![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 33
![]() இதழ் 33 [ மார்ச் 16 - ஏப்ரல் 15, 2007 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
திரும்பிப் பார்க்கிறோம்
அன்புள்ள வாருணி, ஒரு கண் மருத்துவனாகச் சிராப்பள்ளியில் குடியமர்ந்ததும் நான் பேச அழைக்கப்பட்ட முதல் கல்லூரி புனித சிலுவைக் கல்லூரி. அங்கு நடந்த திருச்சிராப்பள்ளி மாவட்ட மகளிர் கல்லூரிகளுக்கான சொல்லாற்றல் போட்டிக்கு நடுவர்களுள் ஒருவராகச் சென்றிருந்தேன். அங்குதான் பொறியியல் அறிஞர் திரு. சின்னதுரையைச் சந்தித்தேன். அன்பான, நேர்மையான மனிதர். வளனார் கல்லுரித் தமிழ்த்துறைத் தலைவரும் எங்கள் குடும்ப நண்பருமான அமரர் பேரா. இரம்போலா மஸ்கரேனஸ் தலைமை நடுவராக அமைந்தார். அந்நிகழ்ச்சியில் தீர்ப்பைக் கூறி உரையாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சரியாகச் செய்தமையை மாணவியரின் கையொலி உணர்த்தியது. ஒர் ஆய்வாளனாக அடையாளப்பட்ட பிறகு என்னை அழைத்துச் சிறப்பித்த முதல் கல்லூரி தேசிய கல்லூரி. வரலாற்றுத்துறைத் தலைவராக இருந்த திரு. அய்யம்பெருமாள் அழைப்பை ஏற்றுச் சென்றிருந்தேன். அப்பேராசிரியப் பெருந்தகையின் பரவலான படிப்பாற்றல் தெரிந்து மகிழ்ந்தேன். 'படிப்பது பேராசிரியர் மரபன்று' என்ற கொள்கை வீரர்களுக்கிடையில் திரு. அய்யம்பெருமாள் ஒரு தனித் தீவாக இருந்தார். பின்னாளில் அதே கல்லூரிக்குப் பலமுறை நான் அழைக்கப்பட்டமைக்கும் அவரே காரணர். அவருடைய முயற்சியால் தேசிய கல்லூரி வரலாற்றுத்துறை நூலகம் பல அரிய நூல்களைப் பெற்றிருந்தமையை இங்குக் குறிப்பிடவேண்டும். வளனார் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் திரு. சுந்தரராஜன், திரு. அருமைராஜன் இருவரும் நண்பர்களானமையின், அத்துறை நிகழ்த்திய கூட்டங்களுக்கு நானும் செல்வதுண்டு. அப்படி ஒருமுறை சென்றபோதுதான் பேராசிரியர் திரு. க. ப. அறவாணன் நண்பரானார். அன்றைய கூட்டத்தின் சிறப்புப் பொழ்ிவாளர் திரு. க. ப.அறவாணன்தான். இயேசு சபை அருளாளர்களின் காகிதக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு நாயக்கர் - மைசூர்க்காரர்கள் இடையில் ந்ிகழ்ந்த மூக்கறுப்புப் போர் பற்றிக் க. ப. அறவாணன் பேசினார். அவர் பொழ்ிவு முடிந்ததும் திரு. அருமைராஜன் ஒரு கேள்வி எழுப்பினார். அருமைராஜனும் இயேசு சபைக் குறிப்புகளைக் கொண்டு ஆய்வு செய்தவர் என்பதால் இருவரது விவாதங்களும் சுவையாக அமைந்தன. மூக்கை அறுத்த பிறகு உயிரோடு வாழ 'முடியாது' என்று ஒருவரும் 'முடியும்' என்று மற்றொருவரும் வாதிட்டனர். அந்த நேரம் நான் இடையிட்டேன். ஒரு மருத்துவன் என்ற முறையில் மூக்கின் அமைப்பு விளக்கி, அதன் முன்பகுதியை மட்டுமே அறுக்க முடியும் என்பதைச் சுட்டி, அப்படி முன்பகுதி மட்டும் அறுக்கப்படுவதால் உயிரிழப்பு நேராது என்பதையும் புரியவைத்து அமர்ந்தேன். அந்த விளக்கம் ஏற்கப்பட்டதால் விவாதம் முடிவுக்கு வந்தது. அறவாணன் நண்பரானார். அன்று இரவு என் வீட்டில்தான் அவர் உணவருந்தினார். பேராசிரியர் அறவாணன் ஊக்குவிப்பதில் இணையற்றவர். அவருடைய அன்பான அரவணைப்பில் எழுச்சி பெற்ற பல இளைஞர்களை நான் பின்னாளில் சந்தித்திருக்கிறேன். நான் இதுநாள்வரை சந்தித்தவர்களுள் இளைஞர்களைத் தட்டிக்கொடுத்து வளர்ப்பதில் அவருக்கு இணையான ஒரு பேராசிரியராக மா. ரா. அரசுவை மட்டுமே குறிப்பிடமுடியும். பேராசிரியர் அறவாணனுடன் அளவளாவிய போது என் ஆய்வுகள் பற்றிக் கேட்டறிந்தார். என் பரவலான படிப்பு அவரை வியக்கவைத்தது. அவர் நூல்கள் இரண்டைப் பரிசளித்தார். அவருடைய அன்பான அணுகுமுறை எனக்குப் பிடித்தது. அப்போது அவர் புதுச்சேரிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார். நான் இலக்கிய இளவல் படிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தவர், கல்வி தொடர்பாக எது வேண்டுமாயினும் கேட்குமாறு கூறினார். என்னுடைய தொடக்கக் கால வானொலி உரைகள் சிராப்பள்ளி மாவட்டத்தில் பரவலான ஓர் அறிமுகத்தை எனக்கு வழங்கியிருந்தன. அதன் விளைவாகச் சிராப்பள்ளிக்குப் பத்துக் கிலோமீட்டர் தொலைவிலிருந்த எட்டரையைச் சேர்ந்த திருவாளர்கள் செல்வராஜ், பாலசுந்தரம் எனும் இரு இளைஞர்கள் 1981ல் என்னைச் சந்தித்தார்கள். மருத்துவக் கல்லூரியில் பயிலும்போது, 'தமிழ்க் குடும்பம்'என அடையாளப்படுத்தப்பட்டிருந்த குழுவில் ஒருவரான மருத்துவர் துரையரசனின் அன்புத் தம்பியர் அவர்கள். திரு. செல்வராஜ் சிராப்பள்ளி மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். திரு. பாலசுந்தரம் சொந்த வேளாண்மையில் இருந்தார். அவர்கள் ஊருக்குப் பக்கத்தில் இருந்த, 'குழுமணி' எனும் சிற்றூரின் வாய்க்கால் கரையில் ஒரு புத்தர் சிலை புதையுண்டிருப்பதாகவும் அதைப் பற்றி ஆராய்ந்து கூறவேண்டும் என்றும் அவர்கள் என்னை அன்புடன் அழைத்தனர். நானும் அன்றே அவர்களுடன் சென்று அந்தப் புத்தர் சிற்பத்தைப் பார்வைய்ிட்டேன். மிகப் பெரிய சிற்பம் ஆனால் இடுப்பளவில் உடைபட்டிருந்தது. படமெடுத்த பிறகு உடைந்த பகுதியை அங்குத் தேடுமாறு அவர்களை வேண்டிக்கொண்டு, ஊர் திரும்பினேன். ஓர் அழகான பழைமையான புத்தர் சிற்பம் அது என்பதை மட்டுமே அப்போது என்னால் உணரமுடிந்தது. இது போன்ற பழைமையான சிற்பங்களைப் பாதுகாப்பது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் பொறுப்பென்று அறிந்திருந்தமையால், சிராப்பள்ளியில் பொன்னகர் பகுதியில் இருந்த தொல்லியல்துறை அலுவலகம் சென்றேன். அலுவலகத்தில் இருந்த திரு. கிருஷ்ணன், திரு. நடராஜன் இருவரும் என்னை வரவேற்று அமரச் செய்தனர். ஓர் அரசு அலுவலகத்தில் கிடைத்த அந்த எதிர்பாராத வரவேற்பு எனக்கு இன்ப அதிர்ச்சி தந்தது. தேவை கருதி வருவாரைக் கிஞ்சித்தும் மதிப்பளிக்காது நடத்துவதையே கடமையாகக் கொண்டிருந்த பல அரசு அலுவலக நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறாக இங்குப் பரிவும் கவனிப்பும் இருந்தமை, அது அரசு அலுவலகந்தானா என்று ஒருமுறைக்கு இருமுறை கேட்டறிந்து கொள்ள வைத்தது. பதிவு அலுவலர்தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டுமென்றும் அவர் வெளியில் சென்றிருப்பதாகவும் இரண்டு நாட்களில் வந்துவிடுவாரென்றும் புத்தர் சிற்பம் கண்டுபிடிப்புப் பற்றிய எழுத்து மூலமான தகவலை அவரிடம் தருவதே சால்புடையதென்றும் அறிவுறுத்தப்பட்டேன். எனக்கு அப்போது தெர்ியாது, அந்தப் பதிவு அலுவலர் என் உயிரினும் இனிய நண்பராக அமையப்போகிறார் என்று. இரண்டு நாட்களுக்குப் பிறகு சென்றபோது பதிவு அலுவலர் திரு. அ. அப்துல் மஜீதைச் சந்திக்கும் வாய்ப்பமைந்தது. அவர் ஏற்கனவே என்னைப் பற்றி அறிந்திருந்தார். என் பெரிய அண்ணன் இதழ்ியல் அறிஞர் அமரர் திரு. மா. ரா. இளங்கோவனின் கெழுதகை நண்பராகவும் என் இளவல் மா. ரா. அரசுவை நன்கு அறிந்தவராகவும் அவர் அமைந்துவிட்டதால் நான் மிகவும் மகிழ்ந்தேன். புத்தர் சிற்பம் பற்றிய தகவலைக் கூ றினேன். என் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார். இது குறித்துத் தாம் எதுவும் செய்யமுடியாதென்றும் கடிதத்தைத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவிடுவதாகவும் தெரிவித்தார். என்னோடு வந்து சிற்பத்தைப் பார்க்க ஒப்புதல் தந்தார். அதுவே எனக்குப் பெரிய மகிழ்வைத் தந்தது. நானும் அவருமாய் ஒருநாள் சென்று அச்சிற்பத்தைக் கண்டோம். வாய்க்கால் கரையில் புதைந்திருந்த இச்சிற்பத்தைப் பார்த்ததும் அவர் நம்பிக்கை இழந்தார். 'இதை எப்படிச் சிராப்பள்ளிக் கொண்டு செல்ல முடியும், கடினம்தான்' என்று கூறினார். அவரது கூற்றால் நான் தளர்வடைந்தேன். 'இங்கிருந்தால் சிற்பம் வீணாகிவிடும். எப்படியாவது சிராப்பள்ளிக்குக் கொண்டு சென்று அங்குள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துவிடலாம்' என்று வேண்டினேன். அவர் என்னைப் பர்ிதாபமாகப் பார்த்தார். அந்தப் பார்வையில், 'என் கருத்தும் அதுதான். ஆனால், அதைச் செய்யும் ஆற்றல் எனக்கு இல்லை' என்ற செய்தி வெளிப்பட்டது. தலைமை அலுவலகத்திலிருந்து செய்தி வரும் என்று நானும் அவரும் சில மாதங்கள் காத்திருந்தோம். என்ன காரணத்தாலோ பதிலே வரவில்லை. இதற்கிடையில் என் இனிய நண்பரும் சிராப்பள்ளி மாலை முரசு ஆசிரியருமான திரு. இரா. ஜேசுவடியான் என் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது புத்தர் சிற்பத்தின் ஒளிப்படம் என் மேசை மீது இருந்தது. டாக்டர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய மன்றப் போட்டிகள் வழ்ி எனக்கு நண்பராகியிருந்தவர் திரு. இரா. ஜேசுவடியான். இனியவர். நேர்மையானவர். தமிழ் ஆர்வலர். என் மேசை மீது இருந்த புத்தர் படத்தைப் பார்த்தவர், 'இது எங்கே இருக்கிறது' என்று கேட்டார். நான் நடந்தது அனைத்தும் கூறினேன். உடனே அவர், 'இதைப் பற்றிக் கவலுறாதீர்கள். இந்தப் படம் என்னிடம் இருக்கட்டும். நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறியதுடன் படத்தையும் கொண்டு சென்றார். அடுத்த நாள் மாலை நான் மருத்துவமனை வந்தபோது வரவேற்பறையில் தினமலரைச் சேர்ந்த திரு. கோவிந்தசாமி, தினத்தந்தி திரு. சீனிவாச ராகவன் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன் எனக்கு ஒரே வியப்பு. விசாரித்தபோது புத்தர் செய்தி அன்று மாலை முரசில் படத்துடன் வெளியாகியிருப்பதாகவும் அது பற்றி மேலும் தகவல் அறியவே வந்ததாகவும் அவர்கள் கூறினர். நான் உடன் என் மருத்துவமனை உதவியாளரை அழைத்து அன்றைய மாலை முரசு இதழை (9. 6. 1982) வாங்கிவரச் சொன்னேன். அவர் ஏற்கனவே வாங்கி வைத்திருந்தார். செய்தித்தாளின் இரண்டாம் பக்கத்தில் புத்தர் காட்சிதந்தார். அந்தச் செய்தியை அப்படியே இங்குத் தந்துள்ளேன். திருச்சி அருகே 5 அடி உயர புத்தர் சிலை கண்டுபிடிப்பு திருச்சி ஜூன் 9 - திருச்சி அருகே பழங்கால புத்தர்சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: திருச்சியை அடுத்துள்ளது எட்டரை கிராமம். இங்கு வாய்க்கால் அருகே மண்ணில் பழங்கால புத்தர் சிலை ஒன்று புதைந்து கிடந்தது. மண் சரிய, சரிய இந்த சிலை வெளியே தெரிய தொடங்கியது. இந்த சிலையை பதிவாளர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் செல்வராஜும் அவரது தம்பி பாலசுந்தரமும் கண்டுபிடித்தார்கள். இந்தத் தகவல் கோவில்கலை வரலாறு பற்றி ஆராய்ச்சி நடத்தி வரும் டாக்டர் இரா.கலைக் கோவனிடம் தெரிவிக்கப்பட்டது. குடுமி சிலை கிடந்த வாய்க்காலை 'குடுமி' என்று அழைப்பது பழக்கமாகும். புத்தர்சிலை அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் 'புத்த குடுமி' என்று இப்போது அழைக்கத் தொடங்கி விட்டார்கள். நாளடைவில் இந்த பெயர் மாறி 'பூதக்குடுமி' என்றாகி விட்டது. புத்தர் சிலையின் கலை அமைப்பை பார்க்கும்போது கி. பி. 10-வது நூற்றாண்டுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிலையின் உயரம் 5 அடி. சிலைக்கு தலைக்கு மேல் போதிமரம் செதுக்கப்பட்டுள்ளது. சிலையின் வலதுகை உடைந்துவிட்டது. மேலும் அந்த இடத்தை தோண்டி பார்த்தால் முழு சிலையை காணமுடியும். இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது குறித்து திருச்சி தொல்பொருள் பதிவு துறையினருக்கும் சென்னை தொல்பொருள் ஆய்வு துறையின் இயக்குநர் டாக்டர் நாகசாமிக்கும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக டாக்டர் கலைக்கோவன் தெரிவித்துள்ளார். செய்தித் தாளில் வெளியாகும் செய்தி வானொலியைப் போலவே வலிமையானது என்பதை அன்றுதான் உணர்ந்தேன். பல நண்பர்கள் தொலைப்பேசியில் பாராட்டினார்கள். அதுவரை அறிந்திராத பலர் அன்று அறிமுகமாயினர். தினத்தந்தி, தினமலர் இதழ்கள் அடுத்தடுத்த நாட்களில் அந்தச் செய்தியைத் தங்களுக்கே உரிய முறையில் வெளிப்படுத்தியிருந்தன. திரு. மஜீது அலுவகத்திற்குத் தொலைப்பேசி கிடையாது என்பதால் செய்தியிதழ்ின் படிகளோடு அங்குச் சென்றேன். அவர் கேள்விப்பட்டிருந்தாரே தவிர செய்தியிதழைப் பார்க்கவில்லை. பார்த்ததும் மகிழ்ந்தார். 'எடுத்துவிடலாமா?' என்று கேட்டேன். 'மேலிடத்து உத்தரவில்லாமல் முடியாது' என்றார். 'உத்தரவு எப்போது வரும்? ஏற்கனவே பல மாதங்கள் ஆகிவிட்டனவே' என்றேன். 'வராது' என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. இருந்தாலும் என் ஆர்வத்தைக் குறைக்க விரும்பாமல் 'வந்துவிடும்' என்று நம்பிக்கை ஏற்படுத்தினார். மேலும் சில மாதங்களுக்குப் பிறகு தலைமையிடத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், என் கண்டுபிடிப்புக் குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்கள். அவ்வளவுதான். 'மகிழ்ச்சியை வெளிப்படுத்தவே இவ்வளவு காலம் பிடித்துள்ளதே' என்று வியந்துபோனேன். வாய்க்கால் கரையைவிட்டு புத்தர் வெளிப்பட வேண்டுமானால் நாம்தான் முனையவேண்டும் என்று என் உள்ளுணர்வு சொல்லியது. 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் அப்போது மதுரையில் வெளியாகியது. அதன் செய்தி தொகுப்பாளராகத் திரு. அ. கோபாலன் சிராப்பள்ளியில் இருந்தார். தமிழ் நாளிதழ்களில் செய்தியைப் படித்ததும் அவர் மருத்துவமனைக்கு வந்தார். படமும் தகவலும் பெற்றவர் இனி இது போல் தகவல்கள் இருந்தால் உடன் அவரைத் தொடர்பு கொள்ளுமாறு கூறிச் சென்றார். தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் இரண்டு இதழ்களிலும் புத்தர் தோன்றினார். பல இடங்களில் இருந்து எனக்குக் கடிதங்கள் வந்தன. இச்செய்திகளால் ஒரு வாரத்திற்குள் தமிழ்நாடு முழுவதுமிருந்த வரலாற்று ஆர்வலர்களுக்கு நான் அறிமுகமானேன். செய்தியிதழ்கள் எந்த அளவிற்கு வலிமையானவை என்பதை உணர்ந்தேன். வாய்ப்பேற்படும்போது இவற்றின் துணையுடன் பல நல்ல செயல்களை நிறைவேற்றவேண்டுமெனக் கருதினேன். புத்தர் கண்டுபிடிப்பை வெளிப்படுத்த முடிந்ததே தவிர, புத்தரை வெளிக்கொணரக் கூடவில்லை. அதே சிந்தனையில் இருந்தபோதுதான் திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியத்தின் நூலில் உறையூர்த் தான்தோன்றீசுவரம் பற்றிப் பார்த்தேன். அக்கோயிலைப் பார்க்க்ும் ஆர்வம் ஏற்பட்டது. விசாரித்தபோது, யாருக்குமே உறையூரில் அப்படி ஒரு கோயில் இருப்பது தெரியவில்லை. என் மருத்துவமனை உதவியாளர்களுள் ஒருவர் அரிதின் முயன்று அந்தக் கோயிலைக் கண்டறிந்தார். திரு. அப்பாதுரை என்பாரின் கவனிப்பில் இருந்த அந்த கோயிலைத் திறக்கச் செய்து பார்வையிட்ட போதுதான் அதன் பழைமையை உணரமுடிந்தது. கருவறை இலிங்கம் என்னை இளக்கியது. கம்பீரமான வாயிற்காவலர்கள் சோழப் பிறப்பினராய்க் காட்சி தந்தனர். அழகே உருவான அம்மையப்பர் மேற்குக் கோட்டத்தில் இருந்தார். கல்வெட்டுகள் சிதறித் துணுக்குகளாகி இருந்தன. திரு. எஸ். ஆர். பால சுப்பிரமணியத்தின் குறிப்பில் கல்வெட்டுகள் பற்றி அதிகம் செய்திகள் இல்லை. அதனால் கல்வெட்டுகளை முயன்று படித்தேன். துண்டுகளாய் இருந்த பரகேசரி, முதல் இராஜராஜர், முதல் இராஜேந்திரர், மூன்றாம் க்ுலோத்துங்கர் கல்வெட்டுகளுக்கிடையில் கருவறை நிலைக்கால்களில் இருபுறத்தும் தமிழ்க் கல்வெட்டுகள் ஏறத்தாழ முழுமையான நிலையில் இருப்பதைக் கண்டேன். அது பாண்டிய வேந்தர் வரகுண மகாராஜனின் கல்வெட்டென்பதைப் படித்தறிய முடிந்தது. எனக்கு வியப்புத் தோன்றியது. இக்கோயிலை எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் முதலாம் ஆதித்தர் காலக் கோயிலாகச் சுட்டியிருந்தார். பாண்டிய வேந்தர் வரகுண மகாராஜன் ஆதித்தருக்குச் சற்றே முற்பட்டவர் என்பதால், கோய்ிலின் பழைமை கூடியமையை உணர்ந்தேன். புதிய கல்வெட்டொன்றை அறிந்த மகிழ்வு எனக்குள் துள்ளிப் பெருக்கெடுத்தது. அன்று மாலையே தொல்லியல்துறை சென்று திரு. மஜீதைச் சந்தித்துச் செய்தி கூறினேன். அவர் அது புதிய கல்வெட்டுதான் என்று உறுதி செய்ததுடன் தாமும் தம் அலுவலகத்தாரும் வந்து அதைப் படித்து உதவுவதாகவும் உறுதியளித்தார். சொன்னவாறே அவரும், திரு. நடராசன், திரு. கிருஷ்ணன், திரு. இராதாகிருஷ்ணன் இவர்களும் ஒரு குறிப்பிட்ட நாளில் கோயிலுக்கு வந்து கல்வெட்டுகள் படிக்க உதவினர். திரு. கிருஷ்ணனும் திரு. நடராசனும் வாயில்நிலைக் கல்வெட்டை மசிப்படி எடுத்துத் தந்தனர். அன்றுதான் கல்வெட்டை மசிப்படி எடுக்கும் முறையை அறிந்தேன். மிகக் கடினமாக பணி. தாளைக் கல்வெட்டில் படியச் செய்யவும் அதன்மீது மசி ஒற்றவும் பயன்படும் 'கை' கடுமையான வலியால் துன்புறும். திரு. கிருஷ்ணனும் திரு. நடராசனும் பழக்கம் காரணமாக மிக எளிதாகப் படியெடுத்தனர். படியெடுத்த பிறகு அக்கல்வெட்டைத் திரு. மஜீதும் திரு. இராதாகிருஷ்ணனும் இணைந்து படித்தனர். அவர்கள் படிக்கும்போது நானும் அருகிருந்து கற்றேன். பல இடங்களில் அவர்கள் வாசிப்பின் மீது அவர்களுக்கே நம்பிக்கையில்லாமல் இருந்தது. என்றாலும், தகவல் பெறும் அளவு வாசிப்பு அமைந்ததில் அனைவருக்கும் நிறைவேற்பட்டது. இதே கல்வெட்டைப் பின்னாளில் நளினி படித்தபோதுதான் முதல் வாசிப்பில் இருந்த குறைகளைச் சரிசெய்ய முடிந்தது. அவை ஒரே கல்வெட்டின் இரண்டு பகுதிகள் என்பதையும் நளினியே புலப்படுத்தினார். அக்கல்வெட்டுப் பின்னாளில் வரலாறு இதழ்ில் புதிய கல்வெட்டுகள் பகுதியில் முழுமையான அளவில் வெளியிடப்பட்டது. கல்வெட்டுப் படத்துடன் நான் செய்தி எழுதி அடுத்த நாளே திரு. கோபாலனிடம் தந்தேன். அவர் மகிழ்வுடன் அதைப் பெற்றுக்கொண்டார். 18. 11. 1982ம் நாள் இந்தியன் எக்ஸ்பிரஸில் கல்வெட்டுச் செய்தி வெளியானது. 'திருத்தான்தோணியில் ஒரு திருப்பம்' என்ற தலைப்பில் இச்செய்தி 20. 11. 1982ம் நாள் மாலைமுரசில் வெளியானது. இச்செய்தியில் கல்வெட்டைக் கண்டுபிடித்தவனாக என் பெயரையும் படித்துத் தகவல் அறிவித்தவராகத் திரு. மஜீதின் பெயரையும் குறிப்பிட்டிருந்தேன். நாளிதழ்களில் தம் பெயர் வெளியாகியிருந்தமை திரு. மஜீதிற்கு மகிழ்வளித்தது என்றாலும், அதனால் அவருக்கு ஏற்பட்ட துறைசார்ந்த தொல்லைகள் வருத்தம் தந்தன. இனி எக்காலத்தும் தம் பெயரை வெளியிடல் வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கொண்டார். தொல்லியல்துறைச் சூழல்கள் அறிய இந்நிகழ்வு எனக்கு உதவியது. எக்காரணம் கொண்டும் இனியவர் மஜீது துன்பப்படக் கூடாது என உறுதிபூண்டேன். உறையூர்த் தான்தோன்றீசுவரம் கல்வெட்டுக் கண்டுபிடிப்பினால் எனக்குப் புலவர் வை. இராமமூர்த்தியின் அறிமுகம் கிடைத்தது. புத்தூர் பிஷப் ஈபர் மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவர் சிராப்பள்ளியின் மூத்த வரலாற்றாய்வாளர்களுள் ஒருவர். என்னை வந்து சந்தித்தவர், ச்ிராப்பள்ளியிலுள்ள அனைத்துக் கல்வெட்டுகளையும் தாம் படித்திருப்பதாகவும், எப்படியோ இது மட்டும் விட்டுப்போயிற்று என்றும் கூறிக் கண்டுபிடிப்பிற்காகப் பாராட்டினார். பின்னாட்களில் சிராப்பள்ளியில் நாங்கள் கண்டுபிடிக்க நேர்ந்த பல புதிய கல்வெட்டுகள், அவருடைய கூற்று எத்தனை பிழையானது என்பதை உணர்த்தின. வரலாற்றாய்வாளர்களாக உள்ள பலர் இப்படித்தான், வீண் பெருமையும் தேவையற்ற மிடுக்கும் கொண்டுள்ளனர். ஓரளவு கல்வெட்டுப் படிக்கத் தெரிந்திருந்தாலே தங்களை மேதைகளாகக் கருதிக் கொண்டு 'நிமிர்ந்திருக்கும்' இவர்களைக் காண நேரும்போதெல்லாம் எனக்குப் பரிதாப உணர்வே மிகும். அவர்கள் உழைப்பைக் கருதித் தொடர்ந்து அவர்களிடம் நட்பு பாராட்டியே வந்திருக்கிறேன். திரு. இராமமூர்த்தியைப் பின்னாளில் எங்கள் வரலாற்றாய்வு மையத்தின் சார்பில், பள்ளி ஆசிர்ியராக இருந்ததும் கல்வெட்டுத் துறையில் அவர் காட்டி வந்த ஆர்வம் கருதியே பாராட்டியிருக்கிறோம். தொடக்கத்தில் என்னை ஒரு போட்டியாளராகக் கருதிய அவருக்குச் சில ஆண்டுகளில் என் உள்மனம் விளங்கியது. ஆனால், அதற்குள் அவர் இரத்த அழுத்த நோயால் பெரும் துன்பத்திற்கு ஆளாகியிருந்தார். 'கொங்கு நாட்டு வரலாறு' எனும் ஆங்கில நூல் அவருடைய உழைப்பால் வெளிவந்தது என்பதையும் பின்னாளில்தான் என்னால் அறியமுடிந்தது. பல அறிஞர்கட்குத் தம் உழைப்பை வழங்கிய அவர் அதற்குரிய ஊதியம் கூடப் பெறாமல் ஒதுக்கப்பட்டமையையும் அவர் மூலமாகவே அறிய நேர்ந்து வருந்தினேன். தொடக்கத்தில் நிமிர்ந்தவராக இருந்த அவர் என்னைப் புரிந்துகொண்ட பிறகு நெருக்கமானார். ஆனால், அதற்குச் சில ஆண்டுகள் தேவைப்பட்டதால், நாங்கள் இணைந்து பணி செய்யும் சூழல் அமையாமல் போனது. திரு. வை. இராமமூர்த்தியின் மிகப் பெரிய கொடை, அறிஞர் பெருந்தகை கூ. ரா. சீனிவாசனை எனக்கு அறிமுகம் செய்வித்ததுதான். வானொலியில் என்னுடைய உரைகளைக் கேட்டிருந்த திரு. கூ. ரா. சீனிவாசன், உறையூர்க் கல்வெட்டுச் செய்தியை நாளிதழ்களில் கண்டதும் என்னைக் காண விரும்பினார். இந்தியத் தொல்லியல் துறையிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில் சிராப்பள்ளியில் தம் வீட்டில் குடியிருந்த அவரை வானொலிக்கு அவர் எழுதியிருந்த கடிதமொன்றினால் நான் அறிந்திருந்தேன். அன்புடன், இரா. கலைக்கோவன். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |