![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 61
![]() இதழ் 61 [ ஜுலை 15 - ஆகஸ்ட் 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
சென்ற மாதங்களில் பழந்தமிழ் கல்வெட்டுகளின் தோற்றம் வளர்ச்சியினை பார்த்தோம். பழந்தமிழ் கல்வெட்டுகளை தொடர்ந்து முற்கால வட்டெழுத்தும், பிற்கால வட்டெழுத்தும் தோன்றியது. கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. தமிழ் பிராமியிலிருந்து வட்டெழுத்து தோன்றியது என்பது பல வரலாற்று அறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து. சிலர் ஓலைச்சுவடிகளில் எழுதும் வகையில் வளர்ந்தது வட்டெழுத்து என்றும் கருதுகின்றனர். வட்டெழுத்துக் கல்வெட்டுகள், திருச்சி தஞ்சையை ஒட்டிய பல இடங்களிலும், மதுரைக்கு அருகிலுள்ள பாண்டியர்கள் ஆண்ட இடங்களிலும், திருநெல்வேலிக்கு அருகிலுள்ள இடங்களிலும் காணக்கிடைக்கின்றன. சிவகங்கை விழுப்புரம் பகுதிகளிலும் கேரள நாட்டிலும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இருக்கின்றன. சிவகங்கையில் கிடைத்த பூலான்குறிச்சி கல்வெட்டுகள் மிகவும் முக்கியமான ஒன்று. கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்து தமிழ் கல்வெட்டுகள் கிடைத்தாலும் இதே காலகட்டத்தில் வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் வழக்கில் இருந்திருக்கின்றன. சில வட்டெழுத்துக் கல்வெட்டு வரிகள் மற்றும் செய்தியினைப் பார்க்கலாம். திருச்சி மலைக்கோட்டையில் சில வட்டெழுத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி முந்தைய வரலாறு இதழில் வெளியான திரு. ஐராவதம் மகாதேவனின் கட்டுரையில் காணலாம். இணைப்பு - http://varalaaru.com/Default.asp?articleid=574 திருநெல்வேலியில் அம்பாசமுத்திரம் தாலுகாவில் சிங்கப்பட்டியில் கி.பி. ஏழாம் நூற்றாண்டினதாக கருதக்கூடிய எட்டு வரி வட்டெழுத்துக் கல்வெட்டு வரிகள் கீழே. 1) பாண்டிய[ன்] பாற்க 2) [சொ]ழடுவெ... கொற்ற 3) ¡யரைச நாண் 4)ட காலத்து தப்ப. 5) டி அத்தடியார்- 6) சரைச [ஐ]ய்யாரன் 7) சாத்தனைக் குத்தி ப 8) ட்டான் மிகவும் சிதைந்த நிலையில் உள்ள இக்கல்வெட்டு தரும் செய்தி சரிவரத் தெரியவில்லையாயினும் எல்லைப்பூசலில் ஒரு வீரன் இறந்துபட்ட செய்தியைத் தருவதாகக் கொள்ளலாம். மதுரை மாவட்டக் குடைவரைகள் சிலவற்றில் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. மதுரை ஆனைமலையில் நரசிங்கபெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ள கந்தன் குடைவரையில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு வரிகள் (அ.கு. 1) 1) ஸ்ரீரஸ்து புல்லாரி 2) வட்டகுறிச்சி நம்பி 3) [ரா]ன் பட்ட சொமாசி பரி 4) விராஜகர் புதுக்கு என்று உள்ளது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டினதாகக் கருதக்கூடிய எழுத்தமைதி கொண்ட இக்கல்வெட்டின் செய்தியாவது புல்லாரி வட்டகுறிச்சி என்ற இடத்தைச் சேர்ந்த நம்பிரான் பட்ட சொமாசி என்ற பெயருடைய பரிவிராஜகர் புதுக்கினார். அவர் எதைப் புதுக்கினார் என்ற தகவல் இல்லை. ஆனைமலையில் உள்ள சில சமணச் சிற்பங்களை அடுத்து கி.பி. ஒன்பது-பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள், அச்சமணச் சிற்பங்களை செதுக்கியவர்களின் பெயர்களைத் தருகிறது. ஆனைமலைக் கல்வெட்டு 1 1) ஸ்ரீ [கள]வழி நா 2) ட்டு ............நா 3) .......ட்டி அணிய 4) னை சாத்தி எ[னா] 5) தி நாடி செய் 6) விச்ச திரு 7) மெனி ஏனாதி நாடி என்பவர் செய்வித்த திருமேனி. ஆனைமலைக் கல்வெட்டு 2 1) ஸ்ரீ நரசிங்கமங்கலத்து 2) ஸபையார் ர¨க்ஷ [I] அச்சணந் 3) தி செய்வித்த திருமெனியும் பரிவார 4) புரவு வரியார் பெ[ரமு]ம் அச்சணந்தி என்பவர் செய்வித்த திருமேனி மற்றும் பரிவார பேரம். பேரம் என்ற சொல் பரிவார துணைவர்கள் பெற்ற சிற்பம் என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கவேண்டும். இச்சிற்பத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்ட குழுவாக ஸ்ரீ நரமங்கலத்து சபை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனைமலையில் உள்ள மேலும் சில கல்வெட்டுகள் செழியபாண்டி, எவியம்பூதி, சாதன் ஆம்பிறையானான சாதன் அரையன் என்ற பெயர்களைத் தருகின்றன. மேலும் இக்கல்வெட்டுகள் தெய்வ வடிவங்களை திருமேனி, பேரம், பதுமை என்ற சொற்களாலேயே குறிப்பிடுகின்றன. மதுரையில் பழனி தாலுகாவில் அய்யம்பாளையத்தில் உள்ள ஐவர்மலை அல்லது அயிரைமலை என்று குறிப்பிடப்படும் மலையில் சில சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் அவற்றை செதுக்கியவர்களின் பெயர்களைத் தரும் சில வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. காணப்படும் பெயர்களாவன, அச்சணந்தி, இந்திரசேனன், வீரசங்கத்துப் பெருமடை மல்லிசேனப் பெரியான், கெழவத்து வெண்[பு]கவிரிச்சி நாகன். இதே மலையில் உள்ள ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று சமண மாணாக்கியின் பெயரை 'பட்டிநிக்குறத்தியார் மாணாக்கியான அவ்வணந்திக் குறத்தியார்' என்று தருகிறது. ஆனைமலை நரசிங்கபெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு மாறவர்மர் பராந்தக நெடுஞ்சடையரின் அமைச்சரான களக்குடியைச் சேர்ந்த வைத்திய மரபினர் மூவேந்த மங்கலப் பேரரையரான மாறன் காரி இக்குடைவரையை அமைத்துக் குடமுழுக்கு செய்யாமல் மறைந்ததாகவும் அவர் மறைந்த பிறகு அமைச்சர் பொறுப்பேற்ற அவர் தம்பி பாண்டி மங்கல விசையரையரான மாறன் எயினன், அவர் அண்ணன் செய்வித்த கோயிலுக்கு முக மண்டபம் எழுப்பி குடமுழுக்கு நிகழ்த்தியதாகவும் கூறுகிறது. மதுரை பரங்குன்றம் பகுதியிலும் மாறவர்மர் பராந்தக நெடுஞ்சடையர் கால வட்டெழுத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. திருநெல்வேலியில் குற்றாலத்தில் குற்றாலநாதசுவாமி கோயில் பிரகாரத்தின் கிழக்குச் சுவரில் அரையனாதித்தனாகிய மூவேந்தப்பல்லவரையன் திருக்குற்றாலத்துப்பெருமாளுக்கு விளக்கெரிக்க இருபத்தாறு ஆடுகளை கோயிலுக்கு கொடையாக வழங்கிய செய்தியை கொடுக்கும் இரண்டு நீள வரி வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகின்றது. 1) ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரிபன்மர்க்கு யாண்டு இருபது சோழநாட்டு திருப்பனங்காட்டு நாட்டு ஆற்றூர் அரையர்......யான அரையனாதித்தனாகிய மூவெந்தப்பல்ல 2) [வரையன்] திருக்குற்றாலத்து பெருமா[ளு]க்கு ஒரு நொந்தாவிளக்கு எரிவதற்க்கு வச்ச சாவாமுவா பெரும் ப[சு] இ[ருபத்தா]று இவை கொண்டு..............பட்டி அடுத்தன இதே கோயிலில் உள்ள முதலாம் பராந்தகர் கால வட்டெழுத்துக் கல்வெட்டுகள் சில கோயிலுக்கு விளக்கெரிக்க கொடையாக ஆடுகளை கொடுத்த செய்திகளைத் தருகின்றன. முதலாம் பராந்தகரின் இருபத்தி ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று கோயில் விளக்கெரிக்க ஈழக்காசு கொடையாக அளிக்கப்பட்ட செய்தியைத் தருகிறது. இக்கல்வெட்டு சிதைந்து முற்றுபெறாத நிலையில் உள்ளது. ராமனாதபுரத்தில் திருத்தாங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகின்றது. முதலாம் பராந்தகரின் இருபதாம் ஆட்சியாண்டுக் கால கல்வெட்டான இது கோயிலுக்கு முப்பத்தொன்று ஆடுகளின் கொடையாக வழங்கப்பட்டதையும், அக்கொடையை காடந் ஊர் கொற்றங் கிழவன் நடத்திக்கொடுக்கவேண்டும் என்பதையும் தெரிவிக்கிறது. திருநெல்வேலியில் கோச்சடையபன்மரான ஸ்ரீ சுந்தரசொழபாண்டிய தேவர் காலக் கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. அடுத்த மாதம் வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் பற்றிய மேலும் சில விவரங்களைக் காணலாம். பார்வை நூல்கள்: 1) SII Volume 14 2) SII Volume 19 3) மதுரை மாவட்டக் குடைவரைகள், முனைவர் மு. நளினி, முனைவர் இரா. கலைக்கோவன். டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம். திருச்சி. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |