![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 50
![]() இதழ் 50 [ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 17, 2008 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
கா... கா... கா... என்று கரைந்தது மரத்தின் மீது அமர்ந்திருந்த கரியகாகம். அவன் இன்றும் வரவில்லையே என்று பிரிவுத் துயரால் முற்றத்தில் இருந்த தலைவி வெளியே ஓடி வந்தாள். காக்கை கரைகிறதே, இது ஒரு நல்ல நிமித்தமே, பரவசப்பட்டாள்.
காக்கை கரைந்தால் விருந்து வருமே. மனம் குதூகலிக்க வீட்டிற்குள் ஒடினாள். ஒருவேளை அவன் வருவானோ... அவன் இன்று வருவானா? என் கண்ணீர் துடைப்பானா? என் சோகம் இன்று தீருமா? எல்லாம் கேள்விக் குறிகள். கா.... க்கா....... அந்த கரிய காகம் எதற்காய் இப்படிக் கரைகிறது? வாசலுக்கும் முற்றத்திற்குமாய் நடையாய் நடந்தாள். தூரத்தில் குதிரைக் குளம்பொலி கேட்டது. பழகிய அந்த ஒலி அவளுக்கு எல்லையில்லா மகிழ்வைக் கொடுத்தது. அவனேதான். இடைக்காலம் நொடியில் மறைந்தது. பிரிவுத்துயர், கண்ணீர், ஆற்றாமை எல்லாம் அவனைத் தோளில் தாங்கிய தருணத்தில் விடைபெற்றது. அவனுடன் உறைந்தாள். ஆயினும், அவள் தன் மகிழ்வில்கூட அந்தக் காகத்தை மறக்கவில்லை. பசு நெய்யோடு, நன்றாய் விளைந்த வெண்ணெல் அரிசியால் சமைத்த சோற்றினைக் கலத்தில் ஏந்திக்கொண்டு வந்தவள், தான் எவ்வளவு சோறு ஏந்திப் படைத்தாலும் கரைந்த காக்கையின் பலி மிகச்சிறியதே. காகமே... நீ செய்த உதவி மிகப் பெரியதே. நீ கரைந்தவுடன் அவன் வரவு உடனே நிகழ்ந்துவிட்டதே, நன்றி காகமே என்று எண்ணினாள் தலைவி. முல்லைத் திணையின் இந்த படப்பிடிப்பு இதோ, திண்தேர் நள்ளி கானத்து அண்டர் பல்ஆ பயந்த நெய்யின், தொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு எழகலந்து ஏந்தினும் சிறிது - என் தோழி பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே. - குறுந்தொகை; 210; நச்செள்ளையார் நள்ளி... கடையெழ வள்ளல்களில் ஒருவன். விருந்தோம்புவதில் சிறந்தவன். தோட்டி மலைக்கு தலைவன். வன்பரணர் என்னும் புலவரால் பாடப் பெற்றவன். திண்ணிய தேரினையுடைய நள்ளியின் காட்டில் உள்ள இடையர்கள் வளர்த்த பல பசுக்கள் தந்த நெய்யோடு தொண்டி (மேலைக் கடற்கரை அமைந்த துறைமுகப்பட்டிணம்) என்னும் ஊரின்கண் உள்ள வயல்களில் பருவம் தப்பாது விளைந்த வெண்ணெல் அரிசியால் சமைத்த விரும்பத்தக்க சுடு சோற்றினை, ஏழு கலங்களில் நிறைத்துத் தோளில் தாங்கி நின்றாலும் கூட, என் தோழியாகிய தலைவியின் பெருந்தோளை நெகிழச்செய்த துன்பத்தை நீக்குவதற்கு விருந்தினர் வருவதைக் கரைந்து கூறிய காக்கைக்கு இடும் பலி உணவு சிறிய அளவினதேயாகும். (பிரிந்து வந்த தலைவன், "நன்கு ஆற்றுவித்தாய்" என்று தோழி உரைத்தது.) தலைவன் வருகையை உரைத்த காக்கை பாராட்டப் பெறுவதற்கு உரியது என்றும் தான் உரைத்தவாறு குறித்த பருவத்தில் வந்து, தலைவியின் தோளிற்கு விருந்தாய்த் தலைவன் பாராட்டிற்கு உரியவன் என்று தோழி கூறினாள். காக்கை கரைதலைத் தலைவன் வரவின் நன்னிமித்தமாகக் கொண்ட தலைவி, தெய்வத்தை வழிபட்டு இடும் பலி உணவாகக் காக்கைக்கு சிறப்புச் செய்ய நினைத்தாள். பிரிவுத்துயரால் வருந்திய தனக்கு ஆறுதலாகக் கரைந்து, குரல் தந்தமையாலும், அதன்படியே தலைவன் வந்தமையாலும் தலைவி மகிழ்ந்தாள். காக்கை செய்த உதவியை நோக்கும் போது, தான் வழங்கும் பலி உணவு மிகச்சிறியதே எனக் கருதினாள். ஏழுகலத்து ஏந்தினும் சிறிது காக்கையது பலியே என நினைக்கிறாள். இந்தக் குறுந்தொகைத் தலைவியின் அன்பார்ந்த, பண்பட்ட நன்நெஞ்சத்தின் வெளிப்பாடான இந்த மெல்லிய உணர்வுகளை என்னென்பது? இப்பாடலை முல்லைத்திணையின் படப்பிடிப்பாய்ப் பாடிய நச்செள்ளையார் என்னும் பெண்பாற்புலவர் பாடுபடுபொருளின் சிறப்புக் காரணமாக "காக்கை பாடினியார்" என்று சிறப்பு பெயர் பெற்றார். காக்கைப் பலி சிறிது என்று வருந்திய தலைவி சிறந்தவளா, நன்கு ஆற்றுவித்தாய் என்று உரைத்த தோழி சிறந்தவளா. இதைப்பாடிய பெண்பாற்புலவர் தாம் சிறந்தவரா, பண்பட்ட உணர்வுகளில் ஒருவரை ஒருவர் மிஞ்சிகிறார்களே!!. ஓ காகமே... நீ தான் சொல்வாயா? ஓ காகமே ... பாடுதே என் நெஞ்சமே this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |