![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 91
![]() இதழ் 91 [ ஜனவரி 2013 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
1930-களில் இருந்து 1960-கள் வரையிலான காலத்தை கர்நாடக சங்கீதத்தின் பொற்காலம் என்று குறிப்பதுண்டு. அரியக்குடி, செம்பை, முசிறி, ஜி.என்.பி, மதுரை மணி, செம்மங்குடி எனப் பல ஜாம்பவான்கள் கோலோச்சிய காலமது. பிரசன்னா, பேடி, வெங்கட், சந்திரா ஆடிய காலத்தில், என்னதான் திறமைசாலியாக இருந்தாலும், வேறு ஒரு சுழற்பந்து வீச்சாளர் இந்திய அணியில் இடம்பெற்றிருக்க முடியாது என்பதுபோல, மேற்சொன்ன மேதைகளின் சமகாலத்தினவராகிவிட்டதால், பல அற்புதக் கலைஞர்கள் மேல் போதிய வெளிச்சம் விழாமல் போனது. அந்த வரிசையில் உள்ள ஒரு முக்கிய கலைஞர் டி.கே.ரங்காச்சாரி. 3 ஜூன் 1912-ல் திருச்சி அருகே வராஹனேரியில் பிறந்த ரங்சாச்சாரியின் முதல் குரு அவர் தாய் ராஜலட்சுமி அம்மாள்தான். இள வயதிலேயே லயத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்த ரங்காச்சாரி, கையில் கிடைத்த பாத்திரத்தில் எல்லாம் தாளம் இசைத்தபடியால், 'தவில் ரங்கன்' என்று செல்லமாக அழைத்தனர். கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரின் சிஷ்யரான கொடகநல்லூர் சுப்பையா பாகவதரிடம் குருகுலவாசம் செய்த பின் 1929-ல் சிதம்பரம் சென்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீத பூஷணப் பட்டயப் படிப்பில் சேரச் சென்ற ரங்காச்சாரியின் இசைத்திறனைப் பார்த்துவிட்டு, அவரை நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்த்துக் கொண்டனர். படிப்பு முடிந்ததும், அண்ணாமலைப் பல்கலைகழகத்திலேயே பணியாற்றியபடி கச்சேரிகளும் செய்து வந்தார். இயற்கையிலேயே நல்ல கனமான சாரீரத்தைப் பெற்றிருந்த ரங்காச்சாரியின் கச்சேரிப் பதிவுகளைக் கேட்கும்போது தோன்றும் முதல் வார்த்தை கௌரவம். கௌரவமாய்ப் பாடும்போதும், கேட்பவருக்கு அலுக்காதபடி விறுவிறுப்பாய்ப் பாடமுடியும் என்பதை இந்தப் பதிவுகள் பறை சாற்றுகின்றன. "ஒரு மாணவன், தன்னைச் சுற்றியுள்ள இசை அனைத்தையும் கேட்டு உள்வாங்கி, தனக்கே உரியதொரு பாணியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதை எப்படி செய்வது என்பதை ரங்காச்சாரியின் இசையைக் கேட்டால் புரிந்து கொள்ளலாம்.", என்று தன் மாணவர்களிடம் ஜி.என்.பி அடிக்கடி கூறுவாராம். 1950-களில் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் தண்டபாணி தேசிகருடன் இணைந்து பண் ஆராய்ச்சியில் ரங்காச்சாரி ஈடுபட்டார். இருவருமாய்ச் சேர்ந்து கச்சேரிகளும் செய்தனர். ஓதுவார் பரம்பரையில் வந்த தேசிகரும், வைஷ்ணவரான ரங்காச்சாரியும் ஒரே மேடையில் அமர்ந்து தேவாரத்தையும், திவ்யப்பிரபந்தங்களையும் பாடியவற்றைக் கேட்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள். 1960-களையும், 1970-களையும் ரங்காச்சாரியின் இசை வாழ்வின் உச்சம் எனலாம். இசை போதனையை வகுப்பறையைத் தாண்டி மேடையிலும் தொடர்ந்தவர் ரங்காச்சாரி என்றால் மிகையாது. அவரை 'professor on the dias' என்று கூட விளையாட்டாய்க் குறிப்பதுண்டு. தான் பாடுவனவற்றின் சௌந்தர்யத்தைக் கேட்பவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே விளக்கமும் அளித்து ரசிகர்களின் நிலையையும் தன்னுடன் சேர்த்து உயர்த்தியவர் ரங்காச்சாரி. 1979-ல் அவர் மறைந்தாலும் அவர் பாடிய கருடத்வனியும், வாகதீஸ்வரியும் சாகாவரம் பெற்று ரசிகர்களிடையே புழங்கி வருகின்றன. அவருக்குப் பின் அவர் வழியை வைரமங்கலம் லட்சுமிநாராயணன் பின்பற்றி வந்தார். இன்றைய கச்சேரி உலகில் அதைச் செய்து வருபவர் விதுஷி நீலா ராம்கோபால். கடந்த டிசம்பர் 1-ம் தேதி, ரங்காச்சாரியின் நூற்றாண்டு விழா சென்னை ம்யூசிக் அகாடமியில் விமரிசையாய் கொண்டாடப்பட்டது. விழாநாயகரின் பேரன் (இவரும் இசைக் கலைஞர்) அஷ்வின், ரங்காச்சாரியின் இசையின் வெவ்வேறு அம்சங்களைச் சுட்டிக்காட்டிப் பழைய பதிவுகளில் இருந்து சில துகள்களையும் போட்டுக் காட்டினார். பின்னர்ப் பேசிய வித்வான்கள், "பழக மிகவும் இனிமையானவர், பக்கவாத்தியங்களை மிகவும் உற்சாகபட்டுத்தியவர், திறமையான சிஷ்யர்களின் திறன் பரிமளிக்கத் தன் கச்சேரியிலேயே வாய்ப்பளித்தவர்", என்றெல்லாம் ரங்காச்சாரியின் கல்யாண குணங்களை நெகிழ்ச்சியுடன் விதந்தோதினர். வருடந்தோரும் டி.கே.ரங்காச்சாரி பெயரில் ஒரு விருதைச் சென்னை ம்யூசிக் அகாடமியில் அளிப்பதற்கான ஏற்பாட்டை அவரது குடும்பத்தினர் செய்துள்ளனர். நிகழ்ச்சியின் இறுதியாக டி.கே.ரங்காச்சாரி கையாண்ட ராகங்களையும் கிருதிகளையும் கொண்டு டி.எம்.கிருஷ்ணா கச்சேரி செய்தார். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |