![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 8
![]() இதழ் 8 [ ஃபிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
குடைவரைகள்
புதுக்கோட்டைப் பொன்னமராவதிச் சாலையில், நச்சாந்துப்பட்டி தாண்டியுஅதும், அவலபுறம் திரும்பும் பாதை மலையக்கோயிலுக்கு அழைத்துச் செல்கிறது. கோயில் பெயருடன் அமைந்த அண்மைக்கால வளைவொன்று இந்தப் பாதை தொடங்குமிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. அகன்று விரிந்துள்ள பெரும்பாறையின் கிழக்கு முகத்திலொன்றும் மேற்கு முகத்திலொன்றுமாய் இங்கு இரண்டு குடைவரைகள் வெட்டப்பட்டுள்ளன. இவற்றூள் கிழக்கு முகக்குடைவரை அளவில் சிறியது; கருவறை மட்டுமே கொண்டது(?). இக்கருவறையின் முகப்புச் சுவரான கிழக்குச் சுவர், மண்ணில் பாதிக்குமேல் புதையுண்டு கிடக்கும் ஜகதியின் மேல் எண்பட்டைக் குமுதமும் அதன் மேல் கம்புகளின் அரவணைப்பிலான கண்டமும் மேலே பட்டிகையும் கொண்டமைந்துள்ள பாதபந்தத் தாங்குதளத்தின் மீது எழுகிறது. இச்சுவரின் நடுப்பகுதியில் 89 செ.மீ. அகலத்தில் 1.82 மீ. உயரம் கொண்டு காணப்படும் செவ்வகத் திறப்பே கருவறை வாயிலாக அமைந்துள்ளது. இவ்வாயிலுக்கு முன் பாறையில் வெட்டப்பட்ட இரண்டு படிகள் உள்ளன. இரண்டாம் படி திறப்பின் கீழ்நிலையாகக கொள்ளுமாறு அமைந்துள்ளது. இப்படிகளின் இருபுறத்தும் இடைவெளிவிட்டுப் பாதபந்தத் தாங்குதளம் அமைந்துள்ளமை சற்ற மாறுபட்ட அமைப்பாக உள்ளது. வாயிலையொட்டி இரு அரைத்தூண்களும் (?) சுவரின் வட, தென்கோடிகளில் இரு அரைத்தூண்களும் சதுரம், கட்டு, சதுரமென்ற அமைப்பில் வெட்டப்பட்டுள்ளன. தாங்குதளக் கண்டப்பகுதியில் பாதம் நிறுத்தியுள்ள இவ்வரைத்தூண்களின் (?) போதிகைகள் விரிகோணத் தரங்கக் கைகளால் உத்திரம் தாங்குகின்றன. கீழ்க்கை மேற்கையாகத் திரும்புமிடத்துள்ள தரங்கம் அளவில் பெரியதாக அமைந்துள்ளது. சிராப்பள்ளி லலிதாங்குரம், மலையடிக்குறிச்சிக் குடைவரைகளில் காணுமாறு போல இத்தரங்கத்தின் பக்க முகத்தில் சுருளொன்று செங்கோட்டு வரைவாய்க் காட்டப்பட்டுள்ளது(?) . நான்கு தூங்களுமே தரங்கக் கைகளின் நடுவே கொடிக்கருக்கற்ற பட்டை பெற்றுள்ளன. இவ்வரைத்தூண்களுக்கு இடைப்பட்ட சுவர்ப்பகுதிகளில் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. வடபுறத்தே மேலிருந்து கீழ்வரை குலசேகரப் பாண்டியரின் கல்வெட்டுப் பரவியுள்ளது. தென்புறத்தே, கீழ்ப்பகுதியில் 38 செ.மீ. அகலத்திற்கு, 24 செ.மீ உயரத்திற்குக் கட்டம் கட்டிப் பல்லவ கிரந்தத்தில் 'பரிவாதினி' எனச் செதுக்கியுள்ளனர்(?) . அதன் கீழ் மூன்று வரிகளிலமைந்த பழந்தமிழ்க் கல்வெட்டொன்று காணப்படுகிறது. அதன் வலப்புறத்தே (தெற்கில்) மேலுமிரண்டு வரிகள் வெட்டப்பட்டுள்ளன(?) . அரைத்தூண்கள் தாங்கும் உத்திரமே கருவறை வாயிலின் மேல்நிலையாக அமைந்துள்ளது. உத்த்ரிஅத்திற்கு மேல் கிழக்குச் சுவர் நெடுக வாஜனம் காட்டப்பட்டுள்ளது. இதற்கு மேலுள்ள பாறையின் முன் நீட்சி, வடிவமைக்கப்படாத கபோதமாகியுள்ளது. கருவறை வாயிலில் பிற்காலத்தே சீரமைக்கப்பட்ட கருங்கல் பாறைகளைக் கொண்டு நிலையமத்துள்ளனர். கிழக்கு மேற்காக 3.25 மீட்டர் அளவும் தென்வடலாக 3.23 மீட்டர் அளவும் கொண்டு, ஏறத்தாழ சதுரமாக அமைந்துள்ள கருவறையின் உயரம் 1.99 மீட்டர். இதன் தரை இரண்டாம் படியின் மட்டத்தில் உள்ளது. புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கீழ்நிலையிலிருந்து இறங்க வாய்ப்பாகக் கருவறையின் உட்புறம் வாயிலையொட்டி ஒரு படி அமைத்துள்ளனர். கருவறையின் நாற்புறச் சுவர்களும் கூரையும் வெறுமையாக உள்ளன. கருவறைத் தரையின் நடுவில் 64 செ.மீ. உயரத்திலமைந்த எண்முக ஆவுடையார் பாறையிலேயே வெட்டப்பட்டுள்ளது. இதன் நடுவில் அமைந்துள்ள உருளையான லிங்க பாணத்தின் உயரம் 63 செ.மீ. ஜகதி, எண்முகக் குமுதம், கம்புகளின் தழுவலோடமைந்த கண்டம், அதபத்மம் தழுவிய பட்டிகை, மேற்கம்பு எனப் பாதபந்த அமைப்பிலுள்ள ஆவுடையாரின் கோமுகம் வடபுறமுள்ளது. இக்கோமுகத்தைத் தாங்குமாறு போல வடக்குப் பார்வையாகத் தாவுயாளியொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது(?) . இதன் பின்கால்கள் கண்டத்தைத் தழுவியுள்ள கீழ்க்கம்பில் பொருந்த, தலை, பட்டிகையின் விளிம்புவரை நிமிர்ந்துள்ளது. இந்த யாளித்தாங்கல் கிழக்கு முகத்தில் மட்டுமே காட்சியாகிறது. மேற்கு முகத்தில் இந்த்தாங்கல் வெறும் பாறையாகவே விடப்பட்டுள்ளது. திருமஞ்சன நீர் வாங்க வாய்ப்பாக கோமுகத்தின் கீழே கருவறைத் தரையில் வெட்டப்பட்டிருந்த பள்ளம் பின்னாளில் மூடப்பட்டுள்ளது. இந்நீர் வெளியேற அமைந்துள்ள இரண்டு கால்களுள் ஒன்று புதுநிலையின் வடமூலையில் வெட்டப்பட்டுள்ள துளையின் வழியும் மற்றொன்று, வட கோட்டத்தின் கீழ்ச் செதுக்கப்பட்டுள்ள துளை வழியேயும் நீரை வெளியேற்றுகிண்றன. குடைவரை செதுக்கப்பட்டுள்ள அதே பாறையில் கருவறை வாயிலுக்குச் சற்றுத் தள்ளி வடபுறத்தே செவ்வகக் கோட்டமொன்று வெட்டப்பட்டுள்லது. நன்கு ஆழமாக வெட்டப்பட்டுள்ள இக்கோட்டத்தில் ஏதோ ஒரு வடிவத்தை அமைக்கும் முயற்சி தொடங்கிய நிலையில் கைவிடப்பட்டுள்ளது(?) . குடைவரை அமைந்துள்ள பாறைக்கு எதிரிலுள்ள சிறு பாறைஒன்றில் ஆவுடையாருடன் லிங்கமொன்று தென்பார்வையாக வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் கருவறை முன் சுவரின் வடபுறத்தே ஒரு கல்வெட்டும் தென்புறம் மூன்று கல்வெட்டுகளும் வெட்டப்பட்டுள்ளன. வடபுறத்துள்ள இருபத்தொன்பது வரிக்கல்வெட்டுத் தமிழில் வெட்டப்பட்டுள்ளது. 'பூவின் கிழத்தி' எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியுடைய சடையவர்மர் குலசேகரப்பாண்டியரின் மூன்றாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு, கல்வாயில் நாடாழ்வார், நில வரிகளான கடமை, வரி, அந்தராயம் ஆகியவற்றை இக்கோயிலுக்குரிய தேவதான நிலத்துக்குத் தவிர்த்து ஆணையிட்ட தகவலைத் தருகிறது. விருதராஜபயங்கர வளநாட்டுக்கான நாட்டிலுள்ள ஸ்ரீவரமுடைய நாயனாராகக் கோயில் இறைவன் குறிக்கப்பட்டுள்ளார்(?) . முன்சுவரின் தென்புறத்தே கீழ்ப்பகுதியில் வெட்டப்பட்டுள்ள 'பரிவாதினி' எனும் முதல் கல்வெட்டு வீணையொன்றைக் குறிப்பதாக இசை வல்லுநர்கள் கருதுகின்றனர். கட்டம் கட்டப்பெற்ற இதே நிலையில் இக்கல்வெட்டு, குடுமியான்மலைக் குடைவரைக் கருவறை வாயிலின் வலப்புறத்தும் திருமெய்யம் சத்தியகிரீசுவரர் குடைவரைக் கோயில் மண்டப வடசுவரிலும் காணப்படுகிறது(?) . இக்கல்வெட்டு கோகர்ணக் குடைவரையிலும் காணப்படுவதாகத் தென்னிந்தியக் கல்வெட்டுகள் பன்னிரண்டாம் தொகுதியைப் பதிப்பித்த வி. வேங்கடசுப்ப ஐயரும் கோகர்ணக் குடைவரையிலும் திருமெய்யம் மேல்குடைவரையிலும் காணப்படுவதாகக் கூ.ரா.சீனிவாசனும் திருமெய்யம் சத்தியகிரீசுவரர் வளாகத்திலேயே இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளதாக சி. மீனாட்சியும் தத்தம் வெளியீடுகளில் பதிவுசெய்துள்ளனர்(?) . இக்கல்வெட்டு கோகர்ணம் குடைவரையில் இடம்பெறவில்லை(?) . அதுபோலவே சத்தியகிரீசுவரர் குடைவரையிலும் மீனாட்சி குறிப்பது போல் அழிக்கப்பட்ட இசைக்கல்வெட்டின் இடப்புறம் இடம்பெறவில்லை. ஆனால் திருமெய்யம் மேல்குடைவரை வெட்டப்பட்டுள்ள பாறையில் குடைவரை வாயிலின் வலப்புறத்தே கட்டம் கட்டப்பெற்ற அமைப்பு உள்ளது. இருப்பினும் அதில் கல்வெட்டெழுத்துக்களைக் காணக்கூடவில்லை. பரிவாதினி பற்றிய குறிப்புகள் அமரகோசத்திலும் அசுவகோசரின் புத்தசரித்ததிலும் காளிதாசரின் ரகுவம்சத்திலும் காணப்படுகின்றன. ஏழு தந்திகள் உள்ள வீணையாக அமரகோசம் இதைக் குறிப்பிடுகிறது(?) . குடுமியான் மலையிலும் திருமெய்யத்திலும் அங்குள்ள இசைக்கல்வெட்டுகளுடன் தொடர்புடையது போல இடம்பெற்றுள்ள இக்கல்வெட்டு, மலையக்கோயிலில் மட்டும் இசைக்கல்வெட்டற்ற நிலையில் தனித்துக் காணப்படுகிறது. ஆனால் கூ.ரா. சீனிவாசன் மலையக்கோயில், கோகர்ணம், திருமெய்யம் மேல்குடைவரை ஆகிய இடங்களிலும் இசைக்கல்வெட்டுகள் இருந்து அழிந்துபோயின என்று குறிப்பிட்டுள்ளார் (?) . சான்றுகளோ, அழிந்த சுவடுகளோ இல்லாத நிலையில் இகருத்தை ஏற்பதற்கில்லை. பரிவாதினிக் கல்வெட்டின் கீழ் மூன்று வரிகளில் தமிழ் எழுத்துக்களில், 1 கற்கப்படுவது காண்(?) 2 ஞ் சொல்லிய புகிற்பருக்கும் திமி 3 முக்கட் நிருவத்துக்கும் உரித்து எனும் இரண்டாம் கல்வெட்டுக் காணப்படுகிறது. இக்கல்வெட்டின் பின்னிரண்டு வரிகள் திருமெய்யம் சத்தியகிரீசுவரர் குடைவரை மண்டபத்தின் வட சுவரிலும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இங்கு முதல்வரி இருந்து அழிந்திருக்கலாம் என்று கருதுமாறு, 'கற்க' எனும் சொல்லின் சிந்தைந்த வடிவத்தைக் கண்டறியமுடிந்தது. மலையக்கோயிலில் இல்லாத 'ப்பியம்' என முடியும் நான்காம் வரியையும் திருமெய்யத்தில் படித்தறிய முடிகிறது. இக்கல்வெட்டைப் புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதியிலும் தென்னிந்தியக் கல்வெட்டுகள் பன்னிரண்டாம் தொகுதியிலும் பதிவுசெய்துள்ளனர். புதுக்கோட்டை மாவடக் கல்வெட்டுகள் தொகுதி இக்கல்வெட்டுக் காணப்படும் மலைக்கோயில், திருமெய்யம் சத்தியகிரீசுவரர் குடைவரை ஆகிய இரண்டு இடங்களையும் சுட்டிக் கல்வெட்டுகளை அவ்வக்குடைவரைகளில் உள்ளவாறு போலவே, எழுத்துக்க்களில் மட்டும் ஒன்றிரண்டு மாற்றங்களுடன் பதிவுசெய்துள்ளது (?) . ஆனால் தென்னிந்தியக் கல்வெட்டுகள் பன்னிரண்டாம் தொகுதி இக்கல்வெட்டை, மலையக்கோயிலில் காணுமாறு போன்ற அமைப்பிலும் சத்தியகிரீசுவரர் கோயிலில் உள்ளவாறு போன்ற அமைப்பிலும் இரண்டு முறை பதிப்பித்து, இரண்டுமே திருமெய்யம் குடைவரையில் இருப்பதாகத் தவறாகச் சுட்டியுள்ளது(?) . தொகுதியின் இரண்டு பதிவுகளிலுமே சில எழுத்துக்கள் வேறுபடுகின்றன. குறிப்பாகக் காண் என்ற சொல், 'காரண' என்று பதிவகியுள்ளது. மலையக்கோயிலில் இவ்விரண்டாம் கல்வெட்டின் வலப்புறத்தே (தெற்கில்), 1 என்னே பிரமாணஞ் 2 செய்த வித்யா பரிவாதிநி கற்(க) எனும் மூன்றாம் கல்வெட்டுத் தொடர் காணப்படுகிறது. முதல் மூன்று வரிகளைப் போல் அல்லாமல், ஆனால் அதே எழுத்தமையியில் சற்று நெருக்கமாகவும் அதிக ஆழமற்ற நிலையிலும் வெட்டப்பட்டுள்ள இவ்விரண்டு வரிகளைத் திருமெய்யம் சத்தியகிரீசுவரர் குடைவரையில் காணக்கூடவில்லை. செங்கற்பட்டு மாவட்டம் வல்லம் குடைவரைக் கல்வெட்டுகளில் எழுத்தமைதியை ஒத்துள்ள இக்கல்வெட்டும் இதன் இடப்புறமுள்ள கல்வெட்டும் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தன எனக் கொள்வதே ஏற்புடையது. இம்மூன்றாம் கல்வெட்டுத் தொடரைப் பதிவுசெய்துள்ள புத்க்கோட்டை மாநிலக் கல்வெட்டுத் தொகுதி, கல்வெட்டுள்ள இடத்தை, மலையக்கோயில் என்று சரியாகப் பதிவுசெய்திருந்தாலும், தொடக்கச் சொல்லான 'என்னே' என்பதைக் 'குணசேன' என்று பதிப்பித்துள்ளது. புத்க்கோட்டை மாநிலக் கல்வெட்டுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள கூ.ரா.சீனிவாசனும் இச்சொல்லைக் குணசேன என்றே கொண்டு, பரிவாதினியை உருவாக்கியவர் இந்த குணசேனனே என்று தம் நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார்(?) . தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதியைப் பதிப்பித்துள்ள வெ.வேங்கடசுப்ப ஐயர், இச்சொல்லை 'என்னை' என்று படித்திருப்பதுடன், இக்கல்வெட்டு காணப்படும் இடத்தைத் திருமெய்யம் சத்தியகிரீசுவரர் குடைவரை எனப் பிழையாகக் குறித்துள்ளார். இம்மூன்று கல்வெட்டுகளையும் தம் நூலில் பதிவுசெய்துள்ள மீனாட்சி, இவை மூன்றும் சத்தியகிரீசுவரர் குடைவரையில் அழிக்கப்பட்ட இசைக்கல்வெட்டின் இடப்புறம் இருப்பதாகவும் இவற்றுடன் முதல் இரு கல்வெட்டுகளில் பிரதிகளும் இக்குடைவரை வளாகத்திலேயே, குடைவரையின் இடப்புறமுள்ள பாறையில் இடம்பெற்றிருப்பதாகவும் இவற்றைத் தாம் 27.5.1932ல் நேரிடை ஆய்வு செய்ததாகவும் எழுதியுள்ளார். இவர் கூற்றூப்படிப் பார்த்தால், பரிவாதினி என்னும் கல்வெட்டு சத்தியகிரீசுவரர் வளாகத்தின் இரண்டிடங்களிலும் கற்கப்படுவது எனத் தொடங்கும் மலையக்கோயிலின் இரண்டாம் கல்வெட்டு, புதுக்கோஒட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதியில் அடுத்டஹ்டுத்த்து வெளியாகியுள்ள அதே நிலையில், சத்தியகிரீசுவரர் குடைவரை வளாகத்தின் இரண்ட்டிடங்களிலும், என்னே எனத் தொடங்கும் மலையக்கோயிலின் மூன்றாம் கல்வெட்டு சத்தியகிரீசுவரர் குடைவரையின் வடக்குப் பாறையிலும் இடம்பெற்றுள்ளதாகக் கொள்ளவேண்டியுள்ளது. ஆனால் சத்தியகிரீசுவரர் குடைவரை மண்டபத்தின் வடசுவரில் பரிவாதினிக் கல்வெட்டும் 'கற்கப்படுவது' எனத் தொடங்கும் மலையக்கோயில் கல்வெட்டின் பின்னிரண்டு வரிகளும் மட்டுமே காணக்கிடைக்கின்றன. மீனாட்சி குறிப்பது போல் மூன்றாம் கல்வெட்டோ முதலிரண்டு கல்வெட்டுகளின் பிரதிகளோ இக்குடைவரை வளாகத்தின் எப்பகுதியிலும் இடம்பெறவில்லை. மூன்றாம் கல்வெட்டின் 'என்னே' என்ற தொடக்கச் சொல்லைக் 'குணசேன' என்று கொண்டமையால் பரிவாதினியை உருவாக்கியவர் குணசேனனே எனும் கருத்தை, கூரா.சீனிவாசனைப் போலவே உறுதிபட உரைக்கும் மீனாட்சி அக்குணசேனன் முதலாம் மகேந்திரவர்மரே என்றும் அடையாளம் காண்கிறார். குணசேன என்ற பெயரே இக்கல்வெட்டில் இல்லாத நிலையில் அந்தப் பெயரையேற்று, அந்தப் பெயருக்கொரு அடையாள புருஷரையும் கண்டுள்ள மீனாட்சி, இக்கல்வெட்டை அது இல்லாத இடமான திருமெய்யத்தில் படித்திருப்பதாகத் தம் நூலில் பாதிவுசெய்திருப்பது துன்பமானது. இக்குடைவரையைப் பற்றி எழுதியுள்ள கே.வி. சௌந்தரராஜன்(?) இதை மாகேசுவர சைவர்களின் குடைவரையாகக் கொள்ள முயற்சிப்பதற்கு உரிய காரணங்களேதும் காட்டாமை அதினினும் துன்பமானது. முழுமையற்ற நிலையில் கிடைத்திருக்கும் இவிரண்டு கல்வெட்டுகளுக்கும் தரப்பட்டிருக்கும் விளக்கங்கள் நிறைவு தருவன்வாக இல்லைமையின், எதிர்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளின் வழி வரலாறு இதற்கு வெளிச்சமிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம். -------------------------- குறிப்புகள் 1. இக்குடைவரையில் 1.12.2002, 29.12.2002 ஆகிய இரு நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உதவியவர்கள் முனைவர் மு. நளினி, திருமதி வாணி செங்குட்டுவன், செல்வி இரா. லலிதாம்பாள். 2. வாயிலின் தென்புற அரைத்தூணில் வாயிலையொட்டிச் சட்டத்தலை வெட்டப்பட்டுள்ளது. வடபுற அரைத்தூண் சிந்தைந்துள்ளமையால் இச்சட்டத்தலையைக் காணக்கூடவில்லை. 3. வடபுறப் பாதங்கள் தெளிவாக உள்லன. ஆனால் இங்குக் கண்டப்பகுதி சரியாக வடிவம்பெறவில்லை. தென்புறம், வாயில் அனணவுத்தூணின் பாதம் இருக்கும் இடத்தில் தாங்குதளம் இல்லை. தென்கோடித் தூணின் பாதம், கண்டத்தில் காட்டப்பெறவில்லை. தாங்குதளம் முழுமையுறாமை காரணமாகலாம். 4. இதுபோன்று செங்கோடுகளில் வரைந்து பிறகே செதுக்கல் நிகழ்ந்ததென்பதை மண்டகப்பட்டு, திருமலைப்புரம் குடைவரைகளும் திருக்கோளக்குடி அம்மன்கோயில் புறச்சுவர்களும் உறுதிப்படுத்துகின்றன. 5. இக்கல்வெட்டுக் குடைவரை வாயிலின் இடப்புறத்திருப்பதாகப் புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதி தவறாகச் சுட்டியுள்ளது. IPS:4;ச சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி வடசுவரில் இருப்பதாக எழுதியுள்ளனர். தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000, ப்.147. 6. IPS:4 7. இதைச் சிம்மம் என்கிறார் கே.வி. சௌந்தரராஜன், Rock-cut Temple Styles, Somaiya Publications PVt. Ltd. Mumbai, 1998, P.94 8. எந்தத் தடயமும் இல்லாதநிலையிலும் இதப் பெண்ணொருத்தியின் முற்றுப் பெறாத புடைப்புச் சிற்பமாகக் கண்கின்றனர் சு. இராசவேல், அ.கி. சேஷாத்திரி, மும்.கு.நூ, ப.147 9. IPS:246. இக்கல்வெட்டுக் குடைவரை வாயிற்படிக்கு வலப்புறமுள்ள சுவரிலிருப்பதாகப் புதுக்கோஒட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதி பிழையாகக் குறிப்பிட்டுள்ளது. 10. குடுமியான்மலைக் குடைவரையில் 4.11.02 அன்றும் திருமெய்யம் சத்தியகிரீசுவரர், பள்ளிகொண்டருளிய ஆழ்வார் குடைவரைகளிலும் மேல்குடைவரையிலும் 29.12.02, 13.1.03, 26.1.03 ஆகிய மூன்று நாட்களும் ஆய்வு மேற்கொள்லப்பட்டது. உதவியவர்கள் முனைவர் மு. நளினி, திருமதி வாணி செங்குட்டுவன், செல்வி இரா. லலிதாம்பாள். 11. SII:12, P.3, See foot note No.1; K.R. Srinivasan, Temples of South India, Natinoal Book Trust, New Delhi, 1998, P.51; C. Minakshi, Administration and Social Life Under the Pallavas, University of Madras, 1977, P.275 12. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நாட்கள் 13.26.03. உதவியவர்கள் முனைவர் மு. நளினி, செல்வி இரா. லலிதாம்பாள். 13. C. Minakshi, Op.cit., p.272, see foot notes 41, 42 and 43. 14. K. R. Srinivasan, op.cit., p51. 15. கரண என்றும் படிக்கலாம். 16. IPS: 4 and 5. 17. SII:12, p.3, See Foot note No.1. 18. K.R.Srinivasan, op.cit., p.51 19. K.V.Soundara Rajan, op.cit., p.94. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |