![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 140
![]() இதழ் 140 [ ஃபிப்ரவரி 2018 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அண்மைக் காலமாக நாளிதழ்களில் புதிய வரலாற்றுக் கண்டுபிடிப்புகளாய்ப் பல செய்திகளைப் பார்க்கமுடிகிறது. அவற்றுள், சில செய்திகள் முந்து கண்டுபிடிப்புகளையே புதிய கண்டுபிடிப்புகளாய்ப் படம்பிடிக்கின்றன. புதிய கண்டுபிடிப்புகளாய் வெளிப்படும் சில, கண்டுபிடிப்பவர்கள் சரியான பொருள் அறியத் தவறுவதால், கண்டுபிடிப்புச் சுட்டும் பொருள் சொல்லாது வேறுவேறு தரவுகளை முன்வைத்து வழி தவறுகின்றன. இன்னுஞ் சிலவோ, கண்டுபிடிப்பாளர் சொல்லாத செய்திகளைத் தருகின்றன அல்லது சொல்லியவற்றைச் சரியாக விளங்கிக்கொள்ளத் தவறி இல்லாத வரலாற்றை உருவாக்கும் முயற்சியில் முனைகின்றன.
கடந்த சில மாதங்களில் தமிழ் நாளிதழ்களில் வெளியான சில செய்திகள் இந்த மூன்று வகைகளிலும் அமைந்து வரலாற்றை ஊனப்படுத்தியுள்ளமை வருந்தச்செய்கிறது. இத்தகு பிழைகள் தெரிந்து நடக்கின்றனவா, தெரியாமையால் விளைகின்றனவா என்பதறியோம். ஆனால், இவற்றை உலகத் தமிழர் பார்வையில் வைப்பது வரலாறு மின்னிதழின் கடமையாகும். வரலாறு உண்மைகளால் மட்டுமே கட்டமைக்கப்படுவது. அதில் பொய்களுக்கோ, கற்பனைகளுக்கோ அறவே இடமில்லை. i. 2017 டிசம்பர் 12 'தி இந்து' நாளிதழின் 2ஆம் பக்கச் செய்தி, சிறுஞ்சுனையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில், 'சிறுசுனையூரான விருதராஜ பயங்கர சதுர்வேதிமங்கலம் புரவரி சிகரணத்தார் ஆசிரியம்' என்று பொறிக்கப்பட்டுள்ளதாகச் செய்திக் குறிப்புக் கூறுகிறது. இந்தக் கல்வெட்டின் பொருள்: 'விருதராஜபயங்கர சதுர்வேதிமங்கலமாகப் பின்னாளில் பெயரேற்ற சிறுசுனையூர் புரவுவரி ஸ்ரீகரணத்தார் (வருவாய்த்துறை அலுவலர்கள்) புகலிடம்.' சோதனையான காலத்தில் புகலிடம் அளிப்பவர்களாக இது போன்ற குழுக்களோ, சிற்றரசர்களோ, திருமடங்களோ, தனியர்களோ அமைவதைத் தமிழ்நாட்டில் இதுநாள்வரை கிடைத்துள்ள பல கல்வெட்டுகள் தெளிவுபடுத்தியுள்ளன. குடுமியான்மலை, குன்றாண்டார்கோயில் உள்ளிட்ட சில புதுக்கோட்டை மாவட்ட ஊர்களில் இது போன்ற கல்வெட்டுகள் இன்றும் உள்ளன. ஓர் ஊரைச் சேர்ந்த ஒரு குழு புகலிடம் அளிக்கும் அமைப்பாக இருந்ததை அறிவிக்கும் இந்தக் கல்வெட்டு, சோழர் கால வரிவசூல் முறை குறித்துப் பேசுவதாகப் புதுக்கோட்டை மாவட்டத் தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் திரு. ஆ. மணிகண்டன் 'தி இந்துவில்' தெரிவித்துள்ளார். இக்கல்வெட்டுத் தெரிவிக்கும் செய்திகளாகத் திரு. மணிகண்டன் குறிப்பிட்டுள்ளவை: 1) கி. பி. 13ஆம் நூற்றாண்டில் சோழர் கால ஆட்சியில் உள்ளூர் நிர்வாகத்திடமே வரி வசூலிக்கும் உரிமை இருந்ததைத் தெரிவிக்கும் கல்வெட்டு இது. 2) 'விருதராஜபயங்கர சதுர்வேதிமங்கலம்' என்ற பெயருடன் சிறு ஊர்களின் தலைமையிடமாக இக்கோயில் விளங்கியது. 3) இவ்வூரின் புரவரியை சிகரணத்தார் என்ற அக்கால கிராம நிர்வாக அதிகாரியே வசூலிக்க உரிமை வழங்கி இருப்பதை ஊர்களுக்கு அறிவிக்கவே இத்தகைய கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. 4) இக்கல்வெட்டின் மூலம் சோழர்கால மன்னராட்சி நிர்வாகத்திலேயே வரிவசூலிக்கும் உரிமையை உள்ளூர் நிர்வாகத்திடம் வழங்கி அந்தந்தக் கிராமங்களின் உள்ளூர்த் தேவையை பூர்த்திசெய்து கொள்ளும் ஜனநாயக நடைமுறை இருந்துள்ளது என்பது தெரியவருகிறது. வரலாற்றுத் தரவுகள் எப்படியெல்லாம் வடிவம் மாற்றப்படுகின்றன என்பதற்கு இந்தச் செய்தி விளக்கம் ஒன்று போதும். பல்லாண்டுகள் அநுபவம் பெற்ற ஆய்வாளரான திரு. கரு. இராஜேந்திரனைத் தலைவராகக் கொண்ட புதுக்கோட்டைத் தொல்லியல் ஆய்வுக் கழகமே இப்படியெல்லாம் செய்திச் சுருள்களை வழங்குமென்றால், புதியவர்களை நோவதில் பயன் என்ன இருக்கமுடியும்? ii. 2017 டிசம்பர் 30 'தி இந்து' நாளிதழின் 2ம் பக்கத்தில் 'திருமங்கலம் பூலோகநாதர் கோயில் கல்வெட்டில் அரிய தகவல்கள்' என்ற தலைப்புடன் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. திரு. குடவாயில் பாலசுப்பிரமணியன் தலைமையிலான திரு. பா. ஜம்புலிங்கம், திரு. மணிமாறன் ஆகியோர் அடங்கிய வரலாற்று ஆய்வுக் குழுவினர் வேலூர் கல்யாணராமன் துணையுடன் பூலோகநாதர் கோயில் கல்வெட்டுகள், சோழர் காலச் சிற்பங்களை ஆய்வு மேற்கொண்டு பல அரிய தகவல்களைக் கண்டறிந்ததாகக் குறிப்பிடும் இச்செய்தி, அங்குள்ள தூண்களில் காணப்படும் மத்தளமிசைப்பவர், கவரிப் பெண்கள் சிற்பங்களின் மீது பொறிக்கப்பட்டுள்ள அவர்தம் பெயர்களையே தாங்கள் கண்டறிந்த அரிய தகவல்களாகக் குறிப்பிடுகிறது. ஆனால், இவை முன்பே கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டவை. 1. இம்மூன்று சிற்பங்களைப் பற்றியும் திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் 1979இல் வெளியான தம்முடைய 'Later Chola Temples' என்ற ஆங்கில நூலில், 'ராஜராஜன் திருமங்கலம்' என்ற தலைப்பின் கீழ்ப் பக்கங்கள் 187-188இல் விரிவாக எழுதியுள்ளார். 2. இக்கோயிலைப் பற்றிய தமிழ்க் கட்டுரை இச்சிற்பங்களைப் பற்றிய விரிவான குறிப்புக்களுடன் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையின் மேனாள் பதிவு அலுவலர் திரு. கி. ஸ்ரீதரனால் எழுதப்பட்டு வரலாறு டாட் காம் 90ஆம் மின்னிதழில் ஜனவரி 2012இல் பதிவாகியுள்ளது. 1979இல் இச்சிற்பங்களைப் பற்றியும் அவற்றைச் சுட்டும் கல்வெட்டுகள் பற்றியும் எழுதும் திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் இவற்றைத் தாம் கண்டறிந்ததாகக் கூறவில்லை. 2012இல் இக்கோயிலைப் பற்றி விரித்துரைக்கும் திரு. கி. ஸ்ரீதரனும் இச்சிற்பங்களைச் சுட்டுமிடத்து இவற்றைத் தாம் கண்டறிந்ததாகக் கூறவில்லை. ஆனால், 2017 டிசம்பரில் இவற்றைப் பார்வையிட்ட இந்த வரலாற்றுக் குழு ஏற்கனவே நூலாகவும் கட்டுரையாகவும் பதிவான தரவுகளைத் தாங்கள் ஆய்வு மேற்கொண்டு கண்டறிந்ததாகக் கூறியுள்ளமை எண்ணத்தக்கது. இவர்கள் குறிப்பிடுமாறு போல வீரப்பெருமாளும் புவனநாயகமும் நாட்டியப் பெண்கள் அல்லர். அவர்கள் கவரிப்பிணாக்கள். இவர்கள் போன்ற கவரிப்பிணாக்களின் சிற்பங்கள் சீனிவாசநல்லூர் குரங்கநாதர் கோயிலில் கோட்டச் சிற்பங்களாகவும் துடையூர் விஷமங்ளேசுவரர் கோயிலில் பாதச் சிற்பமாகவும் இடம்பெற்றுள்ளமை இங்கு நினைக்கத்தக்கது. ஆடலமைதிக்கும் நிற்கும் அமைதிக்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு என்பதை வரலாற்றுக்குழு அறியவில்லை போலும். 6. 3. 2016 தினமணியில் வரலாற்றுக் குழுவின் தலைவர் திரு. குடவாயில் பாலசுப்பிரமணியன் கொடும்பாளூரிலும் மேலப்பழுவூரிலும் 'சிவலிங்கத்தைச் சிவபெருமான் சுமக்கும் அரிய சிற்பத்தைக் கண்டுபிடித்த' தகவல் வெளியானபோதே, வெளிநாட்டு உள்நாட்டு அறிஞர்களால் ( 1.) எஸ். ஆர். பாலசுப்பிரமணியம், முற்காலச் சோழர் கலையும் சிற்பமும், 1966, ப. 320, 2.) Douglas Barret, Early Chola Architecture and Sculpture, I1974, plate 41, 3.) Encyclopaedia on Indian Temple Architecture, South India, Lower Dravida Desa, 1983, pp. 208 & 217. 4.) இரா. கலைக்கோவன், பழுவூர் அரசர்கள், கோயில்கள், சமுதாயம், 2002, ப. 116. ) 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து ஆராயப்பட்டுப் புலப்படுத்தப்பட்ட இரண்டு சிற்பங்களைத் தாம் கண்டறிந்திருப்பதாக அவர் செய்தி வெளியிட்டுள்ளமை எவ்விதத்தானும் அறமன்று என்று எழுதியும் அதே நிலைமை தொடர்வது ஆழ்ந்த வருத்தம் தருகிறது. இப்படியே போகுமாயின் தஞ்சாவூரில் இராஜராஜீசுவரம் கண்டுபிடிப்பு என்றுகூட ஒரு செய்தியை வரலாற்றுக் குழு வெளியிடலாம். iii. ஜனவரி 23, 2018 தி இந்து நாளிதழின் சிறப்புப் பக்கத்தில் (பக்கம் 6) 'பங்கு தராதவர்களுக்கு 43 பவுன் ராஜதண்டம்' என்ற தலைப்பில் திரு. எஸ். நீலவண்ணன், இந்தியத் தொல்லியல்துறையின் தென்மண்டலத் துணை கண்காணிப்பாளர் முனைவர் கே. பன்னீர்செல்வம் கூறியதாகச் சில தகவல்களைப் பதிவுசெய்துள்ளார். அவற்றுள் மூன்று தகவல்கள் பேரதிர்ச்சி தந்தன. 1. நல்லதங்காள் தன் ஏழு பெண் குழந்தைகளைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டதைக் கல்வெட்டு வாயிலாக அறியமுடிகிறது. 2. சங்க காலமான கி. பி. 300ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை, 'பெரும் வெள்ளங்கொண்டு ஊரும் போகமும் அழிந்து அர்த்தனப்பட்டு' என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. 3. அப்போது பௌத்த துறவி மணிமேகலை, 'அமுதசுரபி' என்ற அட்சயப் பாத்திரம் மூலம் மக்களின் பசியைப் போக்கியுள்ளார். இம்மூன்று செய்திகளுமே பிழையானவை என்பதை நன்குணர்ந்தபோதும், தெரிவித்திருப்பவர் இந்தியத் தொல்லியல்துறையின் தென்மண்டலக் கண்காணிப்பாளர் என்பதால், செய்தியின் உண்மைத் தன்மை அறிய அவரைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டபோது, தாம் இத்தகவல்களைத் தரவில்லை என்று கூறியதுடன், இவை தவறான செய்திகள் என்பதையும் உறுதி செய்தார். அவர் கூற்றுப்படி திரு. நீலவண்ணன்தான் இச்செய்திகளைத் திரு. பன்னீர்செல்வத்தின் தரவுகளாகக் கட்டுரையில் காண்பித்துள்ளாரே தவிர, இவை பன்னீர்செல்வத்தால் பகிர்ந்துகொள்ளப்பட்டவை அன்று. iv. தி இந்து பிப்ருவரி 5ஆம் நாள் இதழில் 'மதுரை மீனாட்சியம்மன் கோயில் சந்தித்த சவால்கள்' என்ற தலைப்பிலான திரு. என். சன்னாசியின் கட்டுரையில், திரு. அம்பை மணிவண்ணன் தெரிவித்ததாக மீனாட்சியம்மன் கோயில் குறித்த பல தகவல்கள் பதிவாகியுள்ளன. அவற்றுள் பெரும்பாலன பிழையாகவும் சில, சான்றுகளற்ற செய்திகளாகவும் உள்ளன. திரு. மணிவண்ணனின் தகவல்களும் அவை குறித்த நம்முடைய கேள்விகளும்: 1. 'மூன்றாம் தமிழ்ச்சங்கம் தோன்றிய காலத்தில் மதுரை நகரம் முறையாக நிர்மாணிக்கப்பட்டது எனத் தமிழ்ச்சங்க வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.' - 'தமிழ்ச்சங்க வரலாற்றுத் தகவல்கள்' என்று திரு. மணிவண்ணன் குறிப்பிடுபவை எந்தச் சங்க இலக்கியத்தில் அல்லது கல்வெட்டில் உள்ளன? 2. 'மதுரை மீனாட்சியம்மன் கோயில் சங்ககாலம் முதலே பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது.' - சங்ககாலத்தில் இக்கோயில் இருந்தமைக்கான சான்றுகளே இல்லாத நிலையில் சங்ககாலம் முதலே இக்கோயில் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருவதாகக் கூறியுள்ளமை எப்படிப் பொருந்தும்? சம்பந்தர் பாடல் பெற்ற இக்கோயில் அக்காலம் தொட்டு இரண்டாம் பாண்டிய அரசுக் காலம்வரை சந்தித்த சவால்கள்தான் யாவை? அவற்றுள் ஒன்றைக்கூட ஏன் திரு. மணிவண்ணன் தெரிவிக்கவில்லை? 3. 'மதுரை மீனாட்சியம்மன் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.' - இத்தரவைத் தரும் சான்றேதும் மணிவண்ணன் கூற்றில் இடம்பெறவில்லை. 4. 'ஆரம்பத்தில் கோயில் மண்ணால் கட்டப்பட்டு மக்கள் வழிபட்டனர்.' - சங்ககாலக் கோயில்கள் செங்கல்லால் கட்டப்பட்டவை என்கின்றன சங்கப் பாடல்கள். சங்க காலத்திற்குப் பின்னால் வந்த மதுரைக் கோயில் மண்ணால் கட்டப்பட்டதென்றால் அதைத் தெரிவிக்கும் சான்று எது? 5. 'இசுலாமிய மன்னர் மாலிக்காபூர் படையெடுப்பின்போது 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோயில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.' - இக்கூற்று முழுமையுமே தவறானது. மாலிக்காபூர் இசுலாமிய மன்னர் அல்லர். அவர் டெல்லி அரசர் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவர். அவர் மதுரைக் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கியதாக எந்த வரலாற்றுச் சான்றும் தெரிவிக்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் கோயிலில் அவருக்கு முன் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் எழுப்பிய கோபுரங்களும் பிற கட்டமைப்புகளும் இன்றும் காணுமாறு உள்ளமை எப்படி சாத்தியம்? 6. 'இசுலாமியரின் 48 ஆண்டுக்கால மதுரை ஆட்சியில் சுந்தரேசுவரர் மீனாட்சியம்மன் கோயிலில் பூசைகளுக்குத் தடையிருந்தது. பூஜை செய்வோருக்குக் கடும் தண்டனை வழங்கப்பட்டது.' - மாலிக்காபூர் தரைமட்டமாக்கியதாக மணிவண்ணன் கூறும் கோயிலில் அவரைத் தொடர்ந்த இசுலாமியரின் 48 ஆண்டுக்கால ஆட்சியில் பூஜைகள் எப்படி நிகழ்ந்திருக்கமுடியும்? பூஜைகளே நிகழாதபோது செய்தாருக்கு எப்படிக் கடும் தண்டனை வழங்கியிருக்க முடியும்? 7. 'கம்பணர் காலத்தில் மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பூஜை, தீபாராதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும் கோயில் இடிக்கப்பட்ட நிலையில்தான் இருந்தது.' - இடிக்கப்பட்ட (திரு. மணிவண்ணன் கூற்றுப்படி தரைமட்டமாக்கப்பட்ட) கோயிலைச் சரிசெய்யாமல் பூஜை, தீபாராதனைகள் நிகழுமா? 8. 'விசுவநாதநாயக்கர் காலத்தில்தான் பாண்டியர் காலத்தில் எப்படிக் கோயில் அமைந்திருந்ததோ அது போல பழைமை மாறாமல் மீனாட்சியம்மன் கோயில் கருவறை உள்ளிட்ட மண்டபங்கள் கட்டப்பட்டன.' - பாண்டியர் காலத்தில் கோயில் எப்படியிருந்தது என்பதை விசுவநாதர் காலக் கட்டமைப்பாளர்கள் எப்படி அறிந்தனர்? மாலிக்காபூர் தரைமட்டமாக்கிய கோயிலின் வடிவமைப்பை இசுலாமிய ஆட்சியின் காலத்திற்குப் பிறகு வந்த விசுவநாத நாயக்கர் அறிய உதவியவர்கள் யார்? உதவிய சான்றுகள் எவை? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையிருக்கமுடியாது. ஏனெனில் கோயில் எக்காலத்தும் தரைமட்டமாக்கப்படவில்லை. மிகச் சிறந்த அறிவுப் பணியாற்றி வரும் தி இந்து நாளிதழில் வெளியான இந்நான்கு செய்திகளிலுமுள்ள தவறுகள் குறித்து உடனுக்குடன் நாளிதழிற்குத் தெரியப்படுத்தியிருந்தபோதும் அவற்றுள் ஒன்றேனும் வெளியாகவில்லை. நாளிதழ்களில் செய்திகளைப் படிக்கும் வரலாற்று ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் உண்மை அறிய வேண்டும் என்பதற்காகவே இச்'செய்திகள் வாசிப்பது' தொடங்கியுள்ளது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |