![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 87
![]() இதழ் 87 [ மார்ச் 16 - ஏப்ரல் 15, 2012 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தேவாரம் பாடிய மூவரில் சுந்தரருக்குக் கிடைத்த அநுபவங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. இறைவன் அவருக்குத் தோழராக இருந்தமையால், சுந்தரர் வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களில் இடையீடாகவோ, துணையிருப்பாகவோ அடிக்கடி அவர் தோன்ற வேண்டியிருந்தது. சுந்தரரின் வாழ்க்கைப் பயணத்தில் மறக்கமுடியாத மூன்று இடங்களுள் ஒற்றியூரும் ஒன்று. அங்குதான் அவர் சங்கிலியைச் சந்தித்தார். சங்கிலியோடு இணைந்து வாழக் கருதிய சுந்தரர் அதற்கு விலையாகச் சங்கிலிக்கு, 'உன்னைவிட்டுப் பிரியேன்' என்று உறுதியளிக்க வேண்டியிருந்தது. அந்த உறுதியையும் ஒற்றியூர் இறைவன் திருமுன்னில்தான் தரவேண்டும் என்றார் சங்கிலி. பல ஊர்கள் பயணப்பட்டு இறைவனைக் கண்டு பாடும் தம்முடைய நோக்கிற்கு இந்த உறுதிமொழி தடையாகிவிடுமோ என்று அஞ்சிய சுந்தரர், ஒற்றியூர் இறைவனிடம், நண்பர்தானே என்ற உரிமையில் ஒரு வேண்டுகோள் வைத்தார். 'உன்னைப் பிரியேன் என்று சங்கிலிக்கு நான் வாக்களிக்கும் போது நீங்கள் இந்தத் திருமுன்னில் இருக்கவேண்டாம். திருச்சுற்றிலுள்ள மகிழமரத்தடிக்குச் சென்றுவிடுங்கள்' என்று சுந்தரர் வேண்ட, அவர் உளமறிந்த இறைவன் இடமாற்றத்திற்கு ஒப்புக்கொண்டார். பொய் வாக்கு அளிக்க விரும்பும் சுந்தரரைச் சங்கிலிக்கு அடையாளம் காட்ட விரும்பிய இறைவன் அன்றிரவே சங்கிலியின் கனவில் தோன்றி நடந்தது அனைத்தையும் அவ்வம்மையிடம் பகிர்ந்து கொண்டார். 'நான் என்ன செய்யட்டும்?' என்று கேட்ட சங்கிலியிடம், 'சுந்தரரை மகிழமரத்தடிக்கு அழைத்துவந்து உறுதி பெற்றுக்கொள்' என்றார் இறைவன். சங்கிலி மகிழ்ந்தார். அடுத்த நாள் காலையில் ஒற்றியூர் இறைவன் திருமுன் சங்கிலியைச் சந்தித்த சுந்தரர் உறுதியளிக்கத் தயாரானார். சங்கிலியின் தோழிகளோ, அங்கு வேண்டாம் என அவரை வேண்டி, மகிழமரத்தடியில் நின்று உறுதியளித்தால் போதும் என்றனர். செய்வதறியாது திகைத்த சுந்தரர் வேறுவழியின்றி மகிழமரத்தடியில் சங்கிலி விரும்பியவாறே உறுதி தந்தார். சங்கிலியுடன் மணம் நிகழ, இருவரும் இன்புற்றிருந்தனர். நாளடைவில் ஆரூர் நினைவு நிழலிட, தயங்கிப் பின் துணிந்து சுந்தரர் சங்கிலிக்குத் தாம் அளித்த வாக்குறுதியை மீறி ஒற்றியூர் நீங்கினார். எல்லை கடந்ததுமே இரண்டு கண்களும் பார்வையிழந்தன. துன்பத்தால் துடித்த சுந்தரர் இறைவனிடம் முறையிட்டார். வழியெல்லாம் இறைவனை வேண்டியபடியே வெண்பாக்கம் வந்து சேர்ந்தார். அங்கு வழிநடைக்கு வாய்ப்பாக அவருக்கு ஊன்றுகோல் ஒன்றை அளித்தார் இறைவன். காஞ்சிபுரம் அடைந்த நிலையில், 'கண்ணளித்து அருளாய்' என்று ஏகாம்பரரை வணங்கி வேண்ட, இறைவனும் மனமிறங்கி இடக்கண் பார்வையைத் தந்தார். ஒரு கண் பார்வையில் உளம் மகிழ்ந்த சுந்தரர், இறைவனைப் போற்றியபடியே கோயில் கோயிலாய்ப் பாடி ஆரூர் வந்தடைந்தார். ஆரூர் இறைவனை ஒரு கண் பார்வையில் கண்டமை நிறைவு தராமையால், மற்றொரு கண்ணும் காணும்படிச் செய்யவேண்டும் என்று இறைவனிடம் மன்றாடினார். உறுதி மீறியமைக்கு உரிய தண்டனையைச் சுந்தரர் பெற்றுவிட்டார் என்று கருதியோ என்னவோ இறைவனும் வலக் கண் பார்வையையும் அளித்தார். இரண்டு கண்களாலும் இறைவன் எழிலை அள்ளிப் பருகிய சுந்தரர் அகமகிழ்ந்து நன்றிப் பெருக்கில் இறைவனைப் போற்றிக் கொண்டாடினார். செய்த தவறுக்காகத் தண்டனை கிடைப்பதும் பிழையை உணர்ந்து, வருந்திப் பொறுத்தருளுமாறு மன்றாடும்போது அத்தண்டனையிலிருந்து விடுபடுவதும் சுந்தரருக்கு மட்டும் வாய்த்த நிகழ்வன்று என்பதைத் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள இரண்டு கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. சிராப்பள்ளி வயலூர்ச் சாலையில் சோமரசன்பேட்டையை அடுத்து வலப்புறம் பிரியும் வயல்களுக்கு இடையிலான சாலை சென்றடையும் சிற்றூரே பெருங்குடி. சோழர் காலத்தில் பெருமுடி என்றழைக்கப்பட்ட இச்சிற்றூரில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையால் பாதுகாக்கப்படும் சோழர் காலக் கோயில் ஒன்று அகத்தீசுவரம் என்ற பெயரில் இன்றும் பெருமையுடன் விளங்குகிறது. முதலாம் இராஜராஜசோழரின் தந்தையாரான சுந்தரசோழரின் கல்வெட்டுகளும் இராஜராஜரின் தமையனாரான வீரபாண்டியர் தலை கொண்ட ஆதித்தகரிகாலரின் கல்வெட்டொன்றும் மூன்றாம் இராஜராஜரின் கல்வெட்டொன்றும் இக்கோயிலில் இடம்பெற்றுள்ளன. சோழர்களைத் தொடர்ந்து சிராப்பள்ளியை ஆண்ட பாண்டியர், ஒய்சளர் கல்வெட்டுகளும் இக்கோயிலில் உள்ளன. இக்கல்வெட்டுகளுள் ஒன்று ஒய்சள அரசர் வீரராமநாதரின் 14ஆம் ஆட்சியாண்டில், அதாவது கி. பி. 1268இல் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில், பெருங்குடி திருஅகத்தீசுவரம் கோயிலுக்குத் திருப்பணி நிகழ்ந்தமை குறிக்கப்பட்டுள்ளது. திருப்பணிச் செலவுகள் கைமீறிப் போனதால் கல் தச்சர்களுக்குத் தரவேண்டிய கூலியைத் தரமுடியாத நிலை கோயில் நிருவாகத்திற்கு ஏற்பட, அதன் விளைவாய்த் திருப்பணி தடைப்படும் சூழல் உருவானது. ஊர்த் தட்டார்களுள் ஒருவரான மருதாண்டான் மகன் கூத்தன் அது கண்டு வருந்திக் கோயில் திருப்பணி தொடர்வதற்காகத் தம் கைப்பொருளில் இருந்து மூன்று கழஞ்சுப் பொன்னைக் கொடையளித்தார். நல்லமங்கை என்ற பெயரில் கூத்தனுக்கு ஒரு மகன் இருந்தார். சிறுவயதிலேயே அந்நல்லமங்கைக்குக் கண் பார்வை பறிபோயிற்று. கோயில் திருப்பணிக்குக் கூத்தன் கொடையளித்த ஐந்தாண்டுகளில் இறையருளால் நல்லமங்கைக்குப் பார்வை கிடைத்தது. அந்த அற்புதத்திற்கு நன்றி கூறுமாறு போலக் கூத்தன், தன் மகன் சார்பில் கழஞ்சுப் பொன்னில் நெற்றிப் பட்டம் ஒன்று செய்து இறைவனுக்கு அணிவிக்குமாறு கோயிலாரிடம் தந்தார். பார்வையிழப்பைக் 'கண் மறைந்த' என்ற சொற்களாலும் பார்வை பெற்றமையைக் 'கண் விளங்கி' என்ற சொற்களாலும் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. நல்லமங்கைக்கு யார் பிழையால் பார்வை பறிபோனது என்பதை அறியமுடியாவிட்டாலும் தந்தையின் மனிதநேயம் மிக்க அருட்கொடையே இழந்த பார்வையை மகனுக்கு மீட்டுக் கொடுத்தது என்பதைக் கல்வெட்டுவழி அறியமுடிகிறது. (இந்தியக் கல்வெட்டறிக்கை 1939-40, எண் 394). புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இருபது குடைவரைகளுள் இரண்டு கோயில்கள் கீரனூருக்கு அருகிலுள்ள மலையடிப்பட்டியில் உள்ளன. அவற்றுள் ஒன்று சோழர் கல்வெட்டுகளில் ஒளிபதி விஷ்ணுகிருகம் என்று அழைக்கப்படும் பள்ளிகொண்ட பெருமாளின் குடைவரையாகும். அதன் அருகிலேயே அமைந்துள்ளது தந்திவர்மப் பல்லவர் காலத்தில் முத்தரையர் குவாவன் சாத்தன் குடைவித்த ஆலத்தூர்த் தளி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அகழப்பட்ட இக்குடைவரையில் சிவபெருமான் கருவறைத் தெய்வமாக இலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். குடைவரையின் மண்டபச் சுவர்களில் சண்டேசுவரர், எழுவர் அன்னையர்தொகுதி, முருகன், சங்கரநாராயணர், கொற்றவைச் சிற்பங்கள் உள்ளன. இக்குடைவரையிலிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளுள் காலத்தால் மிகவும் பிற்பட்ட கல்வெட்டு ஒன்று சுவையான நிகழ்வொன்றைப் படம்பிடித்துள்ளது. (புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகள், எண் 904) வெகுதானிய ஆண்டின் தைத்திங்கள் 11ஆம் நாளில் வெட்டப்பட்டிருக்கும் இக்கல்வெட்டு, குடைவரை இறைவனை வாகீசுவரதேவர் என்றும் குடைவரை வளாகத்திற்கு வெளியிலுள்ள திருமுன்னில் அருள் சொரியும் இறைவியை வடிவுள்ள மங்கை என்றும் குறிப்பதுடன், செய்த தவறுக்காகப் பார்வையிழந்து, இறைவனிடம் மன்றாடிப் பார்வை பெற்ற ஒருவரின் வரலாற்றையும் முன்வைக்கிறது. பூச்சிக்குடியைச் சேர்ந்தவர் ஆவுடையாதேவன். திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் துழாய்க்குடிக்கு அருகிலுள்ள திருநெடுங்களத்தில் வாழ்ந்து கொண்டிருந்த விலைமாது ஒருவருடன் அவர் உறவு கொண்டிருந்தார். அந்த நெடுங்களத்துப் பெண்மணி அவரோடு நில்லாமல், பிராமணர் ஒருவருடனும் தொடர்புகொண்டிருந்தார். இருவரையும் ஒருசேரக் கண்ட ஆவுடையாதேவன் மனம் பொறாது, ஏமாற்றப்பட்ட உணர்வுடன், சினம் பொங்க இருவரையும் வெட்டிக் கொன்று ஆலத்தூர் மலையடிக்கு வர, வந்த இடத்தில் அவருக்கு இரண்டு கண்களிலும் பார்வை பறிபோயிற்று. கண்ணொளி இழந்த ஆவுடையாதேவன் துன்பத்தில் தவித்தார். தம் தவறான செயலுக்காகப் பெரிதும் வருந்தினார். தம்முடைய துன்பத்தை நீக்குமாறு இறைவனிடம் வேண்டிப் பார்வை கேட்ட ஆவுடையாதேவன், பார்வை கிடைத்தால் வாகீசுவரசுவாமியின் வழிபாட்டிற்கும் படையல்களுக்குமாய்த் தம்முடைய வயலைக் கொடையளிப்பதாக உறுதியளித்தார். பிழை உணர்ந்த ஆவுடையாதேவனை மன்னித்துப் பார்வை கொடுத்தார் இறைவன். வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனுக்குத் தாம் வாக்களித்தாற் போலவே ஆவுடையாதேவன், தம்முடைய காணியான ஆவுடையான் குடிக்காட்டைத் தந்தார். அவருடைய அந்த அறத்துக்குக் கெடுதல் நினைப்பவர்கள் வாகீசுவரசுவாமி திருமுன்னுக்கு விரோதியாவதுடன் கங்கைக்கரையில் பசுவைக் கொன்ற பாவத்துக்கு ஆளாவர் என்ற எச்சரிக்கையுடன் தம் கல்வெட்டு மொழிவை முடித்துள்ளார் தேவன். செய்த தவறுக்குத் தண்டனையாகப் பார்வை பறிபோவதும் தவறை உணர்ந்து இறைவன் முன் வேண்டுதல் வைத்ததும் பார்வை மீள்வதும் சுந்தரர் காலத்திலிருந்து நடந்துவரும் நிகழ்ச்சி என்பதை மலையடிப்பட்டிக் கல்வெட்டும் நல்லது செய்தால் நல்லதே விளையும் என்பதற்குப் பெருங்குடிக் கல்வெட்டும் சான்றாக நிற்கின்றன. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |