![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 47
![]() இதழ் 47 [ மே 16 - ஜூன் 17, 2008 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
குடைவரைகள்
நாகர்கோயில் திருவனந்தபுரம் சாலையில் கோவளத்திற்குச் சற்று முன்னதாக அமைந்துள்ளது விழிஞம். இந்நகர்ப் பேருந்துநிலையத்தின் அருகே இந்திய தொல்லியல் அளவீட்டுத்துறையின் கண்காணிப்பில் உள்ள வளாகத்தினுள் காணப்படும் விழிஞம் குடைவரைக் கோயில்1 தமிழ்நாட்டின் கீழ்மாவிலங்கை, மகேந்திரவாடிக் குடைவரைக் கோயில்களைப் போல் பாறைக் கோயிலாக அமைந்துள்ளது. 3 மீ. உயரமும் 3. 50 மீ. அகலமும் பெற்ற பாறையின் கிழக்கு முகத்தில் 1. 50 மீ. உயர, 88 செ. மீ. அகல வாயில் திறக்கப்பட்டுள்ளது. வாயிலுக்கான பக்க நிலைகள் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது. இவ்வாயிலின் பின்னுள்ள கருவறை தென்வடலாக 1 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 70 செ. மீ. அகலமும் 1. 50 மீ. உயரமும் பெற்றுள்ளது. சீர்மையுறாத நிலையில் இருக்கும் கருவறையின் கூரை 8 செ. மீ. அளவிற்கு முன்னோக்கிச் சரிந்துள்ளது. கருவறையின் தென், வடசுவர்களும் பின்சுவரும் சீர்மையுறா நிலையிலேயே உள்ளன. சீர்மையுறாத கருவறைத் தரை மேல் பிற்கால வீணையேந்திய தென்திசைக்கடவுள் சிற்பம் இருத்தப்பட்டுள்ளது.
![]() கருவறை வாயிலை அணைத்தவாறு இருபுறத்தும் பக்கத்திற்கொன்றாக இரண்டு உறுப்புவேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள் வெட்டப்பட்டுள்ளன. போதிகைகள் அற்ற நிலையில் இத்தூண்களே நேரடியாக உத்திரம் தாங்குகின்றன. இத்தூண்களின் தெற்கிலும் வடக்கிலும் அகழப்பட்டுள்ள கோட்டங்களில் சிற்பங்கள் காணப்படுகின்றன. வலப்புறம் சிவபெருமானின் நின்ற கோலமும் இடப்புறம் ஆடவர் வடிவம் ஒன்றும் அடையாளப்படுத்த முடியாத வடிவம் ஒன்றுமாய் இரண்டு சிற்பங்களும் உள்ளன. அணைவுத் தூண்கள் பெறாது முழுமையுறா நிலையில் காணப்படும் இக்கோட்டங்களுள், 73 செ. மீ. அகலம் 1. 58 மீ. உயரம் பெற்ற வலக்கோட்டத்தின் மீது வாயில் அணைவுத் தூண்கள் தாங்கும் உத்திரம் தொடர, இடக்கோட்டம் 95 செ. மீ. உயரமும் 1. 54 மீ. அகலமும் கொண்டுள்ளது. கோட்டங்களின் கீழும் கருவறை வாயிலின் கீழும் உபானம் போன்ற அமைப்பு ஒன்று தொடராகக் காட்டப்பட்டுள்ளது. கோட்டச் சிற்பங்கள் தென்கோட்டத்தை நிறைத்தவாறு காட்சிதரும் சிவபெருமானின் வலக்கால் சமத்தில் இருக்க, முழங்கால் அளவில் மடித்து உயர்த்தப்பட்டுள்ள இடக்காலின் பாதம் முயலகனின் தலைமீது அக்ரதல சஞ்காரத்தில் அழுந்த ஊன்றப்பட்டுள்ளது. குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கும் முயலகனின் வலக்கை வயிற்றின்மீதுள்ளது. இடக்கை சிறிய அளவிலான வில்லொன்றைப் பிடித்துள்ளது. கழுத்தணியுடன் காணப்படும் முயலகன் முகம் வலச்சாய்வில் உள்ளது. முயலகனின் இடப்புறம் காட்டப்பட்டுள்ள குள்ளச் சிறுபூதம் முகம் மட்டுமே அடையாளம் காணக்கூடிய நிலையில் பிற பகுதிகள் உருவாகாமல் உள்ளது. சிற்றாடையும் இடைக்கட்டுமாய்க் காட்சிதரும் சிவபெருமான் பேரளவிலான வில்லொன்றை இடமுன்கையில் பிடித்துள்ளார்.2 பின்கையில் மழு. வலமுன்கை அம்பொன்றைப் பற்றியிருக்க,3 பின்கை அர்த்தபதாக முத்திரையில்4 உள்ளது. நெற்றிப்பட்டம் சூழ் முகப்புகள் பெற்ற சடைமகுடம், சரப்பளி, நிவீதமாய் முப்புரிநூல், கைவளைகள் பெற்றுள்ள இறைவனின் வலச்செவியில் பூட்டுக்குண்டலம். இடச்செவியில் பனையோலைக் குண்டலம். சிவபெருமானின் வலக்கால் அருகே காணப்படும் குள்ளச் சிறுபூதம் வலக்கையில் அரிவாள் ஏந்தியுள்ளது.5 வலச்சாய்வாய் உள்ள அதன் முகம் இடப்புறம் திரும்பியுள்ளது. சிவபெருமானின் வில் இந்த அரிவாள் பூதத்தின் கழுத்துவரை நீண்டுள்ளது. இடக்கோட்டம் இடக்கோட்டத்தில் காணப்படும் இரண்டு வடிவங்களுள் வலப்புறம் உள்ள ஆடவர் வடிவம் ஆடற்கோலத்தில் உள்ளது.6 மண்டல நிலையில் உள்ள அதன் வலப்பாதம் பார்சுவத்தில் அமைய, இடப்பாதம் வலப்பாதத்தின் பின் ஸ்வஸ்திகமாய் அக்ரதல சஞ்சாரத்தில் இருத்தப்பட்டுள்ளது. வலச்சாய்வாய் உள்ள முகம் இடப்புறம் திரும்பியுள்ளது. இடக்கை வேழ முத்திரையில் அமைய, வலக்கை பதாகத்தில் உள்ளது. கால்களில் சலங்கை. இடச்செவ்ியில் பனையோலைக் குண்டலம். தலையில் முக்கோண அமைப்பிலான மகுடம். இடக்கையை இடுப்பில் இருத்தியுள்ள இடப்புற வடிவம் நிறைவடையா நிலையில் காணப்படுகிறது.7 வலக்கை முகவாய் மொட்டின் கீழ் இருத்தப்பட்டுள்ளது. இடைக்கட்டின் முடிச்சுத் தொங்கல்கள் தெளிவில்லாத நிலையில் பின்புறம் காணப்படுகின்றன. வலக்கால் சிதைந்திருக்க, இடக்கால் சமத்தில் உள்ளது. முழுமைபெறாதுள்ள இவ்விரண்டு வடிவங்களையும் இன்னார் என அடையாளம் காணக்கூடவில்லை. வீணை ஏந்திய வித்தகர் கற்றளம் ஒன்றில் சுகாசனத்தில் உள்ள வீணை ஏந்திய சிவபெருமானின் பின்கைகளில் வலப்புறம் அக்கமாலையும் இடப்புறம் முத்தலை ஈட்டியும் உள்ளன. முன் கைகள் வீணை இசைக்கின்றன. வீணையின் குடம் மார்பில் பொருந்தியுள்ளது. விரிந்து வளர்ந்த சடைப்பாரத்தின் நடுவில் மண்டையோடு. வலச்செவியில் பனையோலைக் குண்டலம். இடச்செவியில் மகர குண்டலம். சரப்பளி, தோள், கைவளைகள் அணிந்துள்ள இவ்வீணை ஏந்திய சிவபெருமானின் சிற்பத்தைப் பதினைந்தாம் நூற்றாண்டினதாகக் கொள்ளலாம். குறிப்புகள் 1. ஆய்வு மேற்கொண்ட நாள் 28. 2. 2008. ஆய்வில் உதவிய மருத்துவர் க. அவ்வைக்கும் ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கிய இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையின் திருச்சூர்ப் பிரிவு நாகர்கோயில் பராமரிப்பு அலுவலர் திரு. கலைச்செல்வனுக்கும் உடனிருந்து உதவிய கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையப் பொதுச்செயலர் திரு. எஸ். பத்மநாபனுக்கும் குடைவரைக் காவலர் திரு. ஐயப்பன் அவர்களுக்கும் இக்கட்டுரை ஆசிரியர்களின் உளமார்ந்த நன்றி உரியது. 2. இந்த வில் சிவபெருமானின் உடலில் குறுக்காகக் கட்டப்பட்டிருப்பதாகக் கூறுகிறார் கே. வி. செளந்தரராஜன். Rock-Cut Temple Styles, Somaiya Publications PVT, LTD, Mumbai, 1998, ப. 106. 3. முன்னிரு கைகளில் பாசுபத அஸ்திரம் உள்ளதென்கிறார் கே. வி. செளந்தரராஜன். மு. கு. நூல், ப. 106. 4. வலப் பின் கை பதாக முத்திரையில் இருப்பதாகக் கூறுகிறார் கே. வி. செளந்தரராஜன். மு. கு. நூல், ப. 106. 5. கீழ் வலப்புறத்தே குகை உள்ளதாகவும் அதிலிருந்து காட்டுவிலங்கு ஒன்று வெளிவருவதாகவும் கே. வி. செளந்தரராஜன் எழுதியிருப்பது சரியன்று. மு. கு. நூல், ப. 106. 6. பாதஸ்வஸ்திகத்தில் உள்ள இந்த வடிவத்தை பாசுபத அஸ்திரம் பெற நிற்கும் அருச்சுனனாகக் கொள்கிறார் கே. வி. செளந்தரராஜன். மு. கு. நூல், ப. 106. 7. ஆணா, பெண்ணா என்று அடையாளப்படுத்த முடியாத நிலையில் உள்ள இந்த வடிவத்தை வேடனாக வந்த சிவபெருமானுடன் வேட்டுவச்சியாக வந்த பார்வதியாகக் கொள்கிறார் கே. வி. செளந்தரராஜன். மு. கு. நூல், ப. 106. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |