![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 101
![]() இதழ் 101 [ நவம்பர் 2013] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
சிதையும் சிங்காரக் கோயில்கள்
சென்ற இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி...
கல்வெட்டு எண். 3: ARE 90/1931-32 (தமிழ்க்கூத்துக் கல்வெட்டு) கூத்தாட்டு காணி என்பது கோயிலில் கூத்து நடத்துபவருக்குக் கூலியாக வாழ்வாதாரமாக வழங்கப்பட்ட நிலமாகும். இதனை அவர் ஆயுள் முழுவதும் அனுபவித்துக் கொள்ளலாம். கோயிலில் குறிப்பிட்ட திருவிழாக் காலங்களில் கூத்து நடத்தவேண்டிய கடமை இவருக்குண்டு. இவரது சந்ததியரும் இதேபோல் கூத்துக்கட்டி நிலத்தை அனுபவித்துக் கொள்ளலாம். கூத்தாட்டு காணியாக வழங்கப்பட்ட நிலம் இக்கோயிலின் தேவதானமான நாகன்பாடி என்ற கிராமத்தின் வடகிழக்கு திசையில் உள்ளதென்றும் இக்கிராமம் மிழிலை நாட்டில் உள்ளதென்றும் தெரிவிக்கின்றது. தேவதானம் என்பது ஒரு கிராமத்தின் குடியிருப்புக்கள், கோயில்கள், குளங்கள் போன்றவை தவிர மீதமிருக்கும் விளைநிலங்கள் முழுவதும் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட கிராமம் ஆகும். கல்வெட்டில் குறிக்கப்படும் இந்த நாகன்பாடி இந்நாளில் நல்லம்பாடி என்ற பெயரில் ஒரு சில குடியிருப்புக்களும் நிலங்களும் கொண்டு இவ்வூரின் உட்கிராமமாக உள்ளது. கூத்தாட்டு காணியாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகளைத் தெரிவிக்கும்போது கிழக்கில் சேஞ்சலூர் எல்லை வாய்க்காலும் தெற்கில் வீரநாராயணபுரம் (அதாவது இவ்வூர்) எல்லையும் மேற்கில் சண்டேசுவர மசக்கலும் (காடும் மேடுமாக இருந்த நிலத்தை வெட்டி சீர்செய்து நன்செய் நிலமாக ஒதுக்கப்பட்ட நிலம்) வடக்கில் குஞ்சிர மல்லையன் வாய்க்காலும் குறிப்பிடப்படுகின்றன. இறை வழிபாட்டில் இசையும் ஆடலும் இயல், இசை, நாடகம் என்று முத்தமிழாக வளர்ந்த தமிழ்மொழியில் இசையும் ஆடலும் இன்றியமையாத அங்கங்களாக உள்ளன. ஆடலும் இசையும் அக்காலக் கோயில் வழிபாட்டில் முக்கிய இடத்தை வகித்தன. ஆலயத்தில் வழிபாடு செய்யும் வழிமுறைகள் 16 அங்கங்களைக் கொண்டது. இதனை 'ஷோடசோபசாரம்' என்று ஆகமங்கள் குறிப்பிடுகின்றன. இப்பதினாறு அங்கங்களுள் வாத்தியக் கருவிகளின் இசை 15வது அங்கமாகவும் ஆடல் 16வது அங்கமாகவும் உள்ளன. இசை கலந்த ஆடல் இல்லாமல் அக்காலத்தில் வழிபாடு முடிவடைவதில்லை. ஆகவே இசையும் ஆடலும் கோயில்களுடன் இரண்டறக் கலந்தே வளர்ந்து வந்தன. இசையும் ஆடலும் கலந்த கூத்துக்கள் கோயில் திருவிழா காலங்களில் நடத்தப்பட்டு வந்தன. தமிழ் நூல்களின் வழியே இக்கூத்துக்கள் பொதுவாக சாந்திக்கூத்து, விநோதக்கூத்து என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதை அறியலாம். சாந்திக்கூத்து சொக்கம், மெய், அவிநயம்., நாடகம் என நால்வகையாகவும் விநோதக்கூத்து குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என ஆறு வகையாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவ்வகைக் கூத்துக்களைத் தவிர சோழர் காலத்தில் சாக்கைக் கூத்து, ஆரியக்கூத்து, தமிழ்க்கூத்து போன்ற கூத்துக்கள் கோயில் விழாக்களில் நடத்தப்பட்டன எனக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சாக்கைக்கூத்து திருவீழிமிழலை, கோட்டூர், காமரசவல்லி, கீரனூர், கீழப்பழுவூர் ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களில் திருவிழாக் காலங்களில் நடத்தப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. அதேபோல் ஆரியக்கூத்து திருநள்ளாறு, திருவாடுதுறை, வயலகம், திருவிடைமருதூர் ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களில் திருவிழாக்காலங்களில் நடைபெற்றது. மானம்பாடியில் உள்ள கல்வெட்டு இவ்வூர்க் கோயிலில் சித்திரை மாதத் திருவிழாவில் தமிழ்க்கூத்து நடைபெற்றதைத் தெரிவிக்கிறது. மற்ற கூத்துக்களைப் பற்றித் தெரிவிக்கும் கல்வெட்டுக்கள் பல கோயில்களில் காணப்பட்டாலும் தமிழ்க்கூத்து பற்றித் தெரிவிக்கும் ஒரே கல்வெட்டு இக்கோயிலில்தான் உள்ளது. இக்கல்வெட்டு வழிதான் இப்படியொரு கூத்து தமிழ்நாட்டுக் கோயில்களில் நடத்தப்பட்டமை தெரியவருகிறது. இதே போல் வேறு ஊர்களிலும் தமிழ்க்கூத்து நடத்தப்பட்டிருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. இந்த ஒரு அரிய தகவலை இக்கோயில் கொண்டுள்ளதால் தமிழக வரலாற்றில் இக்கோயில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளது. இக்கோயில் அப்புறப்படுத்தப்பட்டிருப்பின் இக்கல்வெட்டு மறைந்து போக வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். தமிழின் பெயரில் ஒரு கூத்து நடத்தப்பட்டுள்ளது என்கிற அரிய வரலாற்றுத் தகவலும் அத்தோடு மறைந்து போயிருக்கும். நல்லவேளை! அப்படி எதுவும் நேராமல் நாகரீக வளர்ச்சியின் தாக்குதலிலிருந்து சிறு உரசலுடன் தப்பிப் பிழைத்த இக்கோயிலும் கல்வெட்டும் இளைய தலைமுறையினருக்கும் வருங்காலத் தலைமுறைகளுக்கும் தமிழ்க்கூத்து நடத்தப்பட்ட நிகழ்வை ஞாபகமூட்டிக் கொண்டேயிருக்கும். ![]() படம் - தமிழ்க்கூத்து பற்றித் தெரிவிக்கும் கல்வெட்டு ![]() படம் - கல்வெட்டில் தமிழ்க்கூத்து என்கிற வார்த்தை கல்வெட்டு எண் 4 - ARE 96/ 1931-32 இக்கோயிலின் தென்புறத் தாங்குதளத்தில் வெட்டப்பட்டுள்ள முதலாம் குலோத்துங்க சோழரின் 23ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் சோழர்களின் தலைநகரமான கங்கை கொண்ட சோழபுரத்து வியாபாரி கருப்பூர் உடையான் பிருதுவலி சுற்றி என்பவனிடம் இக்கோயில் சிவப்பிராமணர்கள் (கல்வெட்டு சிதைந்துள்ளதால் பெயர்கள் சரிவரக் கிடைக்கவில்லை} சிலர் 500 கலம் நெல்லை முதலீடாகப் பெற்றுக்கொண்டு ஒரு கல நெல்லுக்கு 3/4 குருணி நெல் என்ற வட்டி விகிதத்தில் வட்டிக் கணக்கிடப்பட்டு 500 கலம் நெல்லுக்கு வரும் வட்டியைக் கொண்டு இக்கோயிலுக்கு வரும் அபூர்விகளாய் (தலயாத்திரை செய்யும் வேத விற்பன்னர்கள்) வரும் மாகேஸ்வரர்களுக்கு தினமும் 5 சட்டி சோறும் 2 சட்டி கறியமுதும் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது. சட்டி ஒன்றுக்கு 5 நாழி அரிசி வீதம் 5 சட்டிக்குப் 10 நாழி அரிசி எனக் கணக்கு செய்யப்பட்டு இந்த தர்மத்திற்கு அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. 1 நாழி என்பது சுமார் அரை லிட்டர் ஆகும். 500 கலம் நெல் முதலீட்டிற்கு 1 கலம் நெல்லுக்கு 3/4 குருணி வீதம் வட்டிக் கணக்கு செய்யப்பட்டு 3/4 X 500 = 375 குருணி ( 31 1/4 கலம்) நெல் வட்டியாகப் பெறப்பட்டுள்ளது. 1 குருணி என்பது சுமார் 4 லிட்டர். இக்கல்வெட்டுப்படி 5 நெல்லைக் குற்றி அரிசி பெறப்பட்டது தெரிகிறது. இதனை அஞ்சிரண்டு வண்ணம் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதன்படி கணக்கிட்டால் 375 குருணி நெல்லிலிருந்து 150 குறுணி அரிசி பெறப்பட்டது தெரிகிறது (சுமார் 600 லிட்டர்). இக்கல்வெட்டின் முடிவில் இக்கோயில் கணக்கன் கையெழுத்திட அவனைத் தொடர்ந்து 12 நபர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதில் இக்கோயில் சிவப்பிராமணர்களும் அடக்கம். இக்கல்வெட்டு தெரிவிக்கும் செய்தியிலிருந்து வேதவிற்பன்னர்கள் ஊர்கள் தோறும் சென்று கோயில்களில் வேதப்பிரசாரம் செய்துள்ளதாகத் தெரியவருகிறது. கல்வெட்டு எண்.5 : ARE 93/1931-32 இக்கோயிலின் வடபுறத் தாங்குதளத்தில் வெட்டப்பட்டுள்ள முதலாம் குலோத்துங்கசோழனின் 36ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இவ்வூர் வியாபாரி உறையூர் உடையான் நம்பன் சூரியதேவன் என்பவன் இறைவன் திருவோலக்கத்தில் (கோயில் மண்டபத்தில்) எழுந்தருளியிருக்கும்போது இறைவனின் திருஅமுதுக்கு 3 மா நிலத்தினை விலைக்கு வாங்கி கோயிலுக்கு அளித்ததைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டில் ஒரு மா 128 குழிகள் கொண்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாவிற்கு எத்தனை குழி என்பது இடத்தப் பொறுத்து மாறுபட்டிருந்தது. தற்போதுள்ள நடைமுறையில் ஒரு மா என்பது 100 குழி ஆகும். 1 குழி என்பது 12 X 12 = 144 சதுர அடியாகும். இந்த 3 மா நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு இறைவனுக்கு அமுது படைக்கப்பட்டது. இக்கல்வெட்டின் இறுதியில் இப்பிரமாணப் பத்திரம் எழுதியவன் திருவிசலூர் கரணத்தான் என்று குறிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து தானம் அளித்த உறையூர் உடையான் நம்பன் சூரியதேவனின் கையெழுத்து உள்ளது. இக்கையெழுத்தை அடுத்து இக்கல்வெட்டின் தொடர்ச்சியாக மேலும் சில செய்திகள் வெட்டப்பட்டுள்ளன. இவ்வூர் நகரத்தார் (வணிகர்கள் அடங்கிய குழு) கயிலாயமுடையார் கோயிலில் சித்திரை மாத த்தில் சித்திரை நட்சத்திரம் தொடங்கியபின் 7 நாட்களில் நடத்தப்பட்ட விழாவில் திருக்கயிலாயமுடையாருக்கு அமுது படைக்க நிலம் ஒன்றினை இறையிலி (அரசாங்கத்திற்குக் கொடுக்கப்படவேண்டிய வரிகளிலிருந்து விலக்குப்பெற்ற நிலம்) செய்து கொடுத்தனர். இந்நிலம் உறையூர் உடையான் நம்பன் சூரியதேவனால் விலைக்கு வாங்கப்பட்டு கோயிலுக்கு வழங்கப்பட்ட 3 மா நிலம் ஆகும். இந்நிலத்தின் எல்லைகளாகக் கிழக்கில் சேஞ்சலூர் கிராம எல்லையும் தெற்கில் மேல்படியூர் கிராம எல்லையும் அமைந்திருந்தன. கல்வெட்டு சிதைவுற்றுள்ளதால் மேற்கு வடக்கு எல்லைகளை அறியமுடியவில்லை. சேஞ்சலூர் என்பது மானம்பாடிக்குக் கிழக்கே சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சேஞ்சலூர் கிராமம் ஆகும். இது சண்டேசுவர தேவரின் அவதாரத் தலம். இக்கோயிலின் தேவதானமான நாகன்பாடி என்ற கிராமம் ஒரு எல்லையாகவும் இக்கோயிலுக்குத் திருவிளக்குப் புறமாக இறையிலி நிலத்திற்குத் தெற்கில் நம்பன் சூரியதேவன் கொடையளித்த நிலம் உள்ளதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. திருவிளக்குப்புறம் என்பது கோயிலில் விளக்கேற்றும் பணியிலிருப்போரின் வாழ்வாதாரமாக வழங்கப்படும் நிலமாகும். இத்திருவிளக்குப்புறம் இறையிலி செய்து வைக்கப்பட்ட நிலமாக இருந்தது என்று அறிகிறோம். இவன் இந்நிலத்தை இறையிலி செய்வதற்கு இக்கோயில் பண்டாரத்தில் 5 1/4 கழஞ்சு பொன் முதலீடாக வைத்தான். இம்முதலிலிருந்து ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டியைக் கொண்டு அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய பெருவரி, சிறுவரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் அவ்வப்போது நகரத்தாரால் அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட்டன. இந்நிலம் இறையிலியாக ஆக்கியமைக்கான விபரங்கள் கல்லிலும் செப்பேடுகளிலும் எழுதி ஆவணமாக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. இப்பிரமாணப் பத்திரம் எழுதியவன் இவ்வூர் கரணத்தான் மத்தியஸ்தன் செற்றூர் உடையான் திருவிசலூர் நகசாத்தன் என்பவன் ஆவான். இவன் எழுத்திற்குக் கீழே 22 நகரத்தார்கள் கையெழுத்திட்டுள்ளனர். இவர்களின் பெயர்களாவன.. 1.செம்பங்குடையான் காராயில் கயிலாயத்தான் 2. நெல்வேலி உடையான் வெண்காடன் சோழன் 3. உறையூர் உடையான் நம்பன் அமகுணவன் 4. வாரமங்கலமுடையான் ஆடவல்லான் திருவிசநல்லூர் உடையான் 5. தேவங்குடையான் முழையூரடிகள் வெண்காடன் 6. தண்டந்தோட்டமுடையான் மணல் கோயிலப்பன் 7. பாருமங்கலமுடையான் ஆடவல்லான் வெண்காடு தேவன் 8. கருப்பூர் உடையான் திருச்சிற்றம்பலமுடையான் திருநாரணன் 9. தஞ்சாவூர் கிழவன் வெண்காடன் தில்லை விடங்கன் 10. உறையூர் உடையான் நம்பன் உடையான் 11. அரைசூர் உடையான் ஆயப்பன் ஆதித்தன் 12. வெள்ளைக் குளமுடையான் நக்கன் 13. நரிக்குடையான் திருமுதுகுன்றன் திருவடவநாதன் 14. செமணங்குடையான் இராமந்தகன் 15. திருப்பாலைக்குடையான் அம்பலக்கூத்தன் திருச்சிற்றம்பலமுடையான் 16. அரங்கன் பஞ்சத்தி... (சிதைந்துள்ளது) 17. நல்லூருடையான் நஞ்சுண்டனான முத்தி 18. உறையூர் உடையான் அம்பலமுடையான் 19. முண்டி உடையான் கயிலாயனான ஆடவல்லான் 20. வாரமங்கலமுடையான் கண்ட பிச்சன் 21. வாரமங்கலமுடையான் கண்டன் திருவையாறுடையான் 22. தூதுவன் திருவையாறுடையான் இந்த 22 வணிகர்களும் பல்வேறு ஊர்களைச் சொந்த ஊர்களாகக் கொண்டவர்கள் என்பதும் இவர்கள் இங்கு ஒரு குழுவாகக் கூடியிருந்து வணிகர்களாக வாழ்ந்து வந்தனர் என்பதும் தெரிகிறது. இந்த நகரத்தார்களில் ஒருவன் தூதுவன் திருவையாறு உடையான் என்பவன் ஆவான். பொதுவாக நிலதானம் பற்றிய கல்வெட்டுக்களில் தூதுவன் பெயர் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் இங்கு தூதுவன் ஒருவன் கையெழுத்திட்டிருப்பது சிறப்பானது. இவன் யாருக்காக அல்லது எதற்காக தூது சென்றான் என்கிற விபரம் கல்வெட்டில் இல்லை. அல்லது இந்த ஊரைச் சார்ந்து வாழும் தூது செல்லும் பணியில் இருந்தவனா என்பதையும் அறியமுடியவில்லை. ஆனால் நகரத்தார் கல்வெட்டுப் பட்டியலில் தூதுவன் பெயர் உள்ளதால் வணிக க் குழுவில் வணிகம் தொடர்பான தூதுப் பணிக்கு இவன் அமர்த்தப்பட்டிருந்தான் என்று கருதலாம். இக்கோயில் கல்வெட்டிலிருந்து ஒருவர் நிலத்தை விலைக்கு வாங்கி அதைக் கோயிலுக்குத் தானமாகக் கொடுத்தது மட்டுமல்லாமல் அந்நிலம் வைத்துள்ளோர் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்த இடம் கொடுக்காமல் கோயில் பண்டாரத்தில் ஒரு நிதியை முதலீடாக வைத்து அதிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு அரசாங்க வரிகளைச் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள விதம் கோயிலுக்கு நிலதானம் அளித்த உறையூர் உடையாரின் பெரிய மனதையும் தீர்க்க தரிசனத்தையும் எடுத்துக்காட்டுகிறது. தாம் தானமாக அளிக்கும் நிலத்திற்கு வரி கட்டுவதற்காக வேண்டி எங்கே கோயிலின் வருவாயில் சிறு இழப்பு ஏற்பட்டு விடுமோ என்று அந்தக் கால மக்கள் நினைத்தனர் போலும்! என்னே அவர்களின் பேருள்ளம்! இக்கல்வெட்டின் செய்தியின்படி கோயில் பண்டாரத்தில் வைக்கப்பட்ட முதலீட்டிற்கு நகரத்தார் ஏன் வட்டி செலுத்த வேண்டும்? என்று முதலில் தோன்றும். கோயில் அக்காலத்தில் வங்கியாகவும் செயல்பட்டது என்பதை இங்கே மனதில் கொள்ள வேண்டும்.. அங்கு வைக்கப்பட்ட முதலீடு வணிகர்களின் வியாபாரத்திற்குக் கடன் வழங்கப் பயன்பட்டிருக்க வேண்டும். கடன் வாங்கியவர்கள் வட்டி செலுத்தவேண்டும் அல்லவா? ஒரு முதலீடு கோயிலுக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் அரசுக்கும் எப்படியெல்லாம் பயன்பட்டிருக்கிறது பாருங்கள்! கல்வெட்டு எண் 6: ARE 95/1931-32 இக்கோயிலின் கருவறைத் தென்புறத் தாங்குதளத்தில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு இக்கோயிலில் நடைபெற்ற முக்கிய வழிபாடொன்றினைக் குறிப்பிடுகிறது. கல்வெட்டு சிதைந்துள்ளதால் மன்னர் பெயரை அறியமுடியவில்லை. ஆனால் கல்வெட்டு மன்னரின் 36ம் ஆட்சியாண்டினைக் குறிப்பிடுவதாலும் கல்வெட்டில் குறிக்கப்படும் பெயர்களைக் கொண்டும் இக்கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழர் கல்வெட்டு என்று துணியலாம். வீரநாராயணபுரத்து நகரத்தார் இவ்வூர் கயிலாயமுடையார் கோயில் தேவகன்மிகளும் (கோயில் அறங்காவலர் போன்றவர்) மாறன்பாடி பிச்சர் உள்ளிட்ட மாகேஸ்வர ர்களும் செய்து கொடுத்த தானம் பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. சித்திரை மாதத்தில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் சித்திரைத் திருநாளுக்கு (சித்திரை நட்சத்திரம் வரும் நாள்) முன் 7 நாட்களும் பின் ஏழு நாட்களும் (ஆக மொத்தம் 15 நாட்கள்) விழா நடைபெற்றது. இவ்விழாவில் 7 நாட்களுக்கு (முன் ஏழு நாட்களா பின் ஏழு நாட்களா என்பது சரிவரக் குறிப்பிடப்படவில்லை) இவ்வூர் வடக்கில் உள்ள நம்பி நங்கை என்றழைக்கப்பட்ட குளத்திலிருந்து நாளொன்றுக்கு 2000 செங்கழுநீர்ப் பூக்கள் வீதம் 7 நாட்களுக்கு 14000 பூக்கள் பறித்து கருவறையில் உள்ள மூலவருக்கும் பவனி எழுந்தருளும் உற்சவ மூர்த்திக்கும் திருப்பள்ளி தாமம் செய்ய (அதாவது பூந்தோட்டத்திலிருந்து பூக்கள் பறித்து மலர்மாலைகளாகவும் சரங்களாகவும் தொடுத்து இறைவனுக்குச் சார்த்தி அருள) இவ்வூர் நகரத்தார் தானமளித்தனர். (ஏழு நாட்களுக்குப் 14000 பூக்கள் பறிக்கப்பட்ட என்றால் அந்தக் குளம் எத்தனை பெரியதாக இருந்திருக்க வேண்டும் என்பதை நாமே கற்பனை செய்து கொள்ளலாம்!) கல்வெட்டு சற்று சிதைந்துள்ளதால் இதற்காக என்ன வகையான தானம் கொடுக்கப்பட்டது என்பதை அறியமுடியவில்லை. அநேகமாக நில தானமாக இருக்கலாம். நகரத்தார் கூடி முடிவெடுத்த தீர்மானத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதனை 'நகர் நியோகம்' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்நகர் நியோகம் கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்ளப்பட்டது. இந்நியோகத்தினை எழுதியவர் இவ்வூர் கரணத்தான் செற்றூர் உடையான் திருவிசலூர் நகரத்தான் ஆவார். இக்கல்வெட்டின் இறுதியில் கரணத்தான் கையெழுத்திட்டபின் 10 நகரத்தார்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்தப் 10 நகரத்தார்களுள் கல்வெட்டு எண்.5ல் கையெழுத்திட்ட பலரின் பெயர்கள் காணப்படுகின்றன (நபர் எண்கள். 1,2,3,4,5,8 மற்றும் 10) தற்போது நம்பி நங்கை என்ற பெயரில் குளம் எதுவுமில்லை. ஊரில் இருக்கும் குளங்களுள் பெரிய குளமாக கோயிலுக்கு வடக்கில் ஒரு குளம் உள்ளது. இதனைக் கோயில் குளம் என்று அழைக்கின்றனர். இதற்கருகில் மற்றொரு குளம் இருந்தாலும் நாளடைவில் தூர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. மேலும் கல்வெட்டின் இறுதியில் இராஜதுரோகமும் சிவதுரோகமும் செய்தவர்களுக்கு வழங்கப்படும் ரெவுண்டம் (இராஜதண்டனை) என்ற தண்டனை இத்தர்மத்திற்கு விரோதம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதிலிருந்து இந்த தர்மம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது எனலாம். கல்வெட்டு எண் 7 : ARE 91 / 1931-32 இக்கோயில் விமானம் வடக்கு தாங்குதளத்தில் உள்ள முதலாம் குலோத்துங்கரின் 38ம் ஆட்சியாண்டு கல்வெட்டு இவ்வூர் நகரத்தார் கூடியிருந்து முடிவெடுத்துச் செயல்படுத்திய தானம் பற்றிப் பேசுகிறது. இவ்வூர் நகரத்தார் இவ்வூர் திருவீதியில் (தெருவில்) உள்ள இடத்தில் கூடியிருந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இவ்வூர் கயிலாயமுடையார் கோயிலில் சித்திரை மாதத்தில் சித்திரை நாளில் நடைபெறும் திருவிழாவிற்குப் பின் 7 நாட்களும் முன் 7 நாட்களும் நடைபெறவுள்ள சிறப்பு பூஜைகளுக்கும் திருவிழாவில் இறைவன் வீதி உலா பவனி வரும்போது திருவீதியில் பணி செய்யும் சிவனடியாரகளுக்கும் இறைவனுக்கும் அமுது செய்ய வாய்ப்பாக இவ்வூரின் ஆறு வியாபாரிகள் நிலம் ஒன்றினைத் தானமாக அளித்துள்ளனர். (திருவீதியில் பணிசெய்யும் அடியார்களுக்கான தானத்தினை வியாபாரிகள் திருவீதியிலேயே கூடித் தீர்மானித்தமையை வாசகர்கள் கவனத்தில் கொள்க!) தானமளித்த வியாபாரிகளின் பெயர்கள் பின்வருமாறு.. 1. அணுக்க நம்பி 2. வாடிமங்கலமுடையான் வெண்காடு தேவர் திருச்சிற்றம்பலமுடையான் 3. வெண்காடு தேவன் பொன்னம்பலக்கூத்தன் 4. நம்மன் பும்மாண்டான் 5. வெண்காடு சோழன் 6. காறாயில் கயிலாயம் இவர்கள் வழங்கிய நிலம் 128 குழி கொண்ட ஒரு மா என்று கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது. கல்வெட்டு சற்று சிதைந்துள்ளமையால் எவ்வளவு நிலம் தானமாக வழங்கப்பட்டது என்கிற விபரம் கிடைக்கவில்லை. இந்நில தானத்தைப் பற்றிய விபரம் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் வெட்டி வைத்துக்கொள்ள இக்கோயில் மாகேஸ்வரர்கள் பணிக்கப்பட்டனர். இக்கல்வெட்டில் இந்நிலத்தின் எல்லைகளைக் குறிப்பிடும்போது இவ்வூரில் 'பத்தகன் பத்தன்' (அதாவது பக்தர்களின் பக்தன் என்று பொருள்) என்ற பெயரில் ஒரு மடம் இருந்துள்ளமை தெரிய வருகிறது. இம்மடத்திற்கும் இவ்வூர் நகரத்தார்கள் இறையிலி செய்து நிலதானம் கொடுத்துள்ளனர். கல்வெட்டு எண் 8 : ARE 95 / 1931-32 திருக்கோயில் கருவறை வடபுறத் தாங்குதளத்தில் உள்ள முதலாம் குலோத்துங்கரின் ஆட்சியாண்டு அறியமுடியாத கல்வெட்டு இக்கோயிலிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழா செலவினங்களுக்காக நெல் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியலைத் தருகின்றது. அக்காலத்தில் உழைப்புக்கு ஊதியமாகக் காசு கொடுப்பதில்லை. நெல்தான் கொடுக்கப்படும். சித்திரைத் திருவிழாவில் பின் ஏழு நாட்களும் நடைபெறும் விழாவில் மூலவருக்கு நடைபெறும் பூஜைக்கும் இறைவன் வீதியுலா வலம் வந்து கோயில் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும்போது திரு அமுது உள்ளிட்டவற்றுக்கும் வேண்டும் நிவந்தங்களுக்கு முதலீடாக இக்கோயில் பண்டாரத்தில் நம்பன் சூரியதேவன் என்கிற இவ்வூர் வியாபாரி 10 கழஞ்சு பொன் வைத்தான். இப்பொன் கொண்டு 444 கலம் நெல் முதலாக வைக்கப்பட்டு ஒரு கலம் நெல்லுக்கு நாளொன்றுக்கு 3/4 குறுணி (1 கலம் = 12 குறுணி) நெல் வட்டி எனக் கணக்கிட்டு 444 கலம் நெல்லுக்கு 111 கலம் நெல் வட்டியாக வருவதைக் கொண்டும் நிவந்தங்கள் செய்வதற்காக ஏற்கனவே இந்த வியாபாரியால் இறையிலி செய்து கல்லில் வெட்டி வைக்கப்பட்ட நிலத்திலிருந்து கிடைக்கும் 60 கலம் நெல்லும் சேர்த்து மொத்தம் 171 கலம் (11 + 60) நெல்லும் சித்திரைத் திருவிழாவின் பின் ஏழு நாட்களுக்கான செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டன.
கூடுதல் - 171 கலம் நெல். 8 நாழி - 1 குறுணி 4 குறுணி - 1 தூணி 3 தூணி - 1 கலம் இக்கணக்கு அடிப்படையில் கணக்கிட்டால் 16 நாழி = 2 குறுணி, 14 + 2 = 16 குறுணி = 4 தூணி 5+4 = 9 தூணி = 3 கலம், 168 + 3 = 171 கலம் நெல் ஆக மொத்த செலவிற்கும் ஆகும் 171 கலம் நெல்லில் தானமாக வழங்கப்பட்ட நிலத்திலிருந்து கிடைக்கும் 60 கலம் நெல் நீக்கி மீதமீருக்கும் 111 கலம் நெல்லை இக்கோயில் காணியுடைய சிவப்பிராமணரும் பத்தகன் பத்தன் மடத்தின் நிர்வாகியுமான மாறன்பாடி பிச்சனும் கோயில் பண்டாரத்தில் செலுத்தி விடுவதாக நம்பன் சூரியதேவனுக்குப் பிரமாணப் பத்திரம் எழுதிக் கொடுத்தனர், இப்பிரமாணப் பத்திரம் கல்லிலும் செப்பேடுகளிலும் ஆவணமாக வெட்டி வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இப்பிரமாணப் பத்திரம் எழுதியவன் இக்கோயில் காணியுடைய கணக்கன் செற்றூருடையான் மத்தியஸ்தன் திருவிசலூர் நகரத்தான் ஆவான். இதன் கீழ் காணியுடைய சிவபிராமணர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இக்கல்வெட்டிலிருந்து ஒரு திருவிழாவில் ஏற்படக்கூடிய செலவிற்குத் தானமாக பெற்ற பொன்னை நெல்லாக மாற்றி அதனை முதலீடாக வைத்து அதிலிருந்து கிடைக்கும் வட்டி (நெல்) கொண்டு திருவிழாவின் ஒரு பகுதி செலவுகளைச் சரியாக க் கணக்கிட்டு செயல்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சரிவர நடத்தப்பட்டு அதற்குரிய ஆவணம் செப்பேடாகவும் கல்வெட்டாகவும் ஆக்கப்பட்டுள்ளது. தானம் கொடுத்தவரின் பொருள் எவ்வாறு முதலீடாக வைக்கப்பட்டு வட்டி மூலம் வசூல் செய்து ஆண்டுதோறும் திருவிழா செலவிற்காக இவ்வாறு செலவிடப்படும் என்று பலர் அறியுமாறு கல்வெட்டாக வெட்டி கோயிலில் வைத்திருப்பது அக்கோயில் நிர்வாகத்தின் நீதியையும் நேர்மையான நிர்வாகத்தையும் காட்டுகின்றதல்லவா? முடிவுரை இக்கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்டுள்ள 9 கல்வெட்டுக்களில் 1 கல்வெட்டு (இராஜேந்திரசோழரின் மெய்க்கீர்த்தி) தவிர மீதமிருக்கும் 8 கல்வெட்டுக்கள் வெளிப்படுத்தும் தகவல்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. 1. இக்கோயில் அமைவிடம் (விரிவான முகவரியுடன்) 2. இக்கோயிலின் காலம் (மன்னர்களின் கல்வெட்டுக்களுள் காலத்தால் பழமையானது) 3. இவ்வூரின் பழைய - புதிய பெயர்கள் 4. இக்கோயிலின் பழைய பெயர் 5. இவ்வூர் வணிகர்களின் விபரம் 6. கோயில் நிர்வாகத்தில் வணிகர்களின் பங்கு 7. இக்கோயிலில் நடைபெற்ற சித்திரைத் விழா மற்றும் இவ்விழா நடந்தேறிய முன் ஏழு மற்றும் பின் ஏழு நாட்கள் விபரம் 8. இத்திருவிழாவில் இறைவனின் வீதியுலா புறப்பாடு 9. இவ்விழாவில் நடைபெற்ற தமிழ்க்கூத்து. எத்தனை முறை நடத்தப்பட்டது என்பன போன்ற விபரங்கள். அதை நடத்தியவரின் பெயர். அவருக்கும் அவரது சந்த தியினருக்கும் வழங்கப்பட்ட நில விபரங்கள் 10. அபூர்விகளின் வருகை மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு விபரங்கள் 11. தேவார நாயகம் வருகை 12.பத்தகன் பத்தன் என்ற பெயரில் உள்ள மடம். அதனை நிர்வகிக்கும் நபரின் பெயர். மடத்திற்கும் கோயிலுக்கும் உள்ள தொடர்பு. மடத்திற்கு வரும் அடியவர்களுக்கு உணவு வழங்கப்பட்ட விபரம். இம்மடத்திற்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலம் மற்றும் அதன் இறையிலி விபரங்கள். 13. கோயிலில் வேலை செய்யும் சிவபிராமணர்களின் எண்ணிக்கை. கோயில் ஊழியத்தில் அவர்களின் பங்கு. கோயிலுக்கு வழங்கப்பட்ட தானங்களை நிர்வகிப்பதில் அவர்களின் பங்கு 14. இக்கோயிலில் நொந்தா விளக்கு எரிக்கப்பட்ட விதம் 15. கோயிலில் உள்ள பண்டாரம் மற்றும் அது வங்கியாகச் செயல்பட்ட விதம் 16. இவ்வூரில் உள்ள நம்பி நங்கை என்கிற குளத்தின் பரப்பு மற்றும் குளம் பயன்பட்ட விபரம் 17. கோயில் இறைவனுக்கு 14000 பூக்கள் சார்த்திய விபரம் 18. இவ்வூரில் உள்ள பிடாரி கோயில் அமைவிடம் 19. இக்கோயிலுக்கு உரிய நந்தவனம் அதன் பெயர் விபரம். புதிதாக வழங்கப்பட்ட நந்தவன நிலம். அதன் எல்லைகள் 20. சித்திரைத் திருவிழாவில் நடைபெற்ற செலவுகள் ஒரு பகுதி செலவு கணக்கீடு விபரம். அதற்கான நிதி ஒதுக்கீடு. நிதி வருவதற்கான வழிவகை விபரம். 21. கோயில் கணக்கரின் பெயர். அவர் பணியின் தன்மை 22. இவ்வூர் கரணத்தாரின் பெயர் 23. கோயிலில் தேவாரம் பாடப்பட்ட விபரம் 24. இக்கோயிலுக்கு தேவதானமாக வழங்கபட்ட கிராமம் மற்றும் அதன் பெயர் 25. இவ்வூரின் அருகிலுள்ள ஊர்களின் பெயர்கள் 26. கங்கை கொண்ட சோழபுரத்து வியாபாரியின் வள்ளல்தன்மை 27. இவ்வூரில் கையாளப்பட்ட நில அளவு முறைகள் 28. வணிக க் குழுவில் தூதுவர் இடம்பெற்றிருந்த விபரம் 29. இக்கோயிலுக்கு விளக்கெரிக்க மானியமாக (திருவிளக்குப்புறம்) நிலமளிக்கப்பட்டமை 30. கோயில் தர்மர்திற்கு விரோதம் செய்பவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை அப்பப்பா! எத்தனையெத்தனை எண்ணற்ற தகவல்கள்! அரிய தரவுகள்! ஒரு பழுதுபட்டு இடிந்த கோயில்,.. பூஜையே சரிவர நடக்காத திருக்கோயில்.. மக்கள் போக்குவரத்து இல்லாத கோயில்.. சில கல்வெட்டுக்களே உள்ள கோயில்... எத்தனை விபரங்களைத் தந்து 1000 வருடங்களுக்கு முன் இந்த மானம்பாடி கிராமத்தையும் அதில் வசித்த மக்களையும் இக்கோயிலையும் அதன் வழிபாடுகளையும் திருவிழாவையும் தொலைக்காட்சி மாதிரி படம்பிடித்துக் காட்டும்போது நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை கண்முன் தோன்றவில்லையா? மனம் களிப்படையவில்லையா? ஒரு சிறிய கோயிலே இத்தனை வரலாற்றுத் தகவல்கள் தரும்போது 100 - 120 கல்வெட்டுக்கள் உள்ள பெரிய கோயில்கள் தரும் தகவல்களை சற்றே எண்ணிப் பாருங்கள். இவ்வளவு அரிய தகவல்களைத் தாங்கி நிற்கும் இக்கோயில் தற்போது தொல்பொருள் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே சாலை விஸ்தரிப்பு போன்ற திட்டங்களுக்கு இக்கோயில் அப்புறப்படுத்தப்பட மாட்டாது என நம்பலாம். இக்கோயில் அப்புறப்படுத்தப்படாமல் இருந்த இடத்திலேயே நிலைத்து நிற்பதற்கு டாக்டர். எம்.இராஜேந்திரன் IAS அவர்களின் சீரீய முயற்சியே காரணம். இவர் வரலாற்றின்பால் அதிக ஈடுபாடு கொண்டவர். சோழர் செப்பேடுகள் பற்றிய நூலொன்றினை எழுதியுள்ளவர். தமிழ்க்கூத்து காப்பாற்றப்பட்டதற்கு வரலாற்றை நேசிக்கும் அன்பர்கள் சார்பாக மீண்டும் இவருக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துவோம். ஆலயம் ஆண்டவனின் இருப்பிடம் மட்டுமல்ல. அங்கே ஆன்மிகம் தவிர சமுதாய வாழ்க்கையும் கலை பண்பாடு கலாச்சாரம் வீரம் ஈகை போன்றவையும் கலந்தே இயங்கி வந்துள்ளன. ஒவ்வொரு கோயிலும் வரலாற்றின் எண்ணற்ற பக்கங்களை தன்னகத்தே வைத்துள்ளன. அடுத்து வரும் தலைமுறைகளுக்காகவேனும் இந்தப் பக்கங்களைக் கிழிக்காமல் காப்பாற்றி வைப்போம்! |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |