![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 5
![]() இதழ் 5 [ டிஸம்பர் 15, 2005- ஜனவரி 14, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
கட்டிடக்கலை ஆய்வு
இதுவரை விளக்கப்பட்ட தாங்குதள அமைப்புகளைக் கோயில்களுக்குச் சென்று பார்த்து விட்டீர்களா? சில நண்பர்கள், இத்தொடரின் சில பகுதிகள் சரியாகப் புரியவில்லை என்று கூறினர். கட்டுரையின் பிரதியைக் கோயில்களுக்கு எடுத்துச் சென்று தாங்குதளத்திலுள்ள உறுப்புகளுடன் ஒப்பிட்டுப் படித்துப் பார்த்தால், தெளிவாக விளங்கும். முயற்சி செய்து பாருங்கள். அதன் பிறகும் குழப்பம் நீடித்தால், இருக்கவே இருக்கிறது பின்னூட்டப் பகுதி. அதில் உங்கள் சந்தேகங்களை இடுங்கள். மின்னஞ்சல் மூலமாக விளக்கம் தருகிறேன்.
தாங்குதளத்திற்கு மேல் அமைந்திருப்பது சுவர்தான் என்றாலும், சுவருக்கும் தாங்குதளத்திற்கும் இடையே ஒரு உறுப்பு இருக்கும். அதுதான் வேதிகை என்பது. தாங்குதளத்தின் உபரிக்கம்பின் மீது வேதிகை என்ற உறுப்பை வைத்து, அதன்மேல் சுவரை அமைத்திருப்பார்கள். இது சுவரை உயர்த்திக் காட்ட உதவுகிறது. இந்த வேதிகையைத் தமிழில் திண்ணை என்று சொல்லலாம். மணிமேகலையில் இதைப் பற்றிய குறிப்பு வருகிறது. ஆனால் நம் வீடுகளில் இருக்கும் திண்ணை போன்றது என எண்ண வேண்டாம். அளவில் சிறியதாக இருக்கும். இதற்கும் கம்பு, வேதிகண்டம் போன்ற உறுப்புகள் இருக்கின்றன. சில இடங்களில் வேதிகை இல்லாமல் கூட இருக்கும். கீழே உள்ள படம் தஞ்சை இராஜராஜீசுவரத்திலுள்ள விமானத்தின் ஆதிதளச்சுவரில் அமைந்துள்ள வேதிகைத்தொகுதி ஆகும். ![]() இராஜராஜீசுவரம் வேதிகைத் தொகுதி இதற்கு மேல் உள்ள சுவரைப் பல பத்திகளாகப் பிரிக்கலாம். சுவர் என்பது வேதிகைத்தொகுதியிலிருந்து உத்தரம் வரை உள்ள பகுதிதான். இதில் என்னென்ன உறுப்புக்கள் இருக்கும்? சில இடங்களில் வெறுமையாகக் கற்கள் மட்டும் அடுக்கப்பட்டிருக்கும். சில இடங்களில் சற்று உள்தள்ளியும் வெளித்தள்ளியும் இருக்கும். அரைத்தூண்கள் இருக்கும். கோட்டங்கள் அமைந்திருக்கும். கோட்டங்களுக்கு இருபுறமும் அணைவு அரைத்தூண்கள் இருக்கும். கோட்டத்திற்கு மேல் மகர தோரணம் இருக்கும். அழகைக்கூட்டச் சிற்பிக்கு என்னென்ன உத்திகள் தோன்றுகிறதோ, அத்தனையும் இருக்கும். ஆனால் மரபு விதிகளுக்குட்பட்டு. பெரும்பாலும் ஒரு சுவர் மூன்று பத்திகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். நடுவிலுள்ள பத்தி மட்டும் சற்று வெளித்தள்ளி இருக்கும். மற்ற இரு பத்திகளும் சாதாரணமாக இருக்கும். நடுப்பத்தியைச் சாலைப்பத்தி என்றும், அதற்கு இரண்டு புறமும் உள்ள பத்திகளைக் கர்ணகூடுபத்தி என்றும் சொல்வார்கள். இராஜராஜீசுவரம் போன்ற பெரிய விமானங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட சாலைப்பத்திகளை விமானத்தின் அளவுக்கேற்றாற்போல அமைத்திருப்பார்கள். இவ்வாறு அமைக்கும்போது, இரு சாலைப்பத்திகளை வேறுபடுத்திக்காட்ட, அவற்றிற்கிடையில் அகாரை என்னும் உறுப்பைப் புகுத்துவார்கள். பெரும்பாலும், ஒரு சுவரின் பத்திகளின் எண்ணிக்கை ஒற்றைப்படை எண்களாகவே இருக்கும். ஐந்து பத்திகள் உள்ள ஒரு சுவரில், கர்ணகூடுபத்தி, அகாரை, சாலைப்பத்தி, அகாரை, சாலைப்பத்தி, அகாரை,கர்ணகூடுபத்தி என்ற வரிசையில் அமைந்திருக்கும். இந்த சாலை, கர்ணகூடு ஆகியவற்றைப்பற்றி, அடுத்த இதழில் ஆர உறுப்புகளை விளக்கும் போது விரிவாகக் காண்போம். ![]() சுவரின் உறுப்புகள் மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளவைதான் சுவரின் உறுப்புகள். ஒரு சுவரில் அரைத்தூண், கோட்டம், மகரதோரணம், குடப்பஞ்சரம் ஆகியவை எத்தனை இருந்தாலும், உத்தரம், வாஜனம், வலபி, கபோதம், பூமிதேசம் ஆகியவை அனைத்துக்கும் பொதுவாக, ஒன்று மட்டுமே இருக்கும். எனவே, இவற்றைக் கூரை உறுப்புகளில் சேர்த்துக் கொள்ளலாம். கோட்டங்களில் உள்ள திருமேனிகள், அக்கோட்டம் அமைந்துள்ள சுவர் நோக்கியிருக்கும் திசையைப் பொறுத்து அமைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, கருவறையின் தெற்குச் சுவரில் தட்சிணாமூர்த்தி, மேற்கே விஷ்ணு அல்லது லிங்கோத்பவர் அல்லது அம்மையப்பர், வடக்கே பிரம்மா ஆகியவற்றைக் கூறலாம். இவ்வாறு ஒரு சுவரைப் பல பத்திகளாகப் பிரிக்கும்போது, சிலசமயம் தாங்குதளமும் பிரிக்கப்படும். அவ்வாறு பிரிக்கப்படும் பத்திகளில் இரண்டு வெவ்வேறு வகைகள் (உதாரணமாக, ஒரு பத்தியில் பாதபந்தத் தாங்குதளம், இன்னொன்றில் பிரதிபந்தம்) இருந்தால் அதற்கு வர்க்கபேதம் என்று பெயர். இது சோழர்காலத்திலிருந்தே கட்டுமானங்களில் இந்த உத்தியைக் காணமுடிகிறது. இதைக் கட்டுமானத்திற்கு அழகூட்டும் முயற்சிகளில் ஒன்று எனக்கூறலாம். ஆனால், கீழே உள்ள கொடும்பாளூரில் பூதிவிக்கிரமகேசரி எழுப்பிய மூவர் கோயிலில் சுவர் மூன்று பத்திகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், வர்க்க பேதம் காணப்படவில்லை. ![]() கொடும்பாளூர் மூவர் கோயில் சுவர் தரையின் மீது உபானம் அமைந்துள்ளது. அதற்கு மேல் தாமரை இதழ்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அந்த இடத்தில் ஜகதி அமைந்திருக்க வேண்டும். இதுபோல் ஜகதியின் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் பெரிய தாமரை வரிக்கு, மகாபத்மம் என்று பெயர். மகாபத்மத்திற்கு மேல் உருள்குமுதம். இரண்டிற்கும் நடுவில் உள்தள்ளி அமைந்துள்ள பகுதியில் குமுதத்திற்குக் கீழே சிறு தாமரை இதழ்கள் இடம்பெற்றுள்ளன. இதன் இதழ்கள் கீழ்நோக்கி உள்ளன. இதற்கு அத பத்மம் என்று பெயர். மேல்நோக்கி இருந்தால் அது ஊர்த்துவ பத்மம். படத்தில் தெளிவாகத் தெரியவில்லை. நேரில் பார்த்தால் தெரியும். உருள்குமுதத்திற்கு மேல் உள்ள பிரதிவரியில் யாளிகள் அமைந்துள்ளன. ஆக, இது பிரதிபந்த அதிஷ்டானம். ஆனால் இங்கு தாங்குதளத்திற்கும் சுவருக்கும் இடையே வேதிகைத்தொகுதி காணப்படவில்லை. சுவர் மூன்று பத்திகளாகப் பிரிக்கப்பட்டு, சாலைப்பத்தி வெளித்தள்ளி நிற்கிறது. கபோதத்தின் மீது இரண்டிரண்டு கூடுகளும் அதற்குள் மனிதத் தலைகளும் இருப்பதைக் கவனித்தீர்களா? இத்தகைய கூடுகளுக்கு நாசிகை என்று பெயர். நடுப்பத்தியின் கபோதத்திலுள்ள நாசிகைகளுக்கிடையே சிறிது இடைவெளியும், மற்ற இரண்டு பத்திகளின் கபோதங்களிலுள்ள நாசிகைகளுக்கிடையே இடைவெளி இல்லாமலும் இருப்பதைப் பாருங்கள். இவ்வாறு இரு நாசிகைகளுக்கு இடையில் இடைவெளி இல்லாமல் இருந்தால் அதற்கு நேத்ர நாசிகை என்று பெயர். இன்னும் பலவகையான நாசிகைகள் இருக்கின்றன. அவற்றை விமானத்தின் மேல்பகுதி உறுப்புகளை விளக்கும்போது காணலாம். ஒவ்வொரு பத்தியின் கபோதத்தின் இரு முனைகளிலும் ஏதோ அலங்காரம் செய்திருப்பது போல் தோன்றுகிறதல்லவா? அவற்றிற்கு கொடிக்கருக்குகள் என்று பெயர். நடுப்பத்தியின் இரண்டு முனைகளிலும் அரைத்தூண்கள் இடம்பெற்றுள்ளன. அரைத்தூண்களுக்கு நடுவில் ரிஷபாரூடர் கோட்டமும் அவற்றை அணைத்து அணைவுத்தூண்களும் அமைந்துள்ளன. கோட்டத்திற்கு மேல் உள்ள மகரதோரணத்தை அணைவுத்தூண்கள் தாங்கி நிற்கின்றன. அரைத்தூண்களின் மேல் போதிகைகள் அமைந்துள்ளன. போதிகைகளில் பல வகைகள் உள்ளன. போதிகை, தரங்கப்போதிகை, பட்டையுடன் கூடிய தரங்கப்போதிகை, வெட்டுப்போதிகை, பூமொட்டுப்போதிகை என்பன அவற்றில் சில. கட்டுமானத்தின் காலத்தைக் கணிப்பதில் இப்போதிகைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. உதாரணமாக, வெட்டுப்போதிகை இருந்தால் முதலாம் இராஜராஜன் அல்லது அவருக்குப்பின் எடுக்கப்பட்ட கோயில். பூமொட்டுப்போதிகை இருந்தால் முதலாம் குலோத்துங்கன் அல்லது பாண்டியர் காலம். மேலே உள்ள கோயிலில் பட்டையுடன் கூடிய தரங்கப்போதிகை இடம்பெற்றிருப்பதால், இது முதலாம் இராஜராஜனுக்கு முன்னர் கட்டப்பட்டிருக்க வேண்டும். ![]() நார்த்தாமலை மேலே உள்ள படத்தில் இருப்பது நார்த்தாமலையிலுள்ள ஒரு கட்டுமானக்கோயில். இதன் உறுப்புகளைக் கண்டுபிடித்து மேலே சொன்ன கட்டடக்கலைக் கூறுகளைப் பயிற்சி செய்யலாம். விடைகளைப் பின்னூட்டப்பகுதியில் இடுங்கள். அடுத்த இதழில் விடைகள் தரப்படும். (தொடரும்)this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |