னுள்ள சூலஇலைகள் இவை கொண்டு மேற்குக் கருவறையை சிவபெருமானின் இடமாகவும் உள்ளிருக்கும் கருடாசனப் பெண்வடிவம் கொண்டு (நிலமகள்?) கிழக்குக் கருவறையை விஷ்ணுவின் இடமாகவும் கொள்ளலாம். எனில், தென்மாவட்டக் குடைவரைகள் பதினெட்டில் சிவபெருமான், விஷ்ணு இருவருக்காகவும் கருதப்பட்ட சமய நல்லிணக்கக் குடைவரையாகச் சொக்கம்பட்டி அமையும்.

இது போல் சிவபெருமான், விஷ்ணு இருவரும் எதிரெதிர்க் கருவறைகளில் உள்ள இடங்களாகப் பரங்குன்றம் வடகுடைவரையும் சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரையும் உருவாகியுள்ளமை இங்கு எண்ணத்தக்கது. திருவெள்ளறைக் குடைவரையில் எதிரெதிர்க் கருவறைகள் இருந்தபோதும் இறைத் திருமேனிகள் இன்மையால் அவை எத்தெய்வங்கள் கருதி அகழப்பட்டன என்பது தெரியவில்லை.

விரிவுச்சுவர்ச் சிற்பங்களும் மண்டபங்களும்

முகப்பின் விரிவுச் சுவர்களில் சிற்பங்கள் இடம்பெற்ற ஒரே குடைவரையாகவும் சொக்கம்பட்டியைக் குறிப்பிடலாம். மேற்கில் தேவமங்கையும் கிழக்கில் அடியவரும் சிற்பங்களாகியுள்ள இக்குடைவரையின் மண்டபப் பின்பகுதியும் மாறுபட்ட அமைப்புடையதே. தென்மாவட்ட மண்டபக் குடைவரைகளில் மூன்றில் மட்டுமே மண்டபம் இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது. கழுகுமலையில் இரண்டாம் வரிசைத் தூண்கள் மண்டபத்தை மிகத் தெளிவாக முகமண்டபம், உள்மண்டபம் என இரண்டு பிரிவுகளாகப் பகுத்துள்ளன.

திருநந்திக்கரை மண்டபத்தில் காட்டப்பட்டிருக்கும் தரையின் உயர வேறுபாடு அம்மண்டபத்தை முகமண்டபம், உள்மண்டபம் என இரண்டு பிரிவுகளாக்கியுள்ளது. சொக்கம்பட்டியில் இரண்டாம் வரிசைத்தூண்களும் கூரையுறுப்புகளும் இருந்தபோதும் பணி நிறைவடையாத காரணத்தால், மண்டபம் இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளதா அல்லது முகமண்டபப் பின்சுவரில் மூன்று கருவறைகள் அணைவுத் தூண்களுடன் கருதப்பட்டுள்ளனவா என்பதை உறுதிபடக் கூறக்கூடவில்லை. எனினும், இப்போதிருக்கும் அமைப்புக் கொண்டு நோக்குகையில் முகமண்டபப் பின்சுவரில் மூன்று கருவறைகள் உருவாக்கும் திட்டமே இருந்திருக்கவேண்டும் என்று கருதலாம்.

சரிவுக்கோட்டங்கள்

குடைவரை வெட்டப்பட்டுள்ள பாறைச்சரிவிலேயே குடைவரையின் வலப்புறமும் இடப்புறமும் கோட்டங்கள் அகழ்ந்து இறைவடிவங்களை உருவாக்கும் மரபு தென்மாவட்டக் குடைவரைகளில் பின்பற்றப்பட்டுள்ளமையைக் குறத்தியறை, வீரசிகாமணி, ஆண்டிச்சிப்பாறை எனும் மூன்று இடங்களிலும் காணமுடிகிறது. குறத்தியறையில் வலப்புறத்தே பிள்ளையாரும் இடப்புறத்தே நிறைவடையாத சிற்பமும் ஆண்டிச்சிப்பாறையில் வலப்புறம் பிள்ளையார், சேட்டை சிற்பங்களும் வீரசிகாமணியில் வலப்புறம் பிள்ளையாரும் இடப்புறம் அடையாளப்படுத்த முடியாத ஆண்சிற்பமும் உள்ளன.

மூன்று இடங்களிலும் பிள்ளையார் உள்ளமை குறிப்பிடத்தக்கது. குடைவரைச் சிற்பமாகவும் இவரைச் செவல்பட்டி, திருமலைப்புரம், மூவரைவென்றான் குடைவரைகளில் காணமுடிகிறது. தென்மாவட்டக் குடைவரைகளில் சிவபெருமானுக்கு அடுத்தாற் போல் மிகுதியான இடங்களில் உள்ள இறை வடிவமாகப் பிள்ளையார் அமைகிறார். மதுரை மாவட்டக் குடைவரைகள் இரண்டிலும் சிவகங்கை மாவட்டக் குடைவரை ஒன்றிலும் புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள் இரண்டிலும் இடம்பெற்றுள்ள எழுவர்அன்னையர் தொகுதி தென்மாவட்டக் குடைவரைகள் ஒன்றில்கூடத் தோற்றம் காட்டவில்லை.

குடைவரை வளாகச் சிற்பமாக இடம்பெறாதபோதும் திருத்தங்கலில் பள்ளி கொண்ட பெருமாள் குடைவரை பெற்றிருக்கும் அதே குன்றின் சரிவில் மகிடாசுரமர்த்தனி உருவாகி உள்ளமை சிறப்பாகும். விழுப்புரம் மாவட்டம் சிங்கவரத்திலும் பள்ளி கொண்ட பெருமாள் குடைவரை கொண்டிருக்கும் குன்றின் சரிவிலேயே மகிடாசுரமர்த்தனியும் தோற்றம் காட்டுவது ஒப்பிட்டு எண்ணத்தக்கது. ஆனால், சிங்கவரத்தில் உள்ள நெருக் கம் தங்கலில் இல்லை.


மகிடாசுரமர்த்தினி

நான்முகன்

தென்தமிழ்நாட்டுக் குடைவரைகளில் தனிக்கோட்டத் தெய்வமாக நான்முகன் இடம்பெற்றிருக்கும் ஒரே குடைவரையாகத் திருமலைப்புரம் அமையும். கருவறைக்கு நேர்நிற்பவராகக் குடைவரையின் முகமண்டபக் கிழக்குச் சுவரில் நான்முகன் காட்டப்பட்டிருக்கும் பாங்கு சிறப்புக்குரியதாகும். வணக்க முத்திரையில் நில்லாமல் கடகமும் சுரைக்குடுக்கையும் கொண்டு முன்கைகள் அமைய, தென்சுவர்க் கோட்டங்களினும் உயரமான கோட்டத்தில் எழுச்சியுடன் நான்முகன் காட்டப்பட்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. பல்லவர் பகுதி போலவே பாண்டியர் பகுதியிலும் நான்முகன் பற்றிய சிந்தனைகள் இருந்தமை இதனால் அறியப்படும்.

சிவஆடல்

பாண்டியர் பகுதிக் குடை.வரைகளில் சிவபெருமானின் ஆடல் தோற்றங்கள் மிகுந்துள்ளன. பாண்டியரின் குன்றக்குடி, வட, தென்பரங்குன்றக் குடைவரைகளில் இடம்பெற்றுள்ளாற் போலவே செவல்பட்டி, திருமலைப்புரம், மூவரைவென்றான் குடைவரைகளிலும் இறைவனின் ஆடல் தோற்றங்கள் காட்சி தருகின்றன. செவல்பட்டியில் குன்றக்குடி மூன்றாம் குடைவரையில் உள்ளாற் போல் அர்த்தரேசிதமும் திருமலைப்புரத்தில் மண்டல நிலை ஆடலும் மூவரைவென்றானில் தென்பரங்குன்றம் போல் புஜங்கத்ராசிதக் கோலமும் உள்ளன.


மூவரைவென்றான் ஆடவல்லான் உமை இணை


செவல்பட்டி ஆடல்நாயகர்

பல்லவர் குடைவரைகளில் சீயமங்கலம் தவிர வேறெங்கும் சிவபெருமானின் ஆடல் தோற்றம் இல்லை. அர்த்தரேசிதம், புஜங்கத்ராசிதம் இவை இராஜசிம்மப் பல்லவரின் கற்றளிகளில் காணப்படுகின்றன. பல்லவர் பகுதியில் மிகுதியாகக் காணப்படும் ஊர்த்வதாண்டவமும் குஞ்சிதமும் ஊர்த்வஜாநுவும் பாண்டியர் பகுதியில் கற்றளிகளில்கூடக் காணுமாறு இல்லை. அது போலவே திருமலைப்புரத்து மண்டலநிலை ஆடலைப் பல்லவர் பகுதியின் எக்கால உருவாக்கங்களிலும் பார்க்க முடியவில்லை.

மூவரைவென்றானில் உள்ள புஜங்கத்ராசித சிவபெருமான், உமை இணை தென்பரங்குன்றம் குடைவரையிலுள்ள புஜங்கத்ராசித சிவபெருமான், உமை இணையின் சிறிய அளவிலான வடிப்பு எனலாம். தென்பரங்குன்றத்திலுள்ள காரைக்காலம்மையும் குடமுழவுக் கலைஞரும் மூவரைவென்றானில் இல்லை.

முகப்பு

தென்மாவட்டக் குடைவரைகளில் பெரும்பாலானவை திருத்தமான முகப்பைப் பெற்றிருந்தாலும் முழுமையான தாய்ப்பாறைத் தாங்குதளம் கொண்ட முகப்பு வீரசிகாமணியில் மட்டுமே காணப்படுகிறது. முகப்பின் நடு இடைவழியை அடையுமாறு, அனைத்து உறுப்புகளும் பெற்ற இப்பாதபந்தத் தாங்குதளத்தை ஊடறுத்துப் படிகளும் பிடிச்சுவரும் தாய்ப்பாறையிலேயே உருவாகியுள்ளன. பிற்காலக் கட்டுமானங் களுக்கு ஆளாகாத தென்மாவட்டக் குடைவரைகளுள் இத்தகு படியமைப்புக் கொண்டிருப்பது வீரசிகாமணி மட்டுமே. திருமலையில் படியமைப்பு இருந்தபோதும் அது பிற்காலத் தள அமைப்பில் மறைந்துள்ளது. சொக்கம்பட்டியில் இருபுறத்தும் படியமைப்பிற்கான பாறைப்பகுதியும் அவை சந்திக்குமிடத்தில் சதுரக் கோட்டமும் விடப்பட்டுள்ளன.


செவல்பட்டிக் கருவறை

மூவரைவென்றான், செவல்பட்டி, ஆனையூர், மலையடிக்குறிச்சி, வீரசிகாமணி, திருமலைப்புரம் ஆகிய ஆறு குடைவரைகளின் முகப்புத்தூண் சதுரங்களிலும் பதக்க வடிப்புகளைக் காணமுடிந்தாலும், அழுத்தமான அதே சமயம் மாறுபட்ட வடிப்புகளை உள்ளடக்கமாகக் கொண்ட பதக்கங்கள் மலையடிக்குறிச்சியில் மட்டுமே உள்ளன. அடுத்த நிலையில் இயல்பான தாமரைப் பதக்கங்கள் கொண்ட திருமலைப்புரத்தைச் சுட்டலாம். செவல்பட்டித் தூண் பதக்கம் ஒன்றில் பாம்பைப் பிடித்திருக்கும் பூதம் ஒன்றும் ஆனையூர்த் தூண் பதக்கம் ஒன்றில் யானைத் திருமகளும் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மலையடிக்குறிச்சி சாயணைத் தேவவடிவம்


மலையடிக்குறிச்சி தேவவடிவம்


மலையடிக்குறிச்சிக் குடைவரை முகப்பு


மலையடிக்குறிச்சி மகரதோரணம்

சதுரம், கட்டு, சதுரம் அல்லது வெறுமையான நான்முகம் எனும் அமைப்புகளிலிருந்து மாறுபட்டு அமைந்த முகப்புத் தூண்களைத் திருமலையிலும் கழுகுமலையிலும் பார்க்க முடிகிறது. திருமலைத் தூண்கள் நான்முகமாக இருந்தபோதும் மேற்பகுதியில் வளையத்தொங்கலும் மூன்று பட்டிகளாலான வடிப்பற்ற கட்டும் வாயகன்ற கலசமும் கொண்டுள்ளன. இக்கலசத்தின்மீதே போதிகை அமர்ந்துள்ளது. முழுத்தூண்கள் வளையத்தொங்கலைத் தொடர்ந்து மிக நீளமான மாலையும் பெற்றுள்ளன. கழுகுமலையில் பெருஞ் செவ்வகமும் நீளமான கட்டும் என முகப்புத்தூண்கள் அமைந்துள்ளமையைக் காணமுடிகிறது. மலையடிக்குறிச்சியில் சதுரம், கட்டு, சதுரமாகவே முழுத் தூண்கள் அமைந்திருந்தபோதும் கட்டுகளின் தொடக்கம் தாமரையிதழ்த் தழுவல் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


திருமலைப்புரம் குடைவரை முகமண்டபம்


ஆனையூர்க் குடைவரை முகப்பு

சில குடைவரைகளில் முகப்புப் போதிகைகள் தரங்கக் கைகள் பெற்றிருந்தபோதும் குளவைக் காணமுடிவது ஆனையூரில் மட்டுமே. தரங்கத்தின் பக்கமுகப்பில் சுருள்கள் இடம்பெற்றிருப்பது மலையடிக்குறிச்சியிலும் திருமலைப்புரத்திலும். முகப்புக் கபோதத்தில் சந்திரமண்டலப் பொறிப்புக்கான முன்னோடி அமைப்பைச் சொக்கம்பட்டி பெற்றுள்ளது.

முகமண்டபம்

முகமண்டபச் சுவர்களில் சிற்பங்கள் பெற்றிருக்கும் குடைவரைகளாகத் திருமலைப்புரம், செவல்பட்டி, திருமலை, வீரசிகாமணி, மூவரைவென்றான் எனும் ஐந்தையும் குறிப்பிடலாம். அவற்றுள் திருமலை அடியவர்களுடன் முருகனை மட்டுமே பெற, மூவரைவென்றானில் குடைவரைக் காலத்தைச் சேராத இணையர் முருகன், பிள்ளையார், ஆடவல்லான், உமை உள்ளனர். திருமலைப்புரமும் செவல்பட்டியும் இறைவனின் ஆடல் தோற்றம், விஷ்ணு, பிள்ளையார் கொள்ள, திருமலைப்புரத்தில் கூடுதலாக நான்முகனும் உள்ளார். வீரசிகாமணியில் அடையாளப்படுத்த முடியாதபடி சிதைந்துள்ள மூன்று ஆடவர் சிற்பங்கள் உள்ளன. கோயிலாரால் தருமர், சகாதேவர், நகுலர் என்றழைக்கப்படும் இச்சிற்பங்கள் இறைவடிவங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டுக் குடைவரைகளில் இறைவடிவம் அல்லாத சிற்பங்கள் முகமண்டபச் சுவர்க் கோட்டங்களில் காணப்படும் குடைவரைகள் மிகச் சிலவே.

முகமண்டபத் தரையில் தாய்ப்பாறையில் அமைந்த நந்தியைத் திருமலைப்புரம் முதல் குடைவரையில் மட்டுமே சந்திக்க முடிகிறது. புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள் பலவற்றில் காணப்படும் தாய்ப்பாறை நந்தி, தென்மாவட்டக் குடைவரைகளில் அருகிப்போனமை எண்ணத்தில் கொள்ளத்தக்கது.

- வளரும்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.