![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 65
![]() இதழ் 65 [ நவம்பர் 15 - டிசம்பர் 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
கும்பகோணம் திருவாரூர்ச் சாலையில் அமைந்துள்ள திருநறையூர் வரலாற்றுப் பெருமை பெற்ற ஊராகும். செம்பியன்மாதேவியின் திருப்பணியான சித்தீச்சுவரமும் மங்கையாழ்வாரால், 'திருநறையூர் மணிமாடம்' என்று பரவப்பட்ட சீனிவாசப் பெருமாள் கோயிலும் இவ்வூரில்தான் இடம்பெற்றுள்ளன. கோச்செங்கணானின் கட்டுமானமான பெருமாள் கோயில் இன்றளவும் மாடக்கோயிலாகவே திகழ்ந்து வருகிறது. இக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது மகிழ்வும் வியப்பும் ஊட்டிய நினைவகம் ஒன்றைக் காணநேர்ந்தது.
![]() திருக்கோயில் வளாகத்தின் இரண்டாம் கோபுரத்தை அடுத்து விரியும் அரவணை அரங்கப்பையன் திருமண்டபத்தின் தென்கிழக்குச் சுவரில், இக்கோயிலுக்குப் பூசை நேரத்தில் வந்து கொண்டிருந்த இரண்டு கருடப்பறவைகள் 18. 1. 1999 தைத்திங்கள் சிரவணத்தன்று, தலமரமான மகிழமரத்திற்குக் கீழே இணையாக மோட்சமடைந்தன என்ற தகவல் எழுதப்பட்டுள்ளது. இறந்த பறவைகளின் படம் அங்கு வரையப்பட்டிருப்பதுடன், அப்பறவைகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், 21. 1. 1999 வியாழனன்று மாலை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் மயிலாடுதுறைப் பகுதி இணை ஆணையர் திரு. ப. தனபால் பறவைகளின் படத்தைத் திறந்து வைத்து, மோட்ச தீபம் ஏற்றி, இலட்சதீபம் கொண்டாடச் செய்தமைக்கான குறிப்பும் உள்ளது. இந்நிகழ்வின்போது கோயில் செயல் அலுவலராக இருந்தவர் திரு. எம். வேதகிரி. உதவி ஆணையராக இருந்தவர் திரு. சி. இலட்சுமணன். சுவரில் காணப்படும் ஓவியத்தை வரைந்தவர் கும்பகோணத்தைச் சேர்ந்த திரு. முத்து. ![]() இம்மண்டபத்தின் தெற்கு வாயில் வழி விரியும் இடைச்சுற்றின் தென்புறத்தே உள்ள மகிழமரத்தை ஒட்டி இறந்த பறவைகளுக்கான கருடமோட்ச நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. நன்கு இதழ் விரித்த தாமரை மலர் மேல் துணைத்தளமும் நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவரும் போதிகைகள் தாங்கும் உத்திரமும் தாமரை வலபியும் கபோதமும் பெற்று ஒருதள வேசர விமானமாக உருவாக்கப்பட்டுள்ள இந்நினைவகத்தின் வாயில், பக்கச் சுவர்களினும் சற்றுப் புறந்தள்ளியுள்ளது. வாயிலை ஒட்டிய தூண்களுக்கும் சுவர்த் திருப்பத் தூண்களுக்கும் இடைப்பட்ட சுவர்ப்பகுதிகள் வெறுமையான கோட்டங்களாகி யுள்ளன. கருவறையில் இறந்த பறவைகளின் ஒளிப்படம் வைக்கப்பட்டுள்ளது. முகத்தோடு முகம் சேர்ந்த நிலையில் மரத்தின் நிழலில் இருக்குமாறு போலக் காட்சியளிக்கும் அப்படம் உள்ளத்தை உருக்குகிறது. வாயிலுக்கு மேலிருக்குமாறு கபோதத்தின் தலைப்பில் பறவைகளின் சுதைவடிவக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. ![]() ![]() இந்நினைவகத்திற்கான கொடையாளி, தம் பெயரைத் தெரிவிக்க விழையாமல், தம்மை, 'ஸ்ரீசத்ய சாய்பாபா பக்தன்' என்று மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டிருப்பது நினைவகத்தின் பெருமையை மேலும் பெருக்குகிறது. நன்றி மறவாமைக்கான நினைவகங்கள், நினைவுக்கற்கள் இவற்றைத் தமிழ்நாட்டில் பலவாகக் காணமுடிகிறது. ஆனால், தொடர்ந்து வந்த பூசைப் பங்கேற்பாளர்களுக்குக் கூட, அவை பறவைகளாக இருந்தபோதும், அவற்றின் மறைவுக்கு வருந்தி, அவை வந்து போன இடத்தில் நினைவகம் அமைத்திருப்பது புதுமையானதும் வியப்புக்குரியதுமான செயலாக அமைந்துள்ளது. இத்தகு எண்ணம் கொண்ட நல்ல உள்ளங்களையும் அந்த எண்ணத்திற்கு வடிவம் அளித்த அறநிலையத்துறை அலுவலர்களையும் வரலாறு நன்றி கூறி வாழ்த்துகிறது. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |