![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 138
![]() இதழ் 138 [ அக்டோபர் 2017 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அஞ்சைக்களக் கோயில் அஞ்சைக்களக் கோயில், மணவறைப் பகுதிக்கு நேர் மேலே காட்டப்பட்டுள்ளது. கோயிலின் பல பகுதிகள் சிதைந்திருந்தாலும் அதை முத்தள விமானமாக அடையாளம் காணலாம். கருவறையும் முகமண்டபமும் கொண்ட அதன் முன், கால்களைக் குறுக்கீடு செய்து அமர்ந்துள்ளவர் கழுத்தில் சவடியும் நீளமான முத்துச்சரமும் உள்ளன. கைகளில், இருபுறமும் முத்துப் பதித்து இடையில் பூப்பதக்கம் பெற்ற பட்டை வளைகளும் கடகவளைகளும் அணிந்து, கயிற்றால் பிணைக்கப்பட்ட செண்டுதாளங்களை ஒலித்துப் பாடும் அவரைச் சுந்தரராகவே கொள்ளமுடியும். அவருக்குக் கீழே தாமரைகள் அடர்ந்த வட்டமான கோயில் குளமும் அவரின் பின்னிருக்குமாறு கோயில் வாயிலும் காட்டப்பட்டுள்ளன. குளத்தின் முன் நீளவளர்த்த வெறுஞ் செவிகளும் உபவீத முப்புரிநூலுமாய் வேதியர் ஒருவர் கோவணஆடையுடன் வலக்கையில் பூக்குடலை கொண்டு காட்சிதருகிறார். குளத்திலுள்ள தாமரை மலர்களை இறைவழிபாட்டிற்கெனப் பறிக்க வந்தவராய் நிற்கும் அவர் இடக்கை சின்முத்திரையிலுள்ளது.
அஞ்சைக்களக் கோயிலின் கோபுரம் தாமரை உபானம், கம்பு, ஜகதி, கம்புகள் தழுவிய கண்டம், பெருந்தாமரை, தாமரைவரி, கண்டம், பட்டிகை என்றமைந்த தாங்குதளத்தின் மீது இரண்டு அகலமான சுவர்த்துண்டுகளைக் கொண்டெழுகிறது. இச்சுவர்த்துண்டுகளின் நடுவில் மேலுறுப்புகளுடனான உருளைத் தூண்கள். சுவர்த்துண்டுகளின் கீழ்ப்புறத்தே இந்தத் தூண்களை உள்ளடக்கிய இரு வெண்பட்டைகள். சுவர்களுக்கிடையில் காட்டப்பட்டுள்ள நெடிய வாயில், கதவுகளால் அடைபட்டுள்ளது. கூரையுறுப்புகளைக் காணக்கூடவில்லை. இருபுற உருளைத்தூண்களுக்கு ஏற்றவாறு நடுப்பகுதியில் வாயிலுக்கு மேலிருக்குமாறு கபோதம் முன்னிழுக்கப்பட்டுள்ளது. மேலே பூமிதேசம். பூமிதேசத்தை அடுத்து வேதிகையும் கிரீவமும் தூபிகளுடனான சாலை சிகரமும் அமைய, கிரீவசுவரின் நடுப்பகுதியில் இரு நான்முக அரைத்தூண்களின் தழுவலில் வெறுமையாக உள்ள கோட்டம் அதன் கீர்த்திமுகத் தலைப்பை சிகரத்தில் கொண்டுள்ளது. கோட்டத்தை அடுத்தும் சுவரின் திருப்பத்திலும் பக்கத்திற்கு இரண்டாக உருளை அரைத்தூண்கள். வேதிகைத் தொடர் நடுப்பகுதியில் கிரீவகோட்டத்திற்காக இடைவெளி விட்டுள்ளது. முத்தள விமானமும் முகமண்டபமுமாய் எழுந்து நிற்கும் அஞ்சைக்களத்தப்பரின் அழகுக் கோயில் நாகர தளங்களும் வேசர சிகரமும் கொண்டுள்ளது. விமான ஆதிதளத்திற்கும் முகமண்டபத்திற்கும் இடையில் பிடிச்சுவர் பெற்ற படிகள். அவை வழிக் கருவறைக்குள் நுழைய இடைவெளியும் உள்ளது. விமானம், முகமண்டபம் இரண்டுமே உபானம், கண்டம், வாஜனம் எனும் உறுப்புகளோடுள்ள துணைத்தளத்தின் மீது பாதபந்தத் தாங்குதளம் கொண்டு எழுகின்றன. பெருந்தாமரை (பத்ம ஜகதி), உருள் குமுதம், கண்டம், பட்டிகை அடுத்துத் தாமரை தழுவிய வேதிகை. இடையிடையே சிற்றுறுப்புகளாய்த் தாமரைவரிகள். விமானச் சுவர்ப்பகுதியை நான்முக அரைத்தூண்கள் தழுவியுள்ளன. சாலைப்பத்தியின் தேவகோட்டத்தில் உள்ள தெய்வத்திருமேனியை அறியக்கூடவில்லை. சாலை, கர்ணபத்திகளுக்கு இடைப்பட்டனவாய்க் குடப்பஞ்சரங்கள். தூண்களின் பலகைகள் அழகுற அமைய, போதிகை அமைப்பை அறியக்கூடவில்லை. உத்திரம், வாஜனம், வலபி இம்மூன்றனுள் இறுதியுறுப்பு, கூடுவளைவுகளுடனும் சந்திர மண்டலத்துடனும் காட்சிதரும் கபோதத்தின் இறக்கத்தில் மறைந்துள்ளது. முகமண்டபக் கபோதம் கொடுங்கை போல நீண்டு, கோடிப்பாளைகள் பெற்றுள்ளது. மேலே பூமிதேசம். பூமிதேசத்தையடுத்துச் சற்று உள்ளடங்கிய நிலையில் வேதிகையும் அதன்மீது முதல் தள ஆரஉறுப்புகளாய்க் கர்ணகூடங்களும் சாலையும் உள்ளன. சாலையும் இடப்புறக் கர்ணகூடமும் சிதைந்துவிட்டன. வலக்கர்ணகூடம் ஆறங்கம் பெற்று நிமிர்ந்துள்ளது. சாலை நாசிகையின் உயரமும் அதிலுள்ள தெய்வ வடிவத்தின் அமைப்பும் அதையும் ஆறங்கம் கொண்டதாய்க் காட்டுகிறது. மிகச் சிறிய இரண்டாம் தள அரமியத்தையடுத்துள்ள ஆரஉறுப்புகள் நான்கங்கம் பெற, சாலை நாசிகையில் தெய்வத் திருமேனி காட்டப்பட்டுள்ளது. அதைச் சுற்றி மகரவாசிகை. மூன்றாம் தள அரமியமும் மிகச் சிறியதாய் அமைய, மேலே உள்ளடங்கியிருக்கும் வேதிகையில் இருபுறமும் திசைக்கொன்றாய்த் தலைநிமிர்த்திய நந்திகள். வேசர கிரீவமும் சிகரமும் தூபியும் பெற்றுள்ள இவ்விமானத்தின் கிரீவகோட்டத்திலும் தெய்வவடிவம் இடம்பெற்றுள்ளது. கோயிலுக்குப் பின்னுள்ள தோப்பில் அடுத்தடுத்த நிலையில் இரண்டு தென்னைமரங்களும் இடக்கோடியில் பனைமரமும் அமைய, இடையில் இன்னதென அடையாளப்படுத்தமுடியாத மரம் காட்டப்பட்டுள்ளது. இரண்டாம் தென்னைமரமும் பனைமரமும் நன்கு காய்த்துள்ளன. தென்னைமரங்களில் அமர்ந்துள்ள மூன்று பறவைகளில் இரண்டு சிறகு விரித்திருக்க, ஒன்று சிறகணைத்து அமர்ந்துள்ளது. பனைமரத்தின் அடிப்புறத்தைச் சுற்றி அமைந்துள்ள இரண்டடுக்கு வட்ட மேடை அதைத் தலமரமாகக் கருதச் செய்கிறது. ஆனந்ததாண்டவர் முகமண்டபத்தில் ஆடவல்லானின் ஆனந்ததாண்டவத் திருமேனி உள்ளது. இறைவனின் நான்கு திருக்கைகளுள், இட முன் கை வேழமுத்திரையில் வலப்புறமாக மார்புக்குக் குறுக்காக வீசப்பட்டுள்ளது. வல முன் கைக் குறிப்பையும் இடப் பின் கையின் பொருளையும் ஓவியச் சிதைவால் அறியக்கூடவில்லை. வலப் பின் கையில் உடுக்கை. இறைவனின் பார்சுவ வலப்பாதம் கீழே குப்புறக் கிடக்கும் முயலகன் முதுகின் மீது ஊன்றியிருக்க, இடக்கால் குஞ்சித்த பாதத்துடன், புஜங்கத்ராசிதமாய் வலப்புறம் வீசப்பட்டுள்ளது. ஆடலுக்கேற்றாற் போல் ஆடைமுடிச்சுகள் இருபுறத்தும் நெகிழ, இடுப்பில் சிறுத்தைப் புலியின் தோலாலான ஆடை. பக்கத்திற்கு நான்காய் விரிசடைகள் பறக்க, தலையின் முன்புறத்தே அடுக்கிய கொக்கிறகுகளும் அவற்றின் கீழிருக்குமாறு மண்டையோடும் இடப்புறம் பிறையும் உள்ளன. அகிலம் உய்ய ஆனந்த நடம் நிகழ்த்தும் அண்ணலின் முகம் இடத்திருப்பமாய்க் கனிந்துள்ளது. முயலகனின் வலக்கை இடக்கையிலுள்ள படமெடுத்த பாம்பின் தலை நோக்கி உயர்ந்திருக்கக் கண்களில் அச்சமும் திகைப்பும்.
இறைவனின் ஆடல் வடிவத்தைச் சுற்றித் தீச்சுடர்களுடன் திருவாசி. அதையடுத்து மேற்புறத்தே இறைவனுக்கு இடவலமாக முப்புரிநூல் பெற்ற இரு வித்யாதரர்கள். அவர்தம் ஒரு கை போற்ற, மற்றொரு கை கடகத்தில் மார்பருகே உள்ளது. திருவாசியின் வலப்புறத்தே, இறைவனின் உயர்த்திய திருவடியின் கீழ் ஆண்வடிவமொன்று அமர்ந்து, குறுக்கீடு செய்த தன் கால்களுக்கிடையில், தாங்கலொன்றின் மேல் இடப்பெற்ற ஐமுகமுழவை வலக்கையால் இயக்கித் தாளம் தருவதில் முனைந்துள்ளது. அதன் இடக்கை மேலுயர்ந்து போற்றுகிறது. ஐமுகமுழவின் குடப்பகுதி பட்டையிடப் பெற்றுள்ளது. அதற்கு மேலிருக்குமாறு குத்துக்காலிட்டு அமர்ந்து இறையாடலைக் கண்ணுறும் வாய்ப்புற்ற தன் பேற்றிற்குக் களித்துச் செம்மாந்த நிலையில் காரைக்காலம்மையின் பேயுரு. திருவாசியின் இடப்புறத்தே கீழுள்ள பகுதியில் இறையாடலில் தனையிழந்து ஆடும் இளங்களிறாய் உதரபந்தத்துடன் பிள்ளையார். அடுத்தாற் போல் நந்தி. அதன் மீது சாய்ந்தபடி, இடக்காலை மடித்து, வலக்காலைத் தாமரைத்தளத்தில் இருத்தி ஒயிலாக நிற்கும் உமையன்னையின் தலையில் கரண்டமகுடம். தலைக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட குடை. தோளுக்குப் பின்னால் கொடித்தண்டு. அவர் வலக்கை இடுப்பிலிருக்க, இடக்கை மார்பருகே கடகமாய்க் காட்சிதருகிறது. அன்னையின் பின்னுள்ள பெண்ணின் கையில் கவரி. கழுத்தில் மணியும் உடலின் பின்புறத்தே மணிமாலையும் கொண்டுள்ள நந்தியின் அருகே காணப்படும் கோவணஆடை இளமகன் முருகனாகலாம். இந்த சிவதாண்டவத்தின் திருவாசிக்குட்பட்ட பகுதியில் பச்சை வண்ணமும் நீல வண்ணமும் கையாளப்பட்டுள்ளன. திருவாசியின் இருபுறத்துமுள்ள பகுதிகளில் பச்சை வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. காரைக்காலம்மை தவிர்த்த ஆண், பெண் வடிவங்கள் பிரௌன் வண்ணக் கோடுகளில் வரையப்பட்டுள்ளன. இவற்றின் உடல் வண்ணம், சாம்பலும் இளமஞ்சளும் கலந்ததொரு வண்ணத்தில் உள்ளன.
முகமண்டபத்தில் ஆடவல்லானை அவரது ஆடலுக்கே உரிய முழு வீச்சோடு காட்டியிருக்கும் இராஜராஜரின் எண்ண விளைச்சலுக்குப் பொருளிருக்கிறது. ஆனந்ததாண்டவத்தின் மீது அவருக்கிருந்த அளப்பரிய பற்றை இராஜராஜீசுவரத்துக் கல்வெட்டுகள் கண்ணாடியாய்க் காட்டுகின்றன. ஆதித்தர் காலத்திலேயே ஆனந்ததாண்டவக் கோலங்கள் கோயில்களில் இடம்பெறத் தொடங்கிவிட்டன என்றாலும், அக்காட்சியை உளமார்ந்த ஈடுபாட்டோடு முழுமையுறவும் பேரளவிலும் சுவர்ச் சிற்பங்களாக்கிப் பெருமை பெற்றவர், இந்த மண்ணில் வாழ்ந்த வரலாற்றுணர்வுடைய ஒரே தமிழ்ப் பேரரசி செம்பியன்மாதேவியார்தான். அவ்வம்மையின் திருப்பணிகளாய் மலர்ந்த கோயில்களுள் பெரும்பான்மையன பெரும்பற்றப்புலியூர்ப் பெம்மானைச் சுவர்ச் சிற்பங்களாய்ப் பெறும் பேறுற்றன. செம்பியத் தாயின் சீர்மைகளைக் கண்டு வளர்ந்த இராஜராஜர், பதிகங்களில் பொதிந்திருந்த இறையாடல் உண்மைகளையும் அவற்றின் பின்புலங்களையும் தெள்ளத் தெளிந்தவராய், ஆடவல்லானின் அசைவுகளில் தமையிழந்தார். கலைகள் அனைத்திலும் கருத்து செலுத்தியவர்தான் என்றபோதும், ஆடலின்பால் அவருக்கிருந்த ஈடுபாடே தனிதான். தளிச்சேரிக் கல்வெட்டு அதைத் தெளிவாய்ப் படம்பிடிக்கிறது. இறைவனுக்குப் பல திருத்தோற்றங்கள் இருந்தபோதும், அவற்றுள் சிலவற்றின்பால் இராஜராஜர் ஆழமாய் வயப்பட்டிருந்தபோதும், ஆடவல்லானை அவர் நேசித்த விதமே தனி. அதனால்தான், கோயில் அளவைக்குக்கூட ஆடவல்லான் பெயரை அளித்தார்.
அஞ்சைக்கள முகமண்டபத்தில் ஆடவல்லான் இடம்பெற்றதற்குச் சுந்தரர் வரலாறும் ஒரு காரணமாகும். சேவடிச் சிலம்பொலி கேட்டே வாழ்ந்த பெருமாக்கோதையின் ஈடுபாடும் அது ஒலிக்கத் தவறியதால் விளைந்த சேரமான், சுந்தரர் சந்திப்பும் அதன் பலனாய் மலர்ந்த அரியதொரு நட்பும் ஆனந்ததாண்டவத்தின் எதிரொலிகள் என்பதை இராஜராஜர் உணர்ந்திருந்தார். சிலம்பொலியில் சிந்தையிழந்ததில் தமக்கும் பெருமாக்கோதைக்கும் இருந்த ஒற்றுமையும் அவரை மயக்கியது. காலங்காலமாய்த் தம் முன்னோர்கள் பொன் வேய்ந்து வளப்படுத்திய அம்பலத்துள் ஆடும் அரசை, இராஜராஜீசுவரத்தின் சாந்தாரத்திற்குள்ளும் ஆடவைக்க அப்பெருந்தகை எண்ணம் வளர்த்ததன் விளைவே, அஞ்சைக்களத்துத் திருக்கோயில் முகமண்டபத்துள் ஆனந்தக்கூத்தர் வடிவெடுத்தமை எனலாம். சிவக்குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இடப்புறமிருந்து காண, மூத்த திருப்பதிகம் என்று பெருமைப்படுத்தப்பட்ட பதிகங்களைப் பாடி, இறையாடலின் பெருமைகளையும் பொலிவுகளையும் உலகறியச் செய்த காரைக்காலம்மை, வேண்டுகோள் நிறைவேறிய மகிழ்ச்சியுடன், அடியார்க்கு அடியாராய் வலப்புறம் அமர்ந்து ஆடல் காண, குடமுழவ ஜதிகளுக்குக் கால் உயர்த்தியாடும் இறைவனின் இந்த ஆனந்தக்கூத்துப் போல் அமைந்ததொரு காட்சி, தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் சிற்பமாகவோ ஓவியமாகவோ இதுநாள்வரையிலும் இராஜராஜருக்கு முன்போ, பின்போ உருவாகவேயில்லை என்பது தான் இப்படப்பிடிப்பின் தனித்தன்மை, சிறப்பு, மகோன்னதம். |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |