![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 34
![]() இதழ் 34 [ ஏப்ரல் 16 - மே 15, 2007 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கங்களையும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது திருநாட்டில் "அரும்பொருட்கள்" என்று சிறப்பு விகுதிப் பெயரிட்டு அழைக்கப்படும் பொருட்களுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. ஒவ்வொரு ஊரிலும் - ஒவ்வொரு கிராமத்திலும் - பண்டைய சிற்பங்கள் - பழைய பனை ஓலைகள் - சில வீடுகளில் தாமிரப் பட்டயங்கள் / பழங்காசுகள் - என்று வஞ்சனையில்லாமல் வரலாறு பல்வேறு வடிவங்களில் விரவிக்கிடக்கிறது. என்றாலும் இவற்றை எல்லோரும் சென்று காண முடிவதில்லை என்பதால்தான் அரசாங்கம் அரும்பொருட்காட்சியகங்களை நாடெங்கிலும் அமைந்து நடத்துகிறது. தொல்லியல்துறை தனது அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கும் அரும்பொருட்களை இத்தகைய காட்சியகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கின்றன. ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் நடந்த ஆராய்ச்சியில் கிடைத்த அரும்பொருட்களிலிருந்து சமீபத்தில் மீட்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் - வரலாற்றுப் பட்டயங்கள் எனப் பல்வேறு சுவாரஸ்யமான பொருட்களையும் காட்சியகங்களில் காணலாம். வரலாற்றை புத்தகத்தில் படிப்பது என்பது ஒன்று - நேரில் பார்ப்பது என்பது மற்றொன்று. பொன்னியின் செல்வனைப் படித்துவிட்டு கிறுகிறுத்துப் போய்க்கிடந்த எங்கள் குழு மிகுந்த வீரியம் கொண்டது எங்களது முதல் வரலாற்று விஜயமான புள்ளமங்கை - இராஜராஜேஸ்வரம் யாத்திரைக்குப் பிறகுதான். அன்றுதான் வரலாற்றைப் படிப்பது என்பது ஒன்று - தொட்டு உணர்வது என்பது மற்றொன்று என்பது எங்களுக்குப் புரிந்தது. வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அந்த உணர்வைக் கொடுக்கக்கூடிய அரும்பொருட்களை - பல்வேறு காலகட்டங்களையும் சார்ந்த பெட்டகங்களை - மிக எளிதாகப் பார்வைக்கு வகைப்படுத்தும் மகத்தான பணியைப் புரிவதற்காகவே காட்சியகங்கள் நாடெங்கிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றுக்கு விஜயம் செய்வோரின் எண்ணிக்கை அத்தனை கணிசமானதாக இல்லையென்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. உதாரணமாக சென்னையின் மத்தியப் பகுதியில் எழும்பூரில் அமைந்துள்ள அருமையான காட்சியகத்தை எத்தனை சென்னைவாசிகள் சென்று பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? சென்னைக்கு விஜயம் செய்யும் பயணிகளில் எத்தனை பேருக்கு இதன் அருமை பெருமைகள் தெரியும் ? இத்தனைக்கும் மற்ற காட்சியகங்களைப்போல் அழுது வடிந்துகொண்டிருக்காமல் சமீப காலங்களில் புதுப் பொலிவூட்டப்பட்டு உற்சாகமாக விளங்கும் காட்சியகம் இது ! நாளைய தலைமுறைக்கு வரலாற்றுணர்வை ஊட்டக்கூடிய மகத்தான சக்தி படைத்த இந்த அமைப்புக்களை மக்கள் ஏன் அவ்வளவாகச் சீந்துவதில்லை ? உங்கள் நண்பர்களை - தோழிகளை - உற்றார் உறவினர்களை - ஒரு சினிமாவிற்குக் கூப்பிட்டுப் பாருங்கள். விழுந்தடித்துக்கொண்டு ஓடி வருவார்கள். கோயிலுக்கு ? ஓரளவிற்கு பக்தி சிரத்தையுடையவர்கள் வரலாம். இன்னும் கடற்கறைக்கும் காந்தி மண்டபத்திற்கும் சென்னையில் இருக்கும் மற்ற எல்லா இடங்களுக்கும் கூட ஓரிருவர் அசந்திருக்கும் சமயம் வந்துவிடுவார்கள். இவர்களிடம் "அருங்காட்சியகத்திற்குச் செல்லலாம் !" என்று சொல்லிப் பாருங்களேன்.... அவ்வளவுதான் ! ஓட்டம் பிடித்தால் ஒரு காத தூரம் கடந்த பின்தான் நிற்பார்கள். ஒரு சிலர் விழுந்து விழுந்து சிரிப்பதும் உண்டு. ஒரு சிலர் இதற்கும் மேலே போய் "நம்ம புள்ளைங்களைக் கொண்டு போய் வேண்டுமானால் காட்டுங்கள் !" என்று சொல்வார்கள் - ஏதோ தாங்கள் பலமுறை அங்கு சென்று அலுத்துவிட்டதைப் போல. இதற்கான காரணங்கள் என்ன ? முழுமுதற் காரணம் வரலாற்றின் மீது பெரும்பாலானோருக்கு அக்கறையில்லாமல் போனதுதான். ஏன் அக்கறையில்லாமல் போனது எனில் நமது வரலாற்றுப் பாடப் புத்தகங்கள் படிப்பதற்குச் சிறிதும் அருகதையற்றவையாக - படிப்போரை ஏறக்குறைய வெறுப்பில் ஆழ்த்தும் அளவிற்கு எழுதப்பட்டிருக்கின்றன. அழகான படங்களின்றி - சுவாரஸ்யமான தகவல்களின்றி - கள விஜயங்களின்றி வெறும் ஏட்டுச் சுரைக்காய்களை உருவாக்குவதற்காகவே தயாரிக்கப்பட்டிருக்கும் நமது பாடப் புத்தகங்களை வரலாற்றில் அதிக ஆர்வக் கோளாறினால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு அருமருந்தாகக் கொடுக்கலாம். தூக்கமின்மையால் அவஸ்தையிலிருப்பவர்களுக்கும் இவை கண்கண்ட மருந்தாகும் வல்லமை பெற்றவை. இவ்வாறான புத்தகங்களை முதலாம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்குப் படிக்கும் மாணவ மாணவியர் பத்தாவது முடிந்ததும் "விட்டால் போதும் !" என்று வரலாற்றைக் கண்டு ஓட்டம் பிடிப்பதில் வியப்பேயில்லை. மிக இளம் வயதில் வரலாற்றின் மீது ஊன்றப்படும் வெறுப்புணர்வானது காலம் செல்லச் செல்ல "சமகால வாழ்க்கைக்குத் தேவையற்ற - அல்லது உபயோகமற்ற ஒரு விஷயம்" என்கிற எண்ணமாக உருக்கொள்கிறது. தற்செயலாக எந்த இளைஞராவது வரலாற்றுப் புத்தகங்களை வாசிக்க முயன்றாலும் அவரது பெற்றோரும் மற்றோரும் "இதைப் படிப்பதனால் ஏதாவது பிரயோஜனம் உண்டா ? இதற்கு பதில் ஏதாவது கம்ப்யூட்டர் தொழில்நுட்பப் புத்தகங்களை படித்தாலாவது உபயோகமாயிருக்கும் !" என்று தடுத்தாட்கொண்டுவிடுவார்கள். வரலாற்றுப் பயன்பாட்டைப் பற்றிய இந்தத் தவறான நோக்கமானது மிக மிக ஆழமாக பலரது மனதிலும் வேரூன்றி விட்டது. சினிமா பார்ப்பது மிக மிக உபயோகமான விஷயம், தொலைக்காட்சியின் மெகாத் தொடர்களைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் சிந்துவது அதைவிட மிக அவசியமான விஷயம் - ஆனால் வரலாற்றுப் புத்தகங்களைப் பார்ப்பதும் புரட்டுவது மட்டும் பாபகாரியம். அவற்றைக் காசுகொடுத்து வாங்குவதோ "கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்குச்" சமானமானதாகும். இவ்வாறான மனப்போக்கில் ஆழ்ந்து கிடப்பவர்களிடம் அரும்பொருட்காட்சியகங்களைப் பற்றிப் பேசுவதே நேரவிரயமல்லவா... தப்பித் தவறி எவராவது இந்த இக்கட்டுகளிலிருந்தெல்லாம் தப்பித்து காட்சியகங்களுக்கு விஜயம் செய்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். அங்கே அவர் காண்பதென்ன ? கையுடைந்த சிவபெருமான் பாதிப் பார்வதியுடனும் கால வெள்ளத்தில் காணாமல் போய்விட்ட குகனுடனும் அவர்களை வரவேற்பார். அந்தச் சிற்பத்திற்குமுன் "சோமாஸ்கந்தர் - 8ம் நூற்றாண்டு - பல்லவர் காலம்" என்றொரு குறும்பலகை காணக்கிடைக்கும். சில நேரங்களில் அந்தப் பலகையும் பணியாளரின் கவனமின்மையால் இடம் மாறிப்போக, திருமால் கொற்றைவையாகவும் சரஸ்வதி பிரம்மனாகவும் பால் மாறாட்டப் பிரச்சனைகளில் அகப்பட்டுக்கொள்வதுண்டு. இத்தகைய குறும்பலகைத் தகவல்களினால் அந்தப் பார்வையாளர் தெரிந்து கொள்வது ஒன்றுமில்லை. "ஏதோ பழங்காலச் சிற்பம் போலிருக்கிறது - பாவம், வெய்யிலிலும் மழையிலும் நனையாமல் இங்கே எடுத்துக்கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள் !" என்கிற எண்ணம்தான் அந்த மனிதாபிமானிக்குத் தோன்றும். அந்தச் சிற்பத்தின் பின்னணியில் இருக்கும் அத்தனை தகவல்களையும் அவருக்குப் புரியவைத்தாலன்றி அதனை அவர் இரசிப்பது சாத்தியமேமில்லை. முதலில் சிவபெருமான் - உமை - குகனைப் பற்றிய வரலாற்றுக் கண்ணோட்டம். குகனை வைத்தே கொற்றவையையும் சிவபெருமானையும் இணைக்கும் பெரும்பாணாற்றுப்படை மற்றும் திருமுருகாற்றுப்படையின் புதுமை, ஆகமச் சிக்கல்களில் அகப்பட்டுக்கொள்ளாத சோமாஸ்கந்த வடிவம் பல்லவர் காலத்தில் மட்டும் பிரபலமாகி பின்னர் மறைந்த விந்தை, இந்தக் குறிப்பிட்ட சிற்பம் கிடைந்த பழங்காலப் பல்லவர் கோயில், அதனைக் கட்டிய பேரரசர் இராஜசிம்மர், அவர் தன்னையும் குகனாகவே கண்ட விந்தையை விளக்கும் கைலாசநாதர் கோயில் கல்வெட்டு, வழக்கமான சோமாஸ்கந்த வடிவங்கள் - ஓவியங்கள், இந்தக் குறிப்பிட்ட சிற்பத்தில் மட்டும் குகனை நோக்கி உமை திரும்பியிருப்பதாக சிற்பி வடித்திருக்கும் பாங்கு..... இத்தனையும் பத்து பதினைந்து நிமிடங்கள் விளக்கமாக அந்த ஆர்வலரிடம் சொல்லிப் பாருங்கள் ! அடுத்த வாரமே பையைத் தூக்கிக்கொண்டு மாமல்லபுரத்திற்குக் கிளம்பிவிடுவார் ! வெளிநாடுகளில் வரலாற்றைப் பற்றிய கண்ணோட்டமும் தத்தம் வரலாற்றை மக்களுக்கு அவர்கள் எடுத்துச் சொல்லும் விதமும் பூரிக்க வைக்கின்றன. நூறு இருநூறு ஆண்டுகால வரலாற்றை வைத்திருக்கும் புதிய தேசத்தினர்கூட தத்தம் பண்டைய அரும்பொருட்களை மிகுந்த ஆர்வத்தோடும் மரியாதையோடும் பேணுகிறார்கள். இதற்கான விதை மிக இளம் வயதில் ஊன்றப்படுகிறது. "நமது நாடு !" என்று நாட்டுப்பற்றை ஊக்குவிப்பதைப்போல் "நமது வரலாறு ! நமது முன்னோர் வரலாறு !" எனும் எண்ணமும் சேர்ந்தே வளர்கிறது. "A generation which does not know its history is a generation which did not exist in the past" என்று கொட்டை எழுத்துக்களில் எழுதி வைக்கிறார்கள். நல்ல வண்ணப்படங்களுடன் கூடிய புத்தகங்களும் நேஷனல் ஜியாக்ரபிக், டிஸ்கவரி முதலான தொலைக்காட்சி சேனல்களில் வரும் அருமையான தொடர்களும் அவர்களது ஆர்வத்தைப் பல்கிப் பெருக்குகின்றன. தமது குழந்தைகள் வரலாற்றில் ஆர்வம் மிக்கவர்களாகத் தெரிந்தால் அந்தத் துறையிலேயே ஈடுபடுத்தும் மனோதிடம் பெற்றோருக்கு இருக்கிறது. அவர்களது அருங்காட்சியகங்கள் "பார்க்க வேண்டிய இடங்கள்" பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. உதாரணமாக நியூயார்க்கில் அமைக்கப்பட்டிருக்கும் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை (Museum of Natural History) இன்று முழுவதும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். சிறுவர்களைக் கவரும் இராட்சத டைனோசர்கள் முதல் பெரியவர்களுக்கான பல்வேறு அற்புதமான பொருட்கள் வரை கொண்டுள்ள இந்த பிரம்மாண்டமான காட்சியகத்தை நியூயார்க்கிற்கு விஜயம் செய்பவர்கள் எவரும் தவறவிடுவது கிடைதாது. அது மட்டுமல்ல - ஒருவரை திரும்பத் திரும்பக் காட்சியகத்துக்கு வரவழைக்க வேண்டும் (Repeat visitors) எனும் நோக்கில் இவர்கள் அந்த வளாகத்திலேயே நடத்தும் சிறப்புக் கண்காட்சிகளைக் காணத் தனிக் கூட்டம் கூடுகிறது. நாம் சென்றபோது "தங்கம்" எனும் தலைப்பில் ஒரு கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. தங்கம் கிடைத்த கதை, மிக முற்காலம் தொட்டே தங்கத்தை மக்கள் நாணயமாக உபயோகப்படுத்தியது, உலகெங்கிலுமிருந்து திரட்டப்பட்ட பண்டைய நாணயங்கள், எகிப்தியத் தங்கம், சீனத் தங்கம், அமெரிக்கத் தங்கப் பாளங்கள், எண்பதுகளின் தங்க வேட்டை என்று மூலைக்கு மூலை நிஜத் தங்கச் (தகவல்) சுரங்கம்தான் ! பண்டைய நாணயங்களில் இராஜராஜரின் நாணயத்தைத் தேடி ஏமாந்த நமக்கு மன ஆறுதலுக்காகத் தெரிந்தது அருமையான சந்திரகுப்த விக்கிரமாதித்தரின் நாணயம். ஏறக்குறைய ஐம்பது காசு நாணயத்தின் அளவில் வடிக்கப்பட்டிருந்த அந்த நாணயத்தையும் அதில் தெரிந்த அரசரின் ஏகதேச உருவத்தையும் கண்டு பூரித்துப் போனோம். அருங்காட்சியகளில் அக்கறை கொண்டுள்ள பொதுமக்கள் காட்சியகத்தின் பணிகளில் பங்குகொள்ள "Friends of the museum" என்றொரு அமைப்பும் உண்டு. இதில் சேர்ந்தால் பல்வேறு சலுகைகளைப் பெறலாம் - நம்மைப் போல ஆர்வம் கொண்டவர்களையும் இங்கே சந்திக்கலாம். சிங்கப்பூரில் "Images of Singapore" எனும் பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காட்சியின் அருமையைப் போய்ப் பார்த்தால்தான் தெரியும். தமது தீவில் முதல் முதலில் கால் பதித்த முன்னோர்கள், அவர்கள் வசித்த வீடுகள், கடைகள், கோயில்கள், முக்கிய திருவிழாக்கள் என்று கால வெள்ளத்தில் நூறு நூற்றைம்பது ஆண்டுகள் கையைப் பிடித்துக்கொண்டு கூட்டிக்கொண்டுபோய்க் காண்பிக்கிறார்கள் ! அத்தனை காட்சிகளும் தத்ரூபமாக - துல்லியமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக அந்தக் காலத் தமிழர் வீட்டைக் காட்டும்போது அந்தக் காலத்து நாள்காட்டி, இரவிவர்மாவின் பூஜைப்படம் என்று சகலமும் உண்டு ! தீமிதித் திருவிழா காட்சியில் தணல் தணதணவென்று எரிந்துகொண்டிருக்கும் எலக்டிரிக் சாகசமும் உண்டு. ஒரு முறை அங்கே விஜயம் செய்தால் போதும் - சிங்கையில் வரலாறு நெஞ்சில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டுவிடும். இவ்வாறு உலகெங்கிலும் அமைந்துள்ள அருங்காட்சியகங்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அவர்களின் அளவிற்கு காட்சியகங்களில் நம்மால் முதலீடு செய்ய முடியாவிட்டாலும் இருக்கும் அற்புதங்களைச் சரியான வகையில் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லவது நம்மால் இயலக்கூடியதே. உதாரணமாக.. * ஒவ்வொரு பொருட்களுக்கும் விளக்கமான தகவல் பலகைகள் வைப்பது * முக்கிய அகழ்வாராய்ச்சிகள் நடந்து முடிந்தபின் அவற்றை பிரபலப்படுத்தி கண்காட்சிப் பொருட்களாக வைப்பது * காட்சியகங்களுக்கு வருகை தரும் பொதுமக்களுக்குப் புரியும் வண்ணம் அரும்பொருட் பெருமைகளை எடுத்துக்கூறுவது - அதற்கான கையேடுகள் தயாரிப்பது * வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் இணைந்து சனி ஞாயிறுகளில் காட்சியகங்களில் ஒரு சில மணி நேரங்கள் விளக்க உரைகள் நிகழ்த்த முன்வருவது என்று சிறிய முயற்சிகளில் ஈடுபட்டோமானால் நாளடைவில் நிலைமையை ஓரளவிற்கு மாற்றிவிடலாம். தேவை வரலாற்றில் ஆர்வம். அந்த ஆர்வத்தை ஆக்கபூர்வமாகச் செயல்படுத்தக்கூடிய மனத்திண்மை. கூடித் தோள்கொடுக்க நண்பர்கள் அல்லது ஒரு அமைப்பு. சொந்த வாழ்க்கையின் நெருக்கடிகளை மீறி, செலவழிக்க சிறிது நேரம். எல்லாவற்றுக்கும் மேலாக நமது முன்னோர் மீதும் அவர்தம் வாழ்க்கையின் மீதும் அவர்கள் விட்டுச் சென்றிருக்கும் எச்சங்களின் மீதும் உறுதியான ஒரு பற்றுதல். மரியாதை. மயக்கம். மிக்க அன்புடன் ஆசிரியர் குழுthis is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |