![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [183 Issues] [1814 Articles] |
Issue No. 183
![]() இதழ் 183 [ ஏப்ரல் 2025 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
ஆசிரியர்: www.glorioustamils.com; www.attraithingal.com வலையொலி/ podcast- அற்றைத்திங்கள்…. வலையொலியில் தமிழொலி எழுச்சிப் பாதையில் இரண்டு திருத்தலங்கள்- ஆறைவடதளி மற்றும் திருமறைக்காடு என்பலாற் கலனுமில்லை எருதலால் ஊர்தலில்லை புன்புலா னாறு காட்டிற் பொடியலாற் சாந்து மில்லை துன்பிலாத் தொண்டர் கூடித் தொழுதழு தாடிப் பாடும் அன்பலாற் பொருளுமில்லை ஐயன் ஐயனார்கே (04.40.06) திருநாவுக்கரசரின் திருவையாற்றுப் பதிகம், ‘அன்பலாற் பொருளுமில்லை’ என்று பத்திமையின் அடிப்படையாக அன்பையே வலியுறுத்துகிறது. ‘தொண்டர் கூடித் தொழுதழு தாடிப்பாடுவது’ இறைவன்பால் அன்பை வெளிப்படுத்தும் முறையென்றும் திருத்தமாய்ச் சொல்கிறது. இறையன்பே வாழ்வானபின், பணிவு-குழைவு-உருக்கம்-நெகிழ்ச்சி-அமைதி எனப் பல்வேறுணர்வுகள் கண்முன் வருவதியல்பு. ஆனால், அன்பை அடித்தளமாகக் கொண்ட பத்திமைப் பண்பாளராக மட்டுமல்லாமல், சமூக முறைகேடுகளை எதிர்த்துக் குரலெழுப்பிய பெரும்புரட்சியாளராகவும் விளங்கிய ஏற்றமும் சீற்றமும் நிறைந்த வாழ்க்கை அப்பருடையது. பத்திமையால் விளைந்த நம்பிக்கையையும் மனவுறுதியையும், தொண்டர்களுக்கெனப் போராடும் கருவிகளாக மாற்றிக்கொண்டவர் அவர். அப்பரால் சைவந்தழுவிய முதலாம் மகேந்திரர், மறுமலர்ச்சியாளர் என்பதைக் குறிக்கும் ‘மறுமாற்ற’ என்ற சிறப்புப் பெயரால் போற்றப்பட்டதை முந்தைய கட்டுரையொன்றில் (‘அப்பரும் மகேந்திரரும்- பண்பாட்டுப் புத்துயிர்ப்பில் இரு ஆளுமைகள்’) கண்டோம். திருநாவுக்கரசரோ தாண்டகவேந்தர் என்று போற்றப்படுபவர். தாண்டகப்பா அமைப்பில் ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்…. பணிவோம் அல்லோம்’ என்று மன்னரையெதிர்த்து அடிமையுணர்வை உடைத்தெறிந்த அப்பரின் திருப்பதிகத்திற்கு ‘மறுமாற்றத் திருத்தாண்டகமென்றே’ பெயரிடப்பட்டது எவ்வளவு பொருத்தம்! பதிகத்தில், துகிலுடுத்துப் பொன்பூண்டு திரியும், பாராண்டு பகடேறி வரும் படையுடைய அரசனின் சொற்கேட்கவும் பணிகேட்கவும் ஆணைகேட்கவும் மாட்டோமென்று துணிந்து நிற்கும் அப்பரைக் காணமுடிகிறது. ஆடவல்லான், திருநல்லம் பத்திமையால் விளையும் பல்வேறு பண்புகளில் துணிவு தலையாயது என்பதைத் தொடர்ந்து பறைசாற்றுவன அவருடைய சிவநெறி வாழ்வின் நிகழ்வுகள். அதனால்தான், சமணர்களின் வெறுப்புணர்வால் அப்பர்மேல் மன்னர் யானையை ஏவியபோதும், ‘அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதுமில்லை’ என்று துணிந்து நின்றார் அவர். அந்தத் துணிவே அவரைப் புரட்சிமிகு பெருஞ்செயல்கள் செய்யவைத்ததென்பதைக் காட்டும் இரண்டு நிகழ்வுகளை இங்கு பார்ப்போம். நாவுக்கரசர் பாடிய திருத்தலங்களில், தனிச்சிறப்புடன் மாறுபட்டு நிற்கும் இரண்டு திருத்தலங்கள்- ஆறை வடதளி மற்றும் திருமறைக்காடு. இத்தலங்களைச் சார்ந்த கதைத் தொகுப்பு பல்வேறு சமூகச் செய்திகளைத் தாங்கி நிற்பதை நாம் உணரவேண்டும். சங்க காலந்தொடங்கி இருபத்தோராம் நூற்றாண்டுவரை, தமிழுலகம் படித்துச் சுவைக்கும் இலக்கியப் படைப்புகளில் அடங்கியிருக்கும் வரலாற்றுக் குறிப்புகள் ஏராளம் ஏராளம். அதிலும், பத்திமைப் பதிகங்களில் இறையுணர்வோடு இணைத்துத் தரப்பட்டுள்ள பல்வேறு தகவல்களை உற்றுநோக்கின் வரலாறு தெளிவுபடும். பழையாறை வடதளி- உண்ணாமைப் போராட்டத்தின் முன்னோடி அப்பர் இந்திய அளவில் சமூக மாற்றங்களுக்காக உண்ணாநோன்பிருந்தவர்களைப் பட்டியலிட்டால், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியடிகள், வீரர் பகத்சிங், ஜதின் தாஸ் என்று பரவலாகப் பெயர்கள் கிடைக்கும். சமீப காலங்களில், மணிப்பூரில் ஐரோம் சானு ஷர்மிளாவும் லே-லடாக் பகுதியில் சோனம் வாங்சுக்கும் தத்தம் மாநிலங்களுக்காக உண்ணாநோன்பிருந்ததும் அறிவோம். இவை இருபது மற்றும் இருபத்தோராம் நூற்றாண்டுகளின் நிகழ்வுகள். உலகளவில் பார்த்தால், ஆலிஸ் ஸ்டோக்ஸ் பால் என்ற அமெரிக்கப் பெண்மணி, பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடிய சமூக ஆர்வலர். மேற்படிப்புக்காக இங்கிலாந்துக்குச் சென்றவர், 1909இல் பெண்களுக்கு வாக்குரிமை கோரி ஈடுபட்ட போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்தபடி, வெளியில் வரவும் மீண்டும் பெண்களுக்கான சீர்திருத்தப் போராட்டங்களை நடத்தவும் அவர் கையிலெடுத்த ஆயுதம்தான் உண்ணாநோன்பு. ஆனால் ஏழாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் சிவனடியார் ஒருவர், கோயில் மீட்டெடுப்பைக் கையிலெடுத்து அதன்பொருட்டு உண்ணாநோன்பிருந்தது இன்றளவிலும் போதிய வெளிச்சம் பெறாத புரட்சி வரலாறு. “கதவடைப்பில் தொடங்கி ஒத்துழையாமை வரை எத்தனையோ போராட்டங்களைக் கண்ட தமிழ்நாட்டில், உண்ணாநோன்பை பொதுநோக்கிலமைந்த ஓர் அறப்போராக, ஆதிக்கம் நீக்கக் கைக்கொள்ளப்பட்ட அமைதிப் போர்முறையாக முதன்முதல் மேற்கொண்ட பெருமை அப்பர் பெருமானையே சாரும்,” என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன் (அப்பர் என்னும் அரிய மனிதர் - 1; வரலாறு.காம்). பழையாறை நகருக்கு அப்பர் சென்றபோது, அங்கிருந்த சைவக்கோயிலைச் சமணர் மறைத்திருந்ததையும் அங்கிருந்த விமானம் ‘அமணர் பொய்கொள் விமானம் எனவும் கேட்டுப் பொறாத உள்ளம் மிகப்புழுங்கினார்’, என்கிறார் சேக்கிழார். மனம் புழுங்கிய அப்பர், பொதுவில் தொண்டர் எவரும் செய்யும் செயலை முதலில் செய்தார்- ‘வஞ்சனை செய்த சமணர் திறத்தை அழிக்கவேண்டும்’ என்று இறைவனை வணங்கினார். அடுத்ததாக நாவுக்கரசர் செய்ததுதான் அடியார்களில் சமூகப் புரட்சியாளராக அவரை இன்றும் ஒளியூட்டிக் காட்டுவதாக அமைகிறது. வண்ணங் கண்டு நான்உம்மை வணங்கி யன்றிப் போகேனென் றெண்ண முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே (12.21.296) ‘இறைவா, உம் திருத்தோற்றத்தைக் கண்டு வணங்கியபிறகே இங்கிருந்து போவேன்,’ என்று ‘அமுது செய்யாதே’ உறுதியுடன் உண்ணாநோன்பிருந்தார் அப்பர். இவ்விடத்தில் சேக்கிழார், ‘எண்ணமுடிக்கும் வாகீசர்’ என்று எண்ணியதை முடிக்கும் நாவுக்கரசரின் மனத்திண்மையை விதந்தோதுவது குறிப்பிடத்தக்கது. அதனால்தான், உண்ணாநோன்பிருந்து மீண்டும் சைவத்திருத்தலமாக ஆறைவடதளி மாறியபின்னரே அங்கிருந்து கிளம்பிச் சென்றார் அவர். திருப்பழையாறை வடதளியைப் பாடிய பதிகம் முழுதும் அப்பர், சைவக்கோயிலை வழிபாடின்றி மறைத்த சமணர்கள் குறித்தே பேசுகிறார். கூடுதலாக, ‘வாயிருந் தமிழே படித்தாளுறா ஆயிரஞ்சமணும் அழிவாக்கினான்,’ என்று தமிழால் இறைவனைப் பாடுவதை வலியுறுத்தும் மொழியார்வலராகவும் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார். உடல் வருத்தி ஊனால் உயிரால் திருத்தொண்டின் நெறிவாழ வந்த வாகீசர், தாமார்க்குங் குடியல்லாத் தன்மையான சங்கரனைப் போலவே நாமார்க்கும் அடிமையல்லோம் என்று ஓங்கிப் பாடியது பதிகத்திற்காக மட்டுமல்ல; சமூக நலனுக்காகவும் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியெனக் காட்டுவது ஆறை வடதளிப் போராட்டம். அப்பர் நிகழ்த்திய இதுவே நாமறிந்தவரையில், இந்தியத் துணைக்கண்டத்தின் முதன்முதல் உண்ணாமைப் பேராட்டம். திருமறைக்காடு - பல்லோர் புகுவாயிலாக மாறிய பூட்டிய மறைக்கதவம் அப்பரும் சம்பந்தரும் இ̀ணைந்துச் செய்த மக்கள் நலப்பணி, திருமறைக்காட்டில் அதுவரையில் மூடியிருந்த கோயிலின் நேர்வாயில் கதவினைப் பல்லோர் புகுவாயிலாகத் திறக்கச் செய்ததாகும். இருவரும், திருமறைக்காட்டின் தெருக்களில் மக்கள்கூடிச் சேர்ந்துவர நடந்து, செழிப்பான திருமாளிகை முன்னிருந்த கோபுரத்தைத் தாழ்ந்து வணங்கி உள்ளே சென்று, ‘மறை அருச்சித்துக் காப்புச் செய்த பைம்பொன்மணித் திருவாயிலருகே’ வந்தனர் (12.28.579). மறைகள் ஓதும் அன்புடை அடியார்கள் வந்து முயன்றும், பூட்டிய கதவு திறக்கவில்லை என்றும், அதனால் வேறொரு வாயிலமைத்து அதன்வழியே இறைவனை வணங்கும் நிலையிருந்ததுமறிந்து வியப்புற்றார் ஞானசம்பந்தர். அப்பரை நோக்கி, “மறைக்காட்டிறைவரை நாம் நேர்வாயிலைத் திறந்து புகுந்து எப்படியாகிலும் வணங்கவேண்டும். திருக்காப்பு நீங்கிட வளமான தமிழால் பாடியருளுங்கள்,” என்று வேண்டினார். அவ்வண்ணமே நாவுக்கரசர், ‘பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரோ’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடத் தொடங்கினார். பதிகம் முழுதும் ‘கண்ணினாலுமைக் காணக் கதவினைத் திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே; நீண்டமாக் கதவின்வலி நீக்குமே; உமை நோக்கிக் காணக் கதவைத் திறவுமே’ என்று பலவாறாக இறைவனிடம் கதவு திறக்குமாறு வேண்டுகிறார் அப்பர். அடுத்து, ‘எந்தை நீ அடியார் வந்திறைஞ்சிட இந்த மாக்கத வம்பிணி நீக்குமே,’ என்று அடியவர்களுக்காக விண்ணப்பித்தார் அவர். வாகீசரின் பைந்தமிழில் மயங்கிக் கிடந்த சிவபெருமான் மறைக்காட்டின் பைம்பொன் கதவைத் திறக்க மறந்தார்போலும். பத்துப் பாடல்கள் நிறைவுற்றபின்னும் கதவின் காப்பு நீங்கவில்லை. பத்திமையில் அஞ்சாமையும் துணிவும் அப்பரிடம் நாம் கண்ட பெரும்பண்புகள் அன்றோ? அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர் இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரே (05.10.11) என்று, 'இராவணனை விரலால் அடக்கிய நீர் என்னிடத்தில் இரக்கமில்லாதவராக இருக்கின்றீர்,’ என்று பொறுமையிழந்து சிறிதே சினங்காட்டினார். அப்பர் இந்தத் திருக்கடைக்காப்பைப் பாடியதும் பைம்பொன் கதவின் திருக்காப்பும் திறந்ததென்று சேக்கிழார் அழகுற விளக்குகிறார். கதவு திறந்தபின் ஏற்பட்ட மகிழ்வைச் சேக்கிழார் விவரிக்கும் பாங்கு நம்மை மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது. திருஞானசம்பந்தர் புராணத்தில் மறைக்காட்டுக் கதவின் திருக்காப்பு நீங்கியபின்னர், பதினொரு பாடல்களை (582-592) கோயிலுள் உட்புகுந்த மக்களின் ஆரவாரத்திற்கும் பேருவகைக்கும், தேவார முதலிகளின் கண்ணீர் மல்கிய நெகிழ்வுக்கும், அப்பர்-சம்பந்தரின் வரம்பிலாப் பெருமைக்கும் ஒதுக்கியுள்ளார் சேக்கிழார். வேதங்கள் காப்பு செய்து பூட்டப்பட்ட கோயில் நேர்வாயிலை, அப்பர் பெருமான் வண்டமிழால் பாடித் திறக்கச் செய்தார். ‘பன்னியநூல் தமிழ்மாலை பாடுவித்தென் சிந்தைமயக்கறுத்த திருவருளினானை’ என்று திருச்செங்கட்டாங்குடி ஐயனை அப்பர் போற்றியதும் தம்மை தமிழ்மாலை பாடச்செய்த அருளுக்காகத்தானே! தாமறிந்த மொழியாலே இறைவன் தாள் பணியவும், தாய்மொழிவழி இறைவழிபாட்டை வலியுறுத்தவும், மறைகள் விதித்த கட்டுப்பாடுகளை வீழ்த்தி வேறுபாடின்றி அனைவரும் புகுமிடமெனக் கோயில்வாயில் திறக்கவும் துணிவுடன் நின்ற நாவுக்கரசரின் எழுச்சிப் போக்கை அழுத்தமாக உரைப்பது திருமறைக்காட்டு நிகழ்வு. அதனால்தான், இப்பெருநிகழ்வைப் போற்றவரும் சேக்கிழாரும், வேதங்களால் பூட்டப்பட்ட கதவு தமிழ்ப்பாடித் திறந்ததும், பற்பல ஆண்டுகளாகக் காத்திருந்த எளியோரும் அடியாரும் கோயிலுள் நுழைந்தெழுப்பிய ஆரவாரம், அண்டங்களெல்லாம் மூழ்கும்வண்ணம் ஆர்ப்பரித்ததாக மகிழ்கிறார். ஆடியசே வடியார்தம் அடியார் விண்ணோர் ஆர்ப்பெழுந்த தகிலாண்டம் அனைத்தும் மூழ்க (12.28.582) அடியார்களின் ஆரவாரத்தோடு கோயிலுள் நுழைந்த அப்பரும் சம்பந்தரும், அதுவரையில் புறவாயில்வழிமட்டுமே கோயிலுள் புகுந்த நிலைமாறி, ‘கொற்றவர் கோயில் வாயில் நேர்வழியில்’ புகுந்தனர். அடுத்த இரண்டு பாடல்களும் கோயிலில் நேர்வழியில் புகுந்த அவர்களின் அடக்கவியலாத உணர்ச்சிப் பெருவெள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. கோயிலுட் புகுந்து தம்பிரானைக் கண்டவர்கள், உச்சி குவித்த செங்கைகளோடு கண்களில் அருவிபோல் நீர்பாய மெய்சிலிர்த்து விழுந்து வணங்கிச் சென்றனர். அடுத்து, ’அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்’ என்ற வள்ளுவர் குறளை எடுத்தாள்கிறார் சேக்கிழார். அளவற்ற அன்பால் ஆனந்த வெள்ளத்துள் மூழ்கி, எலும்புமுருக நோக்கி விழுந்தெழுந்து, இறைவன்முன் நிற்க இயலாது நிலையும் மொழியும் தடுமாறி, பதிகங்கள் பாடினர் அவர்கள் இருவரும். ஒரு பெரும்போராட்டத்தின் இறுதியில் ஏற்பட்ட மாபெரும் சீர்திருத்தமே இத்தனை விளக்கங்களுடன்கூடிய வண்ணனைக்கான உந்துதல். இதை மேலும் உறுதிசெய்வது, சேக்கிழாரின் அடுத்த பாடல். அத்திரு வாயில் தன்னில் அற்றைநாள் தொடங்கி நேரே மெய்த்திரு மறைகள் போல மேதினி புக்குப் போற்ற வைத்தெதிர் வழக்கஞ் செய்த வரம்பிலாப் பெருமை யோரைக் கைத்தலங் குவித்துத் தாழ்ந்து வாழ்ந்தது கடல்சூழ் வையம். (12.28.589) அன்றுமுதல், மறைகளைப் போலவே நேர்வாயில் வழியாகக் கோயிலுள் புகுந்து உலகத்தோரும் வணங்குமாறு செய்ததோடு, எதிர்காலத்திலும் இதே வழக்கு தொடருமாறு செய்த வரம்பிலாப் பெருமையுடைய வாகீசரையும் சம்பந்தரையும் கைகூப்பி வணங்கியதாம் கடல் சூழ்ந்த உலகம். கோயிலுள் புகுவது அனைவருக்கும் உரியதல்ல எனத் தடுத்த சமூகப் பாகுபாட்டைத் தகர்த்தெறிந்த அவ்விருவரது மேன்மைப் பண்பை நெடுநேரம் எண்ணிவியக்கத்தான் சேக்கிழார் திருமறைக்காட்டிற்கெனப் பல பாடல்கள் அருளினார் என்பதில் ஐயமுமுண்டோ? நன்றி: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி. துணைநூல்கள் 1. சேக்கிழார், பெரிய புராணம் 2. டாக்டர் இரா. கலைக்கோவன், அப்பர் எனும் அரிய மனிதர், பகுதி 1,2,3; வரலாறு.காம் |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |