![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 145
![]() இதழ் 145 [ மார்ச் 2019 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
புள்ளமங்கை அருள்மிகு பிரம்மபுரீசுவரர் திருக்கோயிலின் விமானம் மற்றும் முகமண்டப வேதிகைப் பாதங்களில் இராமாயணத் தொடர் காட்சிகளும் தாங்குதளக் கண்டபாதங்களில் புராண இதிகாசக் காட்சிகளும் குறுஞ் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன. இதில் கண்ட பாத இதிகாசக் காட்சிகளுள் ஒரு சில இராமாயணச் காட்சிகளாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரையில் வேதிபாத இராமாயணக் காட்சிகள் விரிவாக ஆராயப்படுகின்றன.
வேதிபாதங்களின் அமைப்பு புள்ளமங்கை விமானம் மற்றும் மண்டபத்தின் கபோதபந்தத் தாங்குதளத்திற்கு மேல் அமைந்துள்ள வேதிகைப் பகுதியில் 64 தூண் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 38 பாதங்கள் விமானத்திலும் 26 மண்டபத்திலும் அமைந்துள்ளன. விமான பாதங்களுள் 20 கர்ணப் பத்தியிலும் 18 சாலைப் பத்தியிலும் செதுக்கப்பட்டுள்ளன. மண்டப பாதங்களுள் 12 கர்ணப் பத்தியிலும் 12 சாலைப் பத்தியிலும் 2 மண்டப நுழைவாயிலின் இரு புறங்களிலும் அமைந்துள்ளன. மொத்தமுள்ள 64 பாதங்களுள் 10 பாதங்கள் பின்னாளைய கட்டுமானங்களால் மறைக்கப்பட்டுள்ளதால் இன்று காணும் நிலையில் இல்லை. இரண்டு பாதங்கள் அடையாளம் காணவியலாதவாறு சிதைந்துள்ளன. நான்கு பாதங்களில் சிற்பங்களுக்கு பதிலாகக் கொடிக் கருக்குகள் செதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 48 பாதங்களில் இராமாயணக் காட்சிகள் குறுஞ் சிற்பங்களாகக் காணக் கிடைக்கின்றன. இக்காட்சிகளைச் சித்தரிக்கும் பாதங்களுள் கிழக்கு திசை நோக்குவனவாய் 3 பாதங்களும் தெற்கு நோக்கி 15 பாதங்களும் மேற்கு நோக்கி 11 பாதங்களும் வடக்கு நோக்கி 19 பாதங்களும் அமைந்துள்ளன. கீழ்காணும் அட்டவணையில் விமானத்திலும் மண்டபத்திலும் அமைந்துள்ள பாதங்களும் அவற்றுள் இன்று காணக்கிடைக்கும் வகையில் அமைந்துள்ள பாதங்களும் வரிசைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. ![]() அடுத்தடுத்து அமைந்துள்ள இக்காட்சிகளை ஒப்பிட்டும் இணைத்தும் நோக்கும்போது அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாய் இருப்பதையும் இராமாயணக் கதையின் காட்சிகளை ஒரு சிற்பத் தொடராகச் சித்தரிப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இதே போன்ற இராமாயணக் குறுஞ்சிற்பத் தொடர்கள் முற்சோழர் காலக் கோயில்களான திருச்சென்னம்பூண்டி சடைமுடிநாதர் திருக்கோயில், கும்பகோணம் நாகேஸ்வரர் திருக்கோயில், திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோயில் முதலான திருக்கோயில்களிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கதையமைப்பு இராமாயணக் கதைத் தொடர், விமானத்தின் மேற்குச் சுவரில் அமைந்துள்ள சாலைக்கோட்டத்தின் கீழ் அமைந்துள்ள வேதிகையின் தென்மேற்குப் பகுதியில் மேற்கு நோக்கிய பாதத்தில் துவங்கி கடிகாரச் சுற்று வரிசையில் இடமிருந்து வலமாக வளர்ந்து வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குச் சுவரின் வேதிகைப் பாதங்களில் நீண்டு அதே மேற்குச் சுவர் கோட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் தெற்கு நோக்கிய வேதிகைப் பாதத்தில் சென்று முடிகிறது. ![]() வேதிபாதங்களின் அமைவிடம், நோக்கும் திசை மற்றும் கதையின் தொடரமைப்பு ஆகிய மூன்றையும் கருத்தில் கொண்டு புள்ளமங்கை இராமாயணக் கதையைமைப்பை ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கலாம். இப்பகுதிகளும் அமைவிடமும் கீழ்க்காணும் அட்டவணையில் இடம் பெற்றுள்ளன.
இவற்றுள் ஒவ்வொரு பகுதியிலும் அமைந்துள்ள பாதங்களும் அவற்றில் சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பகுதி 1 (விமானம் - மேற்கு) இராமாயணக் கதை துவங்கும் விமான மேற்குச் சுவரின் சாலைக் கோட்டத்தின் கீழ் அமைந்துள்ள வேதிபாதம் முதல் அதே சுவரின் வடக்கு கர்ணப்பத்தியில் அமைந்துள்ள வேதிபாதம் வரையிலான 8 பாதங்களிலும் இராமாயணக் காட்சிகள் காண்பிக்கப் பட்டுள்ளன. இவை இராமனின் பிறப்புக்கு முன் தேவலோகத்தில் நடைபெறும் சில நிகழ்வுகள், தசரதரின் வேள்வி, இராமனின் பிறப்பு மற்றும் இளமைப் பருவ நிகழ்வுகளைச் சித்தரிப்பதாக அமைந்துள்ளன. கதையின் துவக்கத்தில் பிரம்மன் தாமரை மலரில் அமர்ந்தபடி தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் இராமன் கதையை எடுத்துரைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது (எண் 1). அமர்ந்த நிலையில் பிரம்மனின் இருபுறங்களிலும் காண்பிக்கப்படும் நான்கு முனிவர்கள் அவரது புதல்வர் களான சனத்குமாரர்களாகலாம். இதற்கடுத்து அமைந்துள்ள இரண்டு பாதங்களும் (எண் 2 & 3) ஒரே காட்சியின் இரு பகுதிகளாக அமைந்துள்ளன. பிரம்மனும் இரு தேவர்களும் விஷ்ணுவைச் சந்தித்ப்பதை இவை காட்சிப்படுத்துகின்றன. கருட அணுக்கராகக் காட்டப்படும் விஷ்ணு கருடனுடனான உரையாடலில் ஈடுபட்டிருக்கிறார். இதற்கடுத்த காட்சி விஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டிருக்க, பூதேவியும் தேவர்களும் முனிவரும் அவரிடம் வேண்டுகோள் விடுப்பதைச் சித்தரிக்கின்றது (எண் 4). இராவணனின் தொல்லைகளை அடக்க பூமியில் அவதரிக்குமாறு அவர்கள் விஷ்ணுவை வேண்டும் காட்சியாக இதனைக் கருதலாம். இதற்கடுத்து அமைந்துள்ள பாதத்தில் சிற்பிகள் தயரதனின் வேள்வியை செதுக்கியுள்ளனர். பத்து கதாபாத்திரங்களுடன் விரிவாகப் படமாக்கப்பட்டிருக்கும் இக்காட்சியில் வேள்வித்தீயிலிருந்து பூதம் தோன்ற, மன்னர் அது கொடுக்கும் பிண்டத்தை வாங்கும் நிலையில் காட்சியளிக்கிறார் (எண் 5). அடுத்த காட்சி அந்தப்புரத்தில் கவரிப் பெண்கள் சூழ அரசர் ஆசனத்தில் அமர்ந்து பூதம் கொடுத்த பிண்டத்தைத் தமக்கு எதிரே அமர்ந்திருக்கும் தேவியர்க்கு அளிப்பதைக் காட்டுகிறது (எண் 6). இதற்கடுத்த பாதத்தில் மூன்று தேவியர்க்கும் மகப்பேறு உண்டாகி பிள்ளைப்பேறு முடிந்து அவர்கள் தமது சிசுக்களை அரசர்க்கு அறிமுகப்படுத்தும் காட்சி படமாகியுள்ளது (எண் 7). பல கதாபாத்திரங்களுடன் விரிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ள இக் காட்சியில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மகவு பிறந்துவிட்ட செய்தியை அரசரிடம் அறிவிப்பது குறிப்பிடத்தக்கது. விமான மேற்குப் பகுதியின் கடைசி வேதிபாதக் காட்சியில் ஆலிட நிலையில் நின்றபடி வசிட்ட முனிவர் இராமனுக்கு வில்வித்தை கற்றுத்தரும் காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது (எண். 8). குருவின் உடல்மொழியை இராமன் அப்படியே பின்பற்றி வில்வித்தை கற்பதுபோல் சிற்பிகள் இக்காட்சியை கற்பனை செய்துள்ளனர். பகுதி 2 (விமானம் - வடக்கு) விமான வடசுவரின் கீழ் அமைந்துள்ள வேதிகையில் மொத்தம் 12 பாதங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் அடையாளம் காணவியலாத வாறு சிதைந்துள்ள 1 பாதம் நீங்கலாக மீதமுள்ள 11 பாதங்களிலும் இராமாயண சம்பவங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இவை விஸ்வாமித்திர முனிவரின் வருகை, தாடகை வதம், அரக்கர்களை விரட்டுதல், மிதிலையில் வில் முறித்து சீதையைத் திருமணம் முடித்தல் உள்ளிட்ட காட்சிகளைப் படம் பிடிக்கின்றன. விமான வடபகுதியின் கர்ணப்பத்தியில் அமைந்துள்ள வேதிபாதத்தில் முதல்காட்சியாக விஸ்வாமித்திர முனிவர் தயரதன் அரசவைக்கு வருகை புரியும் நிகழ்வு பெற்றுள்ளது. சரிசமமான ஆசனத்தில் நெருங்கி அமர்ந்து உரையாடலில் ஈடுபடும் முனிவரையும் மன்னரையும் அணுக்கமான நல்லுறவுடையவர்களாக இப்பாதம் காட்சிப் படுத்துகிறது (எண். 9). இதனையடுத்து இடம்பெறுவது தாடகை வதம். தனது திரிசூலத்தால் தாடகை இராமனை எதிர்க்க முனைவதையும் இறுதியில் இராமபாணத்தால் அடிபட்டு வீழ்வதையும் ஒரே காட்சியில் சிற்பிகள் சித்தரித்துள்ளனர் (எண்.10). இதற்கடுத்த பாதம் அடையாளம் காணவியலாத அளவிற்குச் சிதைந்துள்ளது (எண் 11). பிரம்மன் கோட்டத்தின் கீழ் அமைந்துள்ள ஆறு வேதிபாதங்களுள் முதலாவது அரக்கன் மாரீசன் வேள்வியை சிதைக்க முற்படுவதைக் காட்டுகிறது. மானாக நெருங்கி வரும் மாரீசன், அண்மையில் நெருங்கி வந்ததும் அரக்க வடிவெடுத்துத் தாக்க முற்படுமாறு இக்காட்சி கற்பனை செய்யப்பட்டுள்ளது (எண் 12). அடுத்த பாதத்தில் வானிலிருந்து அரக்கர் இராமனைப் பாறைகளால் தாக்க முனைவதையும் அத்தாக்குதலில் இராமன் அடிபட்டுக் கீழே விழுவதையும் காட்சிப்படுத்துகிறது (எண் 13). வீழ்ச்சியுறும் இராமனை விஸ்வாமித்திர முனிவரும் இலக்குவனும் தாங்கி முதலுதவி செய்கின்றனர். இதற்கடுத்த பாதத்தில் இராமன் விஸ்வாமித்திரருடன் ஓர் உரையாடலில் ஈடுபடும் காட்சி இடம்பெறுகிறது (எண் 14). இக்காட்சியின் மூன்று கதாபாத்திரங்களும் இதற்கடுத்து அமைந்துள்ள பாதத்தை நோக்கி நிற்பதால் அடுத்த காட்சியுடன் இது தொடர்புடையதாகக் கருதலாம். மிதிலையின் எல்லையில் கௌதம முனிவரின் ஆசிரமத்தின் அருகே இவ்வுரையாடல் நடப்பதாகக் கருத இடமுள்ளது. இதற்கடுத்த காட்சியில் கல்லாகி நிற்கும் அகலிகை இராமனால் சாப விமோசனம் பெற்று மானுட உருவை மீண்டும் பெறுகிறார் (எண் 15). மிதிலையில் அரசவையை அடையும் விஸ்வாமித்திரர் அங்கு அரசர் ஜனகரைச் சந்தித்து உரையாடும் காட்சி அடுத்த பாதத்தில் இடம்பெற்றுள்ளது (எண் 16). முனிவரின் தூண்டுதலுக்கிணங்க சிவ தனுசுவை கையில் ஏந்தும் இராமன் அதில் நாணேற்ற முனைந்து வில்லை முறிப்பதும் அரசவையில் உள்ள பலரும் இந்த வீரச்செயலைப் பதாக முத்திரை காட்டிப் போற்றுவதும் பிரம்மன் கோட்டத்தின் கடைசிக் காட்சியாக இடம்பெற்றுள்ளது (எண் 17). இதற்கடுத்த கர்ணப்பத்தியின் இரு பாதங்களில் இராமன் சீதை திருமணமும் இலக்குவன் ஊர்மிளை திருமணமும் தனித்தனியே காண்பிக்கப்படுகிறது (எண்கள் 18 & 19). நாணத்துடன் தமது கணவனின் கைத்தலம் பற்றியவாறு இரு பெண்களும் வேள்வித்தீயை வலம் வருகின்றனர். திருமணம் முடிந்து நால்வரும் அயோத்தி நகருக்குப் புறப்பட எத்தனிக்கும் காட்சியுடன் (எண் 20) இந்தப் பகுதியின் பாதங்கள் நிறைவடைகின்றன. பகுதி 3 (விமானம் - கிழக்கு) விமானத்தின் வடபகுதியை அடுத்து அமைந்துள்ள கிழக்குப் பகுதியின் வேதிபாதத்தில் (எண் 21) இராமன் சீதை இலக்குவன் மற்றும் ஊர்மிளை யானைகளில் ஊர்வலமாக மிதிலையிலிருந்து அயோத்திக்குக் கிளம்பும் காட்சி இடம் பெற்றுள்ளது. மூன்று யானைகள், பாகர்கள், கீழ்ப்பகுதியில் குதிரைகள் மற்றும் வீரர்கள் புடைசூழ விரிவாகச் சித்தரிக்கப்படும் இந்த ஊர்வலக் காட்சியின் கீழ்ப்பகுதி சற்று சிதைந்துள்ளது. பகுதி 4 (மண்டபம் - வடக்கு) விமானத்தையடுத்து அமைந்துள்ள மண்டபத்தின் தென்புற வேதிகையில் மொத்தம் 9 பாதங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் ஒரே ஒரு பாதத்தில் மட்டும் கொடிக்கருக்குகள் காண்பிக்கப்பட்டிருக்க மீதமுள்ள 8 பாதங்களிலும் இராமாயணக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. இராமன் திருமணத்திற்குப் பிந்தைய நிகழ்வுகள், சீதையின் மகப்பேறு, தசரதர் இராமனுக்குப் பட்டம் கட்ட முனைதல் மற்றும் கைகேயியின் ஊடல் முதலான காட்சிகளை இவை படம் பிடிக்கின்றன. மண்டபக் கொற்றைவை கோட்டத்தின் கீழ் அமைந்துள்ள ஆறு வேதிபாதங்களுள் முதலாவது பாதத்தில் கொடிக்கருக்கு வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளது. (எண் 22). அடுத்த பாதத்தில் சீதையை மணமுடித்துத் திரும்பும் இராமனின் மீது பொறாமை கொண்ட அண்டை நாட்டு இளவரசர்கள், அவரைத் தாக்க முனைவதும் இராமன் அவர்களைத் தனது வில்வலிமையால் வெற்றி கொள்வதும் பகை இளைவரசர்கள் தோற்றோடுவதும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது (எண் 23). இதற்கடுத்து அமைந்த இரு பாதங்களில் ஒரு பெரும் ஊர்வலக் காட்சி இரண்டு பகுதிகளாகப் பகுத்துச் சித்தரிக்கப்பட்டுள்ளது (எண்கள் 24, 25). இராமன் சீதையுடன் அயோத்தி நகருக்குள் நுழைவதையும் அயோத்தி மக்கள் கொண்டாட்டத்துடன் அவர்களை வரவேற்பதையும் இவை குறிப்பிடுவதாகலாம். இதற்கடுத்ததாக ஒரு புரவி இரதத்தில் நான்கு அரசகுலப் பெண்கள் பயணப்படுவது காண்பிக்கப்படுகிறது (எண் 26). புள்ளமங்கையின் இராமாயணக் கதையில் இந்தக் காட்சி எதனைக் குறிப்பிடுகிறது என்பது விளங்கவில்லை. முந்தைய இரு ஊர்வலக் காட்சிகளுடன் இதனைத் தொடர்பு படுத்தினால் இரதத்தில் சீதையும் ஊர்மிளையும் தம் தோழியருடன் அயோத்தி நகருக்குள் நுழைவதை இது சுட்டுவதாகக் கொள்ளலாம். கொற்றவைக் கோட்டத்தின் கடைசி வேதி பாதக் காட்சியில் (எண் 27) சீதை மகப்பேறு ஈனும் காட்சி காண்பிக்கப்பட்டுள்ளது. ஏழு கதா பாத்திரங்களுடன் தலைமை மருத்துவச்சி, செவிலியர், பணிப்பெண்களுடன் விரிவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் இக் காட்சி சோழர் காலத்தில் பிள்ளைப்பேறு எவ்வாறு நடைபெற்றது என்பதைப் படம் பிடிக்கும் அரிய காட்சியாக அமைந்துள்ளது. மண்டபத்தின் கர்ணப்பத்தியில் அமைந்துள்ள மூன்று பாதங்களுள் முதலாவதில் தயரதன் அரச பதவியைத் துறந்து கானகம் ஏவ முனைவதையும் தனக்கு அடுத்தபடியாக இராமனுக்குப் பட்டம் சூட்ட விரும்புவதையும் அரசவை யினருக்குத் தெரிவிப்பதைச் சுட்டுகிறது (எண் 28). அரசனின் துறவு மனோநிலையைச் சித்தரிக்கும் வகையில் அவரை யோகப் பட்டத்துடன் சிற்பிகள் காட்டியுள்ளனர். அடுத்த பாதம் முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகளைக் காட்சிப் படுத்துகிறது (எண் 29). பட்டாபிஷேகத்திற்கான மங்கல நீர் கொண்ட குடத்தை ஏழு பெண்கள் வணங்கி வழிபாடு செய்வதுபோல் இக்காட்சி கற்பனை செய்யப்பட்டுள்ளது. கர்ணப்பத்தியின் மூன்றாவது பாதத்தில் கைகேயியிடம் மந்தரை சூழ்ச்சி செய்து இராமனுக்கெதிராக அவளது மனதைத் திருப்பும் காட்சி பதிவாகியுள்ளது. (எண் 30) இரவில் மற்ற இராணியர் இருவரும் உறங்கிக்கொண்டிருக்க கைகேயி மட்டும் படுக்கையில் படுத்தபடி மந்தரையின் வாதங்களை கவனத்துடன் செவிமடுப்பதுபோல் இக்காட்சி வடிக்கப்பட்டுள்ளது. பகுதி 5 (மண்டபம் - கிழக்கு) கருவறைக்கு வழிவிடும் நுழைவாயில் அமைந்துள்ள மண்டபத்தின் கிழக்குப் பகுதியின் வேதிகையில் மொத்தம் 8 பாதங்கள் உள்ளன. இவற்றுள் ஆறு மகாமண்டபக் கட்டுமானத்தால் மறைக்கப் பட்டுவிட்டதால் நுழைவாயிலின் இருபுறங்களிலும் அமைந்துள்ள வேதிபாதக் காட்சிகள் மட்டுமே தற்போது காணக் கிடைக்கின்றன. இவற்றுள் ஒன்று சிதைந்துள்ளதால் காட்சியை சரிவர அடையாளப்படுத்த இயலவில்லை (எண் 34). மீதமுள்ள ஒரு பாதம் இராமன் சீதை இலக்குவனுடன் ஒரு இரதத்தில் அயோத்தி நகர் நீங்கி கானகம் ஏகுவதைம் படம் பிடிக்கின்றது (எண் 35). தேரோட்டியுடன் இரதம் சித்தரிக்கப் பட்டிருக்க, அயோத்தி மக்கள் கண்ணீருடன் அவர்களைப் பின்தொடர்வதை இக்காட்சி பதிவு செய்கிறது. (தொடரும்) |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |