![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 32
![]() இதழ் 32 [ பிப்ரவரி 15 - மார்ச் 15, 2007 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
சங்கச்சாரல்
பாட்டில் முளைத்த பழமொழி தமிழ்நாட்டில், 'கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தாற்போல்' என்றொரு பழமொழி வழக்கிலிருப்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்தப் பழமொழியின் விதை நற்றிணையிலிருப்பதை எத்தனை பேர் அறிவர்! 'வழிபடு தெய்வம் கண் கண்டாங்கு' (9) எனும் இந்த விதையைத் தூவியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ. மருதப்பாய்ச்சல் உயரத்திலிருந்து நீரில் குதிக்கும் 'டைவிங்' போட்டிகளில் இந்திய அளவிலோ, உலக அளவிலோ இந்நாள் தமிழர் பதக்கம் பெற்றதாக அறிகிலோம். ஆனால் சங்க காலத்தில் இப்படி உயரத்திலிருந்து நீரில் குதிப்பது மகளிருக்கு ஒரு விளையாட்டாகவே இருந்துள்ளது. கரையிலிருந்த மருதமரத்திலேறிப் பண்ணை பாய்ந்த தண்நறுங் கதுப்பள் ஒருத்தியை ஐங்குறுநூறு (74) காட்டுகிறது. தோழியர் களிப்பொடு ஆர்ப்பரிக்கச் சில்லென்ற பெருங்கடல் அலைகளில் பாய்ந்தாடிய பெண்ணையும் ஐங்குறுநூற்றில் (123) பார்க்க முடிகிறது. எங்கே போயின இந்த வீரமும் பாய்ச்சலும்? கொடி நெடுந்தேர் கொடுத்தார் பாசுபதம் வேண்டித் தவமிருந்த அருச்சுனனைக் கொல்ல மூகாசுரன் பன்றி வடிவில் வர, இறைவன் வேட்டுவராய் வந்து மூகாசுரனைக் கொன்று, அருச்சுனனைக் காப்பாற்றியதுடன், அவனுடன் சண்டையிட்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திப் பாசுபதம் தந்தருளியது யாவரும் அறிந்ததே. அப்பர் இப்புராணத் தகவலை அவருக்கே உரிய விதத்தில் சில புதிய தரவுகளைச் சேர்த்து உறுதிப்படுத்துகிறார். (4:50:1). கையில் துடியுடன் வேடராக வந்த சிவபெருமான், அருச்சுனனுக்கு அம்பும் வில்லும் தந்ததுடன், தூய மந்திரங்களும் சொல்லித் தந்தாராம். இம்மந்திரங்கள், 'பாசுபதாஸ்திர பிரயோகத்திற்கு' என்கிறார் உரையாசிரியர். இது புராணங்கள் சொல்லாத செய்தி. இத்துடன் நில்லாது, அருச்சுனனுக்குக் கொடி பறக்கும் நெடுந்தேரும் கொடுத்தாராம் இறைவன். இதுவும் புராணங்கள் சொல்லாத அப்பர் செய்தி. சங்க காலத்து பெல்ட் நம்பமுடியவில்லை! அப்படித்தானே! ஆனால் இருந்தது. மருதனிளநாகனார் சொல்கிறார் (நற். 21). விரைந்து செல்லும் பயணமுடைய சங்க இளையர் ஓய்வெடுக்கும்போது, வந்த வருத்தம் தீரத் தம் இடையில் விளங்கும் கச்சையின் பிணிப்பை நெகிழ்த்திவிட்டுக் கொள்வராம். பல்லவர் காலந்தொட்டு ஆடவர் சிற்பங்களில் இந்த 'அரைச் செறி கச்சை' காணப்படுகிறது. இதன் அமைப்பும், யாப்பும், அதன் வழி நீளும் தொங்கல்களும் சிற்பத்திற்குச் சிற்பம் குறைந்தபட்சம் சிறுசிறு வேறுபாடுகளுடனாவது காட்டப்பட்டுள்ளமை அந்நாளைய மக்களின் நாகரிக நயம் காட்டுகின்றது. தாய்ப்பால் காதலைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் கணக்கின்றிப் பேசும் சங்க இலக்கியங்களில் திருமணநிகழ்வு, முதலிரவு, உடலுறவு, தாய்ப்பாலூட்டல் போன்ற இன்றியமையா நிகழ்வுகளின் படப்பிடிப்புகளும் இல்லாமலில்லை. தாய்ப்பாலூட்டல் ஐங்குறுநூற்றில் (404) பேசப்பட்டுள்ளது. வாள் போன்ற ஒளிநிறைந்த நெற்றியையுடைய மனைவி தன் மகனுக்குத் தாய்ப்பாலூட்ட, அவள் சிறுபுறம் அணைத்தவாறே அதைக் கண்டு களித்திருந்தான் கணவன். தாய் குழந்தைக்குப் பாலூட்டும் காட்சிகள் சிற்பங்களாகவும் கிடைக்கின்றன. குடந்தை நாகேசுவரர் விமானக் கண்டபாதச் சிற்பமாக அற்புதமானதோர் பாலூட்டும் காட்சி படைக்கப்பட்டுள்ளது. இதில் தாய் கவிழ்ந்து படுத்தவாறு பாலூட்டுவது சிற்பியின் புதிய கண்ணோட்டம் போலும். சீனிவாசநல்லூர் குரங்கநாதர் கோயில் விமான அரைத்தூணொன்றின் தானத்திலும் பாலூட்டும் சிற்பம் விளைந்துள்ளது. இதில் இயல்பான நிலையில் ஒருக்களித்துப் படுத்தவாறு தன் சேய்க்குப் பாலூட்டுகிறாள் தாய். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |