![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 25
![]() இதழ் 25 [ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2006 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம்.
ஆகஸ்ட் 15, 2004 அன்று ஆரம்பிக்கப்பட்ட வரலாறு.காம், இரண்டு ஆண்டுகளைப் பூர்த்தி செய்து, அடுத்த மாதம் மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறது. பிறந்தநாளை ஒரு சிறப்பிதழுடன் கொண்டாடலாம் என ஆசிரியர் குழுவினர் கலந்தாலோசித்து, 'மகேந்திரர் சிறப்பிதழ்' என்ற ஒருமித்த கருத்தை எட்டியுள்ளோம். அதுபோக, மூன்றாமாண்டுத் துவக்கவிழாவாக, இதுவரை வரலாறு.காம் இதழின் கட்டுரைகள் மூலமாக மட்டுமே அறிஞர்களை அறிந்து வந்த வாசகர்களையும், வாசகர்களை அவர்களின் பின்னூட்டங்களின் மூலமாக மட்டுமே அறிந்து வந்த கட்டுரையாளர்களையும் சந்திக்க வைக்கும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளோம். தற்போது நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் இருப்பதால், எல்லோருக்கும் உகந்த நாளாக முடிவு செய்து, விரைவில் அறிவிக்கிறோம். கடந்த சில மாதங்களில் தமிழக வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் சில நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றுள் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை இரண்டு. 1. தமிழ் நூல்களின் நூலகப் பிரதிகள் அதிகரிப்பு. வரலாற்றறிஞர்கள் மட்டுமின்றி, வரலாற்றின் மீது ஆர்வம் கொண்ட அனைவரும் வருத்தப்படும் ஒரு விஷயம், வெகுஜனப் பத்திரிக்கைகள் விற்பனையாகும் அளவுக்கு வரலாறு மற்றும் தமிழ் இலக்கியம் தொடர்பான நூல்கள் விற்பனையாவதில்லை என்பது. இப்படி விற்பனையாகாத போதிலும், சில பதிப்பகங்கள் தொடர்ந்து வரலாற்று நூல்களை வெளியிட்டு வருவது நூலகங்களை நம்பி மட்டுமே. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு 750 தமிழ் நூல்களை 750 பிரதிகள் வாங்கி, தமிழகத்திலுள்ள மாவட்டக் கிளை நூலகங்களுக்குப் பகிர்ந்தளிக்கிறது. இந்த 750 நூல்கள் கதை, கட்டுரை, கவிதை, இயற்பியல், வேதியியல் என எல்லாத் துறைகளிலிருந்தும் வந்தாலும், வரலாறு தொடர்பான நூல்களும் கணிசமான அளவு இருக்கும். கடந்த மே மாதம் சட்டமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான திரு.இரவிக்குமார் அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டு முதல் 1000 நூல்கள் நூலகங்களுக்காக வாங்கப்படும் என முதல்வர் கலைஞர் உடனடியாக அறிவித்துள்ளார். இதனால் பயன்பெறப் போகிறவர்கள் மூன்று தரப்பினர். முதலாவது, பதிப்பகத்தார். உதாரணமாக, சென்னையில் சேகர் பதிப்பகத்தை நடத்தி வரும் திரு. வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள், விற்பனையாகிறதோ இல்லையோ, வரலாற்று நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவதில் மிக்க ஆர்வம் கொண்டவர். ஒரு பதிப்பகத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நூல்கள் மட்டுமே எடுக்கப்படும் என்றாலும், ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு வரலாற்று நூல்களை வெளியிடுவதைக் கொள்கையாகவே வைத்திருப்பவர். அதற்காகச் சொத்துக்களையே இழந்தவர். வரலாற்றை நேசிக்கும் அனைவருடைய பாராட்டுக்கும் உரியவர். இவர் போன்றவர்கள் வெளியிடும் நூல்கள் ஒன்றிரண்டு அதிகமாக எடுக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், உற்சாகத்துடன் செயல்படுவர். இரண்டாவது, ஆராய்ச்சியாளர்கள். சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் என்பது போல, பல வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள், வைட்டமின் 'ப' இல்லாததால், நூல்வடிவம் பெறாமலேயே இருக்கின்றன. இதற்குக் காரணம் சரியான பதிப்பகத்தார் கிடைக்காததே ஆகும். இந்த நூல்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால், பதிப்பகத்தார் கூடுதல் நூல்களைப் பதிப்பிக்க முன்வந்து, பல ஆய்வுத்தொகுப்புகள் நூல்வடிவம் பெறும் என எதிர்பார்க்கலாம். மூன்றாவது, வாசகர்கள். இன்னும், வரலாற்று நூல்களை விலை கொடுத்து வாங்கத் தயங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள். இதற்கு அவர்களது பொருளாதார நிலையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதால், இதைக் குறையாகக் கூறுவது சரியாயிராது. எப்படி இருந்தாலும், நூலகம் என்பது மக்களுக்கு நன்மை பயக்கும் விஷயமே. இன்றில்லா விட்டாலும், சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து, நாம் தேடும் ஒரு புத்தகம் நூலகத்தில் கிடைத்தால், மகிழ்ச்சியடைந்து, பதிப்பகத்தைத் தேடிச் சென்று நூல்களை வாங்குவோம். எனவே, நூலகப் பிரதிகள் அதிகரிப்பு என்பது வரலாற்றுடன் தொடர்புடைய அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவதாகும். இதற்காக, தமிழக முதல்வருக்கும், சட்டமன்ற உறுப்பினர் திரு.இரவிக்குமாருக்கும், வரலாறு.காம் தன் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 2. தஞ்சை இராஜராஜீசுவரத்தில் ஒலி - ஒளிக் காட்சி (Light and Sound Show). தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை, சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் தினசரி நடைபெறுவதைப் போலவே, மாலை வேளைகளில் இராஜராஜனைப் பற்றியும், பெரிய கோயிலைப் பற்றியும் குறும்படம் ஒன்று திரையிடத் திட்டமிட்டுள்ளனர். கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் தமிழா என்று அப்பாவியாய்க் கேட்கும் தமிழர்களுக்கு இந்தத் திட்டம் வரலாற்றை அறிமுகப்படுத்தும் சிறந்த முயற்சி என்பதில் ஐயமில்லை. இதற்கு ஏதாவது உதவிகள் தேவைப்படும் நிலையில், வரலாறு.காம் மனமுவந்து செய்யத் தயாராய் இருக்கிறது. இராஜராஜீசுவரத்தின் வரலாற்றை மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதேவேளையில், கோயிலைச் சுத்தமாக வைத்திருக்கவும் பக்தர்களுக்கு எடுத்துக்கூறி, விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, சுற்றுலாத்துறையையும், இம்முடிவுகளை எடுத்தவர்களையும் வரலாறு.காம் வாழ்த்தி மகிழ்கிறது. அன்புடன் ஆசிரியர் குழு. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |