![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 25
![]() இதழ் 25 [ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2006 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பயணங்கள் செய்வது எப்பொழுதும் சுகம்தான். அதுவும் முனைவர் கலைக்கோவன் கள ஆய்வுக்குச் செல்லும் போது உடன் செல்வதென்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. வலஞ்சுழிப் பயணத்தின் போது கேட்டதும், கற்றதும், பெற்றதும் கணக்கில் அடங்கா. தனது கள ஆய்வுகளை நிறுத்திவிட்டு, தான் இதுவரை செய்த ஆய்வுகளைத் தொகுக்கவும், பதிவு செய்யவுமே தனது நேரத்தைச் செலவிடப் போவதாக முனைவர் கலைக்கோவன் சில மாதங்கள் முன்பு சொன்ன போது, ஒரு பக்கம் அவர் எழுதப் போகும் புத்தகங்களை நினைத்துக் களிப்படைந்தாலும், அவருடன் கள ஆய்வுகளுக்குச் செல்ல முடியாதே என்று உள்ளம் வருந்தத்தான் செய்தது.
அந்தச் சமயத்தில், கும்பகோணத்தில் இருக்கும் சரித்திரத்தைக் காதலிக்கும் உள்ளம் கொண்ட பத்மநாபனின் அன்புக்குக் கட்டுப்பட்டு உடையாளூரில் கள ஆய்வு செய்ய கலைக்கோவன் ஒப்புக் கொண்டது தெரிய வந்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்கெனவே ஒருமுறை (2004-இல் என்று நினைக்கிறேன்) அவருடன் சென்று உடையாளூர் பால்குளத்தம்மன் கோயில் தூணில் இருக்கும் கல்வெட்டைப் படியெடுக்கச் சென்றிருந்தபோது உடையாளூர்ச் சிவன் கோயிலைக் கண்டிருந்த போதும், அப்போதிருந்த நிலையில் அங்கிருந்த சிற்பங்களையும், கல்வெட்டுகளையும், கட்டடக்கலையையும் கவனிக்கத் தோன்றவில்லை. அப்போதிருந்த ஒரே கவலை அங்கு இராஜராஜ சோழருக்குப் பள்ளிப்படை இருந்ததா என்பதுதான். அங்கிருந்தது இராஜராஜரின் பெயரில் இருந்த மண்டபத்தின் சீரமைப்பைக் கூறும் தகவலே அன்றி பள்ளிப்படைக்கும் அக்கல்வெட்டுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட திருப்தியுடன் திரும்பினோம். இந்த முறை செல்லும்பொழுது இன்னும் ஆழ்ந்து கவனிக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தேன். ![]() முனைவர் நளினி கல்வெட்டுகளுடன் ஐக்கியமாக, முனைவர் கலைக்கோவன் கட்டடக்கலை மற்றும் சிற்பங்களைப் பற்றிக் குறிப்பெடுக்க ஆரம்பித்தார். அவரையே சுற்றி வந்த என்னையும் பத்மநாபனையும் அவ்வப்பொழுது கேள்விகள் கேட்டுச் சிந்தனையைத் தூண்டவும், எங்கள் கேள்விகளுக்குப் பதிலளித்து எங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தவும் செய்தார். கட்டட அமைப்பைப் பற்றியும் சிற்பக் கூறுகள் மற்றும் அவற்றின் காலம் பற்றிய சம்பாஷணைகளில் காலம் கழிந்தது. ![]() இக்கோயிலின் விமானம் இரண்டு தளங்களுடனும், சிகரம் வேசரமாகவும் அமைந்துள்ளது. விமானத்தின் தாங்குதளமானது உபான உறுப்புகள், ஜகதி, உருள் குமுதம், பிரதிவரி, வேதிகண்டம், வேதிகை என்ற பல உறுப்புகள் பெற்று 'பிரதிபந்தத் தாங்குதளமாய்' திகழ்கிறது. கூரை உறுப்பான வலபியில் பூதவரி காட்டப்பட்டுள்ளது. முதல் தளத்தின் கூரைக்கு மேல் ஆர உறுப்புகளாக இரு பக்கங்களில் கர்ணகூடுகளுடனும் மத்தியில் சாலையுடனும் காட்டப்பட்டுள்ளது. விமானத்தின் தாங்குதளமும், முதல் தள உறுப்புகளும் கருங்கல்லாலும், அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல்லாலும் அமைக்கப் பெற்றிருக்கின்றன. செங்கல்லால் அமைக்கப் பெற்ற பகுதி, சமீபத்தில் மாற்றி அமைக்கப் பட்டிருப்பது, அதன் மேலிருக்கும் சிற்பங்களின் அமைதியிலிருந்து அறிய முடிகிறது. தாங்கு தளமும், சுவர் பகுதியும் சுண்ணாம்புப் பூச்சில் மூழ்கிக் கல்வெட்டுகளைப் படியெடுக்க விரும்புவோருக்கும், பூதவரிச் சிற்பங்களைக் காண விழைவோருக்கும் பெரும் துயரையளிக்கிறது. சுவர்ப் பகுதியில் பல தூண்கள் சிதைந்திருக்கின்றன. கருவறையும் முகமண்டபமும் அதனை அடுத்து இருக்கும் மண்டபத்தின் அமைப்பிலிருந்து மாறுபட்டிருக்கின்றன. தாங்குதள அமைப்பிலும், போதிகை வகையிலும் வித்தியாசமாகத் தெரியும் முன் மண்டபம், பிற்காலச் சேர்க்கையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. விமானத்தின் போதிகைகள் பட்டையுடன் கூடிய தரங்கப் போதிகையாக அமைந்திருக்க, முன் மண்டபத்தின் போதிகைகள் வெட்டுப் போதிகையாக அமைந்துள்ளன. முன் மண்டபத்தின் தாங்குதளம் பாதபந்தமாக அமைந்துள்ளது. ![]() தென்புற கோட்டங்களில் பிக்ஷாடனரும், முனிவரும் (அகத்தியர்?), ஆலமர் அண்ணலும் காணக் கிடைக்கிறார்கள். பிக்ஷாடனரின் சிற்ப அமைதியிலிருந்து அது பிற்காலச் சோழருக்கும் மிகவும் பிற்காலத்தைச் சார்ந்த சிற்பம் என்று அறிய முடிகிறது. வலது காதை நீள் செவியாகவும், இடது காதில் பத்ர குண்டலமணிந்தும், வலப்பின் கையில் டமருகம் ஏந்தி, இடது பின்கையில் கங்காளத்தண்டு கொண்டு, வலது முன்கையில் மானுக்குப் புல் கொடுத்தபடியும், இடது முன்கையில் கபாலம் ஏந்தியும், பிட்சைப் பாத்திரம் ஏந்தி வரும் கணத்துடன் காட்சியளிக்கும் பிட்சாடனரின் சற்றே விறைப்பான தோற்றமும், அங்கங்களின் அமைதியும் அதன் காலத்தைச் சுட்டுகின்றன. ![]() தென்புறத்தில், காலத்தால் முற்பட்டதாகத் தெரியும் சிற்பம் முனிவருடையது. வலக்கையில் அக்க மாலையையும் இடக்கையில் கமண்டலமும் ஏந்தி, பருத்த வயிற்றுடன், நன்கு வளர்ந்த தாடியும் மீசையும் முகமெங்கும் தொங்க, தலையில் சடையலங்காரத்துடன், சுகாசனத்தில் விரிப்பின் மேல் நிஷ்டையில் அமர்ந்திருக்கும் முனிவரின் தோற்றம் கண்டாரைக் கண்டபடி பல நேரம் நிறுத்தக் கூடியது. சென்ற முறை வந்த போது, இம்முனிவரின் வலக் காலுக்குப் பின் சிறிய அளவில் அஞ்சலி ஹஸ்தத்தில் கைகூப்பிக் காட்சியளிக்கும் ஒருவரின் உருவத்தைக் கண்டோம். இவர் இச்சிற்பத்தைச் செதுக்கியவரோ அல்லது இச் சிற்பத்தைச் செதுக்கச் சொன்னவரோ நாமறியோம். ![]() வலக்கையில் ஒன்றை அபய ஹஸ்தத்தில் நிறுத்தி, மற்றொன்றில் பாம்பை ஏந்தியும், இடக்கையில் ஒன்றை நெகிழ் கரமாகவும், மற்றொன்றில் சூலத்தை ஏந்தியும் காட்சியளிக்கும் தென்திசைக் கடவுளின் அமர்வு நிலை வீராசனத்தில் அமைந்துள்ளது. பிற்காலச் சோழர் காலச் சிற்பமாகக் கொள்ளக்கூடிய இவரின் வலக்காதில் மகர குண்டலம் தொங்க, இடது காதைப் பனையோலைக் குண்டலம் அலங்கரிக்கிறது. ![]() தென்திசை பூதவரியில் ஓர் அரிய காட்சி காணக் கிடைக்கிறது. கணங்களின் தலைவரான கணபதியை பூதவரியில் காண்பது சகஜம்தானெனினும், இங்கு காட்டியிருக்கும் கணபதியின் சித்தரிப்பு மிகவும் வித்தியாசமானது. கணநாதனுக்கு மோதகமளித்தபடி ஒரு குள்ள பூதம் பிள்ளையாரின் இடப்புறத்தே இருக்க, தன் கையில் ஏற்கெனவே ஒரு மோதகம் இருக்கும் போதும், தன் பக்தன் அளிப்பதை ஆவலோடு தும்பிக்கையால் வாங்குவது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதே வரிசையில் முனிவருக்கு மேலுள்ள வலபிப் பகுதியில் செண்டை மத்தளம் காட்டப்பட்டுள்ளது. கொம்பு, மத்தளம் முதலான இசைக்கருவிகள் மற்றும் வயிற்றிலொரு முகம் கொண்ட வித்தியாச கணங்களின் சிற்பங்களையும் இங்கு காண முடிகிறது. ![]() கணபதியைப் படமெடுக்க நான் மரத்தின் மீது ஏறவும் மதிய உணவை பத்மநாபன் அவர் இல்லத்திலிருந்து எடுத்து வரவும் சரியாக இருந்தது. (தொடரும்) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |