![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 175
![]() இதழ் 175 [ ஃபிப்ரவரி 2024 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தரங்கம்பாடி வட்டம் மங்கைநல்லூர் அருகே உள்ள பண்டாரவாடையில் காணப்படும் கைலாசநாதர் கோயில் மாடக் கோயிலாகும்.1 முகப்புடனான இதன் எளிய நுழைவாயிலின் இருபுறத்தும் உள்ள ஒருதள நாகர விமானங்களில் தெற்கில் பிள்ளையாரும் வடக்கில் முருகனும் இடம்பெற்றுள்ளனர். முகப்பில் சிவபெருமான், உமை இணையர் பிள்ளைகளுடன் விளங்கும் காட்சி சுதைவடிவமாகக் காட்டப்பட்டுள்ளது. இக்கோயில் வளாகத்தினுள் வடபுறம் ஒருதள வேசரமாய் அம்மன் விமானமும் அதன் மண்டபங்களும் அமைய, நடுவில் கைலாசநாதர் விமானம் வெற்றுத்தளத்தின் மீதமைந்த இருதள வேசரமாய் மண்டபங்களுடன் காட்சிதருகிறது. கிழக்குச் சுற்றில் இறைவன் கோயில் முன் பலித்தளமும் நந்தியும் உள்ளன. வடகிழக்கு மூலையில் உள்ள மண்டபத்தில் இரண்டு பைரவர், சூரியன், சனீசுவரன், அம்மன் சிற்பங்களும் மேடை ஒன்றில் துணைவியருடன் ஒன்பான்கோள்களும் உள்ளன. சுற்றின் தென்புறம் ஒருதள நாகரமாய் ஞானாந்தகிரி சுவாமிகள் திருமுன்னும் தென்மேற்கில் ஒருதளத் திராவிடமாய் சீனிவாச மகாவிஷ்ணு திருமுன்னும் மேற்கில் ஒருதள வேசர மாய்ப் பிள்ளையார், மகாலட்சுமி திருமுன்களும் ஒருதளத் திராவிடமாய் முருகன் திருமுன்னும் அமைய, சகஸ்ரலிங்கம் ஒருதள நாகரத்தில் இடம்பெற்றுள்ளது. வெற்றுத்தளம் கைலாசநாதர் விமானம், முகமண்டபம் இவற்றிற்கான கருங்கல் வெற்றுத்தளமும் முகமண்டபத்தின் முன்னுள்ள பெருமண்டபத்திற்கான செங்கல் வெற்றுத்தளமும் தூண், போதிகை அமைப்புகளில் வேறுபட்டாலும் துணைத்தளம், வேதிகை, சுவர், கூரையுறுப்புகள் இவற்றில் ஒன்று போல் உள்ளன. தாமரை உபானம், கண்டம் என அமைந்துள்ள துணைத்தளத்தின் மீது வேதிகை அமர, மேலே நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டுள்ள பெருமண்டப வெற்றுத் தளத்தை அடுத்துத் தொடரும் முகமண்டப, விமான வெற்றுத் தளத்தின் சுவரைப் பாதம் பெற்ற எண்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. மேலே பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள். கைலாசநாதர் விமானம், மண்டபங்கள் இவற்றைத் தாங்கும் வெற்றுத்தளக் கூரையின்மேல் நாற்புறத்தும் அமைந்துள்ள பிடிச்சுவர் உயரக் குறைவான நான்முக அரைத் தூண்களால் தழுவப்பட்டுள்ளது. மேலே கூரையுறுப்புகள். விமான வெற்றுத்தளத்தை ஒட்டித் தெற்கில் சங்கரருக்கான வளை கூரை மேடையும் வடக்கில் ஒருதள நாகரமாய்ச் சண்டேசுவரர் திருமுன்னும் உள்ளன. 2. 26 மீ. உயரமுள்ள வெற்றுத்தளத்தின் தெற்குச் சுவரில் வணங்கிய கைகளுடன் நீள் செவிகளும் சிற்றாடையுமாய்க் காட்சிதரும் ஆடவர் சிற்பமும் மேற்குச் சுவரில் நர்த்தன விநாயகரின் சிற்பமும் உள்ளன. இந்த ஆடவர் கோயிற் கட்டுமானத்துடன் தொடர்புடையவராகலாம்.2 இறைவன் விமானம் தாமரை உபானம், கம்பு, ஜகதி, உருள்குமுதம், கம்புகளின் தழுவலில் பாதங்கள் பெற்ற கண்டம், பட்டிகை எனப் பாதபந்தத் தாங்குதளமும் வேதிகைத்தொகுதியும் பெற்றெழும் செங்கல் கட்டுமானமான விமானத்தின் சுவரை நான்முக அரைத்தூண் கள் அணைத்துள்ளன. மேலே வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள். 4. 40மீ. பக்கமுள்ள விமானத்தின் சாலைப்பத்தி புறந்தள்ளலாக அமைந்து முப்புறத்தும் அகலக் குறைவான கோட்டங்கள் பெற்றுள்ளது. நான்முக அரைத்தூண் களால் அணைக்கப்பட்டுப் பஞ்சர அலங்கரிப்புப் பெற்றுள்ள இக்கோட்டங்களில் தென்புறம் ஆலமர்அண்ணலும் மேற்கில் இலிங்கோத்பவரும் வடக்கில் நான்முகனும் உள்ளனர். ஆரச் சாலைகளும் கிரீவகோட்டங்களும் வெறுமையாக உள்ளன. விமானத்தின் கட்டமைப்பில் உள்ள முகமண்டபத்தின் மகர தோரணத் தலைப்பிட்ட கோட்டங்களில் தெற்கில் பிள்ளையாரும் வடக்கில் மகிடாசுரமர்த்தனியும் இடம்பெற்றுள்ளனர். கோட்டச் சிற்பங்கள் அனைத்தும் அண்மைக் காலத்தவை. கபோதபந்தத் துணைத்தளம், நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுள்ள பெருமண்டபம் கோட்டங்கள் கொள்ளவில்லை. பெருமண்டபக் கூரையின்மேல் முப்புறத்தும் அமைந்துள்ள பிடிச்சுவரில் பக்கத்திற்கு மூன்று சாளரங்கள் காட்டப்பட்டுள்ளன. இப்பிடிச்சுவரின் மேலிருக்குமாறு வேதிகை காட்டப்பட்டுள்ளது. வளாகச் சுற்றிலிருந்து பெருமண்டப வாயிலை அடையத் தெற்கிலும் வடக்கிலும் திசைக்குப் பத்துப் படிகள் பிடிச்சுவருடன் உள்ளன. இப்படிகள் முடியும் தளஅமைப்பிலிருந்து பெருமண்டப வாயிலை அடைய மூன்று படிகள் உதவுகின்றன. வாயிலை உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள் அணைக்க மேலே கூரையுறுப்புகள். வேதிகைக்கு மேல் இருக்குமாறு காட்டப்பட்டுள்ள வளைவில் இறைவனும் இறைவியும் விடையின் மீது எழுந்தருளியுள்ளனர். வாயிலின் இருபுறத்தும் உள்ள பெருமண்டபச் சுவரில் பக்கத்திற்கொருவராகக் காவலர் கள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளனர். தூண்களற்ற பெருமண்டபத்தின் வடபுறம் உள்ள மேடை வெறுமையாக உள்ளது. மண்டபத்தின் நடுவில் இறைவனை நோக்கியவாறு நந்தி அமர்ந்துள்ளது. பாதம் பெற்ற நான்முக அரைத்தூண்களாலும் கூரையுறுப்புகளாலும் அணைக்கப் பட்டுள்ள முகமண்டப வாயிலின் தென்புறம் பிள்ளையாரும் வடபுறம் பழனியாண்டியும் உள்ளனர். கருவறையில் இறைவன் வேசர ஆவுடையாரும் உருளைப்பாணமுமாய்க் கைலாசநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார். அம்மன் விமானம் ஒருதள வேசரமாய் அமைந்துள்ள செளந்தரநாயகி அம்மன் விமானம் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத் தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுள்ளது. விமானச் சுவரின் முப்புறத்தும் உள்ள அகலக் குறைவான பஞ்சர அலங்கரிப்புப் பெற்ற கோட்டங்களும் கிரீவகோட்டங்களும் வெறுமையாக உள்ளன. விமானக் கட்டமைப்பில் உள்ள முகமண்டபத்தின் கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. முன்னுள்ள பெருமண்டபம் உபானம், உறுப்பு வேறுபாடற்ற அரைத்தூண்கள் தழுவிய சுவர், கூரையுறுப்புகள் பெற்றுள்ளது. பெருமண்டபக் கூரையை முச்சதுர, இருகட்டு உடல் பெற்ற தூண்கள் பூமொட்டுப் போதிகைகளின் உதவியுடன் தாங்க, சிறு மேடையெhன்றில் அம்மனை நோக்கியவாறு நந்தி. கருவறையில் இறைவி சடைமகுடம் பட்டாடையுடன் முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் அருட்குறிப்பிலும் கொண்டு, பின்கைகளில் அக்கமாலை, மலர்மொட்டுப் பெற்றுள்ளார். சீனிவாசர் கிரீடமகுடம், பட்டாடை அணிந்துள்ள சுற்றாலை சீனிவாசர் வல முன் கையைக் காக்கும் குறிப்பிலும் இட முன் கையைக் கடியவலம்பிதத்திலும் அமைத்து, பின்கைகளில் சங்கு, சக்கரம் கொண்டுள்ளார். அவரின் வலப்புறத்துள்ள திருமகள் வலக்கையை நெகிழ்த்தி, இடக்கையில் மலர் கொள்ள, இடப்புற நிலமகள் இடக்கையை நெகிழ்த்தி, வலக்கையில் மலர் பெற்றுள்ளார். இருவருக்கும் கரண்டமகுடம் காட்டப்பட்டுள்ளது. சூரியன் கரண்டமகுடம், மகரகுண்டலம், சரப்பளி, முப்புரிநூல், குறங்கு செறியுடனான சிற்றாடை, புலிமுக அரைக்கச்சு, இடைக்கட்டு அணிந்துள்ள கதிரவன் இரண்டு கைகளிலும் தாமரைகள் பிடித்துள்ளார். பைரவர் பின்கைகளில் உடுக்கையும் பாசமும் ஏந்தி, சுடர்முடி, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி அணிந்து நிர்வாணியாய் நிற்கும் பைரவரின் பின்னால் அவரது வாகனமான நாய் காட்டப்பட்டுள்ளது. முன்கைகளில் வலப்புறம் முத்தலைஈட்டி, இடப்புறம் தலையோடு. இவரை அடுத்துள்ள சிறிய பைரவர் இரண்டு விதங்களில் முன்னவரிடமிருந்து மாறுபட்டுள்ளார். இவரது இட முன் கையில் தலையோட்டிற்கு மாறாக அறுபட்ட தலையே காட்டப்பட்டுள்ளது. வாகனமான நாய் அந்தத் தலை ஊனைச் சுவைக்குமாறு நிற்கிறது. குறிப்புகள் 1. இக்கோயிலை அறிமுகப்படுத்தியவர் திரு. பால. பத்மநாபன். ஆய்வு நாள் 26. 9. 2009. உடனிருந்து உதவிய பா. சுரேஷ் குருக்கள் நன்றிக்குரியவர். 2. இதே போன்றதொரு ஆடவர் சிற்பம் திருவிளையாட்டம் முளைத்தெழுந்த நாயனார் மாடக்கோயில் வெற்றுத்தளத்தில் கட்டுமானத்துடன் தொடர்புடையவராய்க் கல்வெட்டுடன் உள்ளமை கருதத்தக்கது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |