![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 66
![]() இதழ் 66 [ டிசம்பர் 15 - ஜனவரி 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம். தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டபின் முதல் உலகளாவிய மாநாடு, அதுவும் தமிழ்நாட்டிலேயே நடக்கப்போகிறது என்ற செய்தி தமிழார்வலர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. வரலாறு டாட் காம் மின்னிதழும் இதற்கு விதிவிலக்கல்ல. செம்மொழி மாநாடு மாபெரும் வெற்றிபெற்று, தமிழ்மொழிக்கு இன்னும் பெருமையும் வளமும் சேர்க்க முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் எல்லா மாநாட்டுக் குழு உறுப்பினர்களுக்கும் வரலாறு டாட் காம் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. மாநாட்டு ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன எனத் தமிழ்நாட்டிலுள்ள நண்பர்கள் வாயிலாக அறிந்துகொண்டோம். முதல்வரே ஒவ்வொரு குழுவின் சந்திப்புகளிலும் கலந்துகொண்டு ஊக்கப்படுத்துவதால், குழுவினர் சோர்வடையாமல் ஆர்வத்துடன் தத்தம் பங்களிப்பைக் குறைவின்றி நல்குவார்கள் என்பதில் ஐயமில்லை. வழக்கமாக ஏதாவது உலகளாவிய மாநாடுகள் நடக்கும்போது அத்துறை வல்லுனர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுக் கட்டுரைகள் வேண்டப்படும். ஆனால் இம்மாநாட்டுக்கு நாளிதழ்களில் அழைப்பு வெளியிடப்பட்டு, பொதுமக்கள் அனைவரிடமிருந்தும் ஆய்வுக்கட்டுரைகளையும் பங்களிப்பையும் கோரியிருப்பது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மாநாட்டுக்கென உருவாக்கப்பட்டிருக்கும் இருமொழி இணையதளத்தில் (http://www.ulakathamizhchemmozhi.org) குழுக்கள் பற்றியும் ஆய்வுப் பொருண்மைகள் பற்றியும் வெளியிட்டிருக்கிறார்கள். வரவேற்பு, விருந்தோம்பல், போக்குவரத்து, பாதுகாப்பு, அரங்க அமைப்பு, தங்குமிட ஏற்பாடு என இருபதுக்கும் மேற்பட்ட குழுக்களை உருவாக்கி, அந்தந்தத் துறையின் அமைச்சர்களையும் செயலர், ஆணையர் மட்ட அதிகாரிகளையும் பொறுப்பாக நியமித்துள்ளார்கள். இதன்மூலம், மாநாடு ஏற்பாடுகளுக்குத் தேவையான துறைசார்ந்த அனைத்து உதவிகளும் தங்குதடையின்றிக் கிடைக்கும் என்பது திண்ணம். இதுமட்டுமின்றி, ஒவ்வொரு குழுவுக்கும் தங்கள் அனுபவம் மற்றும் நிறுவனத்தின் சார்பில் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கவல்ல பொதுமக்களையும் குழுவின் உறுப்பினர்களாக்கியிருப்பது சிறப்புக்குரியது. இந்நேரத்தில், இந்த இணையதளத்தை இன்னும் மேம்படுத்தி, மாநாடு தொடர்பான செய்திகளை உலகெங்கும் வாழும் தமிழர்களின் கவனத்திற்கு எவ்வாறு கொண்டு சேர்க்கலாம் என்ற நோக்கில், வரலாறு டாட் காம் கீழ்க்கண்ட ஆலோசனைகளை வழங்குகிறது. 1. அறிவிப்புகள் பக்கத்தில் மாநாடு தொடர்பான இன்னும் பல்வேறு அறிவிப்புகளை எடுத்துக்காட்டாக, ஆய்வுக்கட்டுரைகளையும் சுருக்கங்களையும் (Synopsis) சமர்ப்பிக்க வேண்டிய கடைசித்தேதி போன்றவற்றை வெளியிடலாம். தங்குமிடம், போக்குவரத்து போன்ற விழா ஏற்பாடுகளின் முன்னேற்றத்தையும் பொதுமக்கள் அறியுமாறு செய்யலாம். 2. ஆய்வுப் பொருண்மைகள் தமிழ்ப் பக்கத்தில் முகப்பரங்கம், தனிப்பொழிவரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் என நான்கு விதமான அரங்கங்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அரங்கிலும் சில தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அரங்கம் பற்றியும் சிறுகுறிப்பையும் நடக்கும் முறையையும் சேர்க்கலாம். பங்கேற்பாளர்கள் எல்லா அரங்கங்களுக்கும் படைப்புகளை அனுப்பலாமா அல்லது அமர்வரங்கம் தவிர்த்த பிற அரங்கங்களுக்குச் சிறப்பு அனுமதி பெறவேண்டுமா அல்லது தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டிருக்க வேண்டுமா எனத் தெளிவுபடுத்தலாம். சிறப்பு அனுமதி பெறவேண்டும் என்றால், எப்போது, யாரிடம் போன்ற விவரங்களையும், தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டிருக்க வேண்டுமெனில், யார் யார் அவ்வாறு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் போன்ற விவரங்களையும் வெளியிடலாம். 3. ஆய்வுப் பொருண்மைகள் ஆங்கிலப் பக்கத்தில் தகவல்கள் தமிழ்ப் பக்கத்தில் அமைந்துள்ள அதேவரிசையில் அமைத்திருக்கலாம். ஆங்கிலப் பக்கத்தில் இருக்கும் விவரங்கள் தமிழ்ப் பக்கத்துடன் பொருந்தி இருக்குமாறு அமைப்பது இன்றைய இளம் தலைமுறைக்கு உதவியாக இருக்கும். உதாரணமாக, தனிப்பொழிவரங்கத்துக்கும் அமர்வரங்கத்துக்கும் உள்ள வேறுபாட்டைச் சொல்லலாம். ஒவ்வொரு அரங்கமும் எந்த மாதிரி நடக்கும் என்பதை அந்தந்த அரங்கங்களின் பெயர்களிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தவர்கள் மிகக்குறைவு. அவற்றுக்கு இணையான இன்று வழக்கத்திலிருக்கும் ஆங்கிலப் பெயர்களிலிருந்து சிலரும், ஒவ்வொரு அரங்கம் பற்றிய சிறுகுறிப்பு மூலம் பலரும் அறிந்துகொள்ள முடியும். 4. ஒவ்வொரு அமர்விற்கும் தலைமை தாங்குபவர்கள் மற்றும் பங்குகொள்பவர்களின் பட்டியலை வெளியிடலாம். மாநாட்டுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போது இது முடிவு செய்யப்பட்டிருக்காதுதான். ஆகவே, முடிவு செய்யப்பட்டவுடன் இதைச் சேர்க்கலாம். 5. ஊடகங்கள் பக்கத்தில் தற்போது ஒரேயொரு காணொளிதான் இருக்கிறது. இதுமட்டுமின்றி, இதுவரை பல்வேறு ஊடகங்களில் மாநாடு தொடர்பாக வெளியான செய்திகள் அனைத்தையும் தொகுத்து வெளியிடலாம். 6. ஒரே நீண்ட பக்கத்தில், அனைத்துக் குழுக்களின் உறுப்பினர்களின் விவரங்கள் வாசிப்பதற்குச் சற்று சிரமமாக இருக்கிறது. இதைத் தவிர்த்து, குழுக்களின் பட்டியலை ஒரு பக்கத்திலும், ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு பக்கத்தை ஒதுக்கி, பட்டியலில் இணைப்புக் கொடுக்கலாம். உறுப்பினர்களின் பெயர்களையும் பதவியையும் வரிசையாகக் கொடுப்பதற்குப் பதிலாக அட்டவணையாகக் கொடுக்கலாம். இது படிப்பவர்களின் சிரமத்தைக் குறைப்பதோடு, பார்க்க விரும்பும் குழு விவரத்தை எளிதாகப் பார்க்கமுடியும். 7. தமிழ் வளர்ச்சி தொடர்பான இன்னும் பல இணையதளங்களை இணைப்புத் தளங்கள் பக்கத்தில் சேர்க்கலாம். 8. எனது கட்டுரைகள் பக்கத்தில் தாம் அனுப்பிய படைப்பை மட்டுமே காணுமாறு இப்போது இருக்கிறது. தனது படைப்பு தவிர, மற்ற அறிஞர்களின் படைப்புகளின் சுருக்கங்களையும் வாசிக்க வகைசெய்யலாம். இது மாநாட்டு ஆய்வரங்குகளுக்கு ஒரு முன்னோட்டம் (Curtain raiser) போன்று அமைந்து, பல்வேறு தரப்பு மக்களை மாநாட்டின்பால் ஈர்க்கலாம். இதுவரை கலந்துகொள்ள எண்ணியிராதவர்களையும் கலந்துகொள்ள எண்ணவைக்க வாய்ப்புண்டு. இணையதளம் தொடர்பான மேற்கண்ட ஆலோசனைகள் தவிர, பிற பொதுவான வேண்டுகோள்களையும் வரலாறு டாட் காம் முன்வைக்கிறது. 1. விழா நிகழ்வுகளையும் அரங்கங்களையும் ஒளிப்பதிவு செய்து, DVDக்களாக வெளியிட்டு, இலவசமாக அல்லது அடக்க விலையிலேயே விழாமலருடன் சேர்த்து அல்லது தனியாக விற்பனை செய்யலாம். இதனால், பல்வேறு சூழ்நிலைகளால் மாநாட்டில் கலந்துகொள்ள இயலாதவர்களின் வருத்தத்தைப் போக்கலாம். மாநாட்டில் கலந்து கொள்பவர்கள்கூட, ஒரேசமயத்தில் நடைபெறும் ஒன்றுக்கு மேற்பட்ட விருப்ப நிகழ்வுகளில் ஒன்றை மட்டும் கண்டு, மற்றவற்றை விட்டுவிட நேர்வதைத் தவிர்க்கலாம். ஆய்வரங்குகளின் ஒளிப்பதிவு, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அத்துறையில் ஆய்வு மேற்கொள்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். 2. மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்தில் நூல் விற்பனை அரங்குகளைச் சிறு புத்தகக் கண்காட்சி போன்று அமைக்கலாம். தமிழ் ஆர்வலர்கள் கூடும் இடத்தில், தமிழறிஞர்களின் நூல்களை ஒரே இடத்தில் விற்க / வாங்க ஏதுவாக இருக்கும். 3. கலைநிகழ்ச்சிகள் என்னென்ன ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை. தமிழக வரலாற்றின் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி குழுநடனம் அல்லது வேறு ஏதாவதொரு வகையில் மக்களைக் கவரும் வண்ணம் காண்பிக்கலாம். தமிழ் செம்மொழி ஆனதால் என்ன பயன் விளைந்ததென்று தெரியாமல் இன்னும் பல தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களது அறியாமையைப் போக்கும் விதத்தில் நாடகம் ஏதாவது அமைத்து விளக்கலாம். இவை எல்லாவற்றையும்விட, ஒட்டுமொத்தத் தமிழர்களின் எதிர்பார்ப்பு ஒன்று இருக்கிறது. இம்மாநாட்டில் வாசித்தளிக்கப்படும் ஆய்வுக்கட்டுரைகள் முன்வைக்கும் ஆய்வு முடிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, தமிழ், தமிழர் மற்றும் தமிழ்நாடு வளர்ச்சி பெறவேண்டும் என்பதே அது. மேற்கூறிய ஆலோசனைகள் எல்லாமே மாநாடு சிறப்புற நடக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் வழங்கப்பட்டவைதான். அவ்வாறு சீரும் சிறப்புமாக நடைபெறும் மாநாடு அதற்குரிய கடமையை நிறைவேற்றப்போவது அம்மாநாட்டு ஆய்வு முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்தான் அடங்கியிருக்கின்றது. இத்தகைய எதிர்பார்ப்புகளை மாநாட்டுக் குழுவினர் ஆக்கபூர்வமான ஆலோசனைகளாக எண்ணிச் செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறோம். அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |