![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 173
![]() இதழ் 173 [ நவம்பர் 2023 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பாடல் 53: கொடிது கொடிது தனிமை கொடிது! மூலப்பாடம்: காஞ்சி எழுத்துருக்களில் 嘆きつつ ひとり寝る夜の 明くるまは いかに久しき ものとかは知る கனா எழுத்துருக்களில் なげきつつ ひとりぬるよの あくるまは いかにひさしき ものとかはしる ஆசிரியர் குறிப்பு: பெயர்: அமைச்சர் மிச்சிட்சுனாவின் தாய் காலம்: கி.பி. 937-995. ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த இவரது இயற்பெயர் தெரியவில்லை. முந்தைய பாடலின் ஆசிரியரைக் கனெய்யே தத்தெடுத்தார் என்று பார்த்தோமல்லவா? அந்தக் கனேய்யேவின் மனைவிதான் இவர். அழகிலும் கவிபாடும் திறமையிலும் இணையற்றவர் என்ற குறிப்புகள் இவரைப்பற்றிக் காணப்படுகின்றன. ஜப்பானின் மூன்று இணையற்ற அழகிகள் பட்டியலிலும் ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் காலத்தால் அழியாத 36 பெண்பாற்கவிஞர்களின் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறார். இத்தொகுப்பிலும் 39 பாடல்கள் அடங்கிய இவரது தனிப்பாடல் திரட்டிலும் பாடலையும் உரைநடையையும் கலந்து இவர் எழுதிய ககேரோ நிக்கி (தட்டாம்பூச்சியின் நாட்குறிப்புகள்) நூலிலும் மிச்சிட்சுனாவின் தாய் என்றே குறிக்கப்பட்டிருக்கிறார். தட்டாம்பூச்சியின் நாட்குறிப்புகள் இடைக்கால ஜப்பானிய சமூகத்தில் அரசகுலப் பெண்டிரின் வாழ்க்கைமுறை பற்றிய பல அரிய தகவல்களை அறிந்துகொள்ள உதவுகிறது. கனெய்யேவுடனான கசப்பான திருமண வாழ்க்கையின் கி.பி 954 முதல் 974 வரையிலான 20 ஆண்டுகாலப் பதிவுதான் தட்டாம்பூச்சியின் நாட்குறிப்புகள். மூன்று பாகங்களாகக் காலவரிசைப்படி அமைந்துள்ளது. மகன் மற்றும் சுற்றத்தாரின் வற்புறுத்தலையும் மீறி வாழ்வின் கடைசி 20 ஆண்டுகள் துறவியாகக் கழித்தார். பாடுபொருள்: கணவரின் வருகைக்காகக் காத்திருக்கும் மனைவியின் விரக்தி பாடலின் பொருள்: இரவு முழுவதும் உங்களுக்காகக் காத்திருந்த என் தனிமை வேதனையை இந்த அறை மட்டுமே அறியும். உங்களுக்கு எங்கே புரியப்போகிறது? ஜப்பானிய அரசகுடும்பத்தின் திருமணங்கள் பெரும்பாலும் பலதாரமணங்களாகவே இருந்தன. அரசியல் காரணங்களும் அடங்கும். பெண்ணின் தந்தையும் அரசரும் சேர்ந்து இதை முடிவு செய்வார்கள். மணமுறிவுகளும் அதிகம் இருந்தன. அதிகச் சிக்கல் இல்லாத முறிவுமுறையும் வழக்கத்தில் இருந்தது. பெண்கள் ஒரேநேரத்தில் ஒருவரை மட்டுமே கணவனாகக் கொண்டிருக்கமுடியும். மணமுறிவுக்குப் பிறகு பெண்கள் பிறரை மணம்புரியத் தடையில்லை. கனெய்யே இவரது இரண்டாவது கணவர். இவரைத்தவிரக் கனெய்யேவுக்கு இன்னும் சில மனைவியர் இருந்தனர். ஒருநாள் இரவை இன்னொரு மனைவியின் இல்லத்தில் கழித்துவிட்டு அதிகாலையில் வீட்டுக்கு வரும் கனெய்யேவைச் சிறிது நேரம் வாசலிலேயே காக்க வைத்ததற்காகக் கனெய்யே இவரைக் கடிந்துகொள்கிறார். அப்போதுதான் மறுமொழியாக இப்பாடலை இயற்றுகிறார். சூழ்நிலையை நேரடியாக எடுத்துரைக்கும் இதுபோன்ற எளிய பாடல்கள் ககேரோவின் நாட்குறிப்புகள் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. வெண்பா: தனிமை துணையாய்த் துயரம் அணியாய்த் தனிகை வருந்திடக் கொண்டான் - நுனிநா உதிர்க்கும் சுடுசொல் வழியே அனகையை வாட்டும் தனிமை கொடிது தனிகை - இளம்பெண், கற்புடையவள் அனகை - பாவமறியாத பெண் (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |