![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 8
![]() இதழ் 8 [ ஃபிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
சங்கச்சாரல்
மறக்குடித் தாயின் கூற்றாய் பொன் முடியார் தனது வாகைத்திணை, மூதின்முல்லைத்துறை பாடலொன்றில் குறிப்பிடுகிறார். அத்தாய் கூறுவதாவது "மகனைப் பெற்று வளர்ப்பது தாயின் கடமையாகும், நற்பண்புகளைக் கற்றுத்தந்து மகனைச் சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமையாகும். மகன் போர் செய்வதற்கு நல்ல வேல், வாள் முதலிய போர்க்கருவிகளை செய்துதருவது கொல்லனின் கடமையாகும். நல்ல ஒழுக்கத்தை கற்பிப்பது அரசனின் கடமையாகும். அந்த வேலையும் வாளையும் கையிலேந்தி எதிரிகளில் ஒருவர் கூட உயிருடன் இல்லாதபடி திறம்படப் போர் செய்து தன் நாட்டிற்கு வெற்றி பெற்றுத் தருவது மகனின் கடமை" (புறம் 312) மறக்குடித் தாயின் வீரம் நிறைந்த சொற்களைப் பார்த்தீர்களா? போர் செய்து வெற்றி பெறுவது தான் மகனின் கடமையாம். இப்படிப் பட்ட வீரத்தாய்மார்கள் இருந்த காரணத்தினாலே, அவர்கள் நல் வீரர்களை ஈன்றெடுத்த காரணத்தினாலே தானே, கடாரம், யவனம் என்று பல தேசங்களிலும் நமது தமிழ் கொடியை படர விட முடிந்தது நம் முன்னோரால். கேட்கவே மகிழ்ச்சிப் பெருக்கெடுக்கிறது! இன்று வறண்டுவிட்ட நதியல்லவா! இந்தக் காவிரி சங்ககாலத்தில் எப்படியிருந்தது? ஒரு மருதப் படப்பிடிப்பாய்க் காட்டுகிறார் நக்கீரர். மலைகளிலிருந்து தொடர்பறாது விழும் அளவற்ற அருவி வெள்ளம் வந்து சேர்வதால் பூத்த புதுமலர்களையுடைய துறை. கடற்கரையைக் கரைத்திடும் அளவிற்கு அத்துறை தழுவும் பேராறாய்க் காவிரி. அதன் கரையில் கருமணல். இந்தக் காவிரியின் நீரைக் கிழித்தபடி நள்ளிரவு மீன் பிடிக்க ஓடும் தோணிகள். அந்தத் தோணிகளில் ஆற்றல் மிக்க இளைஞர் கூட்டம் பிடித்த மீன்களைக் காவிரித் துறையில் கருக்கலில் சேர்க்கின்றனர். எடுத்துச்சென்று விற்க அவர்தம் தங்கையர் ஈட்டம். கனவு போல் இருக்கிறதா? வறண்டு போன இன்றைய காவிரி, இந்தப் பாடலைக் கனவுக் காட்சியென்றுதான் நினைக்கத் தூண்டும். ஆனால் நக்கீரர் பாடியது மெய். (அகம். 126) - தகவல்: வரலாறு ஆய்விதழ் 12, 13 நாம் கொண்டிருக்கும் குறிக்கோள் எத்தகையதாய் இருக்க வேண்டும்? இக்கேள்விக்கு தனது பொதுவியல் திணை, பொருண்மொழிக்காஞ்சி துறைப் பாடலொன்றின் மூலம் விடையளிக்கிறார் கோப்பெருஞ்சோழன். தம் உள்ளத்தில் தெளிவில்லாமல் இருப்பவர்கள், தாம் செய்வது சரியா, தவறா? என்று எப்பொழுதும் சந்தேகத்துடனே இருப்பர். வேட்டைக்குப் புறப்படுபவருள், ஒருவன் யானையை வேட்டையாடும் குறிக்கோளுடன் சென்றால் அவன் யானையை சுலபமாய் வேட்டையாடிவிடுவான். ஆனால் குறிக்கோளே காடை போன்ற சிறிய பறவையை வேட்டையாடுவதாக இருந்தால் அவன் எதையும் வேட்டையாடாமல் வெறும் கையுடன் திரும்பி வருவான். அதுபோல உயர்ந்த குறிக்கோள் கொண்டிருப்பவர் வெற்றி பெறுவர் என்று உதாரணத்துடன் விளக்குகிறார் கோப்பெருஞ்சோழன். (புறம் 214) இப்படி பாடியவன் தன் வாழ்க்கையில் உயரிய குறிக்கோளுடன் தானே இருந்திருப்பான். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |