![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 1
![]() இதழ் 1 [ ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 14, 2004 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
சங்கச்சாரல்
காதல் ஏமாற்றும் கள்ளூர்த் தண்டனையும்
கள்ளூர், பூக்கள் நிறைந்த வயல்களையும், கரும்பு செழித்த தோட்டங்களையும் கொண்ட தொல் புகழ் மிக்க எழிலார்ந்த சங்கச் சிற்றூர். இங்கே தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைச் சந்தித்தான். கண்கள் பேசின; காதல் பிறந்தது; களவு வளர்ந்தது. அழகிய நெற்றியினையுடைய அந்த இளையாளின் அணி நலம் கவர்ந்துண்டான் தலைவன். ஆசை தீர்ந்தது. மோகம் முடிந்தது. திருமணம் கேட்ட பெண்ணிடமும் சுற்றத்திடமும் தனக்கு அவளைத் தெரியவே தெரியாது என்று சாதித்து சத்தியம் செய்தான், அறநெறியில்லா அந்தக் கொடுமையாளன். வழக்கு, மன்றத்திற்கு வர, அவையத்துச் சான்றோர் விசாரிக்கத் தொடங்கினர். தலைவனும் தலைவியும் சந்தித்துப் பழகியதையும், நெருங்கிய நிலையில் உறவு கொண்டதையும் கண்டவர் அனைவரும் சான்றாளராயினர். பொய்கள் கரைந்தன. உண்மை ஞாயிறு உதயமானது. தலைவனின் காதல் ஏமாற்று அம்பலமானது. அவையச் சான்றோர் தண்டனை பணித்தனர். தளிர்கள் பொருந்திய பெரிய மரத்தின் கிளையொன்றில் மோசடிக் காதலனை இறுகப் பிணைத்தனர். சுண்ணாம்பு நீற்றினை அவன் தலையில் ஊற்றினர். பொய்க்கும் ஏமாற்றுக்கும் கிடைத்த தண்டனை பொருத்தமானதே என்று ஊரவை நின்ற மக்கள் அனைவரும் ஆரவாரித்து மகிழ்ந்தனர். மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார், மருதப் பாடலொன்றின் வழி சங்க காலத்துக் காதல் மோசடியை நம் கவனத்திற்குக் கொணர்கிறார். "தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக் கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த் திருநுதல் குறுமகள் அணிநலம் வவ்விய அறனி லாளன் அறியேன் என்ற திறனில் வெஞ்சூள் அறிகரி கடாஅய் முறியார் பெருங்கிளை செறியப் பற்றி நீறுதலைப் பெய்த ஞான்றை வீறுசால் அவையத்(து) ஆர்ப்பினும் பெரிதே" (அகம் 256) தகவல் : வரலாறு தொகுதி-1, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய வெளியீடு, திருச்சி. வெறியாட்டு இந்தக் காலத்து அம்மன் சினிமாக்களில் சாமி வந்துவிட்டதென உடலையும் தலையையும் சுழற்றி வெறி வந்தவர் போல் ஆடுவதைக் காண்கிறோம். அக்காலத்தில் வெறியாட்டம் எப்படி, எதற்காக ஆடினர்? எழூஉப்பன்றி நாகன் குமரனார், தனது குறிஞ்சிப் பாடலொன்றில் வெறியாட்டம் பற்றிக் கூறுகிறார். தலைவன் கல்யாணத்தில் விருப்பமில்லாது, களவின்பத்தையே விரும்பி நாள் தோறும் இரவில் வருகிறான். அதை நினைந்து தலைவி கண்களில் கண்ணீர் பெருகுகிறது. "தோழி, என் கண்களில் கண்ணீரைக் கண்ட என் தாய், தெய்வக்குற்றம் என்றஞ்சி கட்டுவிச்சியையும் ( குறி சொல்பவளையும் ) வேலனையும் வெறியாட்டுக்கு அழைக்கிறாள். கட்டுவிச்சியும் வேலனும் வேம்பின் பசிய இலைகளுடன், நீல நிறப் பூக்களை சூடிக் கொண்டனர். பகைவரை வென்ற கடல் போன்ற பெரும் படையையும், திருந்திய இலையையுடைய நீண்ட வேலையும் கொண்ட, பாண்டிய மன்னனின் மலையுச்சியிலிருந்து ஆரவாரத்துடன் கீழே விழும் அருவியைப் போல் வாத்தியங்கள் ஒலிக்க, தமது கைகளால் வணங்கி, இல்லத்தில் முருகப் பெருமானை வரவழைத்து ஆடினர். முருகப் பெருமானின் கடம்ப மாலையையும், வாகனமான யானையையும் பாடினர். பனந்தோட்டையும், கடம்ப மாலையையும் அணிந்து கொண்டு, அசைந்து அசைந்து இரவெல்லாம் ஆடினர். இது நன்றாகுமோ" என்று தலைவன் கேட்குமாறு தோழியிடம் சொல்வது போல் கூறுகிறாள் தலைவி. அதாவது விரைந்து என்னை திருமணம் புரிந்து கொள் என்று தலைவனுக்கு மறைமுகமாகத் தெரிவிக்கிறாள். "இகுளை! கேட்டிசின் காதல்அம் தோழி! குவளை உண்கண் தெண்பனி மல்க வறிதுயான் வருந்திய செல்லற்கு அன்னை பிறிதுஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின் வெறிகொள் பாசிலை நீலமொடு சூடி, உடலுநர்க் கடந்த கடல்அம் தானை திருந்துஇலை நெடுவேற் தென்னவன் பொதியில் அருஞ்சிமைஇழிதரும் ஆர்த்துவரல் அருவியின் ததும்புசீர் இனியம் கறங்க, கைதொழுது உருகெழு சிறப்பின் முருகுமனைத் தரீஇக் கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும் ஆடினர் ஆதல் நன்றோ?" (அகம் 138) தகவல் : மா.இலாவண்யா. கிலுகிலி மந்தி வண்டிகளில் உப்பேந்தி உமட்டியரும் புதல்வரும் உடன் வர உமணர்களின் வணிகச் சாத்தொன்று சிறுபாணாற்றுப்படை வழி நடந்தது. அவர்களுடன் பிள்ளை போலச் செல்லமாய் வளர்க்கப்பட்ட மந்தியொன்றும் பயணித்தது. பயணத்துன்பம் தெரியாதிருக்க விளையாடிச்செல்வது இன்று நேற்றுப் பழக்கமா! உமணர் புதல்வர்களுடன் பிள்ளை மந்தியும் விளையாடி மகிழ்ந்தது. நன்னீரில் பிறந்த முத்துக்களை வாள் போல் வாயமைந்த சிப்பியினுள் அடைத்துக் கிலுகிலி செய்திருந்தனர் அந்நாள் தமிழர். எதற்கும் இருக்கட்டுமென்று அப்படியொரு கிலுகிலியைத் தன்னோடு கொணர்ந்திருந்த பிள்ளை மந்தி உமணர் புதல்வருடன் அதை ஆட்டி ஒலிக்கச் செய்து விளையாடிக்கொண்டே போனதாம். இந்த ஆட்டம் பயணக் களைப்பு மறக்கவா அல்லது பிள்ளைகள் அழுகை நீக்கவா நாமறியோம். ஆனால் சிப்பியும் முத்துமாய் விளங்கிய சங்கக் கிலுகிலி இன்று தகரத்திற்கும் பிளாஸ்டிக்கிற்கும் தடம் பெயர்ந்திருப்பது உண்மை. தகவல் : வரலாறு தொகுதி-3, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய வெளியீடு, திருச்சி. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |