![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 44
![]() இதழ் 44 [ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2008 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
யாருக்கு யார் பகை? மழைநோக்கா வாழ்க்கையர்தான்! என்றாலும் வளமானவர்கள். கைத்தூண்டில் கொணரும் குளமீன்கள் தந்த வளம். அந்த மீன்பிடிப் பெருங்குளத்தில் தாமரைகள் தழைத்திருந்தன. அவற்றின் நீர் மிதக்கும் பேரிலைகள் காற்றலைப்பில் யானைகள் செவியசைக்குமாறு போல இருபுறத்தும் அசைந்தன. இத்தகு குளம் இலங்கும் ஊரனுடன் என்னை இணைத்தெழுந்த ஊர்ப்பேச்சு அளவிலாதது. ஆனால், என்னுடன் அவன் நட்போ, நீர்விளையாட்டில் துணைகொள்ளும் புணை போன்றது. தேவைக்குக் கொள்ளவும் வேண்டாமெனில் விலக்கவும்! எங்கிருக்கிறான் அவன்? குணில் முழக்கும் முழவிற்கேற்ப ஒளிவளை மகளிர் பழைமையான யாழ் பாடும் அதோ, அந்த வீட்டில், இன்னொருத்தியின் சந்தனம் மணக்கும் தோள்களைத் தழுவியபடி கிடக்கிறான். அவன் இல்லத்தரசியோ, 'என்னுடன் இருக்கிறான்' என்று என்னைப் பகைக்கிறாள். வெற்றி தரும் வேலும் கணக்கற்ற அம்புகளும் மேகமொத்த கேடயங்களும் கொண்ட பழையனின் காவிரி பாயும் வளம் கொழிக்கும் போர் எனும் ஊர் போல அழகு நிறைந்த என் கைவளைகளை, அவன் நீங்கினான் என வருந்தி, அவனிடம் உரிமை பாராட்டி இனமும் நான் உடைக்கவில்லை. அதனால் போலும், அவன் என்னுடன்தான் இருப்பதாய்க் கருதி கவலுகிறாள் அவன் மனைவி. ஆனால், நான் அவளுக்குப் பகையல்ல. தம்முடன் சேர்ந்தாரை எல்லாம், அவர்தம் நெற்றி பசலை கொள்ளுமாறு வருத்தி நீங்கி, மீண்டும் அவளிடம் சேர்ந்துறையும் கணவனே அவளுக்குப் பகை. அகம். 186 பரத்தை கூற்று பொருள் : தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, இல்லிடைப் பரத்தை சொல்லி நெருங்கியது திணை : மருதம் ஆசிரியர் : பரணர் வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும் மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை நீர்மிசை நிவந்த நெடுந்தாள் அகல் இலை இருங் கயம் துளங்க, கால் உறு தோறும் பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு எழுந்த கௌவையோ பெரிதே! நட்பே, கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப் புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே, ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட, ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப, தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து, இன்னும் பிறள் வயினானே; மனையோள் எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல், மாரி அம்பின், மழைத்தோல் பழையன் காவிரி வைப்பின் போஒர் அன்ன, என் செறிவளை உடைத்தலோ இலனே; உரிதினின் யாம் தன் பகையேம் அல்லேம்; சேர்ந்தோர் திரு நுதல் பசப்ப நீங்கும் கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே. கங்குல் காதல் பேய் உலவும் நள்ளிரவில் எதற்கும் அஞ்சாது காவலர் உறங்கும் நேரம் பார்த்து, மதில் சூழ்ந்த காதலியின் வீட்டை நெருங்கி, வாயிற் கதவுகளைத் திறந்து நுழைந்து, அவளோடு மகிழ்ந்திருந்து அந்த மகிழ்வின் முத்தாய்ப்பில், 'நம்மைப் போன்று அன்பிற் சிறந்தோர் இவ்வுலகத்தே யாரும் இல்லை' என்று கூறிக் காதலியின் கூந்தலை வருடிக் களித்துப் பிரிந்த காதலனை அகம் 311-ல் மாமூலர் படம்பிடித்துள்ளார். காதடைப்பு நீங்கத் தீம்புளி புல்லி எனும் வீரம் செறிந்த சிற்றரசரின் ஆட்சியில் இருந்த வேங்கடத்தைச் சூழ்ந்திருந்த சிறிய வழிகளில் இடைப்பட்டு அமைந்திருந்த நீரற்ற பாலைநிலத்தில் கடும் வெப்பத்தால் தாக்குண்டு வரும் வழிப்போக்கரை எதிர்கொள்ளும் உள்ளூர் ஆயர்கள், தாம் மேய்க்கும் இளைய எருதுகளின் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டிருந்த மூங்கில் குழாய்களில் நிறைத்து வைத்திருந்த இனிய புளிச்சோற்றை, தேக்கிலையில் பகிர்ந்து அளித்து, அவர்தம் வழிநடை வருத்தமும் காதடைப்பும் நீங்கச் செய்வராம். அகம் 311. தோழி கூற்று திணை : பாலை ஆசிரியர் : மாமூலனார் இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று, அருங் கடிக் காப்பின் அகல் நகர் ஒரு சிறை, எழுதியன்ன திண் நிலைக் கதவம் கழுது வழங்கு அரை நாள், காவலர் மடிந்தென, திறந்து நப் புணர்ந்து, 'நும்மின் சிறந்தோர் இம்மை உலகத்து இல்' எனப் பல் நாள் பொம்மல் ஓதி நீவிய காதலொடு, பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப, வருவழி வம்பலர்ப் பேணி, கோவலர் மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும் புல்லி நல் நாட்டு உம்பர், செல் அருஞ் சுரம் இறந்து ஏகினும், நீடலர் அருள் மொழித் தேற்றி, நம் அகன்றி சினோரே. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |