![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 9
![]() இதழ் 9 [ மார்ச் 15 - ஏப்ரல் 14, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
'இடர்களையாய் நெடுங்களம் மேயவனே' என்று பதிகத்தின் பத்துப் பாடல்களிலும் பரிந்துரைக்கும் சம்பந்தரின் தேவாரம் பெற்ற திருத்தலமான நெடுங்களம், திருச்சிராப்பள்ளித் தஞ்சாவூர் நெடுஞ்சாலையில், துழாய்க்குடிக்கு வடக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இரண்டு கோபுர வாயில்களுடன் முற்சோழர் சிற்பங்களும் கொண்டு செம்மாந்து விளங்கும் இத்திருக்கோயிலில் பன்முறை ஆய்வு மேற்கொண்ட டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் பதினாறு புதிய கல்வெட்டுகளை இவ்வளாகத்திலிருந்து கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளனர். இக்கல்வெட்டுகளுள் ஒன்று, சுற்றுத் தரையிலிருந்தும் மூன்று, சுற்றுமாளிகைக் கூரையிலிருந்தும் இருகோபுரங்களுக்கிடையிலுள்ள நடைப்பகுதியிலிருந்து இரண்டும் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பணிக் காலத்தே, இருந்த இடங்களிலிருந்து அகற்றப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்படவேண்டுமென்ற அறிவுறுத்தலோடு திருப்பணிக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்ட இக்கல்வெட்டுகள் குடமுழக்கின் போது தூக்கியெறியப்பட்டுக் கோயில் வளாகத்தில் குவிந்திருந்த வேண்டாக் குப்பைகளோடும் பிற கற்களோடும் போய்ச்சேர்ந்தன. இயக்குநர் இரா.கலைக்கோவன் வழிகாட்டலில், நெடுங்களம் குருசாமியின் துணையோடு, மீண்டும் மைய ஆய்வர்கள் ஒரு பகல் முழுவதும் போராடி, இக்கல்வெட்டுகளைக் கண்டறிந்து கோயிலுக்குள் அவை சேருமாறு செய்தனர். எத்தனையோ முயற்சி செய்தும் பிற்சோழர் காலக் கூத்துகள் பற்றிப் பேசும் ஒரு கல்வெட்டைக் கண்டறியக்கூடவில்லை.
புதிதாக கண்டறியப்பட்ட இப்பதினாறு கல்வெட்டுகளுள், கி.பி. எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த காவல் கல்வெட்டே காலத்தால் முற்பட்டதாகும். 'ஸ்ரீபுறக்குடிப்பள்ளிச் சேந்தன் குழிவினர் காவல். இது காத்தார் அடி மேலன கையும் தலையும்' எனும் பாடம் கொண்டமைந்துள்ள இக்கல்வெட்டால் புதிய சமணத் தலமொன்றின் பெயர் கிடைத்துள்ளது. பல்லவ அரசர் தந்திவர்மரின் இரண்டாம் ஆட்சியாண்டில் (கி.பி.798) வெட்டப்பட்டுள்ள கல்வெட்டின் தலைப்பில், அழகிய திரிசூலம் வெட்டப்பட்டுள்ளது. இத்திரிசூலத் தண்டின் இருபுறத்தும் பக்கத்திற்கொன்றாகப் பக்கவாட்டில் திரும்பியமர்ந்த நிலையில் இரு நந்திகள். நந்திப்பொறிப்போடு தமிழ்நாட்டில் கிடைத்துள்ள முதல் பல்லவர் கல்வெட்டாக இதைக் கொள்ளலாம். தமிழில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு, ஒன்பது வரிகளில் அமைந்துள்ளது. மாற்பிடுகு விழுப்பேரையனான சாத்தன் உதையாங்குரன், திருநெடுங்களத்து இறைவனுக்குப் பதினைந்து கழஞ்சுப் பொன் வைத்த தகவலைத் தரும் இதில், ஒலோச்சன் அரைக் கழஞ்சும் சேந்தன் ஆறு கழஞ்சும் மற்றொருவர் ஆறு கழஞ்சும் இக்கோயில் இறைவனுக்களித்த செய்தியும் இடம்பெற்றுள்ளது. இக்கற்பலகையின் பின்னாலுள்ள இதே காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு, மன்னர் பெயரோ, ஆட்சியாண்டோ இல்லாமல், பன்னிரண்டு வரிகளில், இக்கோயிலில் திருவிளக்கு எரிக்கத் தற்புரு்ஷக் கண்ணர், ஒழுகந்தாழி, சாத்தன் வன்னி, இடையர்கள் நம்பி, சுவரன் காரி, ஆகியோர் இணைந்தளித்த பன்னிரண்டு கழஞ்சுடன் தட்டார்ப் பொன் கழஞ்சும் சேர்த்துப் பதின்மூன்று கழஞ்சு முதலாக வைக்கப்பட்ட தகவலைத் தருகிறது. 'பதின் முக்கழஞ்சு' எனும் சொல்வழக்கு கவனிக்கத்தக்கது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கொள்ளத்தக்க, பாண்டிய வேந்தர் கோமாறஞ்சடையரின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் நெடுங்களத்து இறைவனுக்குப் பொன் அளிக்கப்பட்ட தகவலையே தருகிறது. தேவூர் நாட்டு ஏனத்தன்குடியைச் சேர்ந்த சாத்தன் சேரன் என்பார், மாங்கானல் எனும் ஊரைச் சேர்ந்தவரின் பொறுப்பில் இக்கோயிலுக்கு இரண்டு கழஞ்சு பொன் கொடையளித்தார். இம்மாங்கானல் இன்றும் அதே பெயருடன் நெடுங்களத்தையடுத்து அமைந்துள்ள சிற்றூராகும். சோழர் தோன்றல்களான முதலாம் ஆதித்தர், முதலாம் பராந்தகர் காலக் கல்வெட்டுகள் ஐந்து இக்கோயிலில் ஏற்றப்பட்ட விளக்குகள் குறித்தும், அவற்றிற்குத் தரப்பட்ட கொடைகள் குறித்தும் விரிவாகப் பேசுகின்றன. பெரியந்தைக்குடி வடுகன் வடுகி, நெடுங்களம் இறைத்திருமுன் இரவும் பகலும் நந்தாவிளக்கு ஒன்றெரிவதற்காக முதலாம் ஆதித்தரின் இருபத்தேழாம் ஆட்சியாண்டில் கொடையளித்துள்ளார். கல்வெட்டு முற்றுப் பெறாமையின் கொடையாகத் தரப்பட்டது நிலமா, பொன்னா, கால்நடைகளா என்பதை அறியக்கூடவில்லை. முதற்பராந்தகரின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டில் (கி.பி.926) வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுள்ள தூண், சுற்றுமாளிகையின் வடமேற்குக் கூரையாக மாறியிருந்தது. திருப்பணியாளர்களின் உதவியுடன் இதையகற்றிப் படித்தபோது, குழித்தண்டலை (தற்போது குழித்தலை - குளித்தலை) யைச் சேர்ந்த வாச்சிய கோத்திரத்து முருகன், இக்கோயிலில் பகல் விளக்கொன்று எரிக்க நாற்பத்தைந்து ஆடுகள் கொடையளித்த தகவலைப் பெறமுடிந்தது. இவ்வாடுகளைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்ட எயில் நாட்டு அட்டுப்பள்ளி நியமத்தைச் சேர்ந்த கள்வன் உலங்கண் நாளும் ஆழாக்கு நெய்யிட்டு விளக்கெரிக்க ஒப்புக்கொண்டார். முதற்பராந்தகரின் ஆட்சிக் காலத்தில், கேரள நாட்டுக் கொடுங்கோளூரைச் சேர்ந்த குமரன் ஸ்ரீகண்டன், இத்திருக்கோயில் இறைவன் திருமுன் நந்தாவிளக்கொன்று ஏற்றுவதற்காக நெடுங்களம் சபையாரிடம் நிலமொன்றை வாங்கிக் கோயிலுக்குக் கொடையளித்தார். இந்நிலத்தின் விளைவு கொண்டு விளக்கேற்றக் கோயிலார் ஒப்பினர். முதற்பராந்தகரின் ஆட்சிக் காலத்தில் குமரன் ஸ்ரீகண்டனைப் போல் கொடுங்கோளூரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து குடியிருந்தவர்கள், கோயில்களுக்குக் கொடையளித்தவர்கள் பலராவர். இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் பரவலாகக் கிடைப்பது இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்கது. கொடையளித்த குமரன் ஸ்ரீகண்டன் நிலத்துண்டின் எல்லைகளுள் ஒன்றாக அம்பலச் செய் குறிக்கப்படுகிறது. இது அக்காலத்தே நெடுங்களத்திலிருந்த அம்பலத்தைப் பராமரிப்பதற்காக விடப்பட்ட நிலமாகும். இத்தகு அம்பலங்கள் சோழர் காலத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் இருந்துள்ளன. இவை கல் அம்பலங்களாகவோ செங்கற் கட்டுமானங்களாகவோ விளங்கின. ஊர் மக்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் இங்கு நடந்தேறின. உத்தம சோழரின் காலத்ததாகக் கொள்ளத்தக்க, மன்னன் பெயரற்ற கல்வெட்டினால், நெடுங்களம் கோயிலில் ஸ்ரீகாரியம் ஆராய்ந்த செம்பியன் வடபுறையூர் நாட்டு மூவேந்த வேளார், வானவன் பேரையன், தாங்கி இருள்நீக்கி ஆகியோரிடம் ஆளுக்கு நாற்பத்தைந்து ஆடுகளெனப் பெற்று, இக்கோயிலில் நந்தாவிளக்கொன்று ஏற்றுமாறு செய்தார். ஆடுகள் தொண்ணூறும் இடையர் குடும்பத்திடம் ஒப்புவிக்கப்பெற்றன. இவ்விடையர்களுள் ஒருவர் பெயர் கருவூரன் எச்சில். விளக்குகளுக்காக ஒப்புவிக்கப்பெறும் இவ்வடுகளைப் பொதுவாகச் 'சாவா மூவாப் பேராடுகள்' எனும் மரபுத் தொடரால் குறிப்பர். ஆனால் இக்கல்வெட்டு, 'சாவா மூவாப் பல்லாடு' எனும் மாறுபட்ட தொடரைப் பெய்துள்ளது. கி.பி. பத்தாம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ள சிதைந்த கல்வெட்டொன்று இக்கோயிலில் இறைத்திருமுன் இரண்டு நந்தாவிளக்குகள் ஏற்றுவதற்காகப் பாடிக்கல்லால் அளக்கப்பெற்ற 120 கழஞ்சு பொன் கொடையளிக்கப்பட்ட தகவலைத் தருகிறது. இதை முதலாகக் கொண்டு, பொலிந்த வட்டியினால், நாளும் நாராய நாழியால் இருநாழி நெல்லளந்து நெய்பெற்று, நூலால் திரியிட்டு, இரண்டு விளக்குகள் இரவும் பகலும் இங்கு எரிக்கப்பட்டன. இவ்வறத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டவர்களாக நெடுங்களத்து சபையாரும் ஊராரும் கிளிமதிமங்கலத்து சபையாரும் கல்வெட்டில் சுட்டப்பெறுகின்றனர். கிளிமதிமங்கலம் இக்கல்வெட்டின் வழி கிடைத்துள்ள புதிய சோழர் கால பிரமதேயமாகும். தோன்றின நாள் தொட்டு விளைந்தறியாத களர், திடல் நிலங்களைப் பண்படுத்தி விளைச்சலுக்குக் கொணரும் பழக்கம் சோழர் காலத்தில் மிகுதியாக இருந்ததைக் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. இத்தகு நிலங்கள் பண்படுத்தப்பட்ட நிலையில் வயக்கல் என்று அழைக்கப்பட்டன. புதிதாகக் கிடைத்திருக்கும் பாண்டிய மன்னர் கோமாறஞ்சடையரின் பதினொன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இப்பழக்கம் முற்பாண்டியர் காலத்திலேயே வழக்கிலிருந்ததை வெளிச்சப்படுத்துகிறது. நெடுங்களம் கோயிலுக்குச் சொந்தமான தேவதான ஊராக அறிவிக்கப்பட்டிருந்த மேலைக்குறிச்சியிலிருந்த, தோன்றின நாள் தொட்டு விளைந்தறியாத களர், திடல் நிலங்களை காமநெறி என்பார் மயக்கி விளைச்சலுக்கு கொணர்ந்தார். நெடுங்களத்து கணத்தார் இந்நிலப்பகுதிக்குக் கோதுகுலவர்க்காணி எனப் பெயரிட்டனர். இக்காணியை உழுத குடிகள், இந்நிலத்தில் பயிர் செய்தாலும் செய்யாது போனாலும் நாள் தோறும் முந்நாழி குத்தலரிசி கோயிலுக்குத் தரவேந்துமென ஒப்பந்தமிடப்பட்டது. இப்படிச் செலுத்தப்பட்ட அரிசி, 'சிறுகுடி' எனும் பெயரால் கோயிற் கடமையாகக் கொள்ளப்பட்டது. 'தோன்றின நாள் தொட்டு விளைந்தறியாத' எனுஞ் சொல்லாட்சி கவனத்தில் கொள்ளத்தக்கது. கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மன்னர் பெயரற்ற கல்வெட்டொன்று, ஸ்ரீபுறக்குடிப்பள்ளி எனும் சமணத் தலத்தில் நடந்த சித்திரை விழாவிற்கும், தேவர், இயக்கி பூசைக்கும் கனகசேனனால் அளிக்கப்பட்ட நூறு ஈழக்காசுகளைச் சுட்டுவதுடன், அக்காசுகளைப் பெற்று நிவந்தங்களை நிறைவேற்ற ஒப்புக்கொண்டவரான வீரனையும் பார்வைக்குக் கொணர்கிறது. உள் சுற்றின் தென்பகுதித் தரையில் கால்பட்டே தேய்ந்து போயிருந்த முதலாம் ஆதித்தரின் கல்வெட்டு, வீரதொங்கபுரத்து இறைவருக்குத் தோடன் காடன் வழங்கிய இசைக்கருவிகளையும் பரிகலங்களையும் அடையாளம் காட்டுகிறது. இரண்டு காளங்கள், ஒரு மத்தளம், மூக்கு மத்தளம் ஒன்று என இசைக்கருவிகளும், பரிகலம் இரண்டு, சட்டுவம் ஒன்று எனப் பாத்திரங்களும் இவரால் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள் அரிய செய்தி மூக்கு மத்தளம். தமிழ்நாட்டில் எத்தனையோ கோயில்களில் மத்தளங்கள் முழக்கப்பட்டுள்ளன. ஆனால், மூக்கு மத்தளம் நெடுங்களம் கோயிலில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள மற்றொரு கல்வெட்டும் மூக்கு மத்தளம் பற்றிக் குறிப்பிடுவது சிறப்புக்குரியதாகும். முதல் இராஜேந்திர சோழரின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இங்குள்ள பிள்ளையார் திருமுன்னில் பல துண்டுகளாய்ச் சிதறிக் காணப்படுகிறது. இக்கல்வெட்டில் நெடுங்களம் பாண்டிகுலாசனி வளநாட்டிலிருந்த வடகவிர நாட்டின் ஊராகக் குறிக்கப்படுகிறது. நெடுங்களநாதரின் அர்த்தயாம வழிபாட்டிற்கும் படையலுக்குமான செலவினங்களுக்காக உத்தமசோழ மூவேந்த வேளான் நிலமொன்றைக் கொடையளித்த தகவல் இக்கல்வெட்டால் கிடைக்கிறது. இந்நிலத்தின் எல்லைகளைச் சுட்டும்போது, கல்வெட்டு, அரையன் மயக்கல், பரதன் வயக்கல், உலோகவிடங்கன் வயக்கல், குடிதாங்கி வயக்கல், கண்ணபிரான் வயக்கல் முதலிய பண்படுத்தப்பட்டுப் பெயரேற்ற நிலத்துண்டுகள் சிலவற்றைக் குறிப்பிடுவதுடன் ஓடை, வாய்க்கால் போன்ற நீர்நிலைகளையும், பெருவழிகளையும் குறிப்பிடுகிறது. நெடுங்களம் கோயிலுக்குரிய தேவதான நிலப்பகுதிகளாக, கிள்ளிவயல் தென்கண்டம், முழுக்குடிப்பாலை ஆகியன காட்டப்பட்டுள்ளன. கொடையளிக்கப்பட்ட நிலம் விளைந்தறியாத்திடலாய் இருந்தது. இதை நீர்பூசி நெல் விளையத் திருத்திய தேவரடியார் சூற்றிக் கூத்தனும் பராந்தகன் பிடவூரும் கோயிலுக்கு நூறு கலம் நெல் அட்டுவதாக உறுதியளித்தனர். இந்நெல் கொண்டு அர்த்தயாமப் பூசையின்போது பருப்புக் கலந்த நெய்ச் சோறு, கறியமுது, சர்க்கரை, வெற்றிலை பாக்கு, ஆகியன இறைவனுக்குப் படைக்கப்பட்டன. பிற்சோழர் காலத்ததாகக் கொள்ளத்தக்க சிதைந்த துண்டுக் கல்வெட்டொன்று, நெடுங்களம் கோயிலில் சித்திரைத் திருவிழாவின்போது புவனசுந்தரி கல்யாணம், திருநெடுங்கள புராணமான வினைய பராக்கிரமம் உள்ளிட்ட ஏழு கூத்துக்களை ஆடிய கலைஞர்களுக்கு இருபத்தைந்து கலம் நெல்லளிக்கப்பெற்ற தகவலைத் தருகிறது. திருப்பணிக்குழுவினரிடம் ஒப்புவிக்கப்பெற்ற அரிய தரவுகள் நிறைந்த இக்கல்வெட்டு குடமுழுக்கின் போது தூக்கியெறியப்பட்டு, இன்று பார்வைக்குக் கிடைக்காப் பொருளாகியுள்ளது. நெடுங்களம் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமுன் வாயில் உத்திரத்தில் காணப்படும் முதற்குலோத்துங்கரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இத்திருமுன்னுக்கு முன்னால் அமைந்துள்ள மண்டபத்தை எடுத்தவராக கிளியூர் நாட்டுக் கள்ளிக்குடி அரையன் மகனார் ஆதித்தன் உலகனான விசையாலய முத்தரையனைச் சுட்டுகிறது. திருச்சுற்று மாளிகையின் மேற்கிலுள்ள தூண்கள் சிலவற்றில், அவற்றை அளித்தவர்களாக மாத்தூர் மடந்தை பாகன் குருகுலராயன், கீரனூர் வாசிதேவன் காலிங்கராயன், நுணாங்குறிச்சிச் சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி, செங்கனிவாயன் ஆகியோர் பெயர்கள் வெட்டப்பட்டுள்ளன. நெடுங்களத்திற்குப் பக்கத்திலுள்ள துழாய்க்குடிக் குலோத்துங்க சோழீசுவரம் திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது இது போன்றே கோயிலின் பல்வேறு கட்டட உறுப்புகளைக் கொடையளித்தவர் பெயர்களாக வளம்பக்குடி அரசன் புத்தர் சாரண சாமந்தனார், அலையூர் அந்தரிப் பாப்பான்களான உதையஞ்செய்தான் சங்கப் புலவன், நேர்க்கரியான் சோறன் ஏதகாவத்தி, வினையஞ்செய்தான் நாயன் நாட்டுப் புலவன் பெரியான் சோழனான இராயிரமணி, திருவையாறன் பிள்ளான் சிறு புலவன் முதலிய பெயர்கள் கிடைக்கின்றன. சங்கப் புலவன், நாட்டுப் புலவன், சிறு புலவன் எனும் பெயர்கள் ஆய்வுக்குரியன.this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |