![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 10
![]() இதழ் 10 [ ஏப்ரல் 15 - மே 14, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
பழுவூர்ப் புதையல்கள்
சோழ, கேரளத் தொடர்புகள்
சோழ, கெரளத் தொடர்புகளைப் பற்றீய முதல் செய்தியைத் தருவது தில்லைதானத்திலுள்ள இராசகேசரியின் கல்வெட்டு. 1 ஸ்வஸ்திஸ்ரீ தொண்டைநாடு பரவின சோழன் பல் 2 யானைக் கோக்கண்டனாயின ராசகேசரி பன்மனா 3 லுஞ் சேரமான் கோத்தாணு இரவியாலும் தவிசுஞ்சா 4 மரையும் சிவிகையும் திமிலையும் கோயிலும் போனக 5 மும் காளமும் களிற்று நிரையுஞ் செம்பியன் தமிழவேளெ 6 ன்னும் குலப்பெயரும் பெற்ற விக்கியண்ணன்..."25 இக்கெல்வெட்டினால் கேரள அரசன் ஸ்தாணுரவியும் முதலாம் ஆதித்தனும் நல்ல நட்புறவுடன் இருந்தது தெளிவாகிறது. உதயேந்திரம் செப்பேடுகள் கேரள அரசகுமாரியைப் பராந்தகன் மணந்துகொண்ட தகவலைத் தருகின்றன. இது பராந்தகனின் பதினைந்தாம் ஆட்சியாண்டிற்கு முன்பே நடந்தது. பராந்தகனின் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டில் திருமுனைப்பாடி நாட்டில் இராசாதித்தன் படைப்பிரிவொன்றிற்குத் தலைமையேற்றுக் கேரளத்தைச் சேர்ந்த வெள்ளான் குமரன் தங்கியிருந்தான் 26. இவனே பெண்ணையாற்றின் கரையில் மௌலி கிராமத்தில் சிவன் கோயிலொன்றையும் எடுப்பித்துள்ளான். இது பராந்தகனின் முப்பத்தாறாம் ஆட்சியாண்டில் நடந்துள்ளது. 27 பராந்தகனின் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டில் விசயராகவதேவன் என்னும் சேர மன்னனின் மகள் இரவி நீலி, திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயிலில் விளக்கெரிக்கப் பொன் தந்திருக்கிறாள். 1 ....... மதிரை கொண்ட கொ 2 ப்பரகேசரி பன்மற்கு யாண்டு இருபத்தொன்பதாவ 3 து சேரமானார் விஜயராகவதேவர் மகள் இரவிநீ 4 லி திருவொற்றியூர் மகாதேவர்க்கொரு நந்தா விளக்கு" 27 இந்த நான்கு செய்திகளும் ஆதித்தன், பராந்தகன் காலத்தில் சோழ கேரளத் தொடர்புகள் மிகமிக இனிய நிலையில் இருந்தமைக்குப் போதுமான சான்றுகளாகும். ஆதித்தனுக்கு முன்பே கேரள அரசமரபின் கிளைவழியினர் அல்லது ஒரு பிரிவினர் தமிழகம் வந்திருக்கவேண்டும். பரசுராமர் தலமென்று போற்றப்படும் பழுவூரில் இவர்கள் தங்கியிருக்கலாம். பழுவூர் மலையாளர் ஆதிக்கத்தில் இருந்ததைச் சம்பந்தரே உறுதிப்படுத்துகிறார். பழுவூர்ப் பதிகத்தில் மலையாள அந்தணர்கள் பழுவூர்க்கோயிலில் வழிபாடு நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.
இவ்வரிகளையும் பழுவூர்த்தலவரலாற்றில் பரசுராமரை இக்கோயிலுடன் (ஆலந்துறையார்) தொடர்புபடுத்திப் பேசப்படும் கதையையும்31 இணைத்துப் பார்க்கும் போது சம்பந்தர் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே பழுவூரில் கேரள வழியினர் தங்கியிருந்த உண்மை உறுதிப்படுகீறது. முதலாம் ஆதித்தனுக்கு முற்பட்ட காலத்துக் கல்வெட்டுகள் எதிலும் பழுவேட்டரையர்களின் பெயர்கள் காணப்படவில்லை என்பதொன்றே சோழராட்சிக்கு முன் இவர்கள் 'சிற்றரசர்' என்ற நிலையை அடையவில்லை என்பதை மெய்ப்பிக்கப் போதுமான சான்றாகும். விசயாலயன் முத்டஹ்ரையரை வென்று தஞ்சையைக் கொண்டதும், பின் நடந்த திருப்புறம்பியப் போரும் பழுவூரார் எழுச்சிக்குக் காரணங்களாக இருக்கலாம். சோழர்களின் போர்களுக்கு இப்பழுவூர்க் கேரளர்கள் பெருமளவில் உதவிய நிலையில் விசயாலயனின் காலத்திலோ அல்லது ஆதித்தன் ஆட்சியின் தொடக்கக் காலத்திலோ இவர்களுக்கு சிற்றரச உரிமை தரப்பட்டிருக்கலாம். இவையெல்லாம் ஊகங்கள்தாம் என்றாலும் தர்க்கரீதியாகப் பார்க்கும் போது பொருத்தயாய் அமைகின்றன. பழுவூர் மன்னர்கள் கேரள வழியினர் என்பதும், உதயேந்திரம், என்பில் செப்பேடுகள் குறிபிடுவது போல் பராந்தகன் மணந்தது இவர்தம் பெண்ணான அருள்மொழி நங்கையை என்பதும் உறுதியான நிலையில், இனி பரந்தகனுக்குப் பெண் கொடுத்த பழுவேடட்ரையர் யாரென்பதைப் பார்ப்போம். அருள்மொழி நங்கையின் தந்தை யார்? பழுவேட்டரையர்களின் கல்வெட்டுகள் பெருமளவு பழுவூரிலும், ஒன்றிரண்டு லால்குடியிலும், திருப்பழனத்திலும், திருவையாற்றிலும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகளின் துணைகொண்டே இம்மனர்களின் மரபுவழியை நிர்ணயிக்க வேண்டும். திருவையாற்றில் அறிமுகமாகும் முதல் பழுவேட்டரையர்-குமரன் கண்டன் பழுவேட்டரையர்களைப் பற்றீய முதல் செய்தியைத் தருவது திருவையாற்றிலுள்ள பஞ்சநதீசுவரர் கோயில் கல்வெட்டுதான். இராசகேசரிவர்மனின் பத்தாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டிருக்கும் இக்கல்வெட்டால் பழுவேட்டரையர் குமரன் கண்டன் அறிமுகமாகிறார். நீலன் நாராயணன் என்பார் இக்கோயிலுக்குக் கொடையாகத் தந்த நிலத்தின் எல்லைகளைக் கூறுமிடத்தில் பழுவேட்டரையர் குமரன் கண்டனின் நிலம் கிழக்கெல்லையாகவும், வடக்கெல்லையாகவும் குறிப்பிடப்படுகிறது32. பஞ்சநதீசுவரர் கோயிலில் இராசகேசரிவர்மனின் உயரிய ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் பல உள்ளன. முதலாம் ஆதிட்த்ஹனுடையதென உறுதி செய்யப்பட்டுள்ள இக்கல்வெட்டுகளும், குமரன் கண்டனைக் குறிக்கும் இப்பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் எழுத்தமைதியில் ஒத்திருப்பதால் இக்கல்வெட்டு குறிக்கும் இராசகேசரிவர்மனும் முதலாம் ஆதித்தனே என்பதில் ஐயமில்லை. இதன்படி முதலாம் ஆதித்தனின் பத்தாம் ஆட்சியாண்டில்தான் பழுவேட்டரையர்கள் வரலாற்று வெளிச்சத்திற்கே வருகின்றனர். பழுவூர் அவனி கந்தர்ப்ப ஈசுவரகிரகத்துத் தென்வாயில் ஸ்ரீகோயிலின் தென்புறச்சுவரிலுள்ள இராசகேசரியின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் குமரன் கண்டனைக் குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டுக்குரிய இராசகேசரிவர்மன் முதலாம் ஆதித்தனாவான். இவ்வுண்மையை இதே இடத்திலுள்ள இராசகேசரிவர்மனான ஆதித்தனின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இரண்டும் உறுதி செய்கின்றன. 1 ஸ்வஸ்தி ஸ்ரீ கொவிராசகேசரிவம்மற்கு யாண்டு பன்னிரெண்டாவது 2 குன்றக்கூற்றத்து அவனிகந்தர்வ ஈசுவரகிரகத்து மகாதேவர்க்கு இன்னாட்டு பழுவூர் 3 பகைவிடை ஈசுவரத்து தேவனார்மகன் நக்கன் பூதி பழுவேட்டரையன் குமரன் கண் 4 டன் பிரசாதத்தினால் அருளிச்செய்ய இத்தளி தேவதானம் ஊரகன்குடி...33 இக்கெல்வெட்டிலுள்ள 'பழுவேட்டரையன் குமரன் கண்டன் பிரசாதத்தினால்' என்ற குறிப்பு ஆதித்தனின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில் பழுவேட்டரையர்கள் சிற்றரசர் தகுதியை அடைந்து விட்டமையைச் சுட்டுகிறது. பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் மகன் நக்கன்பூதி என்பார் பழுவேடட்ரையன் குமரன் கண்டனின் பிரசாதத்தினால் செய்த கொடையை இக்கல்வெட்டு சுட்டுகிறது. சில அறிஞர்கள் இக்கல்வெட்டைத் தவறாகப் புரிந்துகொண்டு பல குழப்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
நிலைமைகள் இப்படியிருக்க, டாக்டர் பாலாம்பாள் நக்கன் பூதியையும், பழுவேட்டரையன் குமரன் கண்டனையும் ஒன்றாக் ஐணைத்து ஒருவராகப் பார்த்த காரணத்தால், பகைவிடை ஈசுவரத்துத் தேவனாரின் மகன் குமரன் கண்டன் எனக் கொண்டு (பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் மகன் நக்கன் பூதி பழுவேடரையன் குமரன் கண்டன்), பகைவிடை ஈசுவரத்துத் தேவனாரே பழுவேட்டரையர் மரபின் முதலோன் என்று எழுதுகிறார். அத்துடன் நில்லாமல் ஆதித்தனின் தொடக்கக் காலத்தில் அவனுடைய சிற்றரசனாக இருந்து இப்பகைவிடை ஈசுவரத்துத் தேவனார், உடையார் பாளையம் உட்பட்ட பழுவூர் நிலப்பரப்பை ஆண்டுவந்ததாகவும், இவர் விசயாலயனின் சிற்றரசனாகவும் இருந்திருக்கலாமென்றும் குறிப்பிடுகிறார்40. இவர் அரசராகக் குறிக்கும் பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் யாரென்று பார்ப்போம். பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் தொடரும்... அடிக்குறிப்புகள்: 25. S.I.I. Vol, III, Ins. No. 89 26. A.R.E. 739 of 1905 27. A.R.E. 735 of 1905 28. S.I.I. Vol, III, Ins. No. 103 29. சம்பந்தர், இரண்டாம் திருமுறை, தருமபுர ஆதீஇன வெளியீடு, 1954, பக். 151 30. சம்பந்தர், இரண்டாம் திருமுறை, தருமபுர ஆதீஇன வெளியீடு, 1954, பக். 153 31. வி.சா. குருசாமி தேசிகர், திருப்பழுவூர்-திருமழபாடி பதிகங்கள், தருமபுர ஆதீன வெளியீடு, 1977, பக் 10-11 32. S.I.I. Vol V, Ins. No. 523 33. S.I.I. Vol V, Ins. No. 235 34. வெ. பாலாம்பாள், பழுவேட்டரையர்கள், பக். 14 35. A.R.E. 357 of 1924 36. அவனிகந்தர்ப்ப ஈசுவர கிரகத்துக்கு முன்னால் நிறுவப்பட்டுள்ல அறிவிப்புப் பலகை காண்க; Indian Express, Daily, 10-9-1988. 37. வை. சுந்தரேச வாண்டையார், பழுவேட்ட்ரையர், கட்டுரை, கல்வெட்டுக் கருந்த்தரங்கு, பக். 124 38. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், சோழர் கலைப்பாணி, சென்னை, பாரி நிலையம், 1966, பக். 56 39. S.I.I. Vol XIII, Introduction, P. viii 40. V. Balambal, Feudatories of South India, Allahabad, Chugh Publications, 1978, PP. 179-180. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |