![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 46
![]() இதழ் 46 [ ஏப்ரல் 21, 2008 ] இரா.கலைக்கோவன் மணிவிழா சிறப்பிதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அப்போது நான் மாயவரம் "ஹோட்டல் பிரின்ஸ் டவரில்" ஜெனரல் மேனேஜராக பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். ஒருநாள் நமது பெரியண்ணன் திரு. சுந்தர் பரத்வாஜிடமிருந்து ஓர் அழைப்பு. "பொன்னியின் செல்வன் கதை நிகழ்ந்த இடங்களுக்குச் செல்லும் சுற்றுலா, இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று அங்கு வருகிறது. நீங்கள்தான் அனைவரையும் அவ்விடங்களுக்கு அழைத்துச்செல்கிறீர்கள். மற்ற விவரங்கள் குறித்து கமலக்கண்ணன் என்பவர் உங்களிடம் பேசுவார்" என்று கூறித் தொடர்பைத் துண்டித்தார். வேகம், பரபரப்பு, உற்சாகம் இவைகளின் மறு உருவம்தான் நமது பெரியண்ணன் திரு.சுந்தர் பரத்வாஜ். அவரை அறிந்தவர்கள் யாரும் மேற்கூறிய எனது கூற்றை மறுக்கமாட்டார்கள்.
அவர் கூறியது போலவே சற்று நேரத்திற்கெல்லாம் நமது "ஜப்பான்" புகழ் கமலக்கண்ணன் என்னைத் தொடர்பு கொண்டார். திரு சுந்தர் அவர்கள் வேகம், பரபரப்பு, உற்சாகம் இவைகளின் மறு உருவம் என்றால், திரு கமல் அவர்கள் நிதானம், திட்டமிடல், திட்டமிட்டதை செயல்படுத்துதல் என்பதன் மறு உருவம். இப்பொழுது நீங்களே புரிந்துகொண்டிருப்பீர்கள். அச்சுற்றுலா எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை. தெளிவான பயணத்திட்டம், அதன் படி அமைந்த முதல் பயணம். அனைவருக்கும் பெரு மகிழ்ச்சி. இந்தப்பயணம்தான் "வரலாற்று"ச் சிறப்பு மிக்க பயணம். அதில் இச்சிறியோனும் பங்கு கொண்டேன் என்பது நான் பெற்ற பேறு. மொத்தம் மூன்று நாட்கள் கொண்ட இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க பயணத்தில் முதலில் வீராணம் ஏரி தொடங்கி கடம்பூர், கங்கைகொண்ட சோழபுரம், திருமழபாடி, தஞ்சை, கோடியக்கரை, நாகை, திருப்புறம்பயம், குடந்தை, திருவலஞ்சுழி, பழையாறை, பஞ்சவன் மாதேவீஸ்வரம், அம்மன்குடி, திருநல்லம் என்று பயணம் களை கட்டியது. அதனைத்தொடர்ந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் யாத்திரையின் போதுதான் டாக்டர் அவர்களை முதன்முதலில் சந்திக்கும் பேறு கிடைத்தது. குழுவிலுள்ள எல்லாரும் அவர்களைக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்து எடுக்க, டாக்டர் அவர்கள் துளிகூட அசராமல் நிதானமாகவும், புரியும்படியும் பதிலளித்துக் கொண்டிருந்தார். நாமும் ஏதேனும் கேட்டுவைப்போம் என்று "ஆவுடையார் கோயில் மிகவும் அழகாக இருந்தது. தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டேன். (அப்பொழுதுதான் ஆவுடையார்கோயிலை முடித்துக்கொண்டு புதுக்கோட்டை வழியாகத் திருச்சி வந்திருந்தோம்) நமது கேள்வியால் டாக்டர் அவர்களிடம் இருந்த நிதானம் காணாமல் போய்விட்டது. அதன் அர்த்தத்தைப் பிற்பாடு அவர்களுடன் கோயில்களில் இருக்கும் தருணங்களில் புரிந்துகொண்டேன். அந்தச் சந்திப்பு கோயில்கள் பற்றியும், வரலாறு பற்றியும் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பதை உணர்த்தியது. (கமல், லாவண்யா, அனுராதா இவர்களுக்கு இதைபடிக்கும் போது சிரிப்புவருவதைத் தவிர்க்க இயலாது. காரணம் வேண்டுவோர் இவர்களைத் தொடர்பு கொள்ளவும். அனுராதா அவர்கள் கேட்டது எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது. "அது எப்படி சார், எதைக்கேட்டாலும் உடனுக்குடன் பதிலளித்துவிடுகிறீர்கள்?") இதனைத் தொடர்ந்து மூன்றாவது யாத்திரை. இம்முறையும் டாக்டர் அவர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. இம்முறை நான் வாயே திறக்கவில்லை. பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் கூறியதுபோலக் காதுகளை நன்றாக உபயோகப்படுத்தி நாவினைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். இதனைத்தொடர்ந்து லால்குடி சப்தகிரீஸ்வரர் மற்றும் புள்ளமங்கைப் பயணங்களின்போது டாக்டர் அவர்களுடன் இருக்கும் பேறு கிடைத்தது. இப்பயணத்தின் போது நானும் திரு கோகுல் அவர்களும் இணைந்து குடந்தையிலிருந்து புள்ளமங்கை வரை இரு சக்கர வாகனத்தில் பயணித்தோம். பிற்பாடு இருவரும் இதே கோயிலை M.Phil படிப்பிற்கு இணைந்து ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டோம். இப்பயணம் என்னைப் பொருத்தவரை மிகமிக முக்கியமான பயணம். புள்ளமங்கையில் அம்மையப்பரைக் காண்பித்து, அதன் அழகில் அவரும் மயங்கி எங்களையும் மயங்க வைத்ததுதான், கோயில்களில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட அடிப்படைக் காரணமாக அமைந்தது. ![]() இருப்பினும் டாக்டர் அவர்களை அணுகுவதில் எனக்கு ஒரு தயக்கம் இருந்து கொண்டேதான் இருந்தது. வலஞ்சுழிப் பயணங்கள் அத்தயக்கத்தை அடியோடு அகற்றின. வலஞ்சுழிப்பயணங்களில் மதிய உணவு இடைவேளையின் போது நாங்கள் பல செய்திகள் குறித்து உரையாடுவதுண்டு. அவற்றில் சரித்திர நாவல்கள் முக்கிய இடம் பிடிக்கும். அவரே தன்னுடைய நூலகத்திலிருந்து "வேங்கையின் மைந்தன்" நாவல் கொடுத்து என்னைப் படிக்கச்செய்தார். அவருடைய சிபாரிசின் படி "மணிபல்லவம்" என்ற நாவல் வாங்கிப்படித்தேன். அறம், பொருள், இன்பம் & வீடுபேறு ஆகிய பெருங்காப்பியத்துக்குரிய அத்தனை அம்சங்களும் பொருந்திய நாவல் அது. உணவு இடைவேளை முடிந்தவுடன் மிகுந்த முனைப்புடன் தன்னுடைய பணி செய்யச் சென்றுவிடுவார். இப்பயணங்களின்போதுதான் மற்றுமொரு அரிய நட்பு நாமனைவருக்கும் கிட்டியது. அவர் யார் என்று நான் உங்களுக்கு சொல்லத்தேவையில்லை. டாக்டர் அவர்களே "வலஞ்சுழி வழங்கிய" கொடைகளில் ஒன்றாக நண்பர் திரு பால பத்மநாபனைக் குறிப்பிடுகின்றார். இவ்வளவு அண்மை கிடைத்தும் அவரைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டோமா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். காரணம் என்ன? ஏன் நம்மால் அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள இயலவில்லை என்று தற்சோதனை செய்து பார்த்ததில் அவருக்கும் எங்களுக்குமிடையில் இருக்கும் கீழ்க்காணும் வித்தியாசங்களில் சிலதான் என்று பளிச்சென்று புரிந்தன. 1) நேரம் தவறாமை 2) கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கம் 3) திட்டமிடுதலும், திட்டமிட்டவாறு செயல்படுதலும் 4) வெயில், பனி போன்ற இயற்கையின் தாக்குதல்களுக்கு அஞ்சாமல் தான் கருதிய காரியத்தில் கண்ணாய் இருப்பது 5) நேரத்திற்கு உண்ணுவது மற்றும் உறங்குவது 6) வரலாற்றின் பால் அவர் கொண்ட அளவற்ற ஈடுபாடு மேற்கூறிய விஷயங்களில் நாங்கள் (நான் என்று குறிப்பிடுவது சாலச்சிறந்தது) அவ்வப்போது தேவைக்கேற்ப சமரசம் செய்து கொள்வதால் அவருடைய அண்மையைச் சரியாக உபயோகிக்க இயலவில்லை என்று கூறினால் அது மிகையாகாது. இருப்பினும் வலஞ்சுழிப்பயணங்கள் கொடுத்த அனுபவங்கள் மிகவும் இனிமையானவை. டாக்டர் அவர்களுடைய பக்தி, நகைச்சுவையுணர்வு, நேர்மை, துணிவு, அயரா உழைப்பு ஆகிய குணங்களை அருகிருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி உரித்தானதாகும். வலஞ்சுழியில் இராஜராஜனின் கல்வெட்டும் இராஜேந்திரனின் கல்வெட்டும் இடதும் வலதுமாக இருப்பது கண்டு அவர் அடைந்த மகிழ்ச்சி நானும் நண்பர் பால பத்மநாபனும் நேரில் கண்டு களிப்புற்ற காட்சி. "சிவ சரண சேகரன்" என்ற இராஜேந்திரனின் புதிய சிறப்புப்பெயரைக் கண்டுபிடித்த சிறப்புப்பெருமை டாக்டர். இரா. கலைக்கோவன் அவர்களையே சாரும். இக்கல்வெட்டு இருந்த சுவர் சுண்ணாம்பால் மூடப்பட்டிருந்தது. அதனை நமது ரவி நீக்கியவுடன் அச்சுவரில் இருந்த கல்வெட்டைப் படித்து இது முற்றிலும் புதிய செய்தி, தமிழ்நாட்டிலேயே எங்கும் காணக்கிடைக்காத செய்தி என்று அவர் மகிழ்ந்ததற்கு நானும் நண்பர் பால பத்மநாபனும் கண்ணால் கண்ட சாட்சி. இதனை வேறு சிலர் தாம் கண்டுபிடித்தது போல் பத்திரிகைகளை அழைத்துப் பேட்டி கொடுத்தது உண்மைக்குப் புறம்பானது. இந்நிகழ்ச்சி அவரைக் கோபப்படுத்தாமல் மேலும் அவர் நிதானமானது கண்டு நாங்கள் வியப்புற்றோம். அஷ்டபுஜ மஹாகாளி என்றழைக்கப்பட்ட பெண் தெய்வத்தின் உண்மையான பெயர் "ஏகவீரி பிடாரி" என்று கல்வெட்டுகளிலிருந்து கண்டறிந்து அதனை ஆராய ஒரு முழு நாளையும் ஒதுக்கி அதன் அழகில் அவர் சொக்கியது இன்னும் நம் நினைவை விட்டு அகலவில்லை. வலஞ்சுழியைத் தொடர்ந்து உடையாளூரின் "உண்மை" காண உடையாளூருக்குப் பயணப்பட்டபோதும் அவருடைய அயரா உழைப்பும், நேரடித்தரவுகளில் மட்டுமே அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் மற்றுமொருமுறை உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிந்தது. இதனைத்தொடர்ந்து சில மாடக்கோயில்களுக்கு டாக்டர் அவர்களுடன் செல்லும் பேறு கிடைத்தது. அவருடன் செல்லும் பயணங்கள் வெகு இனிமையானவை. நாம் எது குறித்துக் கேள்விகள் கேட்டாலும் அவரிடமிருந்து நேர்மையான பதில்கள் மட்டுமே விடையாக வரும். அவருக்குத் தெரியாதவைகளைச் சிறிதும் தயங்காமல் தெரியாது என்று பளிச்சென்று கூறிவிடுவார். சமீபத்தில் டாக்டர், முனைவர் நளினி, கமலக்கண்ணன், ராம் மற்றும் நான் ஆகியோர் பாண்டியர் குடைவரைகள் காணத் திருநெல்வேலி சென்றிருந்தோம். மிகவும் அற்புதமான பயணம் அது. இப்பயணத்தின் இரண்டு முக்கிய நிகழ்சிகளைக் குறிப்பிட விழைகின்றேன். மதுரையிலிருந்து காலை உணவை முடித்துக்கொண்டு கிளம்பிய நாங்கள் செவல்பட்டி கண்டு முடித்தவுடன் மலையடிக்குறிச்சி நோக்கிப் பயணமானோம் சங்கரன் கோயில் தாண்டிப் பயணம் தொடர்ந்தவுடன் எங்கள் வயிற்றில் மணியடிக்க ஆரம்பித்துவிட்டது. சுற்றுச்சூழலைப் பார்த்தால் ஒருவாய்த் தண்ணீர் கூடக் கிடைக்காது போல் தோன்றியது. இருப்பினும் டாக்டர் அவர்கள் குறித்த நேரத்தில் உணவு உண்பவர். ஆகையால் ஏதேனும் ஏற்பாடு செய்திருப்பார் என்று மனதைத் தேற்றிக்கொண்டோம். ஆனால் ஊரை அடைந்தவுடன் உணவு கிடைக்கும் என்றிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் ஊரைப்பார்த்தவுடன் அகன்றுவிட்டது. டாக்டர் யாரையோ விசாரித்தார். சற்று நேரத்திற்கெல்லாம் நாங்களனைவரும் அந்த ஊர் குருக்களின் வீட்டில் ஆஜரானோம் ![]() வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவ்வீட்டின் தலைவர் எங்களின் வரவிற்காக உணவு உண்ணாமல் காத்திருந்தார். டாக்டர் அவர்கள் ஏற்கனவே எங்கள் வரவை அவருக்குக் தெரிவித்திருப்பார் போலும். இருப்பினும் இவ்வூரின் சூழல் பார்த்து இங்கு நல்ல உணவு கிடைக்கும் என்று எங்களுக்கு நம்பிக்கை இல்லை. பசி எது கிடைத்தாலும் ஒரு பிடி பிடித்துவிடுவது என்ற முடிவிலிருந்தோம். ஆனால் நாங்கள் உண்ட உணவு தேவலோக அமிர்தமாய் இருந்தது. டாக்டர் அவர்கள் ஏற்கனவே இவ்வூருக்கு ஆராய்ச்சி நிமித்தமாய் வந்திருப்பதாலும் அந்த குருக்களை முன்பே தெரிந்து வைத்திருந்ததாலும், அந்தக் குருக்களிடம் எங்கள் வரவை முன்பே தெரிவித்து அற்புதமான மதிய விருந்தை எங்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்திருந்தது பிற்பாடு தெரிய வந்தது. அடுத்த நாள் மேலும் இரண்டு குடைவரைகளைப் பார்த்துவிட்டு மதுரை நோக்கிப் பயணமானோம். அப்போது நாங்கள் பின்னிருக்கையில் அமர்ந்து மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தோம். நான் கமலிடம் இப்போது ஒரு டீ குடித்தால் நன்றாயிருக்கும் என்று மிக மெல்லிய குரலில் கூறினேன். டாக்டர் அவர்களின் காதில் விழுந்துவிட்டது போலும். உடனே டிரைவரிடம் முதலில் தென்படும் தேனீர் நிலையத்தில் வண்டியை நிறுத்துமாறு பணித்தார். நானும் வேண்டாம், நாம் நேரடியாக மதியஉணவே அருந்தி விடலாம் என்று கூறிப்பர்த்தேன். அவர் தேனீர் நிலையத்தில் வண்டியை நிறுத்தித் தேனீர் பருகிய பிறகுதான் மேற்கொண்டு வண்டியைச் செல்ல அனுமதித்தார். மேற்கூறிய நிகழ்சிகள் சாதாரணமானவையாகத் தோன்றலாம். சற்று நுட்பமாகப் பார்த்தால் தான் சிற்சில விஷயங்களுக்கும் அவர் அளிக்கும் முக்கியத்துவம் புரியும். பிறருடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல், அவர்களை மிக்க மனித நேயத்துடன் நடத்துதல் இவைகள் டாக்டர். இரா. கலைக்கோவனின் இயல்பான அற்புத குணங்கள். ![]() இவ்வாறு கூற ஆரம்பித்தால் இக்கட்டுரையை எழுதிக்கொண்டே இருக்கலாம். நாம் செய்த தவப்பயன் இம்மாபெரும் வரலாற்றோடு வாழும் சந்தர்ப்பம் கிடைக்கக் பெற்றதாகும். அவர் வரலாற்றுக்கு ஆற்றி வரும் தொண்டு ஈடு இணையற்றது. இளைஞர்களோடு இளைஞனாய் இணைந்து வரலாறு.காம் என்னும் மின்னிதழை மாதந்தோறும் வெற்றிகரமாய் நடத்தத் திசைகாட்டியாய், கலங்கரை விளக்கமாய் நிற்பது நாம் பெற்ற தவப்பயனே அல்லாமல் வேறென்னவாக இருக்கமுடியும்? கலைகள் வளர்க்க மாரா பெற்றெடுத்த மாணிக்கமே! கலைகள் பயில இளைஞ்ர்கள் உங்கள் பின்னே தவங்கிடக்கிறோம். அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப எங்களைப் போன்ற அறி"வில்" ஏழைகளுக்கு கல்வெட்டு எழுத்தறிவித்து புண்ணியங்கோடி கட்டிக்கொண்ட புனிதரே, பிறர்தனைப் பேணுங்கால் நாணலும் பேணார் திறன்வேறு கூறிர் பொறையும் அறவினையைக் காராண்மை போல் ஒழுகலும் இம்மூன்றும் ஊராண்மை எனும் செருக்கு என்ற திரிகடுகப் பாடல் வரிகளின்படி வாழும் ஊராண்மை பெற்ற உத்தமரே, அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார் அவையஞ்சா ஆகுலச்சொல்லும் நவையஞ்சி ஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும் பூத்தலின் பூவாமை நன்று என்ற நீதி நெறி விளக்கப் பாடலில் கூறியவாறு அவையஞ்சாமல் மெய்விதிர்க்கும் அஞ்சாநெஞ்சரே, வரலாற்றின் கலங்கரை விளக்கமே, சிராப்பள்ளி வாழ் சீர்மிகு மாணிக்கமே மாரா பெற்றெடுத்த மரகத மணியே மலைக்க வைக்கும் வரலாறு படைத்த "கலை"க்கோவே நீவிர் வாழ்க" பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நீவிர் வாழ்க வாழ்கவே! என்றென்றும் அன்புடன் சு.சீத்தாராமன் கும்பகோணம் this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |