![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 100
![]() இதழ் 100 [ அக்டோபர் 2013] நூறாவது இதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
பல்லவர் பாதையில்
வாசகர்களுக்கு வணக்கம்.
கால்நடை மருத்துவத்தில் இளங்கலைப் படிப்பை முடித்துப் பல்வேறு பால்பண்ணைகளிலும் பணியாற்றிவிட்டுத் தற்போது விழுப்புரம் பால்பண்ணையில் பொதுமேலாளராகப் பணிபுரியும் எனக்குப் புகைப்படக்கலையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்கிற ஆவல் கல்லூரி நாட்களிலிருந்தே உண்டு. என்றாலும் பால்பண்ணை என்பது "அத்தியாவசியப்பணி" பிரிவில் வருவதால் ஓய்வு என்பது ஏறக்குறையக் கிடையாது. அதனால் புகைப்படக்கலையில் முழுமூச்சாக ஈடுபடும் வாய்ப்பு இதுவரை கிட்டவில்லை. அதேபோல் கோவில்களின்பால் அசாதாரணமான ஈர்ப்பு சிறுவயது முதலே உண்டு. கோயில்கள் சமயத்தின் நுழைவாயில். ஆனால் கோயில்கள் தொடர்பான வரலாற்றுச் செய்திகள் பொதுமக்களிடம் சரியான முறையில் சென்று சேர்வதில்லை என்பதாய் ஒரு எண்ணம். எனவே, கோயில்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் திரட்டித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலால் உந்த சில வருடங்களாகத் திருக்கோயில் வளாகங்களைக் கேமராவுடன் சுற்றத் தொடங்கியிருக்கிறேன். 2008 அக்டோபர் என்று நினைவு. திருச்சி பால்பண்ணையில் பணியிலிருந்தேன். புகைப்படமெடுக்கும் ஆர்வத்தினால் உந்தப்பட்டு ஆறு மாதங்களில் மூன்று வெவ்வேறு நிகான் மாடல் காமிராக்களை திருச்சி யுனிவர்சல் ஷாப்பியில் வாங்கி வாங்கி மாற்றிய பின்னர் கெனான் 7D மாடல் வேண்டுமென்று கேட்டபோது கடை உரிமையாளர் என்னை ஏற இறங்க ஒரு முறை நிதானமாகப் பார்த்தார். “நீங்கள் எந்த தேவைக்கென காமிரா வாங்குகின்றீர்கள்? இத்தனை மாடல்கள் மாற்றிக்கொண்டேயிருக்கிறீர்களே?” “தமிழக கோவில்களை படம் எடுக்கத்தான்! மிகக் குறைந்த வெளிச்சத்திலும் நன்றாகப் படமெடுக்க ஏதுவாக ஏதேனும் கருவி அகப்படுமா என்று பார்க்கிறேன்..” “கோவில்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் தில்லை நகரில் வசிக்கும் டாக்டர். கலைக்கோவன் அவர்களை சந்தித்துப் பேசுங்களேன்? கோயில்களைப் பற்றிப் பல ஆண்டுகளாக ஆய்வுகள் செய்து வருகிறார் அவர்..” “சரி..” அவரிடம் அப்போதே தொலைபேசி எண்களை வாங்கி வைத்துக்கொண்டாலும் ஏறத்தாழ ஒரு மாதம் கழித்துத்தான் டாக்டர் திரு. கலைக்கோவன் அவர்களை மருத்துவமனையில் சந்திக்கும் வாய்ப்பமைந்தது. இவர் நம்மை அங்கீகரிப்பாரா? நிதானமாக நான்கு வார்த்தையாவது பேசுவாரா? என்று அறைக்குள் நுழையும் போதே ஒருவிதத் தயக்கம் ஆட்கொண்டது. யோசனையுடன்தான் வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன். டாக்டர் நம்பமுடியாத அளவிற்கு மிக எளிமையாய் இருந்தார். வரவேற்று இருக்கச் செய்தார். இயல்பாகப் பேசினார். சுய அறிமுகத்தைத் தொடர்ந்து “தமிழகக் கோவில்கள் அனைத்தையும் டிஜிட்டல் பதிவுகளாகத் தயார் செய்ய வேண்டுமென்பது என் அவா, அதற்கு தாங்கள் உதவ வேண்டும்” என்று கேட்டுக் கொண்டேன். மென்மையாய் புன்னகைத்தார். ‘மிகவும் நல்ல முயற்சி, செய்யுங்கள்!' என்று ஊக்குவித்து சில புத்தகங்களைக் கையில் கொடுத்து 'நேரம் கிடைக்கும் போது படித்து வாருங்கள், உங்களுக்கு சந்தேகம் எனில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள்' என்று கூறி அனுப்பி வைத்தார். எத்தனை எளிமையானவர்! இப்படியும் ஒரு மனிதரா? என்று வியந்தவாறு வெளியில் வந்தேன். ![]() டாக்டர் இரா.கலைக்கோவனை நான் எடுத்த புகைப்படங்களுள் எனக்குப் பிடித்த ஒன்று - திருவையாறு வடகயிலாயம் திருக்கோயிலில் ஓர் உரையாடலின்போது திரு.கலைக்கோவன் எனக்களித்த புத்தகங்களுள் ‘மகேந்திரர் குடைவரைகள்” என்ற நூலும் ஒன்று. அந்த நூல் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. மெல்ல மெல்ல அதனைப் படித்துப் புரிந்துகொள்ள முற்பட்டேன். ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாமல் மகேந்திரருக்கு முன்னர் எவர் எவர் கோயில் உருவாக்கினர்? என்ற வினா எழுந்தது. இணையத்தில் அதற்கான பதில் கிடைத்ததது. இந்தியாவில் ஆயிரத்து இருநூற்றிற்கும் மேற்பட்ட குடவரைகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவற்றுள் பௌத்த சமயத் தொடர்புடையவை 900, சமண மற்றும் இந்து சமயத் தொடர்புடையவை 300 என்றும் அறிந்து கொண்ட போது வியப்பிலாழ்ந்தேன். மௌரியப் பேரரசர் அசோகரால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கயா அருகே பராபர் குன்றில் துவக்கப் பெற்ற பௌத்தம் சமயம் சார்ந்த இக்குடைவரைக்கலை பின்னாட்களில் குப்தர்கள், காலசூரிகள்,சாளுக்கியர், வாகடகர்கள், மற்றும் இராஷ்டிரகூட மரபினரால் இந்து சமய கடவுளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. வட தமிழ்நாட்டில் குடைவரைக்கலையை அறிமுகம் செய்து கோயில் கட்டடக்கலையில் ஓர் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மகேந்திரர். குணபரன், சித்திரக்காரப்புலி, இலளிதாங்குரன், சத்ருமல்லன், நரேந்திரன் என்று ஏராளமான பட்டப்பெயர்களைச் சூட்டிக்கொண்ட இந்த விசித்திரசித்திர் உண்மையாகவே விசித்திரமான மனம் படைத்தவராகத்தான் இருந்திருக்க வேண்டும். மகேந்திரவர்ம பல்லவரால் வட தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட குடைவரைகள் ஏழு. அவை.. 1. இலக்ஷிதாயதனம் 2. அவனிபாஜன பல்லவேஸ்வரம் 3. சத்ருமல்லேஸ்வராலயம் 4. இலளிதாங்குர பல்லவேஸ்வர கிருகம் 5. மஹேந்திர விஷ்ணு கிருகம் 6. மாமண்டூர் 7. பல்லாவரம் இவையனைத்தையும் பார்த்துக் கேமராவில் பதிவு செய்ய வேண்டும் என்கிற நோக்கத்துடன் ஒவ்வொரு குடைவரையாகப் பயணிக்கத் துவங்கினேன். இதற்கிடையே திருச்சிராப்பள்ளி பால்பண்ணையிலிருந்து வேலூர் பால்பண்ணை அதன்பின் விழுப்புரம் பால்பண்ணை என்று பல்வேறு பணி மாறுதல்கள். இத்தனை மாற்றங்களுக்கிடையிலும் என் பயணங்கள் தொடர்ந்ததற்கு முக்கியக் காரணம் திரு.கலைக்கோவன்தான். அப்பெருந்தகைதான் கோயில்கள் தொடர்பான என் ஒவ்வொரு அசைவிற்கும் பின்புலமாக இருந்து தக்கபடி வழிகாட்டி வருகின்றார். அரகண்ட நல்லூர், ஆவூர், திரைக்கோயில், மஹாபலிபுரம், சிங்கவரம், திருநெய்தானம் ஆகிய திருக்கோயில்களில் அவருடன் களப்பணியில் கலந்து கொள்ளும் வாய்ப்பமைந்தது மறக்கவியலா அனுபவம். அவரின்றி இப்பணியில் என் முகவரி இல்லை எனலாம். வரலாறு சார்ந்த இப்பயணங்கள் இதே போன்ற ஆர்வம்கொண்ட பல நல்லோரை எனக்கு நண்பர்களாக்கின. திரு. கலைக்கோவனின் மகாபலிபுரம் களப்பணிகளின்போது நண்பர் திரு. சு. சீதாராமன் அறிமுகமானார். வரலாறு டாட் காமில் இவர் முன்பு எழுதிய கழனிசூழ் பழனம்பதி கட்டுரையின் வழி இவரது இனிக்கும் தமிழை அறிந்திருந்தேன். நாளடைவில் எனக்கு நல்ல நண்பராக மட்டுமன்றி நல்லாசிரியராகவும் மாறிப்போனார் இவர். அரகண்ட நல்லூர் நிறைவுறா பல்லவர் குடவரையை திரு.கலைக்கோவன் ஆய்வு மேற்கொண்டபோதுதான் திரு. பால. பத்மனாபன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. வரலாறு டாட் காமில் என்னை மிகவும் கவர்ந்த ‘சிதையும் சிங்காரக்கோவில்கள்” தொடரை எழுதி வருவது இவர்தான். இவரது பல்வேறு உதவிகளுக்கும் நன்றியுடையவனாகிறேன். எனது புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் இரசித்து தொடர்ந்து ஊக்குவித்து வருபவர் வரலாறு டாட் காம் நண்பர் திரு, கோகுல் சேஷாத்ரி அவர்கள். அவருடைய உற்சாகமூட்டும் வார்த்தைகள்தாம் எனக்கு வைட்டமின் டானிக்காய் இன்றும் உதவுகின்றன. பல வருடங்களுக்கு முன் துவங்கிய அந்தப் பல்லவர் பாதை தேடிய பயணங்களை இந்தத் தொடருக்காக மீண்டும் ஒருமுறை அசைபோடுகிறேன்... எழுத்து மார்க்கமாக மீண்டும் நடைபெறப்போகும் இந்தப் பயணங்களில் என்னுடன் கைகோர்த்துக் கொள்ளுமாறு உங்களையும் அன்போடு அழைக்கிறேன். கண்முன்னர் நீண்டு சொல்லும் அந்தப் பழைய பல்லவரின் பாதையில் இனி நீங்களும் நானும். நன்றியும் நேசமுமாய்.. ச.சுந்தரேசன்.this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |