![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 1
![]() இதழ் 1 [ ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 14, 2004 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அர. அகிலா தமிழ்நாட்டில் சங்க காலத்திலோ, தொடர்ந்து நிலவிய சங்கம் மருவிய காலத்திலோ வில்லிசைக் கருவிகள் வழக்கில் இருந்ததாக தொகைநூல்களோ, பாட்டிலக்கியங்களோ, இரட்டைக் காப்பியங்களோ சான்று காட்டவில்லை. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை பரவிக் கிடைக்கும் செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் கூட வில்லிசைக் கருவிகள் தமிழ்நாட்டில் வழக்கிலிருந்தமைக்குச் சான்றுகள் இல்லை. இந்நிலையில், தமிழ்நாட்டின் முதல் வில்லிசைக் கருவியாகச் சிரட்டைக் கின்னரி பல்லவர், பாண்டியர் சிற்பங்களில்தான் அறிமுகம் பெறுகிறது. தமிழ்நாட்டில் எத்தனையோ பாண்டியர் குடைவரைகள் இருந்தபோதும் சிரட்டைக் கின்னரி இடம்பெறும் ஒரே குடைவரை திருமலைப்புரம் குடைவரைதான். திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி, சேந்தமரம் சாலையில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமலைப்புரம். இன்றைக்குத் திருமலாபுரம் என்றழைக்கப்படும் இச்சிற்றூரின் தென்புறத்தே உள்ள மலைக்குன்றுகளின் தொடரில் இரண்டு குடைவரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள், குன்றின் வடமுகத்தில் உள்ள முதல் குடைவரை முழுமையடைந்த நிலையில் சிற்பங்களுடன் காட்சி தருகிறது. இக்குடைவரையின் சுவர்ச் சிற்பங்களுள் ஒன்று சிவபெருமானின் ஆடற்திருக்கோலமாக உருவெடுத்துள்ளது. இதில் நடுநாயகமாக சிவபெருமான் ஆடல் நிகழ்த்த, அவரது இருபுறமும் பூதங்கள் இரண்டு, பக்கத்திற்கொன்றாக நிறுத்தி, வலப்பாதத்தை உத்கடிதமாக்கி சதுர கரணத்தில் ஆடும் சிவபெருமானின் இவ்வாடல் அமைப்புச் சிறப்புக்குரியதாகும். சிவபெருமானின் இருபுறத்தும் உள்ள பூதங்களுள், வலப்புற பூதத்தின் உடல் பெருமளவிற்குச் சிதைக்கப்பட்டுள்ளது. அதன் கால்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. நின்ற கோலத்தில் காணப்படும் இடப்பூதம் கரண்ட மகுடம் அணிந்து, செவிகளில் பனையோலைச் சுருள்களுடன் காட்சியளிக்கிறது. இடக்கையில் ஏந்தி, இடத்தோளில் சாத்தியிருக்கும் நரம்பிசைக் கருவியை, வலக்கைக் கோலால் இயக்கும் இப்பூதம் இறைவனைத் தலை உயர்த்திப் பார்த்தவாறு பூரித்து நிற்கிறது. இப்பூதத்தின் வலக்கைக் கோலை வில்லாகக் கொள்ளலாம். இதுபோன்ற வில்லிசைக் கருவியுடன் ஆடலுக்கு இசை சேர்க்கும் முதல் கருவிக் கலைஞராகத் தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் பதிவாகும் காலத்தாற் முற்பட்ட இச்சிற்பம் பாண்டியர் கைவண்ணமாகும். பிற பாண்டியர் குடைவரைகளில் இத்தகு வில்லிசைச் சிற்பத்தை இதுநாள் வரையிலும் கண்ணுற்றதில்லை என்பது இச்சிற்பத்தின் பெருமையை இமயமாய் உயர்த்துகிறது. இசையறிஞர் அமரர் வீ.ப.கா.சுந்தரனார் இவ்விசைக் கருவியைச் சிரட்டைக் கின்னரி என்பார். பல்லவர் குடைவரைகளில் ஆடல் சிற்பம் சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேசுவரத்தில் மட்டுமே காணப்படுகிறது. பூதவரி அமைந்துள்ள குடைவரை வலபிகள் மாமல்லபுரம் ராமானுஜ மண்டபத்திலும், சிராப்பள்ளி கீழ்க்குடைவரையிலும் மட்டுமே காணப்படுகின்றன. ஒரு கல்தளிகள் சிலவற்றின் வலபிகளிலும் பூதவரிகள் உள்ளன என்றாலும், சிரட்டைக் கின்னரி ஏந்திய பூதங்களை இவையொன்றிலும் காணக்கூடவில்லை. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மண்ணையாண்ட இராஜசிம்மப் பல்லவரான இரண்டாம் நரசிம்மவர்மரின் ஆட்சிக் காலத்தில் அமைந்த கற்றளிகளிலேயே முதல் முறையாக சிரட்டைக் கின்னரி ஏந்தியுள்ள பூதக் கலைஞர்களைக் கண்கொள முடிகிறது. காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில், கல்வெட்டுகளில் இராஜசிம்மேசுவரமாக அறியப்படுகிறது. இக்கோயிலை விரிவான அளவில் ஆய்வு செய்துள்ள முனைவர் இரா. கலைக்கோவன் இங்குள்ள இசைக்கலை தொடர்பான சிற்பங்களைத் தெளிவாக அடையாளப்படுத்தியுள்ளார். யாழ், வீணை, குழல், பல்வகைத் தாளங்கள், முழவுகள் எனத் தோல், காற்று, நரம்பு, கஞ்சமென்ற நால்வகை இசைக்கருவிகளையும் இத்திருக்கோயில் சிற்பங்களில் காணமுடிவது கலை ஆய்வர்களுக்கு வாய்ப்பான அமைவாகும். இங்குள்ள வீணைகளும், யாழ்களும் எட்டாம் நூற்றாண்டு நரம்பிசைக் கருவிகளின் அமைப்பு, வளர்ச்சி அறியப் பேருதவியாகின்றன. பல்லவர் கால ஆடல் நிகழ்வுகளுக்கு எத்தகு இசைக்கருவிகள் துணைநின்றன என்பதை ஆராய்ந்து தெளியவும் இராஜசிம்மேசுவரம் வாய்ப்பான களமாகும். இத்திருக்கோயிலின் சுவர்க்கோட்டங்கள் ஒன்றின் கீழ்ப்பகுதியில் சிரட்டைக் கின்னரியெனும் வில்லிசைக் கருவியுடன் ஒரு பூதச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. வலக்காலைக் குத்துக்காலாக வைத்து, இடக்காலை மடக்கி ஆசனத்தில் கிடத்தி அமர்ந்துள்ள இக்கணத்தின் இடையாடை அதன் அமர்வுக்கேற்பச் சுருக்கப்பட்டுள்ளது. கைகளில் வளைகள், வலச்செவி நீள்செவியாய்க் குண்டலமின்றிக் காட்டப்பட்டுள்ளது. தலையின் சடைகளை முகப்புடன் கூடிய நெற்றிப்பட்டம் அரவணைத்துள்ளது. கழுத்தில் சரப்பளியெனக் கருதத் தக்க அணிகலன். சம்பந்தரின் பதிக வண்ணனைகளுக்கேற்ற குடவயிற்றுப் பூதம் இது. இடத்தோளில் சாய்க்கப்பட்டுள்ள நரம்பிசைக் கருவியின் கீழ்ப்பகுதியை இட உள்ளங்கை தாங்கலாக ஏந்தியுள்ளது. வலக்கையிலுள்ள வில், நரம்பிசைக் கருவியை மீட்டுகிறது. கருவியிசையில் கண்களை மூடி, இதழ்களை மலர்த்தி, தனை மறந்து அமர்ந்துள்ள இப்பூதத்தின் எழில் கொஞ்சும் வடிவம் இராஜசிம்மேசுவரத்தின் தன்னிகரற்ற சிற்பக் கருவூலங்களுள் ஒன்றாய் இதைப் பதிவு செய்கிறது. உத்தரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயில் பல காலகட்டங்களில் பல மரபுப் பேரரசர்களால் திருப்பணி செய்யப்பட்ட கோயிலென்ற போதிலும், அதன் தாங்குதள அமைப்புகள் பல்லவர் பாணியாகவே நின்றுள்ளன. அத்தாங்குதளப்பகுதி ஒன்றில் லளிதாசனத்தில் அமர்ந்தபடி பூதமொன்று, தன் இடைக்கட்டின் முடிச்சுகள் உடலின் வலப்புறம் விரிந்திருக்க, சடைக்குழல்கள் தலையின் வலப்புறம் தோளுக்காய்ச் சரிந்து இறங்கிய நிலையில் சிரித்த முகத்தோடு, வில்லிசைக் கருவியின் இசைநயத்தில் தனை மறந்து மயங்கியுள்ளது. மார்பின் இடப்பகுதியிலும் இடத்தோளிலும் சாய்த்து வைக்கப்பட்டுள்ள நரம்பிசைக் கருவியின் கீழ்ப்பகுதியை இட உள்ளங்கை தாங்கியுள்ளது. வளையணிந்துள்ள வலக்கையின் வில் இசைக்கருவியை மீட்டுகிறது. கழுத்தில் சவடி. இரு செவிகளிலும் கனத்த பனையோலைக் குண்டலங்கள். இராஜசிம்மேசுவரத்துப் பூதத்தின் இசை மயக்கத்திற்கும் சுந்தரவரதப் பெருமாள் கோயில் பூதத்தின் இசை மயக்கத்திற்கும்தான் எத்தனை வேறுபாடு. இவ்விரு சிற்பங்களையும் அருகருகே வைத்துப் பார்த்தால்தான் சிற்பிகளின் இத்தகு சித்து விளையாட்டுக்களைப் புரிந்து கொள்ள முடியும். பல்லவர், பாண்டியர் காலத்தில் அருகிக் காணப்படும் இப்பூத வில்லிசைக் கலைஞர்கள் முற்சோழர் காலத்துக் கோயில்கள் பலவற்றில் இடம்பெற்றுள்ளனர். தனித்ததோர் இசைக்கருவியாகவும் ஆடலுக்கு உடனமைந்த இசைக்கருவியாகவும் வலபி வரிகளிலும், சிற்றுருவச் சிற்பங்களிலும் இச்சிரட்டைக் கின்னரிக் கலைஞர்களைக் காணமுடிகிறது. பழுவேட்டரையர்களின் கலைப்பணியாகக் காட்சிக்குக் கிடைக்கும் கீழையூர் அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருக வளாகத்துள்ள தென்வாயில் ஸ்ர்கோயிலின் முகமண்டபத்திலும் விமானத்திலும் உருவாக்கப்பட்டுள்ள பூதவரிகளில் சிரட்டைக் கின்னரிக் கலைஞர்களைப் பார்க்கலாம். இக்கோயில் முகமண்டபத்தின் வடபுறத்தே உள்ள வலபியில் பதினெட்டுப் பூதங்கள் காட்டப்பட்டுள்ளன. இவற்றுள் முதல் பதினைந்து ஆடலிலும் இசையிலும் தமை மறந்துள்ளன. இவற்றுள் ஐந்து பூதங்கள் ஆடல் நிகழ்த்த இரண்டு வாய்ப்பாட்டுப் பாடுகின்றன. பாடும் பூதங்களின் வலக்கைகள் சின்முத்திரையில் உள்ளன. இவ்விரண்டனுள் ஒன்று நன்கு வாய்திறந்து பாட, மற்றொன்று இலேசாகத் திறந்து பாடுகிறது. அளவில் மாறுபட்ட இலைத் தாளங்களுடன் மூன்று பூதங்கள். நான்கு பூதங்கள் தோல்கருவிகளை இசைக்க, ஒன்று குடமுழவில் திறம் காட்டுகிறது. ஒரு பூதம் தன் கையிலுள்ள இடக்கை எனும் இசைக்கருவியில் இசையெழுப்புகிறது. இடண்டு பூதங்கள் தண்ணுமை மற்றும் மத்தளம் கொண்டுள்ளன. ஒரு பூதம் நரம்பிசைக் கருவியை இடத்தோளின் மீது கிடத்தி, வலக்கையில் உள்ள வில்லால் இன்னிசை எழுப்பி மகிழ்கிறது. பூத ஆடவர்களுக்கும், பாடகர்களுக்குமான இசைக்கூட்டியத்தில் இதன் வில்லிசையும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தென்வாயில் ஸ்ர்கோயில் விமானத்தின் தெற்கு வலபி வரியிலும் சிரட்டைக் கின்னரியுடன் பூதமொன்று காட்டப்பட்டுள்ளது. இதுவும் கருவியை இடத்தோளில் கிடத்தி, இடக்கையால் தாங்கியபடி, வலக்கை வில்லால் மீட்டி இசையெழுப்புகிறது. இதே வளாகத்திலுள்ள வடவாயில் ஸ்ர்கோயிலின் மிகமண்டப வலபி வரியிலும் வடபுறத்தே சிரட்டைக் கின்னரிக் கலைஞர்களைக் காணலாம். இயல்பிற்கு மாறாக இங்கு இரண்டு பூதக் கலைஞர்கள் சிரட்டைக் கின்னரியுடன் காட்சி தருகின்றனர். இருவருமே இடத்தோளின் மீது தாங்கலாய்க் கொண்டுள்ள நரம்புக் கருவியை வலக்கை வில்லால் இயக்குகின்றனர். திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் கோயில், திருப்பழனம் ஆபத்சகாயேசுவரர் கோயில், திருவெண்காடு சுவேதாரண்யேசுவரம், புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில், திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில், திருவையாறு அய்யாறப்பர் வளாகத்துள்ள வடகைலாசம், கீழப்பழுவூர் ஆலந்துறையர் கோயில், தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் எனப் பல கோயில்களிலுள்ள வலபிகளில் சிரட்டைக் கின்னரிக் கலைஞர்களாய் கணங்கள் இடம்பெற்றுள்ளன. மகரதோரணங்களிலும் கண்டபாதங்களிலும் காணப்படும் சிவபெருமானின் கரணக்கோலச் சிற்பங்கள் பலவற்றில் இறையாடலுக்கு இசை கூட்டும் இன்னியங்களுள் ஒன்றாய்ச் சிரட்டைக் கின்னரி இடம்பெற்றிருக்கக் காணலாம். கீழையூர்த் தென்வாயில் ஸ்ர்கோயில் விமானத்தின் தெற்கு மகர தோரணத்தில் 17 செ.மீ உயரமும் 19 செ.மீ அகலமும் உள்ள கீழ்க் குழிவில் சிவபெருமானின் ஊர்த்துவஜாநு கரணக் கோலம் காணப்படுகிறது. மேலே இருபுறமும் இவ்வாடல் கண்டு போற்றும் மெய்ப்பாட்டில் கந்தருவர் இருவர் காட்டப்பட்டுள்ளனர். கீழே சிவபெருமானின் வலப்புறத்தே குள்ளச்சிறு பூதமொன்று தாளம் தட்டுகிறது. அதையடுத்துக் குடமுழவு வாசிக்கும் இசைக்கலைஞர் காட்டப்பட்டுள்ளார். அவருக்கருகே புல்லாங்குழலை வாசித்தபடி மற்றொரு பூதம். சிவபெருமானின் இடப்புறத்தே இரண்டு கணங்கள் உள்ளன. ஒன்று இடத்தோளில் சாய்த்த நரம்புக் கருவியை வலக்கைக் கோல் கொண்டு வாசிக்க, மற்றொன்று தாளம் தட்டுகிறது. இவ்விசைக் கலைஞர்களின் நடுவே இறைவனின் ஆடற்கரணத் தோற்றம் அழகுற அமைந்துள்ளது. திருமழபாடி வைத்தியநாதசாமி கோயிலின் வெளிச்சுற்றில் உள்ள மகரத் தோரணத்தில் காணப்படும் ஊர்த்துவஜாநு கரணக்கோலச் சிவபெருமானின் இடப்புறத்தே சிரட்டைக் கின்னரி வாசிக்கும் பூதம் காணப்படுகிறது. பசுபதி கோயிலில் உள்ள பிரம்மபுரீசுவரர் விமானத்தின் தென்புறத்தாங்குதளக் கண்டபாதத்தில் சிவபெருமானின் தண்டபட்சக் கரணக்கோலம் செதுக்கப்பட்டுள்ளது. இதில் சிவபெருமானின் உயர்த்திய வலக்காலுக்குக் கீழே சிரட்டைக் கின்னரியுடன் பூதக்கலைஞர் காட்டப்பட்டுள்ளார். குடமுழவுக் கலைஞர் எதிர்ப்புறத்தில் அமர்ந்து தாளம் தருவது நோக்க, முற்சோழர் காலத்தில் ஆடலுக்கு உகந்த இசைக்கருவியாக முழவுடன் சிரட்டைக் கின்னரி பயன்பட்டமையை அறியலாம். திருப்புகலூர் சிவன் கோயிலிலுள்ள சிவபெருமானின் புஜங்கத்ராசிதக் கரணக்கோலச் சிற்பத்தின் கீழ் இசைக் கலைஞர்கள் இருவர் காட்டப்பட்டுள்ளனர். இவர்களுள் வலப்புறத்தே உள்ளவர் காரைக்காலம்மையார். வழக்கமான தாளத்தை விடுத்துச் சிரட்டைக் கின்னரி வாசிக்கும் கலைஞராய் அம்மை இதில் காட்டப்பட்டுள்ளதால் இச்சிற்பம் தனித்துவம் பெறுகிறது. இச்சிரட்டைக் கின்னரி வட்டமான சிறிய கீழ்ப்பகுதியும், அதிலிருந்த நீளும் தண்டுப்பகுதியும் கொண்டுள்ளது. வட்டப்பகுதியை உள்ளங்கையில் ஏந்தித் தண்டுப்பகுதியை மார்பில் சாய்த்துத் தோளைத் தொட்டபடி இருத்தி, மற்றொரு கையிலுள்ள சிறிய வில்லால் தண்டுப்பகுதியிலுள்ள நரம்புகளை மீட்டி இசையெழுப்புமாறு இச்சிரட்டைக் கின்னரி அமைந்துள்ளது. இறையாடல் சிற்பங்களில் இடம்பெற்றுள்ள இதை மனிதர்களின் ஆடற்சிற்பத் தொகுதிகளில் காணக்கூடவில்லை. சமகால இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் இடம்பெறாத இந்நரம்பிசைக் கருவியைச் சிற்பங்களில் மட்டுமே பார்க்க முடிவதும் இங்குக் கருதத்தக்கது. அல்லூரில் காணப்படும் சிரட்டைக்கின்னரி ![]() ![]() ![]() ![]() கட்டுரை ஆசிரியர் முனைவர் அர.அகிலா, எம்.ஏ, எம்.ஏ, பி.எச்.டி டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |