![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 49
![]() இதழ் 49 [ ஜூலை 16 - ஆகஸ்ட் 17, 2008 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம். லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு தோல்வியின்றி வரலாறா? துக்கம் என்ன என் தோழா? ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும். எத்தனை உண்மையான வரிகள்!!! இதை மீண்டும் ஒருமுறை உணர, கடந்த மாதத்தில் மற்றொரு வாய்ப்பு ஏற்பட்டது. ஐராவதியின் நூலாக்கப் பணிகளில் எங்களுக்குச் சோர்வும் தடங்கல்களும் ஏற்பட்டபோது, புதிய தெம்பை அளித்துத் தொடர்ந்து தொய்வில்லாமல் உழைக்க உற்சாகப்படுத்தியவை மேற்கண்ட வரிகள்தாம். அப்படியென்னதான் தடங்கல்கள் ஏற்பட்டன என்று அறிந்துகொள்ள வேண்டுமா? ஆகஸ்ட் 16 வரை பொறுத்திருங்கள். இடையில் ஏற்பட்ட சில சிக்கல்களையும் மீறி, 'ஐராவதி' நூலாக்கப் பணிகளும், வெளியீட்டு விழா ஏற்பாடுகளும் ஏறக்குறைய முடியும் தருவாயில் இருக்கின்றன. அழைப்பிதழ்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தயாராகிவிடும். அதனை வரலாறு.காம் முகப்புப் பக்கத்தில் வெளியிட இருக்கிறோம். நேரிலோ அல்லது மின்னஞ்சலிலோ அழைப்பிதழ் கிடைக்கப் பெறாதவர்கள், இதையே நேரில் அழைத்ததாகக் கருதி, விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஐராவதி வெளியீடு மட்டுமின்றி, வரலாறு.காம் தனது ஐந்தாவது ஆண்டுத் தொடக்கவிழாவையும் அதே மேடையில் கொண்டாட இருக்கிறது. வரலாறு.காம் மின்னிதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைத்து வாசகர்களும் இவ்விழாவில் பங்குகொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஆனால், எல்லா வாசகர்களுக்கும் கலந்துகொள்ளக்கூடிய சூழ்நிலை அமைந்திருக்கும் என்று சொல்லமுடியாது. கலந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பமிருந்தாலும், பணிச்சூழலோ அல்லது குடும்பச் சூழலோ அதற்கு இடந்தராமல் போகலாம். இந்தியாவில் வசிப்பவர்கள் சற்று முயன்றால், பணிச்சிரமங்களைச் சமாளித்து, நேரில் கலந்துகொள்ளலாம். ஆனால், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்குப் பல்வேறு வகையான சிரமங்கள் இருக்கும். அவற்றை நாங்கள் முழுவதுமாக உணர்ந்திருக்கிறோம். எனவேதான், அனைத்து வாசகர்களும் நிகழ்ச்சியைக் கண்டு களிக்கும் வகையில், இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். விழா நடக்கும் அரங்கத்தில் இணைய இணைப்பு இல்லையாதலால், கம்பியில்லா இணையம் மூலம் Yahoo Messenger இல் Web Camera கொண்டு ஒளிபரப்ப முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இணையத்தில் காண விரும்பும் வாசகர்கள், வரலாறுலைவ் ( varalaarulive @ yahoo.com ) என்ற முகவரியைத் தங்கள் Yahoo Messenger இல் பதிவு செய்து கொண்டால், விழாவை நேரடியாகக் கண்டுகளிக்கலாம். கம்பியில்லா இணையம் என்பதால், ஒளிப்படத்தின் வேகம் சற்றுக் குறைவாக இருக்கலாம். அல்லது சில வாசகர்களால் காண முடியாமற் போகவும் நேரலாம். இத்தகைய இடர்கள் நேராவண்ணம் சீரிய முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்றாலும், எதிர்பாராமல் ஏற்படும் வசதிக் குறைவுகளைப் பொறுத்தருளுமாறு வேண்டிக்கொள்கிறோம். இத்தகைய பிரச்சினைகளாலோ அல்லது அந்த நேரத்தில் வேறு அலுவல்கள் இருந்தாலோ இணையத்தில் கண்டுகளிக்க இயலாமல் போனாலும், அதற்காக வருந்த வேண்டியதில்லை. விழா முடிந்தபிறகு, சிறு ஒளிப்படங்களாக இணையத்தில் ஏற்றுவோம். அதைப் பார்த்துக் கொள்ளலாம். இதுவே வரலாறு.காம் வாசகர்களுக்கு அளிக்கும் ஐந்தாம் ஆண்டுப் பிறந்தநாள் பரிசு. நிகழ்ச்சியைக் காணவேண்டும் என்ற விருப்பமிருப்பவர்களின் ஆர்வத்தைத் தூரமோ, தேச எல்லைகளோ, பணியோ குலைத்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. ஐராவதியை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பவர்களுக்கும் ஒரு முன்னோட்டத்தை வரலாறு.காம் இந்த இதழில் அளிக்கிறது. ஐராவதிக்காக அறிஞர்களிடமிருந்து நாங்கள் சேகரித்திருக்கும் ஒவ்வொரு ஆய்வுக்கட்டுரையில் இருந்தும் ஒரு சிறு பகுதியை எடுத்துத் தொகுத்து அளித்திருக்கிறோம். நூலை வாங்குவதற்கு முன் அது எத்தகைய தரம் மற்றும் தகவல்களுடன் வெளிவருகிறது என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். இது மட்டுமின்றி, ஐராவதியை மின்புத்தகமாகக் குறுந்தகட்டிலும் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறோம். கணிணி வைத்திருப்பவர்கள் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவைபோக, விழா நாளன்று அரங்கத்தில் விற்கப்படும் நூலை வாங்குபவர்களுக்கு, விலையில் 25% தள்ளுபடி அளிக்கவும் முடிவு செய்திருக்கிறோம். எல்லாத் தரப்பு வாசகர்களையும் இந்நூல் சென்றடையவேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடுகள் எல்லாம். ஐராவதியை வாங்கவேண்டும் என்ற விருப்பம் மட்டும் இருந்தால் போதும். எப்படியும் அவ்விருப்பம் நிறைவேற்றப்படவேண்டும் என்பதுதான் எங்கள் முதல் நோக்கம். எனவே, இந்நூலை வாங்குவதில் ஏதாவது சிரமம் இருந்தாலோ, அல்லது உதவி ஏதாவது தேவைப்பட்டாலோ, தயங்காமல் எங்களிடம் தெரிவிக்கலாம். நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு உதவ முயற்சிக்கிறோம். இந்தச் சாதனை மலரை வெளியிடும் நோக்கத்தையும் இங்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது. நாங்கள் நடக்க விழைந்த பாதையில் ஏற்கனவே நடந்து ஒரு பாதையை ஏற்படுத்தித் தந்த ஓர் அனுபவசாலி என்ற முறையில், வரலாற்றைக் கற்கும் ஒவ்வொரு மாணவனும் - நாங்கள் உட்பட - ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். எனினும், இம்மலர், அவருக்கு நன்றி கூறுவதற்கு மட்டுமோ அல்லது அவரது புகழ் பாடவோ அல்ல. சிலருக்கு வரலாற்றில் ஆர்வம் இருக்கும். ஆனால் முறையான ஆய்வு செய்வதற்குத் துணிவிருக்காது. வரலாற்றில் எந்தப் பின்புலமும் இல்லாத நம்மால் ஒரு தரமான ஆய்வைச் செய்து முடிக்க முடியுமா என்று ஒரு தயக்கம் இருக்கும். இத்தகைய எந்தவொரு பின்புலமும் இல்லாமல், வேதியியலையும் சட்டத்தையும் கற்றுத் தேர்ந்து, வரலாற்றில் எந்தவொரு பட்டமும் பெறாமலேயே, உலகம் போற்றும் ஓர் ஆய்வாளராக உருவெடுத்திருக்கும் ஒரு மனிதரை உதாரணம் காட்டி, அத்தகைய தயக்கத்தைக் களைவதுதான் இந்நூலின் முக்கிய நோக்கம். தணியாத அறிவுத்தாகமும் சீரிய முயற்சியும் உடைய எவரும் தாம் எடுத்துக்கொண்ட துறையில் முன்னணிக்கு வரமுடியும் என்பதற்கு ஐராவதம் மகாதேவன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எனவே வாசகர்களே, சென்ற இதழில் தெரிவித்திருந்ததுபோல் எங்களுக்காக ஒரு மாலை நேரத்தைச் செலவழிக்க வேண்டுமா என்று எண்ணாமல், ஆய்வுலகில் தனது அனுபவத்தாலும் அணுகுமுறையாலும் தனிப்பாதையை வகுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் வாழும் ஓர் அறிஞருக்குச் செய்யும் மரியாதை என்று கருதிக் கலந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அனைவரையும் விழாவுக்கு வரவேற்கிறோம். அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |