![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 10
![]() இதழ் 10 [ ஏப்ரல் 15 - மே 14, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
நேயர்கள் அனைவரும் நலந்தானே ?
வரலாறு மாத இதழின் ஒன்பதாவது இதழ் வழி மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சிற்சில காரணங்களால் வரலாறு டாட் காமில் வழக்கமாக இடம்பெறும் பல்வேறு தொடர்கள் சென்ற இதழில் இடம்பெறவியலாமல் போய்விட்டன. இதற்காக நமது வருத்தத்தை நேயர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். இந்த இதழிலிலிருந்து தொடர்ந்து வரலாறு பழையபடி வழக்கமான கட்டுரைகளைத் தாங்கி மலரும். *********************************************************************************************** திருவலஞ்சுழியில் புதிய கல்வெட்டுக்களைப் படியெடுக்கும் பணியில் முனைவர் கலைக்கோவன் தலைமையில் திருச்சி டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று மைய ஆய்வாளர்களுடனும் நமது வரலாறு குழுவின் நண்பர்கள் (லலிதா மற்றும் இலாவண்யா) முழுமையாகப் பங்கெடுத்துக்கொண்டனர். ஆய்வுப் பணி முழுவதிலும் கட்டுமானப் பொறியாளரும் வரலாற்று ஆர்வலருமான திரு.சுந்தர் பரத்வாஜ் குழுவின் முயற்சிகளுக்குத் தூணாகத் துணை நின்றார். தத்தம் அலுவலகப்பணி காரணமாக திருவலஞ்சுழியிலேயே நிரந்தரமாக ஓரிரு வாரங்கள் தங்கி கல்வெட்டுக்களைப் படியெடுக்கவியலாத சூழ்நிலையால் ஒவ்வொரு வார இறுதியிலும் ஆய்வாளர்களும் நமது நண்பர்களும் ஷேத்திரபாலர் கோயிலுக்குப் படையெடுக்கவேண்டியதாகிவிட்டது.... சனி ஞாயிறுகளில் நமது குழுவினரின் தலை அந்தப் பக்கத்தில் தெரியாவிட்டால் கோயிலின் அருகில் இருக்கும் கடைக்காரர்கள் என்ன ஏது விசாரிக்கும் அளவிற்கு இது சென்றுவிட்டது ! இப்படிப் பல்வேறு சிரமங்களையும் பொருட்படுத்தாமல் என்றோ எவரோ பதிவு செய்து வைத்துவிட்டுப் போயிருக்கும் தரவுகளை தமிழக வரலாற்றுலகம் இழந்துவிடக்கூடாது என்கிற ஒரே நோக்கில் கைக்காசையும் உடல் உழைப்பையும் எண்ணிலடங்காத நேரத்தையும் செலவழித்துக்கொண்டிருக்கும் இந்த ஆய்வாளர்களையும் ஆர்வலர்களையும் நன்றியோடு வணங்குவதல்லால் வேறென்ன செய்துவிடமுடியும் ? அந்தோ ! இப்படி அரும்பாடுபட்டுத் தொகுத்த செய்திகளைப் பகிர்ந்துகொள்ளக்கூட தொலைக்காட்சி முதலான ஊடகங்கள் ஆர்வத்துடன் முன்வராதது தமிழ்நாட்டின் மற்றுமொரு அவலமல்லவா ? வெளிநாட்டின் "National Geographic Society" முதலிய அமைப்புகள் உரிய ஆய்வாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தந்து உதவித்தொகையும் கொடுத்து அவர்தம் ஆய்வுகளை நேரடியாக ஒலிபரப்பும் நிலையையும் நமது நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மனதில் பெரியதொரு கசப்புணர்ச்சி தோன்றுவதை தவிர்க்கவியலவில்லை. (இந்த நிலையில் வரலாற்று தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வெளியிடும் இந்து முதலான நாளிதழ்களின் பணி பெரிதும் பாராட்டத்தக்கதே.) திருவலஞ்சுழியின் கல்வெட்டுக்களும் குறுவடிவங்களும் பட்டிகை பகுதிக்குக் கீழ் நிலமட்டத்திற்கு அடியில் அமைந்துள்ளன. ஆக இவற்றைச் சுற்றி தற்போது பெருங்குழியொன்று வெட்டப்பட்டுள்ளது. இந்தக் குழியை தகுந்த முன்னேற்பாடுகளின்றி விட்டுவிட்டால் மழை பெய்யும்போதெல்லாம் தண்ணீர் தேங்கி மண் சேர்ந்து சில ஆண்டுகளிலேயே மீண்டும் பழையபடி மண்ணுக்குள் புதைந்துபோகும் ஆபத்திருப்பதை ஆய்வாளர்கள் கவலையோடு பகிர்ந்துகொண்டனர். இறையருளால் இதற்கும் ஒரு வழி பிறந்துள்ளது. இரண்டு வாரங்களுக்குமுன் குழு திருவலஞ்சுழியில் முகாமிட்டிருந்தபோது அங்கு வருகை புரிந்த இந்து அறநிலையத்துறை ஆணையர் திரு.பிச்சாண்டி IAS அவர்களைச் சந்தித்து இது பற்றிய கோரிக்கையை முன்வைத்தது. முனைவர் கலைக்கோவனையும் அவர்தம் ஆய்வுகளையும் பெரிதும் பாராட்டிய ஆணையர் அவர்கள் இதற்கு உடனடியாக தீர்வு காண புதிதாக அகழப்பட்டிருக்கும் பகுதிகளைச் சுற்றி கட்டுமானமொன்று கட்ட ஆணை பிறப்பித்தார்கள். இதற்காக நமது இதயம் கனிந்த நன்றியை ஆணையருக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு வரலாற்றுக் கருவூலமாக விளங்கும் இந்தத் திருக்கோயில் அழியாமல் தப்பித்ததுடன் இனிவரும் ஆபத்துக்களிலிருந்தும் தன்னை ஓரளவு காப்பாற்றிக்கொண்டு விட்டது... ஷேத்திரபாலரின் கருணையே கருணை ! *********************************************************************************************** இந்த இதழிலிருந்து நூல்முகம் என்னும் புதிய பகுதி ஆரம்பமாகிறது. தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவரை எழுதப்பட்டு வெளிவந்துள்ள முக்கியமான வரலாற்று நூல்களை - குறிப்பாக புதிய புத்தகங்களை - இந்தப் பகுதி அறிமுகம் செய்யும். முதல் புத்தகமாக அறிமுகமாகும் "பெண் தெய்வ வழிபாடு" புத்தகம் வரலாறு டாட் காம் இதழின் நேயர்களுக்கு நன்கு பரிச்சயமானதே. புத்தகம் என்றவுடன் வேறுசில விஷயங்களும் ஞாபகத்திற்கு வருகின்றன.... * முனைவர் கலைக்கோவன் சென்ற வருடம் எழுதி அலமு பதிப்பகம் வெளியிட்ட "சோழர் கால ஆடற்கலை" என்னும் நூல் தமிழக அரசின் சிறந்த புத்தக விருதைப் பெற்றுள்ளதோடு தமிழ்நாடு எழுத்தாளர் சங்க விருதையும் பெற்றுள்ளது என்பதனை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம். திரு.கலைக்கோவனின் இருபதாண்டுகால ஆய்வும் அவருடைய முனைவர் பட்ட ஆய்வேடுமான இந்தப் புத்தகம் தமிழக வரலாற்று நூல்களின் வரிசையில் ஒரு மகுடமென்பதில் ஐயமில்லை. * அதே அறிஞரின் புதிய புத்தகமான "மகேந்திரர் குடைவரைகள்" என்னும் நூல் வெளியாகி உள்ளது. விரைவில் இந்நூல் பற்றிய விபரங்களையும் நூல்முகத்தில் எதிர்பார்க்கலாம். அடக் கடவுளே - மகேந்திரர் என்றதும் வேறு சில செய்திகளும்கூட ஞாபகத்திற்கு வருகின்றனவே.... * இந்த இதழிலிருந்து பல்லவப் பேரரசர் மகேந்திரவர்ம பல்லவர் எழுதிய பகவதஜ்ஜுகம் என்னும் நாடகம் இடம்பெறுகிறது. மத்தவிலாசம் அளவிற்கு பிரபலமடையாத இந்த நாடகத்தின் மொழிபெயர்ப்பை வெளியிட அனுமதியளித்த டாக்டர் எம்.சி.லாக்வுட்டை அலுவலகப் பணி நிமித்தம் அமெரிக்கா சென்ற நமது குழு உறுப்பினர் கமலக்கண்ணன் நியூ ஜெர்சியில் நேரில் சந்தித்து அளவளாவினார். நமது குழுவின் முயற்சிகளுக்கு மிகுந்த ஆதரவளித்துவரும் இந்த ஆய்வறிஞரை சந்தித்த நிகழ்வை கமலக்கண்ணனே அடுத்த இதழில் பகிர்ந்து கொள்வார். கமலக்கண்ணன் என்றதும் வேறு சில ...... அட, ஏன் சார் முறைக்கிறீர்கள் ? திருவலஞ்சுழி பணிகளை விட்டுவிட்டு அமெரிக்கா செல்லமாட்டேன் என்று அடம்பிடித்த கமலை ஒருவழியாக சரிக்கட்டி "பொளப்பை பாருப்பா !" என்றெல்லாம் சொல்லி அனுப்புவதற்குள் உன்பாடு என்பாடாகிவிட்டது என்றுதான் சொல்ல வந்தால்... வணக்கம் ஆசிரியர் குழுthis is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |