![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 138
![]() இதழ் 138 [ அக்டோபர் 2017 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
கோயிற்கலை ஆய்விற்காகப் பராந்தகரின் கோயில்களை ஆய்விற்கு எடுத்துக்கொண்டு ஆய்வு செய்துவரும் வேளையில், தஞ்சைக்கருகே பசுபதிகோயில் என்றழைக்கப்படும் ஊருக்கருகில் உள்ள புள்ளமங்கை என்ற கிராமத்தில் "வீரநாராயணன்" என்ற இயற்பெயருடைய முதல் பராந்தகசோழனால் (இவரது மைந்தன் இராஜாதித்தனால் உருவாக்கப்பட்ட ஏரி தான் மேற்குறிப்பிட்ட "வீராணம்" ஏரியாகும். "வீர நாராயண ஏரி" என்ற சொல்தான் மருவி "வீராணம்" ஏரியாயிற்று) எழுப்பப்பட்ட அற்புதமான ஆலயம் என் ஆய்வுக்கோயில்களில் முதன்மையானதாகும். இக்கோயிலின் கட்டுமானத்தை விரிவாக உள்வாங்கும் விதமாகப் பலமுறை இவ்வாலயத்திற்குச் செல்லும் வாய்ப்பு அமைந்தது! அவ்வாறு சென்ற ஒரு ஆய்வுப்பயணத்தில் இக்கோயிலின் கருவறை விமானத்தின் தெற்குப்பகுதியை ஆய்வு செய்யும்போது முதல்தள ஆரவரிசையில் இடம்பெற்ற சிற்பம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. ஆம்! அத்தனை எளிதில் சிந்தையிலிருந்து மறந்து போகும் உருவமா இது? பார்த்த மாத்திரத்தில் அவ்வுருவம் உயிர்பெற்று வீராணக்கரையிலும், கடம்பூர்க்கோட்டையிலும், குடந்தையிலும், தஞ்சையிலும், ஈழத்திலும் புரிந்த அத்தனை வீரதீரச் செயல்களையும் கண்முன்னே காட்டியது! ஆம் அவ்வுருவம் வந்தியத்தேவனை ஒத்திருந்ததுதான் இந்நினைவலைகளின் எழுச்சிக்குக் காரணம்! நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், ஏற்றிச்சீவிய சிகையலங்காரமும், காதுகளில் தரித்த குண்டலங்களும் அப்படியே நமக்குக் கல்கியவர்கள் உருவாக்கி மணியம் அவர்களால் உருக்கொடுக்கப்பட்டு மக்களின் நெஞ்சில் நீங்காமல் வாழும் வந்தியத்தேவனைக் கண்முன்னே காட்டும் சிற்பத்தைக் கண்ணுறுங்கள்.
ஆகா! அப்படியென்றால் குந்தவையும் இங்குதான் இருக்க வேண்டும் என்று என் உள்மனது சொல்ல, அத்திருக்கோயிலில் உள்ள சிற்பங்களை மீண்டும் நிதானமாகக் கவனிக்கத் தொடங்கினேன்.
குந்தவையின் மென்மையும், கனிந்த முகமும், தீட்சண்யமான பார்வையும் உயரமான கொண்டையுடன் கூடிய சிகை அலங்காரமும் மணியம் அவர்கள் வரைந்த ஓவியத்துடன் பெரிதும் ஒத்திருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். மணியன் செல்வம் வரைந்த வாணர்குல வீரன் வந்தியத்தேவனின் உருவமும் புள்ளமங்கை ஆலயத்தில் கருவறையின் தெற்கு முதல் தள ஆரவரிசையில் இடம்பெற்றிருக்கும் ஆண்சிற்பத்தின் உருவமும், அதேபோல் கிழக்கு ஆரச்சுவர்களில் இருக்கும் பெண்சிற்பமும் மணியம் அவர்கள் வரைந்த குந்தவையின் கோட்டோவியமும் பெருமளவில் ஒத்துப்போவதால் ஒருவேளை இச்சிற்பங்கள் வந்தியத்தேவன் மற்றும் குந்தவை ஆகியோரின் கோட்டோவியங்களுக்கு முன்னுதாரணமாக இருக்குமோ என்றெண்ணியதை அடுத்தே இக்கட்டுரை உருவாக்கம் பெற்றது. மேலும் இதே காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் குடந்தைக் கீழ்க்கோட்டம் என்று பெருமையுடன் வழங்கப்படும் குடந்தை நாகேஸ்வரன் கோவிலின் கருவறை விமானத்தின் மேற்குப் பகுதியில் காணப்படும் ஒரு சிற்பம் பொன்னியின் செல்வன் புதினத்தில் கதைநெடுகப் பயணிக்கும் கதைமாந்தர்களில் ஒருவரான சின்னப் பழுவேட்டரையரின் உருவத்தை ஒத்துக் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சிற்பம் எச்சரிக்கை காண்பிக்கும் தர்ஜனி முத்திரை கொண்டது. முறுக்குமீசையும் கம்பீரமான தலையலங்காரமும் ஒரு சிறந்த ஆளுமையை அடையாளப்படுத்துவதைக் காணலாம். இப்புதினத்தில் கதைநெடுக வலம்வரும் சின்னப்பழுவேட்டரையர் காலாந்தகக்கண்டர் தஞ்சைக்கோட்டையின் தலைமைக்காவலர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாலயங்களில் காணப்படும் இச்சிற்பங்கள், கல்கி அவர்கள் மணியம் அவர்களோடு சென்ற களப்பயணங்களில் அவர்களின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து, இது வந்தியத்தேவன் மற்றும் குந்தவை உருவத்துக்குப் பொருத்தம் என்றெண்ணித் தேர்த்தெடுத்தார்களா? என்பதெல்லாம் கல்கி அவர்களுக்கும், மணியம் அவர்களுக்கும், மட்டுமே தெரிந்த உண்மையாகும்! நாம் என்ன கண்டோம்! எது எப்படியோ, வந்தியத்தேவன் மற்றும் குந்தவை உருவத்தை ஒத்த இந்த சிற்பங்களைக் கண்டதிலும் உங்களோடு அதனைப் பகிர்வதிலும் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
|
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |