![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 77
![]() இதழ் 77 [ நவம்பர் 16 - டிசம்பர் 15, 2010 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம். இந்த இதழ் முதல் தலையங்கத்தின் தலைப்பு அழகுத் தமிழிலிருந்து மாறி, சேட்டுத் தமிழ் ஆகப்போகிறதோ என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. சேட்டுக்களும் இப்போது அழகுத் தமிழுக்கு மாறி வருகிறார்களாமே! உதாரணம் வேண்டுமா? 14 ஜனவரி 2011 தேதியிட்ட தினமணி நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான திரு. எஸ்.எம்.அப்துல் ஜப்பார் அவர்களின் கட்டுரைதான் சான்று. 'தமிழ் சோறு போடுமா?' என்ற கட்டுரை, படித்து முடித்த பிறகு சற்றுச் சிந்திக்க வைத்தது. சில கருத்துக்கள் ஏற்புடையன; சில ஏற்பில்லாதவை. நெடுநாட்களாகத் தமிழ் ஆர்வலர்களைக் குடைந்து வந்த ஒரு கேள்வி, 'ஏன் தமிழர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தைக் கலந்தே பேசுகிறார்கள்? (அல்லது பேசுகிறோம்?) தனித்தமிழில் இயல்பாக உரையாட விருப்பமில்லையா அல்லது முடியவே முடியாதா?' என்பது. அதற்கான விடை இந்தக் கட்டுரையில் ஒரு மெல்லிய ஒளிக்கீற்று போல் திசை காட்டுகிறது. இதை திரு. அப்துல் ஜப்பார் அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். சென்னையில் ஒரு வட இந்திய சேட் 'லேவாதேவி' எனப்படும் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். கிரிக்கெட் ரசிகர். இரண்டு வானொலிப் பெட்டிகளை வைத்துக்கொண்டு இந்தியில் வர்ணனை கேட்பார். அது முடிந்து ஆங்கிலம் தொடங்கும்போது, தமிழுக்கு வந்துவிடுவார். அவரிடம் "நம்பள்க்கி, நிம்பள்க்கி' சமாசாரமெல்லாம் கிடையாது. நல்ல தமிழ் பேசுவார், படிப்பார். அது எப்படி என்று கேட்டால் 'நாப்பது வருஷம் இங்கே வாழ்ந்துவிட்டு நான் நல்ல தமிழ் பேசவில்லை என்றால் அது வேறு யாருக்குமல்ல, எனக்குத்தான் அவமானம்' என்பார். இவை அவரே உதிர்த்த சொற்கள். ஆனால், தமிழ்நாட்டில் பிறந்து, தமிழகத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர் தமிழில் பேசுவதை, படிப்பதை அவமானமாகக் கருதுகிறார்கள் என்பதுதான் இதிலுள்ள சோகம். 'ஆனால்' என்று நீட்டி முழக்குவதைவிட 'பட்' என்பதைச் சட்டென்று சொல்லிவிட முடிகிறதாம். 'ஆகையால்' என்பதைவிட 'சோ' என்று சொல்வது சுலபமாக இருக்கிறதாம். இதற்கு உண்மையான காரணம் இவர்களது வாய் அவசியப்படும் அளவுக்கு இவர்களது மூளையால் சொற்களை வினியோகிக்க முடியவில்லை என்பதுதான்...! வார்த்தைக்கு வார்த்தை 'வந்து' என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கும், மூச்சுக்கு முன்னூறு முறை 'இப்ப பாத்தீங்கண்ணா', 'ஏன்னு கேட்டீங்கண்ணா' என்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவதற்கும் இந்த மூளைக் குறைபாடே காரணம்! வல்லுநர்கள் சொல்கிறார்கள்! இங்கிலாந்திலிருந்து ப்ரான்ஸ் செல்லும் கப்பலில் அதிகாரி என் கடவுச்சீட்டை திரும்பத்தந்தபோது நான் 'நன்றி' என்றேன் ஆங்கிலத்தில்! அதற்கு அவர், 'இல்லையில்லை மெர்சி... மெர்சி' என்றார். பிரெஞ்ச் மொழியில்...! அவர் மொழி மீது அவருக்குள்ள காதல் அப்படி...! இரண்டு ப்ரெஞ்ச் பத்திரிகைகள் சொந்தமொழிச் சொற்கள் இருக்க பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தினார்கள் என்பதற்காக அவற்றுக்கு அபராதம் விதித்து மன்னிப்பும் கேட்கவைத்ததாம், 'ப்ரெஞ்ச் அகாதெமி' என்கிற அமைப்பு. ஆனால், நம்நாட்டிலோ...? வல்லுநர்கள் கூறும் மூளைக் குறைபாடு என்பது சற்று ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமாகத் தெரிகிறது. இதற்குக் காரணம், தமிழில் அவ்வளவாக வாசிக்கும் பழக்கம் இல்லாமல் இருப்பதாலோ என்று தோன்றுகிறது. பள்ளியில் பயிற்றுமொழி ஆங்கிலமாக இருப்பதால், பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி, நாள்தோறும் படிக்கும் செய்தித்தாள் ஆங்கிலம்; கதைப்புத்தகங்கள் ஆங்கிலம்; நூலகங்களில் காணும் வார, மாத இதழ்கள் ஆங்கிலம்; இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆசிரிய/ஆசிரியைகள் உரையாடும் மொழி ஆங்கிலம் (அது அரைகுறை ஆங்கிலம் என்பது வேறு விஷயம்) என்று திணிக்கப்படுவதால், தாய்மொழி என்ற சுரப்பிக்குச் சரியான வாய்ப்பு இல்லாமல் போய், செரிமானம் கெட்டு, மூளைக்குத் தகவல்கள் அனுப்பப்படுவது தடைபட்டு, குறைபாடு ஏற்படுகிறது. ஆம். வயிற்றுக்கு ஈயும் உணவு மட்டுமல்ல; செவிக்கு விருந்தாகும் உணவும் மூளை வளர்ச்சிக்குத் தேவை. 'ஆனால்' என்று நீட்டி முழக்குவதைவிட 'பட்' என்று எளிதாகச் சொல்லிவிட முடிகிறது என்று கூறுபவர்களது வாதம் வெறும் சப்பைக்கட்டாகவே தெரிகிறது. அப்படியானால், 'நூறடி சாலை' என்று எளிதாகச் சொல்லாமல், சென்னையில் இன்று பெரும்பாலானோர் 'Hundred feet road' என்று நீட்டி முழக்குவது எந்த வகையில் சேர்த்தி? மனித மூளை என்பது ஆயிரக்கணக்கான 'சூப்பர் கம்ப்யூட்டர்'களைவிட மேலானது என்கிறார்கள். கணிப்பொறி இயங்க எப்படி நிரல் எழுதித் தரவுகளை உள்ளிடுகிறோமோ, அதுபோல் மூளைக்கும் சரியான உள்ளீடு தேவை. அப்போதுதான் தேவையானபோது அவற்றைப் பயன்படுத்தி விரும்பத்தக்க செயல்களையும் சொற்களையும் வெளிப்படுத்தும். 'ப்ரெஞ்ச் அகாதெமி' போல் தமிழ்நாட்டில் செய்வதெல்லாம் கானல்நீர்தான். தமிழைக் கோயில்களில் நுழையவைக்கப் பட்ட பாட்டைவிடத் தமிழனின் வாயில் நுழையவைக்க அதிகமாகப் பாடுபடவேண்டி இருக்கும். 'இரண்டு மலையாளிகள்; இரண்டு தமிழர்கள்' உதாரணத்தைச் சொல்லிச் சொல்லி அலுத்து விட்டது. இதற்குப் பதில் வேறொரு புதிய உதாரணத்தைக் கண்டு பிடித்துச் சொன்னாலும் அது விழலுக்கிறைத்த நீராகவே போகும். ஆனால், அதற்காகத் 'திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்' என்றெல்லாம் காத்திருப்பதில் அர்த்தமில்லை. இப்போதெல்லாம் எந்தத் திருடனும் தானே திருந்துகிற மாதிரி தெரியவில்லை. அதிலும் இத்தகைய தமிழ்ப் பயன்பாட்டைக் குறைப்பதைத் தவறு என்றுகூட உணராதவர்களிடம் 'தானே திருந்துதலை' எதிர்பார்ப்பது பேராசைதான். தடுப்பூசி மட்டுமல்ல; தமிழும் கட்டாயம் என்றால்தான் சரிவரும். ஏறத்தாழ இதே கருத்தைத்தான் திரு. எஸ்.எம்.அப்துல் ஜப்பார் அவர்களும் கட்டுரையின் இறுதியில் கூறியிருக்கிறார். தமிழ்க்குடிமகன் அமைச்சராக இருந்தபோது 5-ம் வகுப்பு வரை தமிழ்மொழி என்றுகூட தனித்துச் சொல்லவில்லை. தாய்மொழியில் கல்வி என்று ஒரு சட்டம் கொண்டுவந்தார். ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்கள் நீதிமன்றப்படிகளை மிதித்தன. நீதிமன்றம் "தங்கள் பிள்ளைகளுக்கு எந்த மொழியில் கல்வி கற்றுத்தர வேண்டும் என்று தீர்மானிப்பது அரசியல் சாசனம் பெற்றோருக்கு அளித்துள்ள அடிப்படை உரிமை; அதில் அரசு தலையிட முடியாது" என்று தீர்ப்பளித்தது. புதுவை பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும், மத்திய அரசின் திட்டக்குழுவில் கல்வி, சுகாதாரம் ஆகிய பிரிவுகளுக்கான உறுப்பினராக இருந்தவருமான பெரியவர் வேங்கடசாமி, "மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இனி தமிழில்தான் என்று ஒரு சட்டம் போடுங்கள். எந்த அடிப்படை உரிமை குறுக்கே வந்து நிற்கிறது பார்த்து விடலாம்" என்றார். யார் செய்தார்கள்? ஒரு நல்ல விஷயத்தைச் செய்யும்போது சில விஷமிகள் 'அடிப்படை உரிமை' என்ற ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டு வந்து தடுத்தால், அந்த உரிமைக்கான வரையறையையே மாற்றுவதுதான் அந்த நல்ல விஷயம் தொடரச் செய்யும் வழி. எனவே, தமிழைக் கட்டாயப் பாடமாகப் படிக்கவும், தமிழ்ச் சொற்கள் இருக்கப் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தினால் தண்டனை அல்லது அபராதம் விதிக்கும் சட்டம் இயற்றுவதும் தவறே இல்லை. அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |