![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 45
![]() இதழ் 45 [ மார்ச் 16 - ஏப்ரல் 17, 2008 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
திரும்பிப் பார்க்கிறோம்
அன்புள்ள வாருணி,
புலவர் செ. இராசு தமிழில் ஆழங்கால்பட்ட அறிவுத்திட்பம் உடையவர். ஈரோடு கலைமகள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியபோது அவர் தொடங்கித் தொடர்ந்த களஆய்வுப் பணிகளுக்குக் கணக்கில்லை. எப்போதாவது ஈரோடு செல்ல நேர்ந்தால் அப்பள்ளியின் அருங்காட்சியகம் போய்ப் பார். அதை உருவாக்கி வளர்த்த உழைப்புப் புலவருடையது. எத்தனை சிற்பங்கள்! எத்தனை கல்வெட்டுகள்! புலவருடைய உழைப்பும் ஊக்கமும் இணையற்றன. அன்பாகவும் ஆதரவாகவும் பேசுவார். நான் இந்தத் துறையில் தலையெடுக்கத் தொடங்கிய காலத்திலேயே என்னிடம் ஈடுபாடு காட்டி நட்பு பூண்டவர். என் தலைமையில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது என் தந்தையாரின் தலைமையில் உரையாற்றியிருப்பதாகவும் தற்போது என் தலைமையில் உரையாற்ற நேர்ந்ததை பெருமையாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டமை அவர் பண்பு வளத்தைச் சுட்டப் போதுமானதாகும். அவரை முதன்முதலாகக் கங்கைகொண்டசோழபுரம் நிகழ்ச்சியில்தான் சந்தித்தேன். நாங்கள் கண்டறிந்த அழுந்தியூர்க் கல்வெட்டுகளைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்காகப் படியெடுக்க அவர் வந்தபோது கல்வெட்டுப் படியெடுப்பில் அவருக்கு இருந்த தேர்ச்சியை நேரில் காணும் வாய்ப்பமைந்தது. பல்கலைப் பணியில் இருந்தபோது புலவர் வெளியிட்ட நூல்கள் அனைத்துமே கல்வெட்டுகள், செப்பேடுகள் இவற்றின் பதிவுகளாகவே அமைந்தன. எண்ணற்ற சிறுசிறு நூல்களையும் முனைவர் ஆய்வேட்டையும் வெளியிட்டிருந்தபோதும் அவருடைய உழைப்பிற்கும் அனுபவத்திற்கும் இணையான நூல்கள் இன்னமும் அவரிடமிருந்த வராமை ஒரு குறையே. ஆவணம் இதழில் என்னுடைய காந்தள் கட்டுரை வெளியானபோது அதைப் பாராட்டி அவர் எழுதிய மடல் குறிப்பிடத்தக்கது. கட்டுரையின் ஆய்வு நுணுக்கங்களை பெரிதும் இரசித்து எழுதியிருந்தார். என்னிடம் எப்போதும் அன்பு பாராட்டும் அவருடைய இல்லத்தில் நிகழ்ந்த பரிசளிப்பு நாள் விருந்து என்னுள் என்றும் நிறைந்திருக்கும். அவர் துணைவியார் அன்பானவர். புலவரைப் போலவே அமைதியானவர். புலவர் செ. இராசுவிடம் எனக்கு மிகப் பிடித்தது அவருடைய பல்துறை அறிவுதான். அவர் கலந்துகொள்ளும் கருத்தரங்குகளில் எந்தத் துறை சார்ந்து ஆய்வுத்தாள்கள் படிக்கப்பட்டாலும் கேள்வி நேரத்தில் அவருடைய கேள்வி ஒன்று உறுதியாக இருக்கும். அவரால் எனக்குக் கிடைத்த அறிமுகங்களில் குறிப்பிடத்தக்கவை இரண்டு. ஒன்று அவர் துறையின் தலைவர் முனைவர் எ.சுப்பராயலுவின் அறிமுகம். மற்றொன்று தமிழ்ப் பல்கலையின் அப்போதைய துணைவேந்தரான வி. ஐ. சுப்பிரமணியத்தின் அறிமுகம். பேராசிரியர் எ. சுப்பராயலு குறைவாகப் பேசுபவர். ஆனால், நிறையச் சிந்திப்பவர். தொல்லியல், கல்வெட்டுத் துறைகளில் நிகரற்ற அறிவு பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவரை நான் முதன்முதலில் சந்தித்தபோது ஓர் அறையில் சன்னலின் வெளிச்சப் பரவலில் மேசையின் மீதிருந்த கனத்த புத்தகம் ஒன்றில் அவர் ஆழ்ந்திருந்தார். புலவர் என்னை அறிமுகப்படுத்தியபோது எதிரில் இருந்த நாற்காலியில் அமரச் சொன்னார். நல விசாரிப்பிற்குப் பிறகு அவர் முன் இருந்த புத்தகம் பற்றிக் கேட்டேன். தொல்லியல் பேசும் அந்நூல் பற்றி இரண்டொரு வரிகள் சொன்னதாக நினைவு. அதிகம் பேசவில்லை. முதல் சந்திப்பிலேயே அவர் அறிவின் ஊற்றென்பதை என்னால் அறியமுடிந்தது. இரண்டாம் சந்திப்பு எங்கள் களஆய்வாக இருந்தது. நான், புலவர், பேராசிரியர், திரு. கி. ஸ்ரீதரன், என் உறவினர் திரு. ம. ந. வேதாசலம் ஆகியோர் சேர்ந்து விடங்கர் தலங்களைப் பார்வையிட்டோம். அந்த ஆய்வில் நான் வெறும் பார்வையாளன் மட்டுமே. புலவரும் பேராசிரியரும் அளவைகள் குறித்து நிகழ்த்திய ஆய்வு அது. அந்தச் சந்திப்பிலும் பேராசிரியருடன் அதிகம் பேசமுடியவில்லை. ஆனால், அவருடைய களஆய்வு நுட்பங்களைக் காணமுடிந்தது. நண்பர் அப்துல் மஜீதிடம் பேராசிரியரைப் பற்றிக் கலந்துரையாடினேன். மஜீது அவருடைய பண்பு நலங்களை விரித்துரைத்தார். பேராசிரியருடன் நெருங்கிப் பழகி அவரிடமிருந்து கல்வெட்டாய்வு நுட்பங்களைக் கற்கும் விளைவு ஏற்பட்டது. ஆனால் வாய்ப்புகள் அமையவில்லை. திரு. வி. ஐ.சுப்பிரமணியத்தை அதற்குப் பிறகு மூன்று முறை சந்தித்திருந்தாலும் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட வாய்ப்புகள் அமையவில்லை. அவருடைய நேர்மைத் துணிவு, உழைப்பு, காலந்தவறாமை இவை குறித்துப் பல்கலையில் பதிவாளராக இருந்த திரு. சிலம்பொலி செல்லப்பன் பலவும் கூறியுள்ளார். என் அண்ணன் பேராசிரியர் இராம. சண்முகமும் அவரை நன்கறிவார். அவர் வழியும் வி. ஐ. சுப்பிரமணியம் பற்றி அறிந்து மகிழ்ந்திருக்கிறேன். 1986 ஆகஸ்டுத் திங்களில் கூத்தப்பார் ஊரைச் சேர்ந்த திரு. கந்தசாமி என்னிடம் வந்தார். அவர் திருஎறும்பியூர் முக்குலத்தோர் உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். கூத்தப்பாரில் பழங்கோயில் ஒன்றில் கல்வெட்டுகள் இடம்பெற்றிருப்பதாகவும் அவற்றை யாரும் படித்ததில்லை என்றும் கூறி, என்னைப் படிக்க வருமாறு அழைத்தார். அவரிடம் வருவதாகக் கூறிய பிறகு, மஜீதிடம் கலந்துகொண்டேன். கூத்தப்பார் தாம் பார்த்திராத ஊர் என்றவர், ஞாயிறன்று அங்குப் போகலாம் என்றார். நானும் அவரும் என் மருத்துவமனை உதவியாளர் திரு.மருதநாயகமும் அங்குச் சென்றோம். கோயிலைச் சுற்றிப் பார்த்த பிறகு, கல்வெட்டுகள் உள்ள மதில்சுவரை அடைந்தோம். மூன்றாம் இராஜராஜர் காலத்துக் கல்வெட்டுகள் இரண்டு அங்கு வெட்டப்பட்டிருந்தன. இரண்டுமே மிக நீளமானவை. பல வரிகள் பெற்றவை. கல்வெட்டின் நீளத்தையும் வரி அடுக்குகளையும் பார்த்ததுமே மஜீது உற்சாகம் இழந்தார். படிப்பது கடினம் என்பதை உணர்த்தினார். கடுமையான வெயில், சரளைக் கற்கள் நிறைந்திருந்த அந்தச் சுற்று வீதியில் நடந்து, நடந்து படிக்கவேண்டிய நிலை இவற்றால்தான் அவர் தயங்குகிறார் என்பதை என்னால் உணரமுடிந்தது. தூய்மையற்ற இடமாகவும் இருந்ததால், பன்றிகளின் நடமாட்டம் மிக்கிருந்தது. என்றாலும், அவ்வளவு தொலைவு வந்துவிட்டு முயற்சியைக் கைவிட்டுச் செல்வதை நான் விரும்பவில்லை. போராடிப் படித்துவிட முடிவுசெய்தேன். மருதநாயகம் என் மாமனார் காலத்து அலுவலர். அவரால் பயிற்றுவிக்கப்பட்டவர். ஊரக வாழ்க்கையர். உரமும் உறுதியும் நிறைந்தவர். மஜீதின் தயக்கத்திற்கான காரணம் புரிந்தவராய்த் திரு. கந்தசாமியின் உதவியுடன் ஊருக்குள் சென்று இரண்டு குடைகள் பெற்றுவந்தார். இளநீருக்கும் ஏற்பாடு செய்தார். இவை மஜீதிற்குச் சற்று ஆறுதல் அளித்தன. மருதநாயகம் குடைபிடிக்க நண்பர் மஜீது, தமது கல்வெட்டு வாசிப்பு உலாவைத் தொடங்கினார். அவர் படிக்கப் படிக்க நான் எழுதினேன். அன்று கதிரவன் கடுஞ்சினத்திலிருந்தார். நூற்றாண்டு நூற்றாண்டாகப் படிக்காமல்விட்ட கல்வெட்டை நீ என்ன வாசிப்பது என்ற சினம் போலும்! மஜீதிற்காவது குடையிருந்தது. நான் குடைபிடித்தவாறே எழுத முயன்று தோற்று, ஒரு கட்டத்தில் குடையை மடித்து வைத்துவிட்டு வெயிலில் உலர்ந்தபடியே எழுதிவந்தேன். மஜீது அவ்வப்போது எனக்காகப் பரிதாபப்பட்டவாறே குடை நிழலில் தம் வாசிப்பைத் தொடர்ந்தார். தங்கள் ஊர்க் கல்வெட்டுப் படிக்கப்படுவதை அறிந்த ஊரார் கோயிலருகே திரண்டனர். அந்தக் கூட்டம் அளித்த உற்சாகத்தில் மஜீதின் படிப்புக் களை கட்டியது. கல்வெட்டு வாசிப்பில் உள்ள சுகம் அது. ஏன் தன்னிகரற்ற கர்வமும்கூடத்தான்! கூட்டத்தில் உள்ளவர்கள் யாராலும் முடியாத செயல் என்பதுடன்,பூதம் எழுதியது, பிசாசு எழுதியது, லிபி, படிக்கமுடியாத எழுத்து என்பன போன்ற பெருமைகளும் கல்வெட்டுகளுக்குத் தரப்பட்டிருந்தமையால், அதை ஒரு சாதாரண மனித ஜீவன் படிப்பதை ஊர்மக்கள் வியப்போடு பார்த்துப் பெருங்கொண்டாட்டம் கொள்வர். கல்வெட்டில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களை அறிந்துகொள்வதில் பேரார்வம் காட்டுவர். அந்த நேரத்தில், அந்த இடத்தில், கல்வெட்டு வாசிப்பவர் ஒரு சூப்பர் ஸ்டார் போல்தான். இயல்பாகவே கல்வெட்டுகளைப் படிக்கும்போது மஜீது அந்நாளைய தமிழாசிரியர்களைப் போல் இராகம் போட்டுப் படிப்பார். படிக்கமுடியாத இடங்களில் கமகம் செய்வார். அந்த சஞ்சாரம் எங்களுக்குப் பழகிவிட்ட ஒன்று என்றாலும், ஊரார் அன்று சற்றே மிரண்டுதான் போனார்கள். காரணம் பல இடங்களில் சஞ்சாரம் நிகழ்ந்து நீடித்தது. ஒரு மணிநேர வாசிப்பில் அனைவரும் களைத்துப் போனதால் கோயிலுக்குள் நுழைந்து ஓய்வெடுத்தோம். சிறிது நேரம் நான் படித்தேன். மருதநாயகம் தொடர்ந்து குடைபிடித்தார். பிறகு மஜீது தொடர்ந்தார். இப்படி ஓய்வும் ஓயாத நடையுமாய்க் கூத்தப்பார் கல்வெட்டுகளைப் படியெடுத்து முடித்தபோது மாலை ஆறு மணியாகிவிட்டது. ஒரு கல்வெட்டைத்தான் முழுவதுமாய்ப் படித்து முடிக்க முடிந்தது. மற்றொரு கல்வெட்டைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பினோம். அடுத்த வாரம் மீண்டும் அங்குச் சென்று, ஆறுமுகம் குடைபிடிக்க, இரண்டாம் கல்வெட்டைப் படித்து முடித்த பிறகுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது. வீடு வந்ததும் இரண்டு கல்வெட்டுகளையும் ஆராய்ந்து தரவுகள் தொகுத்தேன். நிலவிலை ஆவணங்களாக அமைந்திருந்த அக்கல்வெட்டுகள் அக்காலத்து ஆவணப் பதிவு நுணுக்கங்களை விரிவாக விளக்கின. 9. 9. 1986 நாளிதழ்களில் கூத்தப்பார் கல்வெட்டுகள் கண்டுபிடிப்புப் பற்றிய செய்தி வெளியானது. கல்வெட்டுப் படிப்பதில் அப்போது எனக்குப் போதுமான தேர்ச்சி இல்லாமல் இருந்தமையால் வாசிப்புக் குறையுடையதாகவே இருந்தமையை உணர்ந்தேன். பொதுவான தரவுகள் கிடைத்திருந்தபோதும் நல்ல வாசிப்பு மேலும் தரவுகள் பெற்றுத் தரும் என்று எண்ணினேன். பின்னாளில் நளினியும் பேராசியர் கோ. வேணிதேவியும் அந்தக் கல்வெட்டுகளை மறு படிப்புச் செய்தனர். வரலாறு இதழில் பதிப்பிக்கும் முன் கல்வெட்டுகள் அனைத்தையும் மறுபடிப்புச் செய்வதை கடமையாகக் கொண்டிருந்தோம். ஒரு நாள் முழுவதும் பெரிதும் துன்பப்பட்டு வேணிதேவியும் நளினியும் இரண்டு கல்வெட்டுகளின் பாடங்களையும் முழுமையாகப் படித்துத் திருத்தித் தந்தனர். அவ்விரண்டு கல்வெட்டுகளின் பாடங்களையும் வரலாறு ஆய்விதழின் முதல் தொகுதியில் பதிவு செய்தோம். முதல் கல்வெட்டு இருபத்தொரு வரிகளில் அமைய, இரண்டாம் கல்வெட்டுப் பதினைந்து வரிகள் கொண்டிருந்தது. மூன்றாம் இராஜராஜரின் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டான கி. பி. 1245ல் நிகழ்ந்த நிலப் பரிமாற்றம் பற்றிய முதல் ஆவணம், சோமநாதபுரத்துச் சோமநாததேவர், விசுவேசுவரதேவர் கோயில்களின் தானத்தாரும் ஜனநாத சதுர்வேதிமங்கலத்து கலிவேதீசுவரமுடையார் கோயில் தானத்தாரும் இணைந்து தங்கள் கோயில்களுக்குரிய 13 வேலி நிலத்தைக் கூத்தப்பெருமாள் நல்லூர் அழகிய திருவிடைமருதுடைய நாயனார் கோயில் இறைவனுக்கு ஒரு பகுதி விலைக்கும் மறுபகுதியைப் பரிமாற்றாகவும் தந்தமையை விளக்குகிறது. இக்கல்வெட்டால் ஊரின் பழைய பெயர் கூத்தப்பெருமாள் நல்லூர் என்பதை அறியமுடிந்தது. ஏறத்தாழ 7 வேலி நிலம் மூன்றாம் இராஜராஜர் காலத்தில் 20,200 காசுகளுக்கு விற்பனையான தகவல் அக்காலத்துப் பொருளாதாரச் சூழல்களை அறிய உதவியது. இக்கல்வெட்டால்தான் முதல் இராஜராஜரின் அரசியருள் ஒருவரான சோழமாதேவியின் பெயரால் எறும்பியூருக்கு அருகில் ஓர் ஊர் இருப்பதை அறியமுடிந்தது. இசோழமாதேவியில் ஒரு கோயிலும் பல அரிய கல்வெட்டுகளும் இருப்பதைப் பின்னாளில் அறிந்து படியெடுக்கக் கூத்தப்பார் கல்வெட்டுகளும் ஒரு வகையில் உதவியதைக் குறிப்பிடவேண்டும். இரண்டாம் கல்வெட்டு இரண்டு இலட்சத்துப் பதினான்காயிரம் காசுகளுக்கு விற்கப்பட்ட நிலத்துண்டை அடையாளப்படுத்தியதுடன், மூத்ததேவி என்றழைக்கப்படும் சேட்டைத் தேவியின் வழிபாடு கி. பி. 1245வரை தொடர்ந்து நிகழ்ந்தமையை உறுதிப்படுத்துகிறது. இத்தேவியின் வழிபாட்டிற்காகச் 'சேட்டைப்புரம்' என்ற பெயரில் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து வழிபாட்டில் இருந்த இந்தத் தேவியைத் தவறான கதைகள் சூழ்ந்ததால், பல கோயில்களில் இத்தேவியின் சிற்பம் வெளியேற்றப்பட்டு மண்ணில் புதையுண்டிருந்ததையும் எங்கள் களஆய்வுகளில் பலமுறை சந்தித்திருக்கிறோம். இது போன்ற பல சேட்டைச் சிற்பங்களை அரசு அருங்காட்சியகங்களுக்குக் கொணர்ந்து சேர்த்தமையும் உண்டு. அழுந்தியூரிலிருந்து மட்டுமே இரண்டு சேட்டைச் சிற்பங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. அழுந்தியூரில் இருந்தச் சேட்டைத் தேவி சிற்பங்களை அகற்றியபோது மிகப் பெரிய பாம்பொன்று வெளிப்பட்டது. அகற்றிக் கொண்டிருந்தவர்கள் கி. ஆ. பெ. விசுவநாதம் மேனிலைப்பள்ளியின் நாட்டுநலப் பணித்திட்ட மாணவர்கள். நல்லவேளையாக உள்ளூர் மக்கள் மூவர் உடனிருந்து உதவிக்கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவர்தான் அந்த இடத்தில் சரசரவென சப்தம் கேட்டதாகக் கூறி, உடன் மாணவர்களை விலகச் சொல்லி, தொடர்ந்து கையிலிருந்த கடப்பாறையால் அந்த இடத்தைக் கிளற, மற்றொருவர் எது வெளிப்பட்டாலும் அதைத் தாக்க மரத்துண்டொன்றுடன் தயாராக நிற்க, சட்டென்று பாம்பொன்று வெளிப்பட்டு மரத்துண்டின் அடிக்கு இலக்கானது. ஐந்தடி நீளத்திற்குக் குறையாமல் இருந்த அந்தப் பாம்புதான் அன்றைய நாயகனாய் அமைந்தது. அந்த நாள் முதல், எந்த இடத்திற்கு அகழ்விற்குச் சென்றாலும் உதவிக்கு உள்ளூர் ஆட்கள் இருவரைப் பணம் கொடுத்தாவது அமைத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டோம். பழுவூரில் இரண்டு முறையும், திருக்கோளக்குடியில் ஒரு முறையும் பாம்புகளிடம் சிக்கிய அநுபவம் உண்டு. கோளக்குடி பாம்பு வீரமானது. அதன் ஓட்டமும் சீறலும் இன்றும் அச்சுறுத்தும் நினைவுகள்தான் என்றாலும், எங்கள் திருக்கோளக்குடி ஆய்வை அந்த வீரப்பாம்பால் தடுத்துவிடமுடியவில்லை. பழுவூர்ப் பாம்புகளுள் ஒன்று சாதுவானது. மேலப்பழுவூர் பகைவிடை ஈசுவரத்தில் நிரந்தரக் குடித்தனம் செய்யும் அதைச் சுற்றுவெளியில் பலமுறை பார்த்திருக்கிறோம். பார்க்கும்போது பேரச்சமாக இருக்கும் என்றாலும், எங்களை அது தொல்லைப்படுத்தியதில்லை. அதைப் பார்க்காதவரை, ஏதோ சொந்த வீட்டில் நடமாடுவது போல் கோயிலுக்குள் உரிமையுடன் ஆய்வு செய்து கொண்டிருப்போம். அது கண்ணில் பட்டுவிட்ட பிறகு அச்சத்துடனான நடமாட்டம்தான். ஆனால், இந்த அச்சமெல்லாம் பாம்பு நினைவு இருக்கும் வரைதான். பிறகு, வழக்கம் போல் சொந்த வீடு உணர்வுதான். அவனிகந்தர்வ ஈசுவரத்துப் பாம்பு மின்னல் போல் தோன்றி மின்னலாய் மறைந்துவிட்ட அதிசயப்பிறவி! அது தோன்றும் வரை, நளினி அந்த இடத்தில்தான் அமர்ந்து கல்வெட்டுப் படித்துக் கொண்டிருந்தார். அவர் ஏதோ ஒரு காரணத்திற்காக அங்கிருந்து நகர்ந்த அடுத்த நொடியில் தாங்குதளக் குமுதத்தின் வெடிப்பு வழி வெளிப்பட்ட அந்தப் பாம்பு சரசரவென குமுதத்தின்மீது ஓடி, மற்றொரு வெடிப்பின் வழிச் சட்டென மறைந்துவிட்டது. அது தோன்றி மறைந்தது சில விநாடிகள்தான் என்றாலும் பல நிமிடங்கள் நாங்கள் உறைந்து போயிருந்தோம். நளினி மீண்டும் அந்த இடத்திற்குப் போய் கல்வெட்டுப் படிப்பதை நான் விரும்பவில்லை. ஆனால் என் தடையையும் மீறிக் கல்வெட்டுப் படிப்பை அவர் தொடர்ந்தார். ஊரகத்துப் பெண்களுக்கே உரிய துணிவு அது என்பதால் நானும் வாளா இருந்துவிட்டேன். பல கோயில்களில் பாம்பு உரிவைகளைப் பார்த்திருக்கிறோம். அப்போதெல்லாம்,கோயில்களுக்கு மனிதவரத்து மிகக் குறைவாக இருந்தமையால், பாம்புகளின் நடமாட்டம் மிக்கிருந்தது. ஆனால், அப்போது கோயில்கள் நன்றாக இருந்தன என்பதைக் குறிப்பிட்டே தீரவேண்டும். திரு. சாந்தஷீலாநாயர் ஆட்சித்தலைவராக இருந்தபோது சிராப்பள்ளியில் அருங்காட்சியகம் ஒன்று அமைந்தது. அந்த அருங்காட்சியகத்தின் காப்பாட்சியராகத் திரு. மோகன் இருந்தபோதுதான் பெரும்பாலான எங்கள் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. முள்ளிக்கரும்பூர், அழுந்தியூர் இவற்றில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள் அனைத்தும் அருங்காட்சியத்திற்கே கொணர்ந்து சேர்க்கப்பட்டன. 1985 செப்டம்பரில் ஒரு நாள் சிராப்பள்ளியின் ஒரு பகுதியான சங்கிலியாண்டபுரத்தில் இருந்து ஒருவர் எனக்குத் தொலைப்பேசி செய்தார். அவருடைய வீட்டின் ஒரு பகுதியில் பழுது பார்ப்பதற்காகத் தோண்டியபோது இரண்டு சிற்பங்கள் கிடைத்தாகவும், அவற்றை நான் வந்து பார்க்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மருத்துவமனைப் பணி முடித்து நானும் மருதநாயகமும் அவர் இல்லம் சென்றோம். சுமார் ஒன்றரை அடி அளவிலான இரண்டு தீர்த்தங்கரர் சிற்பங்களை அவர் கண்டெடுத்திருந்தார். அவை மணற்கல்லால் ஆனவை. அவற்றுள் ஒன்றின் தலைக்குப் பின் பாம்பின் படம் இருந்ததால், அச்சிற்பத்தைப் பார்சுவநாதர் என அடையாளம் கண்டேன். மற்றொரு சிற்பத்தை இன்ன தீர்த்தங்கரர் என்று சுட்டமுடியவில்லை. அந்தச் சிற்பங்களை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கலாமா என்று அவரிடம் கேட்டேன். அவர் ஒப்புதல் அளித்தார். உடனே அந்தச் சிற்பங்களை அருங்காட்சியகம் கொணர்ந்து மோகனிடம் ஒப்புவித்தேன். 31. 10. 1985 நாளிதழ்களில் அந்தச் சிற்பங்களின் கண்டுபிடிப்புப் பற்றிய தகவல் வெளியாகியிருந்தது. திருவாவடுதுறை திருமடத்தின் தலைவர் சிவப்பிரகாசர் திருவானைக்காவிலுள்ள மடத்தின் கிளைக்கு அவ்வப்போது வருகை தருவது வழக்கம். ஒரு முறை அங்கு அவர் வந்திருந்தபோது திரு. காளத்தீசுவரன் என்னை அழைத்துப் போயிருந்தார். சந்திப்பு, உரை முடிந்தபிறகு உணவருந்த அழைக்கப்பட்டோம். அங்குதான் முதன் முதலாகத் தமிழாசிரியர் பி. தமிழகனைச் சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் மையத்தின் கண்டுபிடிப்புகள் பற்றி ஆர்வமாக உரையாடியவர், தாம் சோமசரன்பேட்டை அரசு மேனிலைப்பள்ளியில் பணியாற்றுவதாகவும் கல்வெட்டு, கோயிற்கலைகள் இவற்றில் அழுத்தமான ஆர்வம் உடையவரென்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். குமாரவயலூர்ச் சாலையில் உய்யக்கொண்டான் திருமலைக் கோயிலருகே ஒரு சிற்பம் புதைந்துகிடப்பதாகவும் அதை அகழ்ந்தெடுக்க நான் முயற்சி எடுக்கவேண்டும் என்றும் வேண்டினார். நானும் இராஜேந்திரனும் அடுத்த நாள் அவர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்வையிட்டோம். முதன்மைச் சாலையின் வலப்புறம் அந்தச் சிற்பம் புதைந்திருந்தது. தலை மட்டுமே தெரிந்தது. அடுத்த நாளே அதை அகழ்ந்தெடுக்க முடிவு செய்து, மஜீதிற்கும் மோகனுக்கும் தகவல் தந்தேன். அவர்கள் வந்து உடன் இருப்பதாக ஒப்புக்கொண்டனர். அடுத்த நாள் மாலை இராஜேந்திரன் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுடன் வந்தார். மாணவர்கள் சிற்பத்தைச் சூழ்ந்திருந்த மண்ணை அகற்றத் தொடங்கியதும் தொலைவில் நின்றிருந்த உள்ளூர்க்காரர் ஒருவர் வந்து தடுத்தார். 'அந்தச் சிற்பத்தை நாங்கள் தெய்வமாக வழிபடுகிறோம். அதை எடுக்கக் கூடாது' என்றார். 'தெய்வமாக வழிபடும் சிற்பம் என்கிறீர்கள், இப்படி மண்ணில் புதைந்து கிடக்கிறதே' என்றேன். 'அதன் பெயர் காவாங்கல்லு. எங்கள் ஊரில் யாரேனும் இறந்தால், சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும்போது இங்கு வந்து நான்கு முறை சுற்றிவிட்டுத்தான் செல்வோம். அப்போது இத்தெய்வத்திற்குச் சில்லறை இறைத்துச் செல்வோம்' என்றார். 'இது தெய்வம் என்கிறீர்களே. என்ன தெய்வம்?' என்று கேட்டேன். 'அதெல்லாம் தெரியாது. காலம் காலமாய் இப்படித்தான் கிடக்கிறது. தலைமுறை தலைமுறையாய் வழிபடுகிறோம்' என்று கூறினார். அதற்குள் ஊரார் சிலர் அங்கு வந்துவிட்டனர். நான் அவர்களிடம், 'தோண்டி வெளியே எடுப்போம். அது தெய்வச்சிலையாக இருந்தால் நீங்கள் ஊருக்குள் எடுத்துச் சென்று வைத்து வழிபடுங்கள். தெய்வம் இல்லையென்றால் அரசு அருங்காட்சியத்திற்குக் கொடுத்து விடுவோம். உங்கள் ஊரிலிருந்து கிடைத்த வரலாற்றுப் பெருமைக்குரிய சிற்பமாக அது அங்கு விளங்கும்' என்று கூறிப் பலவும் பேசினேன். ஓர் அரசியல்வாதிக்கும், வழக்கறிஞருக்கும் 'பேச்சு' எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஓர் ஆய்வாளனுக்கும். உரையாடத் தெரியாதிருந்தால் மக்களுக்கு விளக்க முடியாது. அலுவலர்களிடம் அநுமதி பெற முடியாது. உடனிருப்பவர்களிடம் உழைப்பைப் பெறமுடியாது. ஆய்வுலகில் மதிப்பும் இராது. கருத்தரங்குகளில் வேண்டுமென்றே விளங்காத கேள்விகள் கேட்டு மடக்க முயற்சிப்பாரை முடக்க முடியாது. நல்லவேளையாக உரையாடும் கலை எனக்கு வாய்த்திருக்கிறது. அது தந்தை வழிக் கொடை. பத்து நிமிடப் பேச்சில் அகழ்விற்கு ஊரார் ஒருப்பட்டனர். அகழ்ந்து எடுத்துக் கழுவித் தூய்மை செய்ததும், அச்சிற்பம் வீரர் ஒருவரின் வடிவமைப்பாக இருந்ததைக் கண்டோம். தம் கழுத்தைத் தாமே வெட்டிக்கொள்ள முயற்சிக்கும் வீரரின் அந்தச் சிற்பம் எங்களைப் பெரிதும் கவர்ந்தது. திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டங்களில் வீரக்கற்களே கிடைத்ததில்லை என்று ஏதோ ஒரு நூலில் படித்த நினைவும் வந்தது. அச்சிற்பத்தைப் பற்றி அங்கிருந்த மக்களுக்கு விளக்கி, அது தெய்வ வடிவமல்ல என்பதை உணர்த்தி அருங்காட்சியகம் கொண்டு சேர்ப்பதற்குள், 'போதும் போதும்' என்றாகிவிட்டது. 'உய்யக்கொண்டானில் வீரக்கல்' எனும் தலைப்பில் அடுத்த நாளே (22. 6. 1986) எங்கள் முயற்சி செய்தியாக வெளிவந்தது. வெளிப்பட்ட சிற்பத்தைக் காண வந்திருந்த தமிழகன் என்னை மருத்துவமனையில் சந்தித்து, தாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க உடனே அச்சிற்பத்தை வெளிப்படுத்தியமைக்கு நன்றி தெரிவித்தார். புலவர் தமிழகன் மெய்யாகவே தமிழை நேசிக்கும் மிகச் சில புலவர்களுள் ஒருவர். அவருடைய கம்பீரமான தோற்றத்திற்குள் ஒரு குழந்தைத்தனம் உண்டு. அந்தக் குழந்தைத்தனம் எனக்கு நிரம்பப் பிடிக்கும். 1986ல் இருந்து இன்று வரை என் நட்பு வட்டத்திற்குள் இருந்துவரும் அவருடைய உதவியால் நாங்கள் படியெடுத்து வெளிப்படுத்திய காவுக் கல்வெட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதைப் பின்னர் பார்ப்போம். தமிழகன், எங்களால் தொடங்கப்பட்ட கோயிற்கலைப் பட்டயக் கல்வியில் இணைந்து படித்தவர். முயற்சியும் ஊக்கமும் உடையவர். புலவராக இருந்து, படிப்படியாக உயர்ந்து, இன்று முனைவராகவும் பேராசிரியராகவும் விளங்குபவர். கள்ளமில்லாச் சிரிப்பிற்குச் சொந்தக்காரர். பேராசிரியர் இரா. இளவரசின் நெருங்கிய உறவினர். தனித்தமிழ் இயக்கத்தில் பற்றுக்கொண்டு நாளும் அவ்வியக்கத்திற்கு உண்மையாய் உழைத்து வருபவர். தமிழகனுக்குத் தலைமையில் விருப்பமில்லை. என்றும் எங்கும் அவர் ஓர் இனிய தொண்டரே. இந்த இருபத்திரண்டு ஆண்டு காலத்தில் அவரைப் பலமுறை பல கூட்டங்களில் பல நிகழ்வுகளில் சந்தித்திருக்கிறேன். நட்பும் பணிவுமாய் நெகிழ்வார். என் கட்டுரைகளை, அவை வெளியானவுடன் படித்து ஆர்வத்துடன் எழுதுவார், அல்லது தொலைப்பேசியில் கருத்துரைப்பார். அவருடைய உரையில் மெய்மை இருக்கும். தமிழிலக்கணத்தில் எப்போது எங்களுக்கு ஐயம் ஏற்பட்டாலும் உடனே நாடும் உதவும் கை தமிழகன்தான். தெரிந்தால் உடனே சொல்வார். இல்லையென்றால் நன்னூல் பார்த்துவிட்டு மறுமொழி தருவார். நான் விரும்பிப் பழகும் மிகச் சில தமிழாசிரியர்களுள் புலவர் தமிழகன் குறிப்பிடத்தக்கவர். புத்தக விரும்பியான அவருடைய நூலகம் ஒவ்வொரு புலவரும் பார்க்கவேண்டிய இடம். புத்தகங்களை வாங்கும் நாளன்றே படித்துவிடும் தமிழகனின் பண்புகளைத் தமிழ்நாட்டுப் புலவர்கள் பரவலாகப் பெற்றால் தமிழ் தழைத்து வளரும். தளர்வின்றி வாழும். அன்புடன் இரா. கலைக்கோவன். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |