![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [183 Issues] [1814 Articles] |
Issue No. 183
![]() இதழ் 183 [ ஏப்ரல் 2025 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 花さそふ 嵐の庭の 雪ならで ふりゆくものは わが身なりけり கனா எழுத்துருக்களில் はなさそふ あらしのにはの ゆきならで ふりゆくものは わがみなりけり ஆசிரியர் குறிப்பு: பெயர்: அமைச்சர் கிண்ட்சுனே காலம்: கி.பி. 1171-1244. இத்தொடரின் தொகுப்பாளர் சதாய்யேவின் மனைவியின் தம்பி இவர். தலைமை அமைச்சராக இருந்த இவர் பின்னாளில் பதவியைத் துறந்து மதகுருவாக மாறிவிட்டார். ஃபுஜிவாரா வம்சத்தின் கிளைவம்சமான சய்யோன்ஜி பரம்பரை இவரிடமிருந்து தொடங்குகிறது. பேரரசர் கோதொபா ஷோகன்களை வீழ்த்த முயன்று ஜோக்யூ போராக வெடித்தது என்றும் யொஷிதொக்கி உஜி ஆற்றங்கரையில் கோதொபாவைச் சிறைப்பிடித்துப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தார் எனவும் பார்த்தோமல்லவா? அப்போர் முடிவுக்கு வருவதற்குச் சிலநாட்கள் முன்பு தலைமை அமைச்சரான இவரைக் கைது செய்தார் யொஷிதொக்கி. பேரரசர் கோதொபாவின் திட்டங்கள் எல்லாம் இவருக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் என்ற யொஷிதொக்கியின் கணிப்பு மிகவும் சரியாக இருந்தது. கோதொபாவின் திட்டங்கள் அனைத்தையும் இவர் யொஷிதொக்கியிடம் காட்டிக்கொடுக்க, ஷோகன்களின் வெற்றி எளிதானது. வேறு வழியின்றிக் காட்டிக்கொடுக்க நேர்ந்ததாலோ என்னவோ, அதிகாரமிக்க பதவியைத் துறந்து மதகுருவாக மாறினார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 114 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. பாடுபொருள்: முதுமையடைதல் பாடலின் பொருள்: என் குடிலின் வெளியே உதிர்ந்து கொண்டிருப்பது பனியா சக்குரா மலரா என்று தெரியவில்லை. ஆனால் உதிர்ந்து கொண்டிருப்பது என்னவோ நான்தான். முதுமையடைதலை விளக்கும் ஓர் எளிய பாடல். ஜப்பானில் பனிக்காலத்தில் பனி பொழிவது மிக அழகாக இருக்கும். வெப்பநிலை சுழியத்துக்குக் கீழ் செல்லும்போது மழை பெய்தால் தண்ணீர் உறைந்து பனித்துகள்களாக விழும். அப்போது காற்றடித்தால் பல துகள்கள் ஒன்றாகச் சேர்ந்து கட்டி போல் ஆகிக் காற்றில் மிதந்து அங்குமிங்கும் அலையும். பனிக்காலம் முடிந்து வசந்தகாலம் தொடங்குவதற்கு அறிகுறியாக ஜப்பானில் சக்குரா எனும் மலர் பூக்கும். மார்ச் கடைசி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரம் முழு அழகுடன் பூத்துக்குலுங்கும். அப்போதும் அது மழை மற்றும் காற்றுக் காலம்தான். ஆனால் வெப்பநிலை சுழியத்துக்குச் செல்லாது. வீசும் காற்றால் வெண்ணிற சக்குராவின் இதழ்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து காற்றில் அசைந்து தரையில் வீழ்வது பனித்துகள்கள் காற்றில் அலைந்து தரையில் வீழ்வது போலவே இருக்கும். அதுபோலவே ஒவ்வொரு நாளும் உடலும் மனமும் வலுவிழந்து சிறிது சிறிதாக முதுமையை நோக்கி நகரும். பனி பொழிந்தால் மீண்டும் அடுத்த சுழற்சியில் புதிய பனி உருவாகும். சக்குரா உதிர்ந்தால் மீண்டும் அடுத்த பருவத்தில் புதிய மொட்டு உருவாகும். ஆனால் முதுமை என்பது தொடர்ச்சியாக நிகழ்வது. எனவே, உண்மையில் உதிர்ந்து கொண்டிருப்பது நாம்தான் என்கிறார் புலவர். வெண்பா: பனியிலும் தீங்குளிர் தீண்டிடும் தட்பம் இனியவும் என்றே வசந்தம் - தனிச்சுழி அல்ல தெனினும் உதிர்தல் முதுமையே என்றே முடிவது வாழ்வு தனிச்சுழி - அறிவியல் கருத்தியல்படி, எட்ட முடியும் சிறும வெப்பநிலை. (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |