![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 91
![]() இதழ் 91 [ ஜனவரி 2013 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
சேரர் கோட்டை
[எஸ் ஆர் எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும் சேரர் கோட்டை புத்தகத்தின் பதிப்பாளருமான திரு சீதாராமன் அவர்கள் கும்பகோணத்தில் கட்டுமானத் தொழிலில் பல காலமாக ஈடுபட்டிருக்கும் இளம் தொழிலதிபர். வரலாற்றின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக வரலாற்றில் எம்ஏ எம்பில் பட்டப்படிப்பை முடித்து தற்போது பி எச்டி ஆய்வில் ஈடுபட்டிருப்பவர்.]
இந்த விழாவிற்குத் தலைமை ஏற்றுள்ள டாக்டர் மா இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் முனைவர் இரா கலைக்கோவன் அவர்களையும் வாழ்த்துரை வழங்க முன்வந்துள்ள பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா ரா அரசு அவர்களையும், கடலூர் மாவட்டக் காவல்துறை இணை கண்காணிப்பாளர் திரு இராமகிருஷ்ணன் அவர்களையும், ஆதித்யா ஹெரிடேஜ் வில்லாவின் இயக்குனர் திரு சுந்தர் பரத்வாஜ் அவர்களையும் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிருபர்களையும் இந்த விழாவிற்கு வந்து எங்களைச் சிறப்பித்துள்ள நண்பர்கள் உறவினர்கள் பெருமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். நண்பர்களே! சிறு வயதில் உங்களில் பலரைப் போல நானும் பொன்னியின் செல்வன் படித்திருக்கிறேன். அதன் மூலம் தென்னக வரலாற்றில் ஒரு தனிக்கவர்ச்சி எனக்கு இளம் பிராயத்திலேயே ஏற்பட்டிருந்தது. குடந்தைக்கு அருகில் அமைந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன் ஆதலால் அந்தக் கதையின் பல்வேறு இடங்களும் காவிரி ஆறும் திருப்புறம்பியமும் எனக்குப் பரிச்சயமானவையாக இருந்தன. படிப்பு முடித்து ஸ்டெர்லிங் ரெசார்ட்ஸ் சுவாமிமலையில் Front Office Manager ஆகப் பணியாற்றும் காலத்தில் அங்கு வந்து தங்கும் பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு விருந்தினர்களையும் கோயில்களுக்கு அழைத்துச் செல்லும் கடமை இருந்தது. அப்போது கோயில்களின் வரலாற்றுப் பின்புலத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சிறிது வரலாறு பயின்றேன். அண்ணாமலை பல்கலையில் சேர்ந்தேன். அப்போதுதான் திரு சுந்தர் பரத்வாஜ் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. வரலாற்றில் தீவிர ஆர்வத்தோடு திகழ்ந்த அந்தத் தொழிலதிபரின் கீழ் சில காலம் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. அது எனது வரலாற்றாற்வத்தைப் பெருக்கியது. இணையத்தின் மூலம் இணைந்த நண்பர்கள் சிலர் பொன்னியின் செல்வன் கதை நிகழும் இடங்களையெல்லாம் பார்வையிட வந்தபோது அந்த யாத்திரையை நான் நடத்திக் கொடுத்தேன். அந்த முதல் யாத்திரை பல்வேறு வரலாற்றுப் பயணங்களுக்கும் வித்திட்டது. அத்தகைய பயணங்களின்போதுதான் முனைவர் இரா கலைக்கோவன் அவர்களைச் சந்தித்தேன். அவரோடு தொடர்ந்து பல பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர் மேற்கொண்ட திருவலஞ்சுழி ஆய்வின்போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. வரலாற்று ஆய்வு என்பது என்ன என்பது அப்போதுதான் தெளிவாகப் புரிந்தது. அதே வரலாற்றுப் பயணங்கள்தாம் திரு கோகுல் சேஷாத்ரி அவர்களையும் அறிமுகம் செய்தன. பாபநாசம் பசுபதிகோயிலின் அருகே அமைந்துள்ள புள்ளமங்கை திருவாலந்துறையார் திருக்கோயிலில் நானும் அவரும் சந்தித்தோம். புணர்ச்சிப் பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் என்கிற குறள்மொழிக்கேற்ப அன்றே அப்பொழுதே ஒரு நட்பையும் நெருக்கத்தையும் இருவரும் உணர்ந்தோம். இணைய நண்பர்கள் சேர்ந்து முனைவர் கலைக்கோவன் அவர்களின் வழிகாட்டுதலில் வரலாறு டாட் காம் எனும் மின்னிதழ் பத்திரிக்கையை வெளியிட ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் அதில் என்னையும் எழுதுமாறு வலியுறுத்தினார்கள். நான் எழுதிய கட்டுரை வாசகர் பக்கக் கட்டுரையாக அதில் வெளியானது. நண்பர்களே! நான் மிகவும் சாதாரணமான நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவன். எனது சகோதர சகோதரியர்களுள் நானே மூத்தவன். ஆதலால் எனக்குக் கடுமையான குடும்பச் சூழல்களுக்கிடையேதான் வரலாற்று ஆர்வத்தை மெல்ல மெல்ல வளர்த்துக்கொள்ள வேண்டி வந்தது. இணைய நண்பர்களைப் போல் தொடர்ந்து பல்வேறு பயணங்கள் மேற்கொள்வதும் கணிப்பொறியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுவதும் என்னால் இயலாதவையாக இருந்தன. என்னுடைய இத்தகைய சூழல்களுக்கும் மத்தியில் தொடர்ந்து நான் வரலாற்றில் காட்டும் ஆர்வத்தை திரு கலைக்கோவன் பெரிதும் மதித்து ஆதரித்தார். குடும்பமும் பணியும்தான் முக்கியம். அதற்கு அடுத்துத்தான் வரலாறு என்று அடிக்கடி வலியுறுத்தினார். என்னைத் தவிர வேறு எவருமே எனது ஆற்றல்களைப் பெரிதாக அங்கீகரிக்காத நிலையில் ‘இந்த இளைஞருக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது’ என்று வலஞ்சுழி வாணர் புத்தகத்தின் முன்னுரையில் வாழ்த்துக் கூறி எழுதினார். அவரது ஆசிகளே என்னை இத்தனை தூரம் வளத்துள்ளன என்று நினைக்கிறேன். நம்புகிறேன். 2007ல் நானும் கோகுலும் இணைந்து எம் பில் பட்டப்படிப்பை மேற்கொண்டோம். அப்போதுதான் அவருடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. அப்போதே அவர் இரண்டு வரலாற்றுப் புதினங்களையும் பல சிறுகதைகளையும் கட்டுரைகளையும் இணையத்தில் எழுதி தனக்கென்று உலகளவிய ஒரு வாசக வட்டத்தை வளர்த்துக் கொண்டிருந்தார். 2007ல் தான் சேரர் கோட்டை ஆரம்பமாகி இருந்தது. ஆரம்பத்திலேயே அதற்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்ததாக அறிந்தேன். இந்தக் கட்டத்தில் நான் எஸ் ஆர் எஸ்டேட்ஸ் எனும் நிறுவனத்தைத் துவங்கி ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் ஈடுபடத் துவங்கினேன். வேலைப்பளு எக்கச்சக்கமாக அதிகரித்தது. என்றாலும் மிகுந்த சிரமத்துடன் எம் பில் படிப்பை முடித்தேன். எம் பில் முடிந்த தும் இருவரும் முனைவர் கலைக்கோவனின் வழிகாட்டலில் முறையான ஆய்வை மேற்கொள்வது என்று முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கினோம். முதலாம் பராந்தகர் காலக் கட்டுமானக் கலை பற்றி நானும் அதே காலத்தின் சிற்பக்கலை பற்றி கோகுலுமாக இணைந்து ஆய்வை மேற்கொண்டோம். அதுவரை வரலாற்றின் வாசகனாக மட்டுமே அறியப்பட்டிருந்த நான் ஒரு ஆய்வாளனாக மலர்ந்த து இந்தக் காலகட்டத்தில்தான். முனைவர் கலைக்கோவனின் நேரடி வழிகாட்டலில் பராந்தகர் காலக் கோயில்களைத் தேடித் தேடிப் பல்வேறு இடங்களுக்கும் பயணித்தேன். பல்வாறாகச் சிந்தித்தேன். என்னுடைய மிக மிக க் கடுமையான வேலைகளுக்கிடையிலும் வரலாற்றுக்காக மனதளவில் நேரம் ஒதுக்கி முடிந்தவரை அந்த ஆய்வில் முன்னேறி வருகிறேன். எனது நிலைமையை முற்றிலுமாக அறிந்த கலைக்கோவன் எனக்காக எத்தனை உதவிகள் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தார். என்னை எப்போதும் உற்சாகப்படுத்தியே பேசுவார். என்னுடன் ஆய்வு மேற்கொண்ட கோகுல் தன்னுடைய முறையான நேர ஒழுக்கத்தினால் ஆய்வில் பன்மடங்கு வளர்ந்தார். ஆனால் அந்த வளர்ச்சியைத் தன்னுடன் வைத்துக்கொள்ளாமல் என்னுடனும் பகிர்ந்து கொண்டார். இது இருவரும் ஒன்றாக இணைந்து ஆய்வுப் பயணத்தை மேற்கொள்ள வழி வகுத்தது. கழுத்தை நெரிக்கும் என்னுடைய பணிச் சூழலுக்கு இடையில் வரலாற்றுடன் தொடர்ந்து நெருக்கமான பிணைப்பு இருக்க வேண்டுமானால் முறையான ஒரு நிறுவனம் அதற்குத் தேவை என்று தெரிந்தது. அதற்காகத்தான் நானும் எனது பிஸினஸ் பார்ட்னர் திரு சாமிராஜ் அவர்களுமாகச் சேர்ந்து இந்தப் பதிப்பகத்தைத் துவங்கினோம். இதன் முதல் வெளியீடு நண்பர் கோகுலின் மிகப்பெரிய வரலாற்றுப் புதினமாக அமைந்த தும் அது முனைவர் கலைக்கோவன் அவர்களின் கரங்களால் வெளியிடப்படுவதையும் பெரும் பேறாகவே கருதுகிறோம். நண்பர்களே! எங்களுக்குப் பதிப்புலகில் அதிக அனுபவமில்லை என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் முன் அனுபவம் பெற்றுத் துவங்கும் வாய்ப்பு நமக்கு ஏற்படுவதில்லை. வரலாறு எங்களை வழிநடத்தும் - உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவு எங்களுக்கு வழிகாட்டும் என்று முழுமையாக நம்புகிறோம். பல்வேறு இடங்களிலிருந்தும் பயணப்பட்டு இந்த விழாவிற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வருக வருக என்று வரவேற்று மகிழ்கிறேன். நன்றி this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |