![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 26
![]() இதழ் 26 [ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2006 ] 2ம் ஆண்டு நிறைவு - மகேந்திரர் சிறப்பிதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அன்புள்ள வாருணி,
வரலாறு டாட் காம் ஆசிரியர் குழுவினரின், 'பயணப்பட்டோம்' கட்டுரைகளை நான் விரும்பிப் படிப்பதுண்டு. எழுதுவாரின் மனவிரிவுக்கேற்ப சுவைபட அமையும் பகுதி அது. அந்தப் பகுதியில் நான் சென்ற வாரம் படித்த கட்டுரை, 'தட்சிண கயிலாயம்'. எழுதியிருப்பவர் நம் அன்பிற்குரிய திரு. சேஷாத்ரி கோகுல். சென்ற மாதம் தமிழ்நாடு வந்திருந்தபோது நேரில் சந்தித்துப் பல அரிய கேள்விகளைக் கேட்டு என்னைச் சிந்திக்க வைத்த இளைஞர் அவர். அவருடைய 'ராஜகேசரி'யையும் முழுமையான நிலையில் அதுபோழ்துதான் நான் பெறமுடிந்தது. தஞ்சாவூர் வரலாற்றாய்வாளரும் என் நண்பருமான முனைவர் திரு. குடவாயில் பாலசுப்ரமணியனைத் திரு. கோகுலும் பிற டாட் காம் நண்பர்களும் சந்தித்துத் தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் பற்றி உரையாடிய நிகழ்வினை முதன்மைப்படுத்தி, 'தட்சிண கயிலாயம்' அமைந்துள்ளது. 'குடித்த காபி வெளியே வந்துவிடும் போலிருந்தது' என்று தமக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் உரையாடல்களையும் உடன் விளைவுகளையும் திரு. கோகுல் விவரித்துள்ளார். திரு. பாலசுப்ரமணியன் கூறியது அனைத்தையும் அவர் கூறியதுபோலவே எழுத முடியாமைக்கு வருந்தியிருக்கும் திரு. கோகுல், இந்தக் கட்டுரையில் இராஜராஜீசுவரம் பற்றிய திரு. பாலசுப்ரமணியனின் மொழிவுகள் சிலவற்றைப் பதிவுசெய்துள்ளார். அம்மொழிவுகளைப் படித்த பிறகு, அவை குறித்த என கருத்துக்களை உன்னுடன் பகிர்ந்துகொள்ளாமல் எனனால் இருக்கமுடியவில்லை. 'தட்சிண கயிலாயம்' மொழிவின்படி, 'மகுடாகமம்' என்னும் ஆகமத்தை அடியொற்றியே இராஜராஜீசுவரம் அமைந்துள்ளது என்பது திரு. பாலசுப்ரமணியனின் கருத்து. இந்த மகுடாகமத்தைப் பார்க்கவேண்டுமென்று நானும் பல ஆண்டுகளாக முயன்று வருகிறேன். ஆனால், நூல் கிடைககவில்லை. திரு. டி.ஏ. கோபிநாதராவ், 'Elements of Hindu Iconography' என்றோர் அற்புதமான நூலை வெளியிட்டுள்ளார். அதில், 'List of the Important Works Consulted' என்ற தலைப்பின் கீழ் ஆகமங்கள், புராணங்கள், கலைநூல்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் உட்பட எண்பத்து நான்கு நூல்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். அவற்றுள் ஒன்றாக, 'மகுடாகமம்' இடம்பெறவில்லை என்பதை உன் கவனத்திற்குக் கொணர விரும்புகிறேன். 'சிற்பச் செந்நூல்' எனும் அரியதொரு நூலை உருவாக்கியிருக்கும் சிற்பக் கலைஞர் திரு.வை. கணபதி, நூலிற்கான முகவுரையில் தென்னாட்டுச் சிற்பக்கலை மரபைச் சேர்ந்த கலை நூல்களாக மானசாரம் என்ற கட்டடக்கலை நூல் குறிபபிடும் 32 நூல்களின் பட்டியலைத் தந்துள்ளார். இதில் மகுடாகமம் இடம்பெறவில்லை. மனுசாரம் என்னும் சிற்பக் கட்டடக்கலை நூல் குறிப்பிடும் 28 நூல்களில், மானசாரம் குறிப்பிடாத 18 நூல்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார் திரு. வை. கணபதி. அவற்றுள்ளும் மகுடாகமம் குறிக்கப்பெறவில்லை. நூலின் இறுதியில் 'எடுத்தாண்ட நூல்கள்' என்ற தலைப்பில் பத்துச் சிற்ப நூல்களையும் பதினான்கு ஆகம நூல்களையும் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள்ளும் மகுடாகமம் இடம்பெறவில்லை. இந்த ஐம்பது நூல்களுள் பெரும்பாலானவை இன்றில்லை என்று குறிப்பிடும் சிற்பி, 'இன்று நம்மிடையே கீழ்க்கண்ட நூல்களே தங்கிவருகின்றன' என்று கூறி மயமதம், விஸ்வகர்மீயம், மானசாரம், ஐந்திரமதம், மனுசாரம், காஸ்யபம் எனும் ஆறின் பெயர்களை மட்டுமே தந்துள்ளார். 'இவை சிறபக்கலை பற்றியும் கட்டடக்கலை பற்றியும் ஒருமித்துப் பேசும் முழு நூல்களாகும். இவற்றிற்கு வாஸ்து சாஸ்திரம் என்று பெயர்' என்கிறார். இவரே, 'தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் படைத்த பெருந்தச்சன் எந்த நூலைப் பயின்றானோ, எந்த நூலை இயற்றினானோ நாம் அறியோம்' என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். திரு. பாலசுப்ரமணியன், 'கோபுரக்கலை மரபு' என்ற பெயரில் ஒரு நூல் வெளியிட்டுள்ளார். 2004ல் வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் துணைநூற் பட்டியல் பகுதியில் 'சமஸ்கிருத, தமிழ் நூல்கள்' என்ற தலைப்பின் கீழ் காசியப சிற்ப சாஸ்திரம், சிற்ப ரத்தினம், மயமதம் உள்ளிட்ட ஒன்பது நூல்களின் பெயர்களைற் தந்துள்ளார். 'சமஸ்கிருத நூல்கள்' என்ற தலைப்பின் கீழ் காமிகாகமம் உள்ளிட்ட ஐந்து நூல்களின் பெயர்களைத் தந்துள்ளார். இவ்விரண்டு தலைப்புகளின் கீழும் 'மகுடாகமம்' இடம்பெறவில்லை. டி.ஏ. கோபிநாதராவ், கணபதி சிற்பி இவர்தம் பார்வைக்குக் கிடைக்காத மகுடாகமம், 2004ல் திரு. பாலசுப்ரமணியன் வெளியிட்ட கோபுரக்கலை மரபு ஆய்வு நூலுக்குத் துணை நூலாகக் கூடக் குறிக்கப் பெறாத மகுடாகமம், 'வாய்மொழியாக' மட்டும் சுட்டப்படுவது ஏனென்று எனக்குப் புரியவில்லை. இந்த மகுடாகமம் யாரால் எழுதப்பட்டது? யாரால் எப்போது எங்கு வெளியிடப்பட்டது? இந்நூல் தற்போது ஆய்வாளர்களுக்குக் கிடைக்குமா? எனும் கேள்விகளுக்கு விடை தேவையல்லவா? நான் இந்த மகுடாகமத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பி நெடுங்காலத்திற்கு முன்பே திரு. பாலசுப்ரமணியனை ஒருமுறை கேட்டபோது, இந்நூல் பற்றி முனைவர் இரா. நாகசாமி கூறியிருப்பதாகத் தெரிவித்தார். அப்போதுதான் அவருக்கும் இந்நூல் 'செவிவழிச் செய்தி'தான் என்பது தெரியவந்தது. ஆனால், தற்போது இவ்வளவு விரிவாக திரு. பாலசுப்ரமணியன் மகுடாகமம் பற்றிக் கோகுல் குழுவினரிடம் பேசியிருப்பது படிக்கும்போது, அவர் கைக்கு மகுடாகமம் கிடைத்திருக்கவேண்டுமென்றே உணர்கிறேன். வரலாறு டாட் காம் குழுவினர் திரு. பாலசுப்ரமணியனிடம் பேசி, மகுடாகமத்தைப் பெற்று அல்லது ஒளியச்சுச் செய்து வரலாறு டாட் காமில் தொடர்ந்து வெளியிட்டால், ஆகம ஆர்வலர்கள் அனைவரும் நான் உட்படப் பெரும் பயன் பெறமுடியும். குறைந்தபட்சம் மகுடாகமத்தைக் கண்ணில் பார்த்த நிறைவாவது கிடைக்கும். 'இராஜராஜீசுவரம் கருவறையில் உள்ள ஆவுடையாருடனான லிங்கத்திருமேனி கருவறையின் வாயிலைவிட அளவில் மிகப் பெரியதாகும். இத்திருமேனியை கருவறை கட்டிய பிறகு உளளே இருத்தியிருக்க முடியாது. அதனால், மூல மூர்த்தமான இத்திருமேனியை முதலில் பிரதிஷ்டை செய்து, பிறகே அதைச் சுற்றி விமானம் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். இது மகுடாகம மரபாகும்' எனும் பொருள்பட, 'தட்சிண கயிலாய' உரை நிகழ்வு அமைந்துள்ளது. மகுடாகம மரபு ஒருபுறம் இருக்கட்டும்; கருவறையிலுள்ள இலிங்கத்திருமேனி இப்போதுள்ள கருவறை நு¨ழவாயில் வழி உள்ளே சென்றிருக்க முடியுமா, முடியாதா என்பதைப் பார்ப்போம். இராஜராஜீசுவரம் திருக்கோயில் குடமுழுக்குச் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. அப்போது அறிஞர் திரு. கூர்ம திருவாழி நரசிம்மன் இநதியத் தொல்லியல் துறையின் சென்னை வட்டக் கண்காணிப்புத் தொல்லியல் அறிஞராகப் பொறுப்பிலிருந்தார். அப்பெருந்தகையின் நேரடி மேற்பார்வையில் கருவறைப் புதுக்கும் பணி நடைபெற்றது. அதுபோழ்து எனக்குக் கருவறையையும் இலிங்கத்திருமேனியையும் பார்க்கும் வாய்ப்பமைந்தது. இலிங்கத் திருமேனியின் ஆவுடையார் ஒரு கல்லால் ஆனதல்ல என்பதை அப்போது நான் கண்கூடாகக் காணமுடிந்தது. ஆவுடையாரின் வடபகுதியில் பொருத்தப்பட்டிருந்த கல்லொன்று சிதைந்திருந்தமையால், அக்கல் இத்திருப்பணியின்போது மாற்றியமைக்கப்பட்டது. பல கற்களின் இணைவால் ஆன இந்த ஆவுடையாரில்தான் இலிங்கபாணம் பொருத்தப் பட்டுள்ளது. இதைப் பந்தனப்படுத்தும் மருந்தைக் கோயிலிலேயே தொல்லியல் துறையினர், தக்கார் கொண்டு, மரபுப்படி தயாரித்துக் கொண்டிருந்ததையும் நான் நேரில் பார்த்தேன். பல கற்களால் ஆன ஆவுடையாரே கருவறையில் இருத்தப்பட்டுள்ளது எனனும் உண்மையைப் புரிந்துகொண்டால், கருவறை வாயில் வழியே அக்கற்கள் உள் சென்றிருக்க முடியும் என்ற உண்மையும் தானே விளங்கும். இலிங்கபாணம் பெரியதென்றாலும் நீளவாக்கில் கருவறை வாயில் வழி எளிதாக உட்செல்லக்கூடிய அளவிலேயே அது அமைந்துள்ளது. அதனால், கருவறை வாயிலினும் அளவில் பெரிய ஆவுடையாருடனான இலிங்கத்திருமேனி கருவறையில் இடம்பெற்றிருப்பதாலேயே, அதன் அடித்தள உண்மையைப் புரிந்து கொள்ளாமல் இக்கோயில் மகுடாகம வழியில் கட்டப்பட்டது என்று புனைந்துரைப்பது தேவையன்று. இனி, 'பரசிவமும் மகுடாகமும்'. தம்முடைய 'தஞ்சைப் பெரிய கோயில்' என்னும் நூலின் 23ம் பக்கத்தில் திரு. பாலசுப்ரமணியன், மகுடாகமம் சிவலிங்க வழிபாட்டைக் கூறும்போது நவதத்துவம் எனறுரைக்கிறது. “சிவலிங்கத் திருமேனியின் நடுவே தூணாகத் திகழும் பாணமானது மூன்று வகை அமைப்புகளுடன் திகழும். இது அடியில் நான்கு பட்டையாகவும், இடையில் எட்டுப் பட்டையாகவும், மேலாக வட்டமாகவும் இருக்கும். சதுரத் தூண் வடிவை பிரம்மனாகவும் எட்டுப்பட்டை வடிவை விஷ்ணுவாகவும் வடடத்தூணை ருத்திரன், மகேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம், பராசக்தி எனப் பிரித்து உச்சிககு வரும்போது பரசிவம் எனப் பகுப்பர். பரசிவம் எனும்போது உருவமாகத் திகழும் இலிங்கம் மறைந்து பரவெளியான பிரபஞ்சமே சிவமாகத் திகழும். பிரமனில் வழிபாட்டைத் துவக்கி, 'பரசிவ' வணக்கம் கூறி பரவெளியான மலரஞ்சலியை முடிப்பர். இந்த நவதத்துவ வடிவமாகத் திகழும் சிவபெருமானை மணிவாசகர், 'நவந்தரு வேதமாகி வேதநாயகன்' என்று கூறுகிறார்' என்று முடிக்கிறார். மகுடாகமச் செய்தித் தொடர்பான மேற்கோள் குறிகள், 'சிவலிங்க' எனும் இடத்தில் தொடங்குகின்றன. ஆனால் முடியுமிடம் நூலில் சுட்டப்படவில்லை. அதனால், 'சிவலிங்க' எனத் தொடங்கும் மகுடாகமச் செய்தி இப்பத்தியில் எங்கு முடிகிறது என்பதை அறியக்கூடவில்லை. இநதச் செய்திக்கு அடிக்குறிபபும் இல்லை என்பதால், இது மகுடாகமத்தின் எந்தப் பிரிவில் எந்தப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது என்பதையும் அறிய வாய்ப்பில்லை. திரு. வை. கணபதி சிற்பி தம்முடைய சிற்பச் செந்நூலின் பத்தொன்பதாம் இயலில், 'இலிங்கத்திருமேனி' எனும் தலைப்பில், 'இலிங்கம்' பற்றி விரிவாகப் பேசுகின்றார். ஒன்பது பக்கங்களில் அமைந்துள்ள இவ்வுரையில், 'பரசிவம்' இடம்பெறவில்லை. 'நாதம், பிந்து எனும் இரணடும் சகள நிஷ்களம் எனப்படுகின்றன. நாதமே இலிங்க வடிவாகும். பிந்துவே பீடம் என்ற ஆவுடையார் ஆகும்' (ப. 160) என்று ஆகமங்களின் பிழிவை வெளிப்படுத்தும் கணபதியின் கூற்று திரு. பாலசுப்ரமணியனின் கூற்றிலிருந்து முற்றிலும் மாறுபடுவது காண்க. திரு. பாலசுப்ரமணியன், இலிங்க பாணத்தின் மேல் பாகமான ருத்ர பாகத்தின் நான்காம், ஐந்தாம் பிரிவுகளாக பரபிந்துவையும் பரநாதத்தையும் சுட்டி அது மகுடாகமக கூற்றென்பது இங்குக் கருதத்தக்கது. தமிழ்நாட்டில் இன்று பார்வைக்குக் கிடைக்கும் அனைத்து ஆகமங்களிலிருந்தும் மகுடாகமம் மாறுபட்டு உரைக்கிறது என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது. ருத்ரபாக இலிங்கத்தின் மேல் முனையை திரு. பாலசுப்ரமணியன் பராசக்தி என்கிறார். அப்படியாயின் ஆவுடையார் எதைக் குறிக்கிறது? ஆவுடையாரையே சக்தி ரூபமென்கிறார் கணபதி. இரண்டில் எது சரி? ஆவுடையாரும் 'சக்தி', இலிங்க பாணத்தின் மேல் நுனியும் 'சக்தி' எனில் அது பொருந்துமா? அந்தப பரமசிவன்தான் விளக்கவேண்டும். 'வட்டத்தூணை ருத்திரன் . . . பராசக்தி எனப் பிரித்து இலிங்கத்தின் உச்சிக்கு வரும்போது பரசிவம் எனப் பகுப்பர். பரசிவம் எனும் உருவமாகத் திகழும் இலிங்கம் மறைந்து பரவெளியான பிரபஞ்சமே சிவமாகத் திகழும்' (ப. 25) என்கிறார் திரு. பாலசுப்ரமணியன். இலிங்கத்தின் ருத்ரபாகமான மேற்பகுதியை (ஆவுடையாரிலிருந்து வெளிப்பட்டு நிற்கும் பகுதி) ஏழு பாகங்களாகப் பிரித்து, உச்சியைப் பரசிவம் எனபர் எனில், அதுபோழ்து இலிங்கம் மறைந்து பரவெளியான பிரபஞ்சம் எப்படிச் சிவமாகத் திகழும்? பிரபஞ்ச சிவந்தானே இலிங்கபாணமாய் உருவகிக்கப்பட்டுள்ளது. 'இராஜராஜீசுவர விமானத்தின் உட்கூடு பிரபஞ்சம் எனும் பேராற்றலை உணர்த்தும் பரவெளி - இங்கு 'பிரகதீஸ்வரர்' மட்டும் சிவ வடிவமல்ல; அவருக்கு மேலே திகழும் பரவெளியும் சிவமே என உணரவேண்டும்' எனக் கூறும் திரு. பாலசுப்ரமணியன் (பக். 22, 23), இவ்வாறு கொள்வதற்கு 'தஞ்சைப் பெருங்கோயில் விமானத்தைத் தெட்சிணமேரு என்றும், தஞ்சையில் உள்ள நடராஜப் பெருமானின் வடிவத்தை, 'தெட்சிணமேரு விடங்கர்' என்றும் கல்வெட்டுகளில் இராஜராஜர் கூறுவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளார். இராஜராஜீசுவரத்தை தட்சிணமேரு என்பதற்கும், தஞ்சாவூர் நடராஜரை தட்சிணமேரு விடங்கர் என்பதற்கும் விமான உட்கூடு பரவெளியாவதற்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும் என்று என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. தம் நூலில், ஆடவல்லான் வடிவம் (பக். 22, 23) பரவெளியின் பேராறறல் நிலையைக் குறிப்பிடுவதாகக் கூறும் திரு. பாலசுப்ரமணியன், பிரபையைப் பரவெளியென்றும், அதன் வெளிப்புறம் காட்டப்பட்டுள்ள தீச்சுடர்களைப் பரவெளியில் மிதக்கும் கோள்கள், விண்மீன்கள் என்றும் கொண்டு, 'பரசிவம் பேராற்றலின் பேரியக்கமாகத் திகழ்வதால் பரவெளியாகிய பிரபையின் மத்தியில் மிகவேகமாகச் சுழன்று ஆடுகின்றான்' என்றுரைக்கிறார். பிரபையை அவர் சொல்வது போல பரவெளியாகவே ஏற்றுக்கொள்வோம். சிவனும் பரசிவப் பேராற்றலின் பேரியக்கமாக அப்பரவெளியான பிரபையின் மத்தியில் சுழன்றாடுவதாகவும் கொள்வோம். கோள்களும் மீன்களும் ஏன் பரவெளியின் வெளிப்புறம் உள்ளன? ஆகாயம் பரவெளியெனில் அதன் உட்புறமான நம் பார்வை படும் பகுதியில்தானே மீன்களும் கோள்களும் உலா வருகின்றன! பிரபை பரவெளியெனில், இதன் உட்புறத்தன்றோ மீன்களும் கோள்களும் மிதக்கவேண்டும்? அவை ஏன் பரவெளியின் பின்புறம் போய்விட்டன? சிவபெருமானின் சுழன்றாடும் வேகம் தாங்காமலா? ஆடவல்லானின் கைப்பொருட்களை, கை, கால் அமைவுகளைப் பல குறியீடுகளாக அடையாளப்படுததும் திரு. பாலசுப்ரமணியன், அவர் கையிலிருக்கும் பாம்பை ஏன் மறந்துவிட்டார் என்பது தெரியவில்லை (பக். 22, 23). ஒருவேளை பாம்பு, பாவஞ் செய்து திருந்திய மனிதர்களை இறைவன் தம் கையில் சேர்த்துக்கொள்வார் என்பதற்கான அடையாளமாக இருக்குமோ? இராஜராஜீசுவர விமானத்தின் உட்கூடு, 'பரவெளி' என்று ஏற்றுக்கொள்ள விழைவார், அது போலத் திறந்த உட்கூடு பெற்ற அனைத்து விமானங்களுக்குள்ளும் பரவெளி இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது போன்ற விமானங்கள் முற்சோழர் காலக் கோயில்கள் சிலவற்றில் இன்றும் மாற்றப்படாமல் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் இது முற்சோழர் கால விமான அமைப்புமுறை. பல்லவர் காலத்தும் இப்படித்தான் இருந்தது. அதைச் சோழர்கள் பின்பற்றினார்கள். பல காலப் பரவெளி விமானங்களை நீ காணவிரும்பினால், மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில் விமானம், திருப்பட்டூர் கயிலாசநாதர் கோயில், திருப்பட்டூர் அய்யனார் கோயில், திருவிசலூர் சுற்றாலை விமானம், திருக்கட்டளைச் சுற்றாலை விமானம், பிரமதேசம் விமானம், அவனிகநதர்வ ஈசுவர கிருக வளாகச் சுற்றாலை விமானங்கள், இராஜராஜீசுவரத்து எண்திசைக் காவலர் விமானங்கள் ஆகியவற்றை ஒரு முறை சென்று பார். முதல் இராஜராஜர், இராஜராஜீசுவரத்துப் பெருமானை வணங்கும்போது தம் கையில் உள்ள ஒன்பது பூக்களில் எட்டுப்பூக்களை இலிங்கத்துக்கு அர்ப்பணித்துவிட்டு, ஒன்பதாம் பூவைப் பரவெளியில் விரியும் பரசிவத்தை நோக்கி வீசியதாகத் திரு. பாலசுப்ரமணியன் கூறினாரெனக் கோகுல் தம் 'சுகானுபவ' உரையில் குறிப்பிட்டுள்ளார். இராஜராஜர் ஒன்பது பூககள் கொணர்ந்தமைக்கும், எட்டுப் பூக்களை இராஜராஜீசுவரத்து இறைவனுக்கு அர்ப்பணித்தமைக்கும் எஞ்சிய ஒரு பூவைப் பரசிவமான பரவெளியாய்க் காட்சிதரும் உட்கூட்டில் எறிந்தமைக்கும் எந்தக் கல்வெட்டில் அல்லது செப்பேட்டில் அல்லது இலக்கியத்தில் தகவல் உள்ளது? அப்படியொரு சான்று இருந்தால், அதை வெளியிட்டு, இராஜராஜரின் வழிபாட்டு முறையை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்பது என் வேண்டுகோள். அடுத்து, உரைவீச்சு குறிக்கும் தங்க விமானம். திரு. பாலசுப்ரமணியன் தம் நூலிலும் இக்கருத்தை வெளியிட்டுள்ளார் (ப. 45). 'தஞ்சை விமானம் முழுவதற்குமே இராஜராஜர் பொற்றகடுகள் போர்த்தி ('பொன் பூசப்பெற்ற தகடுகளால்' - ப. 46 - ஒரு பக்கத்திற்குள் பொற்றகடுகள் பொன் பூசப்பெற்ற தகடுகளாக மாறியுள்ளமை காண்க.) அழகு செய்தார். மகாமேரு என்பது பொன்மலையாகக் காட்சி நல்கவேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில்தான் இராஜராஜன் விமானத்திற்குப் பொன் மேய்ந்தான்' என்பது அவர் கூற்று. இதற்குச் சான்றாக அவர் கண்டுபிடித்ததாகக் கூறும் கல்வெட்டின் நான்கு வரி மசிப்படிப் படம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் வரியை, 'ராஜீஸ்வரமுடையார்' என்றும் இரண்டாம் வரியை, 'ஸ்ரீவிமானம் பொன்' என்றும் மூன்றாம் வரியை, 'மெய்வித்தா' என்றும், நான்காம் வரியை, 'ராஜராஜ' என்றும் படிக்கலாம். வரித் தொடர்போ, தகவல் தொடர்போ அற்ற இக்கல்வெட்டு துண்டுக் கல்வெட்டாகும். கல்வெட்டுகளைப் பற்றிய அடிப்படைத் தெளிவுடையவர்கள், இல்கல்வெட்டின் அடிப்படையில் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாது. அதிலும் இராஜராஜீசுவரம் கல்வெட்டுகளைப் பழுதறப் படித்தவர்கள், கொடையளிக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் அக்கல்வெட்டுகள் வண்ணித்திருக்கும் முறை பற்றிய தெளிவுடையவர்கள் இந்தத் துண்டு கல்வெட்டின், 'பொருள்' பற்றி முடிவிற்கு வருமுன் பலமுறை பலவும் பற்றிச் சிந்திப்பார்கள். இராஜராஜீசுவரம் விமானத்தில் வைப்பதற்காகத் தாம் தந்த குடத்தைச் சுட்டும்போது, 'ஸ்ரீவிமானத்துச் செம்பின் தூபித் தறியில் வைக்கக் குடுத்த செப்புக்குடம் ஒன்று நிறை மூவாயிரத்து எண்பத்து முப்பலத்தில் சுருக்கின தகடு பல பொன் ஆடவல்லான் என்னும் கல்லால் நிறை இரண்டாயிரத்துத் தொளாயிரத்து இருபத்தறு கழஞ்சரை' என்று குறிப்பிட்டுள்ள இராஜராஜர் அந்த விமானம் முழுவதையும் பொன் முலாம் பூசிய தகடுகளால் மூடியிருந்தால், அந்தத் தகவலை இப்படிப் பொருளறிய முடியாத நான்கு வரிக் கல்வெட்டாகவா தந்திருப்பார்? இராஜராஜீசுவரம் திருக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு திருமேனியும் பாத்திரமும் நகையும் பொருளும் அளக்கப்பெற்று, அந்த அளவீடுகள் மிக விரிவாகக் குறிக்கப் பெற்று, அவற்றிலுள்ள மணிகள், முத்துக்கள், பிற விவரங்கள் எனத் தரவுகள் அனைத்தும் தந்தவர் பெயர்களுடன் கல்வெட்டுகளாகியுள்ளன. எடுத்துக்காட்டாக ஒரு முத்து வளையல் பதிவாகியிருக்கும் தகவல் முறையைப் பார். 'பண்டாரத்துப் பொன் கொடு செய்த முத்து வளையில் ஒன்று பொன் ஐங்கழஞ்சே எட்டு மஞ்சாடியும் உடையார் ஸ்ரீராஜராஜதேவர் ஸ்ரீபாதபுஷ்பமாக அட்டித் திருவடி தொழுத இரண்டாந் தரத்து முத்திறகோத்த முத்துவட்டமும அனுவட்டமும் ஒப்பு முத்தும் குறு முத்தும் நிம்பொளமும் பயிட்டமும் அம்பு முதுங்கறடும் இரட்டையுஞ் சப்பத்தியுஞ் சக்கத்துங் குளிர்ந்த நீருஞ் சிவந்த நீரும் உடைய முத்து முன்னூற்று ஐம்பத்தொன்றினால் நிறை எண் கழஞ்சே முக்காலே மஞ்சாடியும் குன்றியும் ஆக நிறை பதினாற் கழஞ்சே நாலு மஞ்சாடியும் குன்றிக்கு விலை காசு இருபத்து நாலு' (தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 2: கல்வெட்டு எண். 3) இது போல்தான் இக்கோயிலுக்குத் தரப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளும் விரிவான தரவுகளுடன் பதிவாகியுள்ளன. இதே நிலையில்தான் திருவையாறு, வலஞ்சுழி, தாதபுரம் கோயில்களிலும் இராஜராஜர் குடும்பத்தார் தந்த அனைத்துப் பொருட்களும் மிக விரிவான நிலையில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சின்னஞ்சிறு பொருட்களுக்கே இவ்வளவு கவனம் செலுத்தப்பட்டிருக்கும்போது, 216 அடி விமானத்தைப் பொன் மேயும்போது அதுபற்றிய தரவுகளை இராஜராஜர் விரிவாகப் பதிவுசெய்யாமல் விட்டிருப்பாரா என்று சிந்திக்கவேண்டும். தாம் கொடுத்த செப்புக் குடம் பற்றிய தகவலை விமானத்தில் பதிவுசெய்திருக்கும் இராஜராஜர், அவ்விமானத்தைப் பொன்னால் போர்த்தியிருந்தால், அத்தகவலையும் அங்குதானே சொல்லியிருக்க வேண்டும். சொல்ல மறந்துபோய்ப் பின் நினைவுகூர்ந்ததாகவே கொண்டாலும், அதைச் சொல்லும் முறை என்று ஒன்று இருக்கிறதல்லவா? மெய்க்கீர்த்தியில்லாமல் விரிவான தரவுகள் இல்லாமல், 'ராஜீஸ்வரமுடையார் ஸ்ரீவிமானம் பொன்மெய்வித்தா ராஜராஜ' என்றா அந்த ஈடுஇணையற்ற செய்தியை நம் பேரரசர் பொறித்திருப்பார்! திரு. பாலசுப்ரமணியனால் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கும் கல்வெட்டு கோபுரத்து உட்பகுதியில் தென்சுவரில் தொடர்பற்ற செருகலாகக் காட்சியளிக்கிறது. பொன் விமானத் தகவல் முதன்முதல் வெளியானபோதே நானும் நளினியும் சென்று அக்கல்வெட்டை ஆராய்ந்தோம். சிறந்த கல்வெட்டாய்வரான திரு. பாலசுப்ரமணியன் எப்படி இந்தத் துண்டுக் கல்வெட்டின் அடிப்படையில் இப்படியொரு மாபெரும் தகவலை வெளியிட்டார் என்று அப்போதே நாங்கள் வருந்தியிருக்கிறோம். போகட்டும், ஒரு பேச்சுக்காக இராஜராஜர் இராஜராஜீசுவரம் விமானத்தைப் பொன்னால் போர்த்தியதாகவே கொள்வோம். '216 அடி உயரமுடைய ஸ்ரீவிமானம் முழுவதும் பொன் பூசப்பெற்ற தகடுகளால் அணிசெய்யப்பெற்றுத் திகழ்ந்தது' (ப. 46) என்று திரு. பாலசுப்ரமணியன் தம் நூலில் கூறியிருப்பதை ஒரு முறைக்கு இருமுறை படித்துப்பார். 216 அடி என்பது விமானத்தின் துணைத்தளத்திலிருந்து தூபி வரையிலான உயரம். துணைத்தளம், தாங்குதளம் இவற்றையும் திரு. பாலசுப்ரமணியன் கூற்றுப்படி பொற்றகடுகள் மூடியிருந்தன எனில், தாங்குதளத்தில் இராஜராஜர் கல்வெட்டுகள் வெட்டியமை எதற்காக? முதல் தளச் சுவர்க் கோட்டங்களிலும் அவற்றின் புறத்தேயும் இரண்டாம் தளச் சுவர்க் கோட்டங்களிலும் சிற்பக் காட்சிகளைப் படைத்தமை எதற்காக? இங்கிருப்பவை ஒன்றிரண்டு சிற்பங்களல்ல. அனைத்துச் சிற்பங்களையும் கணக்கிலேற்றினால் அவை நூறை எட்டக்கூடும். விமானத்தின் தென்புறத் தாங்குதளக் கல்வெட்டு விமானத்திலிருந்து முன் மண்டபம் வரை தொடரும் மிக நீளக் கல்வெட்டு. விமானத்தின் சுவர்களும் தாங்குதளமும் பொற்றகடுகளால் மூடப்பட்டிருந்தால் விமானத்தை அடுத்துத் தொடரும் இக்கல்வெட்டுத் தொடர்பற்ற வரிகளாய் மட்டுமே படிப்பார்க்குக் காட்சி தந்திருக்கும். தாங்குதளத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுகளைப் பொறித்து, சுவர்களில் எழிலார்ந்த சிற்பங்களையும் அவை சார்ந்த தொடர்களையும் உருவாக்கி அவற்றை யாரும் காண இயலாதவாறு பொற்றகடுகளால் மூட இராஜராஜர் அறிவுத் தெளிவற்றவரா? விமானத்தின் மேற்றளங்களிலும் சிற்பங்கள் உள்ளன. அவற்றைத் திரு பாலசுப்ரமணியனும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சிற்பங்களுமன்றோ பொற்றகடுகளால் மறைக்கப்பட்டிருக்கும். ஒரு வேளை இராஜராஜர் விமானத்தைப் பொன் மேய்ந்த போது சிற்பஙகள், கல்வெட்டுகள் இருக்கும் இடங்களை மட்டும் தகடு போர்த்தாமல் விடுத்தாரோ? அல்லது, அவற்றையும் பொற்றகடுகளில் உருவாக்கிப் போர்த்தினாரோ? கேள்விகள், கேள்விகள். எங்கெங்கு நோக்கினும் கேள்விகள் வாருணி. தொடராகக் கிடைக்கும் கல்வெட்டுகளே பல நிலைகளில் பொருள் விளக்கம் பெற முடியாதவாறு உள்ளன. காட்டாக, வரலாறு நான்காம் இதழில் (ப. 3) வெளியாகியிருக்கும் திருக்கோளக்குடிக் கல்வெட்டைப் படித்துப்பார். இன்றுவரை இக்கல்வெட்டின் முழுப் பொருளை அறியக்கூடவில்லை. நானும் தமிழ்நாட்டிலுள்ள முன்னணிக் கல்வெட்டறிஞர்கள் அனைவருக்கும் இது பற்றி எழுதி விடைபெற முயன்றுள்ளேன்; பயனில்லை. அப்படியிருக்கும் போது தொடர்பற்ற நிலையில் கிடைக்கும் ஒரு துண்டுக் கல்வெட்டை வரலாற்றுப் பரிமாணங்களில் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தாது செய்தி வெளியிடுவது சரியன்று என்றே தோன்றுகிறது. தம் வாழ்நாளில் செய்த அனைத்துச் சிறப்பான செயல்களையும் இராஜராஜர் கல்வெட்டுகளாக்கியுள்ளார். அவர் சொல்லாது விடுத்தனவற்றை முதல் இராஜேந்திரரின் கரந்தை, திருவாலங்காடு செப்பேடுகள், வீரராஜேந்திரரின் கன்னியாகுமரிக் கல்வெட்டு இவை மிக விரிவாக எடுத்தோதுகின்றன. ஒரு விமானத்தைப் பொன் மேய்தல் என்பது அப்படிச் செய்தவரின் வாழ்நாளில் அவர் செய்திட்ட அரும்பணியாக மதிக்கப்பட்டது. அதனால்தாம் பொன்மேய்ந்த அனைத்து மன்னர்களின் பெயர்களும் அச்செயலுடன் சுட்டப்பட்டுள்ளன. 'நாம் எடுப்பித்த திருக்கற்றளி' என்று பெருமையோடு தம் பணியைப் பதிவுசெய்திருக்கும் இராஜராஜர் அக்கற்றளியின் விமானத்தைப் பொன்மேய்ந்திருந்தால் அதை உரியவாறு குறிக்காது விட்டிருப்பாரா? அல்லது, அவருடைய மகன்தான் தம் செப்பேடுகளில் அதைத் தெரிவிக்க மறந்திருப்பாரா? வாருணி, திரு. பாலசுப்ரமணியன் நல்ல உழைப்பாளி. வரலாற்றாய்வுக்காக நாளும் உழைப்பவர். அவர் மீது பிழையில்லை. எல்லாம் இராஜராஜீசுவரம் திருக்கோயிலின் மகிமை. அது யாரையும் மயங்க வைக்கும் ஆற்றல் மிக்கது. அந்த மயக்கத்திற்கு ஆட்படுபவர்கள் தாம் என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்ற நினைவே இன்றி ஆர்வமிகுதியால் வழிமாறி விடுகிறார்கள். எனக்கும் இராஜராஜீசுவரத்திடம் மயக்கம் உண்டு. ஆனாலும், அதைப் பற்றி எழுதுவதற்கு முன், அந்த மயக்கம் தீர்ந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வேன். ஒரு வரலாற்று ஆய்வாளனுக்கு நிரம்பப் பொறுப்புணர்ச்சி வேணடும். அவர் உண்மைகளை மட்டுமே வரலாறாகப் பகிர்ந்துகொள்ளவேண்டும்; பதிவு செய்யவேண்டும். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |