![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 145
![]() இதழ் 145 [ மார்ச் 2019 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
மாயவரத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள "பெருஞ்சேரி" என்ற கிராமத்திலமைந்துள்ள சுவாந்திரநாயகி சமேத வாகீசர் சிவாலயம் மூன்றாம் குலோத்துங்கன் காலக் கற்றளியாகும். இது கட்டுமானக் கோயில்களில் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாகும். இது நாகரம் மற்றும் வேசரம் ஆகிய இரு விமான வடிவங்களையும் உள்ளடக்கிய அற்புதமான ஆலயமாகும். இதனுடைய வெளித்தோற்றத்தை வைத்து மட்டும் கூறுவதென்றால் இது ஒரு வேசர விமானமாகவே காட்சியளிப்பதை நாம் காணலாம்.
![]() ஆலயக் கட்டுமான அதிசயங்களில் இத்திருக்கோயிலும் இதன் தனித்தன்மைக்காக அவசியம் கவனிக்கப்படக்கூடிய ஒன்றாகும். மேலும் இத்திருக்கோயில் கட்டுமானம் முதன்முதலாக நமது வரலாறு.காம் மின்னிதழ் மூலமாக வரலாற்று உலகிற்கு அறிமுகமாவதிலும் வரலாறு.காம் பெருமிதம் கொள்கிறது. ஆம், இக்கோயில் கட்டுமானம் குறித்து வெளிவரும் முதல் கட்டுரை நம் வரலாறு.காமில் தான் வெளிவருகிறது . ![]() (கட்டுரை ஆசிரியர் எடுத்த அளவுகளின்படி வரையப்பட்ட ஆலய வரைபடம்) கோயில் கட்டுமானக்கலையின் எழுச்சியும் வளர்ச்சியும் காவிரி டெல்டா பகுதியில் சோழர்காலத்தில் முதலாம் ஆதித்த சோழர் காலத்தில் தொடங்கி மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை சிறந்த முறையில் விளங்கும். பொன்னி பாய்ந்து வளப்படுத்தும் சுந்தர பூமியின் பல்வேறு பகுதிகளில் இன்றளவும் புகழ் பரப்பும் சோழர்கால ஆலயங்களின் வரிசையில் இதோ இன்னொரு அற்புதமான படைப்பாக நம் கண்முன் கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது பெருஞ்சேரியின் வாகீசர் ஆலயம். ஏற்கனவே "ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே" பகுதியில் ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகுமா? என்ற கட்டுரையில் இத்திருக்கோயில் பற்றிய குறிப்பும் இதன் தனித்தன்மையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இக்கட்டுரையில் இவ்வாலயக்கட்டுமானத்தின் தனித்தன்மையைக் காணலாம். ![]() உபானம், பத்ம ஜகதி,உருள் குமுதம், கண்டம்,பட்டிகை, வேதிகை பெற்ற பத்ம பந்த தாங்கு தளம் பெற்ற இவ்விமானம் ஏக தள வேசரக் கலப்பு விமானம் ஆகும். அதிஷ்டானத்தில் சாலைப்பகுதி முன்னிழுக்கப்பட்டுப் பாதபந்தமாகவும் கர்ணப்பகுதியில் பத்ம பந்தமும் பெற்று அதிஷ்டானம் வர்க்கபேதம் பெறுவதும் கவனிக்கத்தக்கது. வேதிகை மேலெழும் இந்திரகாந்தத் தூண்கள் சுவரை அலங்கரிக்கின்றன. வழக்கமாக வலபியில் இடம் பெறும் பூதகணங்களிற்குப் பதிலாகப் பத்மவரிகளால் வலபிப்பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ![]() ![]() ![]() மேலும் பொதுவாக விமானத்தின் கருவறைப் பத்திப்பிரிப்பில் சாலைப்பகுதி முன்னிழுக்கப்பட்டு வடிவமைக்கப்படும் வழக்கத்தைக் கண்டிருக்கிறோம். இவ்வாலயத்தில் சாலைப்பகுதி முன்னிழுக்கப்பட்டு நாகரமாக அமைவது ஆலயக்கட்டுமான முறைகளில் வேறெங்கும் காணக்கிடைக்காத தனிக்காட்சியாகும். கர்ணப்பகுதி வேசரமாகவும் சாலைப்பகுதி நாகரமாகவும் அமைந்த விமான அமைப்பு வேறு எங்கும் காணக்கிடைக்காத அற்புதமான காட்சி என்பதே இவ்வாலயத்தின் தனித்தன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும் கருவறையின் உட்பகுதி நாகர வெளியாக அமைந்திருப்பதும் இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். மேலும் கோட்டங்களனைத்தும் வழக்கபோல் முகமண்டபத் தெற்குக்கோட்டத்தில் விநாயகரும் வடக்கில் துர்க்கையும், கருவறையின் தெற்குக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவரும் வடக்கில் பிரம்மாவும் பெற்று அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இக்கட்டுரையில் விமானத்தின் கழுகுப்பார்வைக்காட்சி இணைக்கப்பட்டிருக்கிறது. இக்காட்சியில் ஆலய வளாகம் வழக்கத்திற்கு மாறாகத் தென்கிழக்குப் பகுதியில் நீட்சி பெற்றிருப்பது ஒரு அரியவகை வளாக அமைப்பாகக் கொள்ளலாம். இக்கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலக் கட்டமைப்பு என்பதை இங்கு கிடைக்கும் அவரின் 28 ஆம் ஆட்சியாண்டின் கல்வெட்டு மூலமாக அறியலாம். இக்கோயிலின் விரிவான விளக்கமான ஆலய அமைப்பை வேரொரு சமயத்தில் விரிவாகக் காண்போம்! |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |