![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 4
![]() இதழ் 4 [ நவம்பர் 15 - டிஸம்பர் 14, 2004 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
கட்டிடக்கலை ஆய்வு
லலிதாங்குர பல்லவேசுவரகிருகம். மலையின் மீதமைந்த ஒரே மகேந்திரர் குடைவரை. திருச்சி மலைக்கோட்டையின் நடுவில் சுமார் 200 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. சென்ற இதழில் கபோதம் மற்றும் புடைப்புச் சிற்பங்களை வைத்துக் குடைவரைகளின் காலத்தை அறிய முற்பட்டோம். இப்போது இன்னும் சில உறுப்புகளையும் சேர்த்துக் கொள்ளப்போகிறோம். கருவறைக்குச் செல்லும் படிக்கட்டுகள் காணப்படுவது பல்லாவரத்திலும் சிராப்பள்ளியிலும்தான். ஆனால் பல்லாவரம் குடைவரை அண்மையில் பல்வேறு மாற்றங்களுக்குள்ளானதால் லலிதாங்குரத்தில் மட்டுமே இப்போது படிகள் இருக்கின்றன. பிடிச்சுவர் அமைந்திருப்பதும் அது யாளியைப்போல் அமைந்திருப்பதும் இங்குதான். அதேபோல், தூண்களின் மேல் கீழ் சதுரங்கள் இரண்டிலும் நான்கு புறங்களிலும் தாமரைப்பதக்கங்கள் அமைந்திருப்பதும் இங்கும் சத்ருமல்லேசுவராலயத்திலும்தான். (சன் டிவி பாணியில் படிக்கவும்.) உலகக் குடைவரைகளில் முதன்முறையாக, தரைக்கு வந்து சிவன் தலையில் அமர்ந்த கங்கையைத் தாங்கும் கங்காதரர் இடம்பெற்ற முதல் சிற்பத்தொகுதி உங்கள் மகேந்திரர் அமைத்த லலிதாங்குரத்தில் காணத்தவறாதீர்கள். வேறெந்த மகேந்திரர் குடைவரையிலும் காணப்படாத இச்சிறப்பை வைத்து, இக்குடைவரை காலத்தால் பிற்பட்டது எனவும், மகேந்திரர் அமைத்தவைகளில் ஏழாவது இடத்தைப் பெறுகின்றது எனவும் கூறலாம். தொடர்ச்சியான ஒரே குன்றிலமைந்த நான்கு வரிசையான குடைவரைகள் மாமண்டூர் என்ற இடத்தில் காணப்படுகின்றன. இந்த மாமண்டூர் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் தூசி என்ற ஊருக்கு அருகிலுள்ளது. செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையிலுள்ளது அல்ல. செங்கல்பட்டு மாமண்டூருக்குச் சென்று குடைவரையைத் தேடித்தேடி நொந்துபோனோம். மற்ற குடைவரைகள் எந்தக் கடவுளுக்கு அமைக்கப்பட்டது என்று கல்வெட்டுகள் தெரிவித்த போதிலும், இக்குடைவரை யாருக்காக எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. மகேந்திரர் அமைத்ததிலேயே மிகவும் சிறியதான இக்குடைவரையில் சிற்பங்கள் ஏதுமில்லை. அலங்கரிப்பின்றி இருப்பதால் இதைப் பல்லாவரத்திற்கும் மகேந்திரவாடிக்கும் இடைப்பட்டதாகக் கொள்ளலாம். ஆக, மகேந்திரர் குடைவரைகளைக் கீழ்க்கண்டவாறு காலவரிசைப்படுத்தலாம். 1. மண்டகப்பட்டு - லக்ஷிதாயதனம் 2. பல்லாவரம் - (பெயரில்லை) 3. மாமண்டூர் - (பெயரில்லை) 4. மகேந்திரவாடி - மகேந்திரவிஷ்ணுகிருகம் 5. சீயமங்கலம் - அவனிபாஜன பல்லவேசுவரகிருகம் 6. தளவானூர் - சத்ருமல்லேசுவராலயம் 7. திருச்சிராப்பள்ளி - லலிதாங்குர பல்லவேசுவரகிருகம் சென்ற இதழில் கூரை உறுப்புகளை விளக்கியது சரியாக விளங்கவில்லை எனச் சில வாசகர்கள் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். அதனால், கூரை உறுப்புக்களை விளக்கும் ஒரு குடைவரையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் கீழே தந்துள்ளோம். ![]() குடைவரையின் குறுக்குவெட்டுத் தோற்றம். பல்லவ மன்னர்கள் பலர் மகேந்திரருக்குப் பின்னரும் பல குடைவரைகளை அமைத்தனர். மாமல்லபுரத்தில் இரண்டு பல்லவர் குடைவரைகள் அமைந்துள்ளன. மஹிஷாசுரமர்த்தினி குடைவரையையும் வராகமூர்த்தி குடைவரையையும் நினைவுப்பெட்டகத்திலிருந்து சற்று முன்வரிசைக்குக் கொண்டு வந்து வைத்துக்கொள்ளுங்கள். ![]() மஹிஷாசுரமர்த்தினி குடைவரை முகப்புத் தோற்றம். இங்கு முகப்பில் தாங்குதளம் இல்லை. எடுத்தவுடனேயே தூண் ஆரம்பமாகிவிடுகிறது. நான்கு முழுத்தூண்கள். இரண்டு அரைத்தூண்கள். ஆக, அங்கணங்கள் ஐந்து. நான்கு தூண்களில் நடுவிலுள்ள இரண்டு தூண்களில் ஒன்றில் பாலியும் பலகையும் காணப்படவில்லை. மற்றொன்றில் எதுவுமே இல்லை. காரணம், அங்கே இருந்த தூண் உடைந்திருந்ததால், தொல்லியல் துறையினரால் சமீபத்தில் வைக்கப்பட்டது. இந்தத்தூண் கூரையைத் தாங்குவதில்லைதான். இருந்தாலும் வைத்திருக்கிறார்கள். மற்ற இரண்டு முழுத்தூண்களிலும் தூணின் உறுப்புக்கள் அனைத்தும் இருக்கின்றன. தூணின் உறுப்புக்கள் கீழே உள்ள படத்தில் விளக்கப்பட்டுள்ளது. ![]() தூணின் உறுப்புக்கள் இத்தூண்களைத் தாண்டிச்சென்றால், மூன்று கருவறைகளும், நடுக்கருவறையின் முன்பு ஒரு முன்றிலும் அமைத்துள்ளனர். நம் வீடுகளில் போர்டிகோ இருக்குமே! அதைத்தான் தமிழில் முன்றில் என்று சொல்கிறோம். மூன்று கருவறைகளில் நடுவிலுள்ளதற்குச் சற்று முக்கியத்துவம் அளிக்க விரும்பி, இவ்வாறு அமைத்துள்ளனர். தளவானூரிலும் இதேபோன்றதொரு முன்றில் காணப்படுகிறது. ஆனால் அங்கு அர்த்தமண்டபத்திற்குள் அமைந்துள்ளது. தளவானூரில் அர்த்தமண்டபத்தின் ஒரு பகுதியாகவும், இங்கு முகமண்டபத்தின் ஒரு பகுதியாகவும் இருப்பதுபோல் தெரிந்தாலும், இம்முன்றில் கருவறையின் உறுப்புக்களுள் ஒன்றுதான். முன்றிலிலுள்ள தாங்குதளத்தைக் கருவறையின் தாங்குதளமாகவே கொள்ளவேண்டும். காரணம், அத்தாங்குதளம் மற்ற இரு கருவறைகளுக்கும் தொடர்வதால்தான். முகமண்டபத்தின் இரு சுவர்களையும் வெறுமையாக விடாமல், ஒரு புறம் மகிஷனுடன் நடக்கும் போர்க்காட்சியையும், அதற்கு எதிரில் பள்ளிகொண்ட பெருமானையும் அமைத்துள்ளனர். பொதுவாக, முகப்புத்தூண்களுக்கும் இரண்டாம் வரிசைத்தூண்களுக்கும் இடைப்பட்ட பகுதியை முகமண்டபம் என்றும் இரண்டாம் வரிசைத்தூண்களுக்கும் கருவறைக்கும் இடைப்பட்ட பகுதியை அர்த்தமண்டபம் என்றும் வரையறுப்பதுதான் வழக்கம். ஆனால், செவ்வக வடிவிலிருக்கும் மண்டபத்தை நீளவாக்கில் இரண்டாகப் பிரித்து, கருவறைக்கு முன்புள்ள பகுதியைச் சில அங்குலங்கள் சற்று உயர்த்திக் காட்டியிருந்தால், அதை அர்த்தமண்டபம் என்றும் அதற்கு முன்னாலுள்ள பகுதியை முகமண்டபம் எனவும் கூறலாம். இரண்டாம் வரிசைத்தூண்கள் இடம்பெற வேண்டிய அவசியமில்லை. தளவானூரில் இப்படித்தான் இருக்கிறது. ![]() மகிஷனுடன் நடக்கும் போர்க்காட்சி மற்ற இரண்டு கருவறைகளின் இருபுறமும் வாயிற்காவலர்கள் உள்ளனர். பொதுவாக, குடைவரைகளின் எல்லாக் கருவறைகளிலும் அழியக்கூடிய பொருட்களான மரம், செங்கல், உலோகம் மற்றும் சுதை ஆகியவற்றால்தான் மூலவரைச் செய்து வந்தனர். அல்லது ஓவியமாக வரைந்திருந்தனர். ஆகவே, காலமாற்றத்தில் அவை அழிந்துவிட்டன. மூலவர் அழிந்திருந்தாலும், இந்த வாயிற்காப்போர்கள் இருப்பார்கள். அவர்களின் உடைகளையும், ஆபரணங்களையும், ஆயுதங்களையும் வைத்து, உள்ளே எந்தக் கடவுளை வைத்திருந்தார்கள் என்பதைக் கூறிவிட முடியும். உதாரணமாக, இருபுறமும் முனிவர்கள் இருந்தால் பிரம்மா, சாதாரண மனிதர்கள் போன்று அடியவர்கள் இருந்தால் விஷ்ணு, போர்வீரர்கள் போன்று கையில் மழுவுடன் வாயிற்காவலர்கள் இருந்தால் சிவன். மாறியிருக்க வாய்ப்பேயில்லை. அப்படி எங்காவது மாறியிருந்தால், ஆர்வக்கோளாறு மிக்க யாரோ ஒருவருடைய திருவிளையாடல் என்று அர்த்தம். வராகக்குடைவரையின் பாதபந்தத் தாங்குதளத்தின் முன்பு சிறிய அகழி போல அமைக்கப்பட்டுள்ளது. அக்குளத்திற்குள் இறங்குவதற்கும் மீண்டும் மேலே ஏறவும் தாங்குதளத்தின் நடுவில் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் கைப்பிடிகளும் தாய்ப்பாறையிலேயே வடிக்கப்பட்டிருக்கின்றன. பட்டிகைக்கு மேல் அனைத்து உறுப்புகளுடனும் சிம்மங்கள் தாங்கும் இரண்டு விஷ்ணுகாந்தத்தூண்கள் உள்ளன. கருவறைக்கு இருபுறமும் வாயிற்காவலர்கள். அவர்களுக்கும் குடைவரையின் பக்கச்சுவர்களுக்கும் இடைப்பட்ட பகுதியைக் கோட்டங்களாக அகழ்ந்துள்ளனர். கருவறைக்கும் வராகமூர்த்தி சிற்பத்தொகுதி உள்ள பக்கச்சுவருக்கும் இடைப்பட்ட கோட்டத்தில் துர்க்கை வழிபாட்டுச் சிற்பத்தொகுதியும், கருவறைக்கும் உலகளந்த பெருமான் சிற்பத்தொகுதிக்கும் இடைப்பட்ட கோட்டத்தில் கஜலட்சுமி வழிபாட்டுச் சிற்பத்தொகுதியும் மிக நேர்த்தியாக, கலை நயத்துடன் அமைந்துள்ளன. குடைவரையின் எந்த ஒரு பகுதியையும் குறையுடன் விடாமல், முழுமையான இக்குடைவரைதான் இருப்பதிலேயே காலத்தால் மிகவும் பிற்பட்டதாக இருக்க வேண்டும். மற்ற குடைவரைகளைக் குடையும்போது கற்றுக்கொண்ட பாடங்களையும் அனுபவங்களையும் முழுவீச்சில் உபயோகித்து, இக்குடைவரையை நிறைவு செய்திருக்கிறார்கள். முகப்பில் தாங்குதளம் இல்லாத மகிஷாசுரமர்த்தினி குடைவரையை இதற்கு முற்பட்டதாகக் கொள்ளலாம். குடையும்போது சிறு தவறு நேர்ந்தாலும் முழுப் பாறையுமே வீணாகிவிடக்கூடிய இந்தச் செதுக்கும் கலையை எப்படித் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள்? அதற்கும் நாம் மண்டையை உடைத்துக் கொள்ளத் தேவையில்லாத நிலையைப் பல்லவ மன்னர்கள் நமக்கு அளித்துள்ளார்கள். கீழே உள்ள படத்தில், ஒரு பாறையை மூன்று அங்கணங்களாகப் பிரித்து, இரண்டு முழுத்தூண்கள், இரண்டு அரைத்தூண்கள் எனத் திட்டமிட்டு, அங்கணங்களை Cadburys Chocolate போல வெட்டி, பின்பு குடைகிறார்கள். இந்தப் பாறையில் ஏதோ ஒரு தவறு நேர்ந்ததால் நாம் கண்டுகளிக்கக் கொடுத்து வைக்காத கலைப்பொக்கிஷம் என்ன என்பது அந்தப் பல்லவ உளிகளுக்குத்தான் தெரியும். ![]() முழுமை பெறாத குடைவரை செதுக்கல்கள் பல்லவர்கள் மட்டுமல்ல. பாண்டியர்களும் முத்தரையர்களும் கூடப் பல குடைவரைகளை அமைத்துள்ளார்கள். இக்கட்டுரைத் தொடரில் வெளிவந்துள்ள குடைவரை தொடர்பான தகவல்களை வைத்துக்கொண்டு நீங்களே அவற்றை ஆய்வு செய்யலாம். எனினும், அவற்றையும் வரும் இதழ்களில் காண்போம். (தொடரும்) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |