![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 65
![]() இதழ் 65 [ நவம்பர் 15 - டிசம்பர் 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம். ஓரிரு மாதங்களுக்கு முன்பு, எங்கள் குழு தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதைச் சென்றமாதப் பயணக்கட்டுரை மூலம் வாசகர்கள் அறிந்து கொண்டிருக்கக்கூடும். கடந்த முறைகளைப் போலல்லாது, இந்தப் பயணத்தில் நாங்கள் கற்றுக்கொண்டவை அதிகம். ஒவ்வொரு முறையும் கட்டடக்கலை, கல்வெட்டு, சிற்பங்கள் எனத் தொடர்ந்து கற்றுக்கொண்டிருந்தாலும், இந்தமுறை கற்றுக்கொண்டது என்று குறிப்பிடுவது, வரலாற்றுச் சின்னங்களில் பணிபுரிபவர்களின் மறுபக்கத்தை. ஏற்கனவே இவைபற்றிய செய்திகளைச் செவிவழி கேள்விப்பட்டிருந்தாலும், நேரடியாகக் கண்டது இதுவே முதல்முறை. 'தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்று கவிமணி அவர்கள் தமிழனின் பல குணங்களைப் பற்றிப் பாடினார். இருப்பினும், அவர் பாடாத சில குணங்களும் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒரு குணத்தைப் பற்றித்தான் இப்போது பேசப்போகிறோம். தமிழனுக்கு எப்போதுமே வட இந்தியரும் மேற்குலக நாட்டவர்களும் தம்மைவிட ஒருபடி மேல் என்றொரு தாழ்வு மனப்பான்மை உண்டென்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால் அதைத் தாழ்வு மனப்பான்மை என்று கூறுவதைவிட, தம் பெருமையை உணராமை என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். உ.வே.சா அவர்கள் தேடிச்சென்ற ஓலைச்சுவடிகளை வைத்திருந்தவர்கள் அவரை வருத்தம் கொள்ளச் செய்ததற்குக் காரணம் இந்தத் தம் பெருமையை உணராமைதான். இல்லாவிடில், சங்க இலக்கியங்கள் நம்மை முழுதாக வந்தடைந்திருக்கும். காலவெள்ளத்தில் கோயிற்கலைச் செல்வங்கள் புதையுண்டு போனதற்கும் மேற்கூறிய குணம் பொருந்தும். ஏதோ மகேந்திரர், இராஜசிம்மர், இராஜராஜர், இராஜேந்திரர் போன்ற சில கலாவித்தகர்களின் முயற்சியால் காலத்தை வெல்லக்கூடிய படைப்புகள் நமக்கு இன்று மிஞ்சியிருந்தாலும், பெரும்பாலான கோயில்கள் முறையான பராமரிப்பின்மையாலும், பொறுப்பற்ற முறையிலான திருப்பணிகளாலும் சிதைவுக்கு உள்ளாகியிருப்பதை ஒவ்வொரு பயணத்தின்போதும் நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். ஏற்கனவே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைப்போலக் கடல்மல்லையில் உள்ள பஞ்சபாண்டவர் ரதங்கள் என அழைக்கப்படும் ஒற்றைக்கல் தளிகளின் தொகுதியைக் காலத்தின் கைகள் கலைக்க முடியாமல் தோற்றுப்போனது இராஜசிம்மர் என்ற அத்யந்தகாமனின் புதுமை விரும்பும் எண்ணத்தால்தான். கற்களை அடுக்கிக் கட்டினால் நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து போகலாம். மணலால் கட்டினால் கடலலைகள் காலடியில் போட்டுத் துவம்சம் செய்யலாம். மரத்தால் கட்டினால் காலம் கரையான் என்ற ஆயுதம் கொண்டு தாக்கலாம். ஆனால் ஒரு பெரிய பாறையிலிருந்து தேவையில்லாத பகுதிகளை நீக்கிவிட்டு ஒரு கலைத்தொகுப்பை உருவாக்கினால், எந்தச் சக்தி என்ன செய்துவிட முடியும்? இயற்கைச் சக்திகளை வெல்லக் கணக்குப் போட்டவர், மனித சக்தியை எண்ணாமலா இருந்திருப்பார்? நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் அழிக்க முடியாததை, மனிதனின் 'பொறுப்பின்மை' என்ற மெல்லக் கொல்லும் விடம் அழித்து விடும் என்று எண்ணாமலா இருந்திருப்பார்? நிச்சயம் எண்ணியிருப்பார். ஆனாலும் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று நம்பிக்கை கொண்டிருந்திருப்பார். அவரது நம்பிக்கை பொய்த்துப் போகாவண்ணம், மற்ற வரலாற்றுச் சின்னங்களைவிட நன்றாகவே இக்கலைத்தொகுதி பராமரிக்கப்படுகிறது. ஆயினும், 'பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின்போது இங்கு அமர்ந்து உணவு உண்டார்கள்' போன்ற கதைகளைவிட உண்மைகளை எத்தனை வழிகாட்டிகள் உரைக்கிறார்கள்? அல்லது தெரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள்? ஒவ்வொரு தளியும் தனித்தனியாக அல்லாமல், ஐந்தும் சேர்ந்தே ஒரே கல்லால் ஆனவை என்ற செய்தி எத்தனை பார்வையாளர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும்? இதற்குப் பெயர்தானே 'தம் பெருமையை உணராமை' என்பது? இது மனதை உறுத்திக் கொண்டிருந்த வேளையில்தான் சென்றமாதம் கன்னியாகுமரி அருகிலுள்ள பத்மநாபபுரம் அரண்மனையைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. தமிழக எல்லைக்குள் இருக்கும் ஓர் இடத்தைக் கேரளத் தொல்லியல்துறையும் சுற்றுலாத்துறையும் பராமரிக்கிறது என்ற விஷயம் சற்று நெருடலாக இருந்தாலும், அரண்மனை பராமரிக்கப்படும் முறை மனதுக்கு மகிழ்வளித்தது. அந்தப்புற நந்தவனமும் பூந்தோட்டமும் அரண்மனைக்கு அழகூட்டுகின்றன. வளாகத்துக்குள்ளேயே ஒதுக்குப்புறமாக இருக்கும் கழிப்பறைகள் பார்வையாளர்களை இயற்கை உந்துதல் இடைஞ்சல் இன்றி இரண்டு மூன்று மணிநேரம் தொடர்ச்சியாக அரண்மனையைச் சுற்றிப்பார்க்க உதவுகின்றன. வழிதவறி நிற்கும்போதோ அல்லது விவரம் வேண்டிக் குழம்பும்போதோ உடனே உதவிக்கு ஓடோடி வரும் பணியாளர்களும் அவர்களின் பணிவும் மனத்தை நிறைக்கின்றன. மதிய உணவு இடைவேளைக்கு முன்பு பார்வையாளர்களை வெளியேற்றிவிட முயற்சிப்பது நம்நாட்டில் பரவலாகக் காணக்கூடியதுதான் என்றாலும், அவ்வளவு இரசிக்கத்தக்கதாக இல்லை. இருப்பினும், தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு நன்றாகப் பராமரிக்கப்படும் வரலாற்று நினைவுச்சின்னங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கேரளத் தொல்லியல்துறை மட்டுமின்றி, கர்நாடகத் தொல்லியல் துறையும் சில கோயில்களை நன்றாகப் பராமரிக்கிறது என்பதை, பேளூர், ஹளபேடு போன்ற இடங்களுக்குச் சென்று வந்தவர்கள் உணரலாம். இதன் பொருள், தமிழ்நாடு தொல்லியல்துறை வரலாற்று நினைவுச் சின்னங்களை நன்றாகப் பராமரிக்கவில்லை என்பது அல்ல. அவர்களும் இயன்ற அளவுக்குத் தம்மால் ஆனதைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்களைப் பலகோடி ரூபாய் செலவில் புதுப்பித்திருப்பது இதற்குச் சான்று. இருப்பினும், நம் நினைவுச் சின்னங்களின் பெருமையை முறையாகப் பார்வையாளர்களுக்கு எடுத்துக் கூறவேண்டியது முக்கியம். அதற்கு அங்குப் பணிபுரிபவர்களுக்கு அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தவேண்டியது அவசியம். பணம்கொடுத்து நுழைவுச்சீட்டுப் பெற்று வருபவர்களிடம் கண்ணியமாகவும் பணிவுடனும் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று பயிற்றுவிப்பது அதைவிட அவசியம். ஒருமுறை வந்து பார்த்தவர்கள் மீண்டும் ஒருமுறை சென்று பார்க்கவேண்டுமா என்று தயங்குவதைத் தவிர்த்து, நண்பர்களுக்கும் பரிந்துரைக்க இப்பயிற்சிகள் உதவும். வருமானம் பெருகுவது மட்டுமின்றி, நினைவுச்சின்னத்தின் அருமையும் பெருமையும் மக்களைச் சென்றடையும் என்பதே அனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது. அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |