![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 166
![]() இதழ் 166 [ ஜூலை 2022 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ சில் என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள் "வல் ஆனை கொன்றானை" மாற்றாரை மாற்றழிக்க "வல்லானை மாயனை"ப் பாடேலோர் எம்பாவாய் பொருள்: ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்றுக் கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள். உடனே தோழிகள், உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர். அப்போது அவள், சரி..சரி...எனக்குப் பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்துவிட்டுப் போகிறேன், என்கிறாள். அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். என்னவோ நான் மட்டும் எழாததுபோல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள். தோழிகள் அவளிடம், நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள். நிற்க! மேற்கூறிய திருப்பாவையின் 15ம் பாடலில் கம்சனின் "குவலயபீடம்" என்ற வல்லிய யானையைக் (வலிமை பொருந்திய யானையை) கிருஷ்ணன் எவ்வாறு கொன்றான் என்று வினவினால் கிடைக்கும் மறு மொழியாக இந்தச் சிற்பத்தைக் கொள்ளலாம் என்றால் அது சற்றும் மிகையாகாது! ஆம் ! இச்சிற்பத்தைச் செதுக்கிய சிற்பி இக்காட்சியை நம் கண்முன்னே எவ்வளவு அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் பாருங்கள். பாய்ந்து வரும் யானையின் முன்னங்காலைக் கிருஷ்ணனின் வலக்கால் தடுத்து நிறுத்துகிறது. அவரது இடக்கால் யானையே வெட்கும் வண்ணம் பூமியில் அழுந்த உறுதியுடன் பதிந்திருக்கிறது. இடக்கையால் யானையின் துதிக்கையை பிடித்துக் கொண்டு வலக்கையால் யானையின் தந்தத்தை உருவி அதன் கர்வமடக்கி அழிக்கும் அற்புதக்காட்சி! இச்சிற்பம் இடம்பெற்றுள்ள ஆலயம் திருநெல்வேலி மாவட்டம், அம்பா சமுத்திரத்திற்கருகில் அமைந்துள்ள மன்னார்கோவிலின் பாதச் சிற்பத் தொகுதியில் இடம்பெற்றிருக்கிறது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |