![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 114
![]() இதழ் 114 [ டிசம்பர் 2014 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
திருச்சிராப்பள்ளி மாவட்டத் திருக்கோயில்களில் திருவரங்கம் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் காலப் பழைமையது. சோழ அரசை வடக்கிலும் மேற்கிலும் விரிவாக்கிய முதலாம் ஆதித்தர் காலப் பதிவுகளே இக்கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டவை. அரங்கத்துக் கல்வெட்டுகளில், விசயநகர வேந்தர்களின் ஆட்சிக்காலப் பதிவுகளை அடுத்து, எண்ணிக்கையில் மிகுதியாக விளங்குபவை சோழர் கால ஆவணங்களே. பதினாறு சோழ அரசர்களின் ஆட்சிக்காலத்தே நிகழ்ந்த பதிவுகளைப் பெற்றுள்ள இக்கோயிலில், மெய்க்கீர்த்தி கண்ட சோழரான முதலாம் இராஜராஜர் காலக் கல்வெட்டுகளாக ஒன்பது ஆவணங்கள் உள்ளன. ஆனால், அவற்றுள் ஒன்றுகூட முழுமையான அளவில் இல்லை. அரங்கத்தில் காலந்தோறும் நிகழ்ந்த திருப்பணிகள் இராஜராஜர் காலக் கல்வெட்டுகளைத் துண்டாடியுள்ளன. எனினும், கிடைத்திருக்கும் துணுக்குகளே அவர் ஆட்சிக்கால அரங்கர் கோயில் வரலாறு பற்றிய பயனுள்ள குறிப்புகளை வழங்குகின்றன. தமிழ்நாட்டில் பரவலாகக் கிடைத்திருக்கும் முதலாம் இராசராசர் கல்வெட்டுகள், அவர் 29 ஆண்டுகள் ஆட்சி செய்தமையைத் தெரிவிக்கின்றன. அரங்கம் தவிர, தமிழ்நாட்டின் வேறெந்தப் பகுதியிலும் 29க்கு மேற்பட்ட ஆட்சியாண்டைச் சுட்டும் அவரது கல்வெட்டுகள் கிடைத்தில. ஆனால், இராஜராஜரின் 32ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டொன்று, அரங்கர் கோயிலின் கொட்டாரத்திருந்த தூணிலிருந்து படியெடுக்கப்பட்ட குறிப்புடன் கல்வெட்டுத் தொகுதியில் பதிவாகியுள்ளது. பலமுறை முயன்று தேடியும் இத்தூணை அரங்கத்தில் கண்டறியக்கூடவில்லை. இறைவன் நாளும் சேனா நடை (சென்னடை?) எனும் முகத்தலளவையால் அளக்கப்பெற்ற நான்கு நாழி பால் கொள்வதற்காக, இராஜராஜரின் 32ஆம் ஆட்சியாண்டில் மதுராந்தகன் சுந்தரசோழரான இராஜராஜ இளங்கோ வேளார் நூறு பசுக்களைக் கொடையளித்தார். கொடைப் பொறுப்பேற்ற அரங்கத்து சபையார் நிலவும் கதிரும் உள்ளவரை இவ்வறம் தொடருமென உறுதியளித்தனர். மன்னரின் மெய்க்கீர்த்தி ஓரளவிற்கேனும் இடம்பெற்றுள்ள முன்று கல்வெட்டுகளுள் இதுவும் ஒன்றாகும். மெய்க்கீர்த்தி பெற்றுள்ள மற்றொரு கல்வெட்டு, மன்னரின் படைத்தலைவர் குரவன் உலகளந்தானான இராஜராஜ மாராயன் குடிஞைக்கல்லால் நிறுக்கப்பட்ட பொன் கொண்டு இறைவனுக்கு அணிகலன் செய்தளித்த தகவலைப் பகிர்ந்து கொள்கிறது. இதே படைத்தலைவர் இராஜராஜரின் 16ஆம் ஆட்சியாண்டில் இறைவனுக்குப் பெருந்திருவமுது அளிக்கவும் அதைச் செய்தவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கவும் அரங்கத்து சபையாரிடம் பொற்கொடையளித்தமை ஐந்து துண்டுகளாகச் சிதறியுள்ள மற்றொரு கல்வெட்டால் தெரியவருகிறது. மெய்க்கீர்த்தி ஒரு துண்டிலும் செய்தி ஒரு துண்டிலுமாய்ச் சிதறிக் கிடக்கும் கல்வெட்டு இறைப் படையல்களுக்காக 40 கழஞ்சுப் பொன் தரப்பட்டதாகக் கூறுகிறது. படையல்களில் 300 வாழைப்பழமும் அடக்கம். இராஜராஜரின் 19ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, அரங்கப் பெருமானுக்குப் பெருந்திருவமுது அளிக்கப் பொன் கொடையளிக்கப்பட்டதாகக் கூறுவதுடன், அமுது செய்வார், விறகிடுவார், தண்ணீர் அட்டுவார் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட ஊதியக் குறிப்பையும் கொண்டுள்ளது. மன்னரின் 24ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு வேம்பற்றூராகிய அவனிநாராயண சதுர்வேதிமங்கலத்தைச் சேர்ந்த கொடையாளி ஒருவர் பங்குனி, ஐப்பசித் திருநாட்களில் அரங்கருக்கு நாளும் இரண்டு பருப்புப் போனகம் பழம்படித் தந்திட 14 கழஞ்சுப் பொன்னை அரங்கத்து சபையாரிடம் அளித்தமை கூறுகிறது. அவனிநாராயணன் மூன்றாம் நந்திவர்மரின் விருதுப் பெயராகும். இராஜராஜர் காலம் வரை பல்லவ மன்னர் ஒருவரின் பெயர் ஊர்ப்பெயராகத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 14 துண்டுகளாகச் சிதறடிக்கப்பட்டிருக்கும் இராஜராஜரின் 7ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் 7 துண்டுகளாகப் பதிப்பிக்கப்பட்டிருக்கும் இராஜராஜரின் ஆட்சியாண்டு தெரியாத கல்வெட்டும் இரண்டு வரிகள் மட்டுமே உள்ள அவரது மற்றொரு 7ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் அரங்கத்திலுள்ள குறளப்பன் கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில, திருவானைக்கோயில் இறைவனைச் சுட்ட, எஞ்சியன அரங்கம் தொடர்புடையனவாக உள்ளன. ஆனைக்கா எம்பெருமானுக்காகக் கொடையாளி ஒருவரிடமிருந்து சபையார் பெற்ற பண்டாரக்கல்லால் அளக்கப் பெற்ற பொன் பற்றி ஒரு துண்டுக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. வடவாறு, வெண்ணாவல் வதி, பாகன்குடி ஆகியன எல்லைகளாக அமைந்த நிலமும் குளமும் குளக்கோவையும் விற்கப்பட்டமை குறித்துப் பேசும் கல்வெட்டுத் துண்டில், பிராமண உபகாரிகள் சபையாரிடம் பெற்றுடைய நிலம் சுட்டப்படுவதுடன், உவச்சர்களும் குறிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் தொடர்புடைய மற்றொரு கல்வெட்டு நில விற்பனை செய்தவர்களாய்க் காவிரியின் தென்கரையில் இருந்த உத்தமசீலி சதுர்வேதிமங்கலத்துப் பெருங்குறி சபையாரை அடையாளப்படுத்துகிறது. விளத்தூர் நாட்டுப் பழுவூரைச் சேர்ந்த பல்லவரையன் இடம்பெற்றுள்ள கல்வெட்டுச் சுட்டும் நில விற்பனையோடு, நீரோடுகின்ற வாய்க்கால் காட்டி, 50 கழஞ்சுக்கு ஆனைக்கா எம்பெருமானுக்கு சபையாரால் நிலம் விற்கப்பட்டமை கூறும் மற்றொரு துண்டுக் கல்வெட்டின் செய்தியை இணைக்கமுடிகிறது. இவை தவிர, நந்திவர்மமங்கலம், இடையாற்றுக்குடி எனும் ஊர்ப்பெயர்களும் இத்துண்டுகளில் இடம்பெற்றுள்ளன. புருசோத்தமத்துப் பெருமாளுக்குப் பெருங்குறி சபை ஒன்று நில விற்பனை செய்தமை சுட்டும் கல்வெட்டுத் துண்டு, மத்யஸ்தனாக பிரம்மமங்கலவன் சக்ரபாணியை அடையாளப்படுத்துகிறது. மேலை வழி, ஆதித்த வாய்க்கால் சுட்டி, உத்தமசீலி சதுர்வேதிமங்கலத்தைக் குறிப்பிடும், இதனுடன் தொடர்புடையதாகக் கொள்ளத்தக்க மற்றொரு கல்வெட்டுத் துண்டு, ஊர்ப்பிடாகை வீரநாராயணநல்லூரைப் புருசோத்தமத்து ஆழ்வார் தேவதானமாகக் குறிக்கிறது. இராஜராஜர் காலத்தனவான இந்த ஒன்பது கல்வெட்டுகளும் இவை படியெடுக்கப்பட்ட 1918ஆம் ஆண்டிலேயே முழுமையற்ற நிலையில்தான் இருந்தன என்பது காலங்காலமாகவே திருப்பணிகள் என்ற பெயரால் வரலாறு அழிக்கப்பட்டு வருவதைக் காட்டுகிறது. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |