![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 9
![]() இதழ் 9 [ மார்ச் 15 - ஏப்ரல் 14, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அற்புதச் சிற்பங்களும், அழகிய கட்டுமனமும் கொண்ட கோயில்களெல்லாம் தஞ்சை, குடந்தை, திருச்சிராப்பள்ளி என்று காவிரி கரையோரமே மிகுந்து இருக்கிறதே, தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாமல்லபுரத்தைத் தவிர அதிகம் பார்க்க ஏதும் இடங்கள் இல்லையா?, என்று முனைவர் கலைக்கோவனைக் கேட்டேன்.
அதற்கு அவர், "தொண்டை மண்டலத்தில் பல கோயில்கள் உண்டு. திருவொற்றியூரும், திருவான்மியூரும் பழைய கோயில்கள்தானே. உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பாடியில் கூட ஒரு தேவாரத் தலமிருக்கிறதே!", என்றார். அவர் கூறியதைக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. கிட்டத்தட்ட 6 வருடங்கள் பாடி வழியாய் பள்ளிக்குச் சென்ற நான், அங்கொரு தேவாரத் தலமிருந்த்தற்கான எந்த ஒரு சுவடையும் கண்டதில்லை. மார்ச் ஆறாம் தேதி சென்னைக்குச் அலுவலக வேலையாகச் சென்றிருந்த பொழுது, இக்கோயிலைப் பற்றி விசாரித்தேன். பலர் இதைப்பற்றி அறிந்திருக்காவிடினும், வாடிக்கையாய் இக்கோயிலுக்குச் செல்லும் சிலரும் இருந்தார்கள். இவர்கள் இக்கோயிலைப் பற்றிச் சொல்லிய விவரங்களிலிருந்து, சம்பந்தர் பாடிய திருவலிதாயம் இதுதானா என்று சற்று சந்தேகமாக இருந்தது. "ஆலங்குடிக்கு அடுத்து விசேஷமான குரு ஸ்தலம் பாடியில் இருக்கு. ஒவ்வொரு வியாழக் கிழமையிம் போய் மஞ்சள் துணி சாத்தினா, நல்லா படிப்பு வரும்", என்றெல்லாம் கோயிலின் மகத்துவத்தைக் கூறினார்கள். கோளறு திருப்பதிகம் பாடிய சம்பந்தர் பாடிய தலமாக இந்த குருஸ்தலம் இருக்குமா என்ற ஐயம் உறுத்திக் கொண்டேயிருந்தது. ஆனது ஆகட்டும் என்று கோயிலை நோக்கி, என் அன்னையுடன் சில நண்பர்கள் புடை சூழ கிளம்பினேன். பாடியில் இருக்கும் லூகாஸ்-டிவிஎஸ் தொழிற்சாலையையொட்டி இருக்கும் கோயில் படைவேட்டம்மன் கோயில். இக்கோயிலுக்கு எதிர்புறம் செல்லும் சாலையில் சுமார் 400 மீட்டர் தொலைவில் வலப்பக்கம் இருப்பது 'வாலீஸ்வரர் கோயில்' என்றழைக்கப்படும் 'திருவலதாயமுடையார் கோயில்'. பொதுவாகவே, பழைய கோயிலென்றால், ஆளறவமற்று, சற்றே பாழடைந்த நிலையில் இருக்கும் என்பது எங்கள் ஊகம். இக்கோயில் நன்கு பராமரிக்கப்பட்டு, பலர் வந்து வணங்கும் வகையில் இருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. கிழக்கு நோக்கியிருக்கும் வாயிலைக்கடந்து, வலிதாயநாதரை நோக்கி நடந்தோமெனில், முதலில் நாம் நுழைவது ஒரு முக மண்டபத்தில். இம்மண்டபத்தின் தூண்களில் இருக்கும் சிற்பங்களின் அமைதியைக் கொண்டு, இம்மண்டபம் நாயக்கர் காலத்தினதாகக் கொள்ளலாம். "வண்டுவைகும்மண மல்கியசோலை வளரும்வலிதாயம்" என்று சம்பந்தர் புகழும் திருவலிதாயமுடையாரை வணங்கிய பின், முதல் பிரகாரதைச் சுற்றி வந்தோம். விமானத்தின் அதிஷ்டானம், ஜகதி, கண்டபாதம், எண்பட்டைக் குமுதம் என்று பாத பந்த அதிஷ்டானமாச்க அமைந்துள்ளது. விமானத்தின் வடிவு தூங்கானைமாடமாக இருக்கிறது. அழகிய குட பஞ்சரங்களும், வேதிக் கண்டப் பகுதியில் சில கையளவுச் சிற்பங்களும் கொண்ட அற்புத கஜ-பிருஷ்ட விமானத்தைக் கண்ட எங்கள் அனைவருக்கும் உவகை பெருகியது. 'ஒற்றைஏறதுடை யான்நடமாடியோர் பூதப்படைசூழ்' என்ற தேவார வாக்குக்கிணங்க திருவலிதாயத்தை சூழ்திருக்கும் பூதங்களை வலபிப் பகுதியில் பூதவரியாகக் காண்போம் என்று நினைத்திருந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வலபியில் பத்மவரி ஓடுகிறது. போதிகை தரங்கமாகவும், வெட்டுப்போதிகையாகவும் இல்லாமல், சிறிய பூமொட்டோடு இருப்பதிலிருந்து இராஜராஜ சோழர் காலத்துக்குப் பிற்பட்டதெனக் கொள்ளலாம். தென்திசை கோட்டங்களில் விநாயகரும், தென் திசைக் கடவுளும் வீற்றிருக்கிறார்கள். குமுதம் மற்றும் சுவர் பகுதியில் பல கல்வெட்டுகள் இருக்கின்றன. வெளிச்சமின்மையால் அவற்றை முழுமையாக படிக்கமுடியவில்லை. மேற்கு கோட்டத்தில், திருமால் சிற்பம் இருக்கிறது. வடக்கு கோட்டங்களில் பிரம்மனும் கொற்றவையும் காட்சியளிக்கிறார்கள். கொற்றவைக்கு விளக்கேற்ற வரும் பக்தர்களுக்கு வசதியாய், ஒரு அமைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஆன உபகாரம், எண்பட்டைக் குமுதத்தின் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் மறைத்துவிடுகிறது. இவ்விடத்தில் சற்றே வெளிச்சமிருந்த்ததால், கல்வெட்டைப் படிக்க முயன்றோம். 'திரிபுவச் சக்கரவத்திகள் இராஜராஜ தேவரின்' கல்வெட்டொன்றைக் கண்டோம்.அக்கல்வெட்டில், 'ஜெயங்கொண்ட சோழ வளநாட்டு, புழற் கூற்றத்து, அம்பத்தூர் நாட்டு, திருவலிதாயமுடையார்' என்றிருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினோம். 'புழல்' மற்றும் 'அம்பத்தூர்' போன்ற பெயர்கள் குறைந்த பட்சம் 700 ஆண்டுகள் முன்பே தோன்றியவை என்று நினைக்கவே ஆச்சரியமாக இருந்தது. இக்கல்வெட்டின் சில பகுதி கொற்றவை கோட்டத்துக்கு கீழ் மறைந்துள்ளது. இக்கோயில் அறிவுப்பு பலகையில், வழக்கமாய் இருக்கும் தல புராணங்கள் (இவர் அவர் எவரெவர் எல்லாம் சாபம் நீங்கிய கதை) தவிர வரலாற்றுச் செய்திகளும் இருக்கக் கண்டோம். இக்கோயிலில் பதினைந்து கல்வெட்டுகள் இருப்பதாகவும், மூன்றாம் இராஜராஜரின் கல்வெட்டே பழமையானதாகவும் இப்பலகை தெரிவித்தது. வடக்கில் ஒரு சிற்பத்தில், கோலாட்டமும், யாழும், மத்தளமும் காட்டப்பட்டிருப்பதாக இப்பலகை கூறியது. நாங்கள் சென்று பார்த்த பொழுது அந்த நாயக்கர் காலச் சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளது அது யாழல்ல வீணை என்று விளங்கியது. முகமண்டபத்தின் வடக்கில் தென்திசையை நோக்கி அம்மன் திருமுன் இருக்கிறது. விமானத்தின் இரண்டாவது தளத்தை இம்மண்டபத்தின் வெளியில் வந்துதான் காண முடியும். இரண்டாவது தளத்தில், பிக்ஷாடனர், ஆனை உரித்த தேவர், தென் திசைக் கடவுள், ரிஷபாந்திகர் சிற்பங்கள் இருக்கிறது. இச்சிலைகள் அனைத்தும் சமீபத்தியவையாகவே தெரிகிறது. திருவலிதாயமுடையார் திருமுன்னிற்கெதிரில் மேற்கு நோக்கியிருக்கும் இக்காலத் திருமுன் 'குரு பகவானுக்கு' உரியது. நாங்கள் செறிருந்த பொழுதுகூட இங்கு மஞ்சள் துணி சாற்றும் பலரைக் காண முடிந்தது. இவ்வாலையத்தையடுத்து ஒரு அம்மன் ஆலயம் இருக்கிறது. அவ்வாலயத்தில் பைரவர், சப்த கன்னியர், விநாயகர் சிற்பங்களும் இருக்கிறது. ஓர் இனிய மாலைப்பொழுதில் மூன்றாம் இராஜராஜ தேவர் எழுப்பிய கற்றளியைக் கண்டு மகிழ்ந்து, அவ்வாலயத்தில் சிறிது நேரம் அமர்ந்து, சு.கி.சிவத்தின் 'கர்ணன்' சொற்பொழிவையிம் சற்று கேட்டுவிட்டு நிறைந்த மனத்துடன் வீடு திரும்பினோம்.this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |