![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 179
![]() இதழ் 179 [ ஜூலை 2024 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 淡路島 かよふ千鳥の 鳴く声に 幾夜ねざめぬ 須磨の関守 கனா எழுத்துருக்களில் あはぢしま かよふちどりの なくこゑに いくよねざめぬ すまのせきもり ஆசிரியர் குறிப்பு: பெயர்: அரசவைப் புலவர் கனேமசா காலம்: பிறப்பு தெரியவில்லை. இறப்பு கி.பி. 1112ம் ஆண்டு. கி.பி. 12ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜப்பானை ஆண்ட பேரரசர் ஹொரிகவாவின் அரசவையில் புலவராக இருந்ததும் பல்வேறு போட்டிகளில் பாடல் புனைந்து பரிசுகள் வென்றதும் தவிர இவரைப்பற்றி வேறெதுவும் குறிப்புகள் காணப்படவில்லை. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 7 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. பாடுபொருள்: பறவைக் கூட்டத்தின் அழகு பாடலின் பொருள்: இரைதேடிக் கிளம்பும் பறவைகளின் ஒலியைக்கேட்டுத் துயிலெழும் சுமா சுங்கச்சாவடியின் காவலர் பகலில் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும் கடற்பறவைகள் அவாஜி நீரிணைப்பைக் கடப்பது இந்நள்ளிரவிலும் நிகழ்வதால் எத்தனைமுறை விழித்துப் பார்க்கிறாரோ!! தலைநகர் கியோத்தோவுக்குத் தென்மேற்கே சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள அவாஜி எனும் தீவின் அழகையும் அது அமைந்திருக்கும் கான்சாய் விரிகுடாவின் அழகையும் அவ்வளைகுடாவின் ஊடே கடற்பறவைகள் பறந்து கடக்கும் அழகையும் கூறும் எளிமையான இப்பாடல் ஜப்பானின் புவியியல் அமைப்பைப் பதிவு செய்வதுடன் கென்ஜியின் கதை புதினத்தில் வரும் சுமா அத்தியாயத்தையும் தொடர்புபடுத்துகிறது. புதினத்தின் நாயகன் கென்ஜி, சுமா என்னும் ஊரில் தங்கியிருக்கும்போது கடற்பறவைகள் இரைதேடிக் கிளம்பும் ஒலியைக்கேட்டுத் துயிலெழுவார். இப்பாடலும் புதினமும் சமகாலத்தவை. 12ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயற்றப்பட்ட பல இலக்கியங்களில் கென்ஜியின் கதையில் வரும் நிகழ்வுகள் தொடர்புபடுத்தப்பட்டு இருக்கின்றன. இன்றளவும் ஜப்பானியர்கள் ஒவ்வொரு தலைமுறையும் படித்து இன்புறும் புதினமாகக் கென்ஜியின் கதை திகழ்கிறது. ![]() அவாஜி தீவின் வரைபடம் வெண்பா: திரைகடல் தாண்டல் இயல்பெனக் கொண்டு தரைதொட லின்றிப் பறந்து - இரைக்கெனக் கூட்டினை நீங்கிடும் புள்ளின் ஒலியினால் நீடுதுயில் நீக்கும் விடிவு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |