![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [183 Issues] [1814 Articles] |
Issue No. 183
![]() இதழ் 183 [ ஏப்ரல் 2025 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 風そよぐ ならの小川の 夕暮れは みそぎぞ夏の しるしなりける கனா எழுத்துருக்களில் かぜそよぐ ならのをがはの ゆふぐれは みそぎぞなつの しるしなりける ஆசிரியர் குறிப்பு: பெயர்: அமைச்சர் இயேதக்கா காலம்: கி.பி. 1158-1237. இத்தொடரின் 83வது பாடலின் (துயரறுத்தலே துயரமோ?) ஆசிரியர் தொஷினாரியின் மாணவர். தொஷினாரியிடம் கவிதை பயின்றபோது அவரது வளர்ப்பு மகன் சதாநகாவின் (87வது பாடலான தூவானமும் வெண்வானமுமை இயற்றியவர்) மகளை மணந்துகொண்டார். ஷின் கொக்கின்ஷூ தொகுப்பைத் தொகுத்தவர்களுள் ஒருவர். பேரரசர் கோதொபாவின் அமைச்சராக மட்டுமின்றி அரசவைப் புலவராகவும் இருந்தவர். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 280 தனிப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடுபொருள்: குளிர்ந்த கோடைகால அந்தி பாடலின் பொருள்: நரா மரங்களினூடே சிலுசிலுவென வீசும் குளிர்காற்று இலையுதிர்காலம் வந்துவிட்டதோ என எண்ணவைத்தது சுற்றுலாப் பயணிகளின் புனிதக் குளியலைக் காணும்வரை. இப்பாடலில் ஷிண்டோ மதத்தின் வழக்கம் ஒன்று ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 30ம் தேதியும் டிசம்பர் 31ம் தேதியும் மிசோகி எனப்படும் குளியலை ஜப்பானியர்கள் மேற்கொள்வார்கள். ஆற்றில் மூழ்கிக் குளிப்பதாகவோ அல்லது சிறிதளவு நீரைத் தலையில் தெளித்துக் கொள்வதாகவோ அமையும் இது உடலை மட்டுமின்றிக் கடந்த ஆறு மாதங்களாக மனதில் சேர்ந்த அழுக்கையும் தூய்மைப் படுத்துவதாக நம்புகிறார்கள். ஜப்பானில் முன்பு சந்திரமான முறையிலான நாள்காட்டியைப் பின்பற்றினார்கள். நிலாவின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு 30 நாட்கள் கொண்ட மாதங்கள் இருந்தன. அப்போது ஜூன் 30ம் தேதி கோடைகாலத்தின் முடிவாகவும் டிசம்பர் 30ம் தேதி குளிர்காலத்தின் முடிவாகவும் கருதப்பட்டது. இப்போது சூரிய நாள்காட்டிக்கு மாறியபின் கோடைகாலம் செப்டம்பர் 22ம் தேதியும் குளிர்காலம் மார்ச் 19ம் தேதியும் முடிவடைந்தாலும் இந்தக் குளியல் வழக்கம் மட்டும் இன்னும் ஜூன் 30ம் தேதியிலும் டிசம்பர் 30ம் தேதியிலுமே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கு நரா எனக் குறிப்பிடப்படுவது முந்தைய தலைநகர் நராவை அல்ல. தலைநகர் கியோத்தோவின் கமிகமோ கோயிலின் இருபுறத்தும் ஓடும் சிற்றாறான மிதராஷி ஆற்றைக் குறிக்கிறது. ஜப்பானிய இடைக்கால இலக்கியங்களில் இயற்றப்படும் சிறந்த பாடல்களை அரண்மனையின் திரைச்சீலைகளில் ஓவியங்களுடன் எழுதி வைப்பார்கள் எனப் பார்த்தோமல்லவா? இப்பாடலும் பட்டத்தரசி குஜோ ஷுன்ஷி பேரரசர் இரண்டாம் ஹொரிகவாவை மணந்து புகுந்தவீடான கியோத்தோ அரண்மனைக்குள் நுழையும்போது அவரை வரவேற்க அளிக்கப்பட்ட சீதனங்களில் ஒன்றாக இருந்த திரைச்சீலை ஒன்றில் வரையப்பட்டிருந்தது. வெண்பா: குளிரிலும் வாடிடா வெம்மையிலும் காயாத் தளிரிலும் ஊடோடி மெல்ல - வெளிறிடும் அந்தியின் தண்மையால் கூதிரின் காலமென எண்ணிட வைத்தது காற்று (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |